சனி, 26 ஜூன், 2021

 

kirikasan

unread,
7 Apr 2013, 18:08:31
to santhav...@googlegroups.com


                வாழ்வின் வண்ணம்

சொல்லெண்ணம் சொல்விதம் இன்பந்தரும் அதில்
நல்லெண்ணம் பின்னிடின் நன்மைவரும்
சொல்லெண்ணம் கல்லென்னும் வன்மைகொளின் - அது
எல்லையில் துன்பங்கள் தன்னைத் தரும்

பல்வண்ணம் கொண்டுள்ளம் பார்த்துநிற்கும் - அது
இல்லெனும் அன்பினில் ஏற்றமுறும்
வெல்லென வாழ்வினில் வேகம் வரும் - எழும்
தொல்லைகளில் அதுசோர்ந்துவிடும்

கல்லென்ன மாமதி கற்றொழுகும் - பல
நல்லனக் கற்றிட மெல்லஎழும்  
செல்லெனும் வல்லமை சேர்ந்துவிடும் - உள்ள
புல்லெனும் கேடுகள் நீங்கிவிடும்

சல்லெனச் சத்தமிட்டோடும் நதி - அதில்
சில்லெனும் காலையின் நீர்க் குளிர்மை
நில்லென்னும் சூரியப் பொற்கிரணம் - எனக்
கொள்ளதி இன்பங்கள் கோடி பெறும்

செல்லன்ன நல்லெழில் சோலைகளுக் கதில்
மெல்லெனப் பூ விரி காட்சிகளும்
பல்லன்னப் பட்சிகள் நீந்துமெழில் கொண்ட
துல்லிய நீர்ச்செறி ஓடைகளும்

இல்லென வேளை என்றோதல்வீட்டு வாழ்வை
வில்லென நீவளைத் தெய்து விடு
வெல்லென  எண்ணித் துயர் கவிய நீயும்
கொல்லென தான்துயர் ஓட்டிவிடு

புல்தன்னில் நீர்துளிப் போர்வை கொள்ள- காலில்
இல்லென வெற்றடி பாதம்வைத்து
மெல்லெனப் புல்மிதித் தோடிநட அதி
சொல்லொண்ணா இன்பமும் தோன்றுமன்றோ?

புள்ளினம் கூடிக் குலவுமொலி - இதழ்
கள்ளென வண்டினம் தேடும் இசை
வள்ளெனதூரக் குரைக்கு மொலி மாடு
தள்ளி வண்டி ஓடும் சந்தஒலி

எள்ளெனப்  பூமியில் எம்மை வைத்து அதில்
நல்லன அல்லன கூட்டிவைத்து
நில்லென ஓர் சிறுகாலம் விட்டாள் - அதில்
பல்லின்பம் கொள்வது எங்கள் வழி
***************

kirikasan

unread,
7 Apr 2013, 23:18:36
to santhav...@googlegroups.com
 இது ஒரு உண்மைப்பதிவு. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு இளைஞன் அங்கிருந்து வெளியேற சந்தர்ப்பம் கிடைத்தது அவன் வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தான். அவனுக்கு பணிக்கப்பட்ட வேலை சமையல். அவன் உணவு பரிமாறுபோது அண்ணா வேதனை தாங்க முடியவில்லை. எங்காவது விஷம் கிடைத்தால் இந்த சோற்றுக்குள் போட்டு தாருங்கள் என்று இளம் பெண்கள் கேட்டார்கள் என்று அழுதவாறு கூறினான் அவன் வர்ணித்த சூழலை வைத்து எழுந்த கவி!. (குறிப்பு. உயிர்களை அழிக்க சொல்லி இங்கே நான் கூறவில்லை)

       இலங்கையை எரித்த தீயே!

சீதை கரங்கொண்டோன் தூதன் அனுமந்தின்
வாலினில் பற்றியதீ
தூதைப் பழித்திடக் கோபங் கொண்டேயிந்த
தீவை அழித்துநின்றாய்
மாதைத் தமிழ்ச்சிறு மங்கை மானமழித்
தாடிக் குதிப்பவர்கள்
நீதிகேட்டே யவர் நீசர்கள் பூமியில்
மீண்டும் எரியாயோ?

ஆளும் மன்னன்கொடுங் கோலன்என்றேநீதி
கேட்கமது ரையிலும்
காலிற் சிலம்புகை கொண்டவள் கண்ணகி
கூறஎரித் தொழித்தாய்
பாழு மரசொன்று நீதியின்றிக்கொடுங்
கோல்கொண்டு நிற்குதிங்கு
தீயே மறைந்துநீ நின்றதுபோதுஞ்
சினங்கொண்ட ழித்துவிடு

போரில் பகைவென்று பூவையர் கூட்டமாம்
பேசும்தமிழ்க் குலத்து
நேரின்று தாவென்று வாழக்குரலீந்த
வஞ்சியர் தம்மையின்று
வாரி இழுத்தொரு பாசறைக் கூட்டுக்குள்
வைத்துச்சி தைத்தவரை
கீறிக் கிழித்துமெய் கெட்டழித்துக்கூத்
தாடுதுபேய் களின்று

வந்தே யெரித்து ஒழித்துவிடு அந்தவன்மை
மனங்க ளெல்லாம்
வெந்தம னங்களின் பேய்பிடித்தபுத்தி
செய்யும்வி காரமெல்லாம்
தூயதெனஅந்தப் பூமியாக்கித்தமிழ்த்
துன்பம் களைந்துவிடு
நீயும்வந்துகேளா விட்டுவிட்டால்நீதி
கேட்பது யார்தானிங்கு

பாரதப்போர்ஒரு பாவைதிரௌபதியின்
சேலைபறித் ததனால்
நூறுஎனப்பல திரௌபதிகள் இன்று
சேலையிழந்து நின்றார்
ஓருடைபோகஇன் னொன் றிதோவென
மாதவன்கை கொடுத்தான்
ஆருயிர்தங்கையர் கேட்டுக்கதறியும்
சேலைகள் நீண்டதில்லை

சாக நினைத்துயிர் போகும்வழி யின்றி
சேயிழை யார்துடித்தே
வேகு முடலவ மானம்கொண்டே யவர்
விழிகள் நீர்தளும்ப
பாவிமகனவர் காலடிவீழ்ந் துடல்
நோகத்து டிப்பதனை
கூவியழும்குரல் ஓலம்நிறுத்திட
வானளவாய் எரியாய்

ஊனை விட்டுஉயிர் போவதனா லேயே
வேதனை தீருமென
உண்ணு முணவினில் ஒர்துளிநஞ்செனும்
ஊற்றித் தருவருண்டோ
தின்னும் கவளமும் தொண்டைநடுவினில்
சிக்கித் திணறிடுமோ
கண்ணும் உறங்கிடக் காலன்வந்து உயிர்
கொள்ளவும் மாட்டானோ?

என்று கலங்கி மயங்கிச் சிறைதனில்
வெம்பி அழுதுகொள்ளும்
நல்ல வர்காத்திட நாடெங்கும் பற்றியோர்
நாசம் எரிக்காயோ
பூமி யெரித்தது அன்று முடிந்தது
போகட்டும் விட்டுவிடு
பாழும் மனங்கொள்ளும், எண்ணமெரித்திடு
போதுமது எமக்கு


kirikasan

unread,
8 Apr 2013, 08:53:35
to santhav...@googlegroups.com


       காலச் சுழல்

காலச் செடியினில் நாளென் மலர்தினம்
காற்றிலுதிர்ந்து விழும் - அதைப்
போலும் வயதென்னும் பூக்க ளுதிர்வதைப்
பொன்முகம் காட்டிநிற்கும்
பாலனென வந்து பாயிற் கிடந்திடும்
பக்குவமாகு மட்டும் - இந்த
ஞால முழுதிலும் நன்மை தீமையெங்கள்
நாளைப் பிரித்தெடுக்கும்

ஓலைக் குடிசையும் ஒட்டும் வயிறுடன்
ஓர்சில பேரிருக்கும் - கொடும்
காலைப் பசியெனும் காதகனின்பெரும்
கைவரிசை சிறக்கும்
பாலை வனமென பாழுமுயிர் வெம்மை
பட்டுத் துடித்திருக்க - அவர்
ஆலைக் கரும்பினைப் போலப் பிழிந்திட
ஆசைமனம் இருக்கும்

நாளைப் பிரிந்தொரு ராத்திரிவேளையும்
நாடி வருவதில்லை - இனி
நாளைநடப்பது வேறு அது இற்றை
நாளைப் போலாவதில்லை
கூழைக் குடிப்பவர் நாளை இருக்கலாம்
கோடி பணத்திடையே - அதே
வேளை பணம் மாடி வீடென்றிருப்பவர்
வீதி மரத்தடியே

நீலக் கருவானில் நீந்தி முகிலோடும்
நீண்ட வழியிருக்கும் - அந்தக்
கோலத் தெளிவிண்ணில் காணும் மாசக்தியும்
கூடி எம்முள் இருக்கும்
மேலே திகழொளி மேன்மைப் பெருஞ்சக்தி
மேவியுடல் அசைக்கும் - அந்த
மூலசக்தி மனம் வேண்டித் தொழுதிடு
மேனியிற் சக்தியெழும்

******************

kirikasan

unread,
11 Apr 2013, 19:46:25
to santhav...@googlegroups.com

       காவாயோ நீ சக்தி

நடந்தோடி நின்றதெவை கால்கள்தானோ
  நாடி மனம் கூடியதென் ஆசைவானோ
படர்ந்தோடி சுற்றுங்கொடி பருவமேனோ
 பாரிலிவர் உயிர் வாங்கும் பாசம்தானோ
கடந்தோடி வரும் புயலும்காற்று மாகி   
  காலமெனும் ஆழியலை யடித்த வாழ்வோ
தொடர்ந்தோடி வந்துவினை யாக்குந் தேவி
  தூயமனம் கொண்டெமைக் காப்பாய் நீயே

அழுதோடிப் பிறந்து நிலம் வீழ்ந்த மேனி
 ஆகுமிவர் காலமெதி ரழிந்து கூனி
உழுதோடி விதைத்தாலு முறக்கமின்றி
 உணவோடு நிலமற்ற உடந்தையாவர் 
கழுகோடு புலி சிங்கம் கரடியாவும்
  காணுமொரு வாழ்வென்ப கானகத்தே
வழுவோடு இல்லாத வகையில் நீதி
  வகுத்துமேன் மனிதவிதி மாற்றிவைத்தாய்

நுழைந்தோடிக் காற்றினிய கீதம்கொள்ள
 நுகர்வண்டு துளையென்று மூங்கில் செய்தாய்
எழுந்தோடி வந்தெமது இன்னல்தீர்க்கா
 ஏன்இனிய வாழ்விலிசை யின்றிச் செய்தாய்
பழுதூக்கி பாதைநட என்று கூறின்
 பாவமதை எண்ணி நடை கொள்ள அஞ்சோம்
முழுதாக்கி பளிங்கென்னும்  பாதைசெய்து
  மழையுமாய் வழுக, விழ ஏனோசெய்தாய்

தலைமீறி எழுகின்ற நீரினோட்டம்
 தாகத்தில் துடிக்கின்ற குருவிபோல
கலைமீறிக் காணுஞ்சிதை வோடுகானம்
  காலையிருள் மாலைதுயில் கனவிலின்பம்
இலைமீறி வழிகின்ற பனியின்வாழ்வும்
  ஏனாக்கி மிதியென்று கால்கள் வைத்தாய்
மலை ஏறிச்செல்லாது மனிதவேட்டை
  மாண்புடனே ஆற்றுமினம் மண்ணில் வேண்டாம்

கிளைதேடி வந்தமரும் குருவி யொன்றும்
 கேட்காமல் வந்தணைக்குங் காற்றுமாகி
அளைந்தோடி  அன்னமதை உண்ணும் பாலன்
  ஆசையுடன் கொஞ்சுமவன் அன்னைபோலும்
வளைந்தோடி நாம் தொலைவில் நின்றபோதும்
 வாவென்று தெய்வ மெமை வாழ்த்தியென்றும்
களைந்தோடும் புன்மைகளைக் களைந்துபற்றிக்
  கரங்கொண்டு காவாயோ கருணைதேவி

*************************

kirikasan

unread,
14 Apr 2013, 03:12:33
to santhav...@googlegroups.com


புதியன பொலியட்டும்

காலம் கனிந்திடக் கண்கள் திறந்தெமைக்
காத்திடும் சித்திரையோ - இந்த
ஞாலம் பொலிந்தின்ப நன்மைகள் கூடியிந்
நாடும் சிறந்திடுமோ
கோலம் இனித்திடக் கூடிமகிழ்ந்திவர்
கொள்ளுவர் ஆனந்தமோ - உண்மை
சீல மனத்தொடு சித்திரப் புத்தாண்டு
செய்திடும் நன்மைகளோ?

மாளும் விழுந் துயர் மாறா விதியென்று
மாறித் தொலை செல்லுமோ -அன்றி
நாளும் இவர்பொழு தானந்த மாகிட
நாடி யணைத்திடுமோ
வாளும் கையிலேந்தி வந்த கொடியெங்கள்
வானில் பறத்தல்விட்டே - புவி
வாழும் இனமென்று வாய்மை தனைகொண்டு
வாழெனச் செய்திடுமோ

பூக்கள் பொலிந்திடப் புத்தாடை பொட்டிட்டுப்
பூவையர் தம்பியரும் -வரும்
நாட்களி லானந்த நாட்டிய மிட்டவர்
நாட்டில் நடந்திடவும்
பாக்கள் படித்தவர் பந்தடித்தே யுண்ணும்
பாலுடன் தேன் சுவைத்தே - நல்ல
தூக்கத்திலும் ஒரு புன்சிரிப்பைக் கொள்லென்
றாக்கும் புத்தாண்டிதுவோ ?

kirikasan

unread,
16 Apr 2013, 01:12:19
to santhav...@googlegroups.com
         புத்தாண்டே புதுவரவே

புத்தாண்டே புதுவரவே புன்னகைத்து வாராயோ?
புவியாண்டு பலகோடி நன்மைகளைத் தாராயோ?
பத்தோடு ஒன்றாகப் பாவங்கள் தாராமல்
பழிநீங்கி இனம்தளைக்க புதுவாழ்வு தருவாயோ?

நித்தமும் அழுதழுது நெஞ்சோ கனத்ததடி
நீநடந்து நிலமாண்டால் நீதிவழி திறக்காதோ?
புத்தாண்டு மகளே புதுவரவே வந்திங்கு
பொய்யா துறுதியுடன் பேசியெமைக் காவாயோ?

சத்தியமே வந்துவிடு சாகுமினம் பிழைத்துமெழ
நித்தியமாய் புவியிலொரு நேர்மைவழி காணவென
உத்தமி நீ வாராயேல் உண்மைஇறந்ததென
வைத்திடுவேன் தமிழையினி  வாழ்வில்கவி வேண்டியதோ?

கூசக் குளிரடிக்க கொள்ளுமெழில் நிலவெறிக்க
தேசத் திருநாட்டில்தென்றல் குளிரெடுத்து
வீசி உடல் சிலிர்க்கும் வேளையிலே ஓரோரம்
வாசித்த கவி எழுதி வைத்தேன் அதன்பின்.....!

****

வீட்டின் வடக்கே வெளிவாசல் திண்ணையிலே
நீட்டிக் கிடந்தேன் நான், நீள பெருங்குரலில்
கூட்டிக் கிணுகிணுத்த கொசுவினிசை சங்கீதம்
வாட்டி உயிரெடுக்க வாராத துயிலேங்கி

தேகம் திருப்ப அத் திசைதனிலே நேரெதிரே
தோகை ஒருத்தியெழில் துள்ளுமிள மயிலழகாள்
மேகக்குளிர் நிலவின் மின்னலிடும் புன்னகையும்
ஆக வடிவெடுத்தே அருகினிலே நின்றிருந்தாள்

கண்கள் பார்த்தவளின் களங்கமிலா முகம்நோக்கி
”பெண்ணே யார்நீயோ பேய்உலவும் நடுச்சாமம்
எண்ணாதொருஇருளில் எழுந்த விதமென்ன
மண்ணில் உன்பாத மழுந்தியதோ ஐய”மென்றேன்

சிரித்தவளாம் சித்திரையோ சித்திரமோ நானறியேன்
பிரித்த இதழிருந்து பிறந்தசங் கீதமெனும்
விரித்த நகைகண்டும் வெள்ளிமலர்க் கால்பார்த்தும்
சரிதான் பேயல்ல தமிழ்மகளோ நீ என்றேன்


பட்டுக்கரு கேசங்கள் பழுத்த நிலவொளியில்
கட்டிகுளிர் வெண்ணையது கசிந்து வழிவதென
திட்டாய் ஒளிமின்னித் தேகம் சிலிர்த்தவளோ
வட்டமுகம் மலர்த்தி வந்தேன்வி ஜயாஎன்றாள்

நேரத்தைப் பார்த்திந்த நட்டநடு நிசிவேளை
கோரத்தை மட்டுமே கொள்ளுமிவ் வூர்நோக்கி
யாரவள் நீ வந்தாய் யாதேது என்றுரைக்க
தூரத்தில் பெண்ணொருத்தி துடித்துக் கதறுமொலி

ஊரை கலக்கியவா றொலித்த விதம்கேட்டு
வீரத்தை நெஞ்சிழந்தோ வந்தஒலி பீதியெழப்
பாரத்தை மனம்கொள்ளப் பண்ணியதோ ஒலிகேட்டு
”யாரங்கே என்னகுரல் ஈதறிவாயோ”என்றாள்

பேசமுன் பேதைகாண் பெருந் துயரம் நடக்குதிங்கே
நீசர் கை கொடுங்கோலில் நேரும்துயர் ஆயிரமாம்
கூசுங் கதை பகிரவெழின் கோடியுகம் ஓடிடுமாம்
வாசலிலே வந்தவளே வாவென்ன வகையறியேன்

மீண்டும் புன்னகைத்து மெல்லியதாய் கண்பார்த்து
”ஆண்டொன்று போயின் அடுத்தவளின் புதுவரவு
நீண்ட புவிமேவி நிலைபெற்று  ஆளவென
தாண்டிப் பெருவெளியாம் தகதகக்கும் மின்னலிடை

ஆண்டு விஜயா இவ் வகிலத்தை சேரவந்தேன்
வேண்டியுன் வீடுவர விரும்பாதவன்போலே
நீண்ட கதை படித்தாய் நின்னைநான் என்னென்பேன்”
வேண்டா தவளாயின் விட்டுவிடு எனை யென்றாள்
சொன்னவளைப் பார்த்தேன் சுடரெனும் கண்ணிரண்டும்
மின்னும் ஒளிமுகமும் மெய்யென்று கூற “வொரு
கன்னிதனை கருமிருட்டில் காணப்பயமெழும்பும்
அன்னையென அறியேன் அடியேனை மன்னியென்றேன்

நட்டநடு நிசியாகி நடந்தேகால் பத்தொடு ஈர்
தட்டிமணி ஒலியெழுப்பத் தரணியிலே படர்பவளே
சொட்டுமணித் துளிமுன்னே சுந்தரி என்வீடுவந்து
தட்டியதேன்?” என்னத் ”தமிழ்கவிதை ஏதென்றாள்

”முத்தமிழின் கவிதையெனில் மோகமதில் கொண்டவளே
எத்தனைதான் பேரவலம் இத்தரையில் கண்டுள்ளோம்
உத்தமராம் ஊருலகம் ஒன்றும் கருணையின்றி
செத்தவரை எண்ணுமொரு செயல்கூட மறுத்தனரே
(அடுத்ததில் முடியும்)

kirikasan

unread,
16 Apr 2013, 02:04:52
to santhav...@googlegroups.com

அத்தைமகள் போலே அழகியதோர் தீவெண்ணி
சொத்தை இறைத்துமென்ன சூழ் உலக நாடெல்லாம்
முத்தமிட உறவாட மோகினி போல் காதலுற்று
சித்தம் இழந்தவராய் சுற்றுகிறார் நாடிதனை
 
சொந்தம் எனத்தீவை தொட்டெடுக்க ஆவலுற்றுச்
சந்தனமே நெஞ்சில் தருகுவையோ ஓரிடமாம்
வந்துனையே காவலிட்டு வண்ணம் சிறப்படைய
தந்திடுவேன் காசுநின தன்னிலோர் பாதிகொடு

உத்தமராம் செந்தமிழர் உனக்கெதிராய் சற்றேனும்
கத்தியெழக் காணின் கவலைவிடு நானுள்ளேன்
செத்துவிட நஞ்செறிந்து சிதைப்பேன் அவர்முழுதும்
கொத்தாய் குலமழிப்பாய் கூடிக்கரம் கொடுப்பேன்

அத்தனை யோர் கேவலமாய் ஆடும் பல நாடுகளும்
குத்தியழித்திருக்க கோலமொன்று நாம்கண்டோம்
செத்தவரோ போயழியச் சுடுகாடு நோக்கி நடை
வைத்தநிலை கொண்டிங்கே வருந்திக் கிடக்கின்றோம்

புத்தாண்டு என்ன புதுவருடம் தானென்ன?
முத்தான மொழிஎல்லாம் ஒப்பாரிக்கா மென்றேன்
”எத்தகைய துன்பமென இவளறிவாள் நானாளும்
புத்தாண்டில் இல்லாமல் போம்” என்றாள் அதுசொல்லி

முடிக்கமுதல் மீண்டும் மங்கையவள் கத்துங் குரல்
துடிக்கும்பெண் அவலம் தொலைவிலே கேட்டிருக்க
”அடித்து வதை செய்யும் ஆட்களுடை கோரமது
வடிக்க மனம் ரத்தம் வழிந்தோட வாழ்கின்றோம்

என்னபிறவி கொண்டோம் இருந்தும் வீரமதைத்
தின்று விழுங்கிவிட்டுத் தெரியாமல் கிடக்கின்றோம்”
என்றுமுடிக்க முன் எழுஞ் சத்தம் வீதியிலே
நின்று நடந்தோடும் நிழலாட்டம் தென்படவே

~வந்துவிட்டான்ஆமி வளைந்து நிலத்தில்படு
எந்தவிதி யுன்னைஇங்கு  ஏகிவிடச் செய்ததுதோ
சுந்தரமாய் காணுகிறாய் சுற்றும்பகை கண்ணிடையில்
வந்துவிடில் உந்தன் கதி  வாழ்வே அழிந்ததம்மா”

என்றுமெலக் கூறக்கணம் எமைநோக்கி ஒருதடியன்
முன்வாசல் வழிகாண, ”முடிந்தோம் ஓடெ”ன்றேன்
தேனாய் சிரிப்பொன்றைத் திங்களொளித் தங்கைமகள்
தானாய் விரித்தங்கே தமிழ்மகனே அஞ்சாதே

யாரென்று கொண்டாய் ஞாலத்தை ஆளவரும்
போருக்கும் தலைவியாம் பூவுலகின் ஆட்டமெலாம்
நேருக்குநேர் நின்று நிகழ்வெல்லாம் சீராக்கி
பாருக்கு வழிகாட்ட பணிகொண்டு வந்தவளாம்”

சொல்ல அவள் முகத்தை சிறு குழந்தையாய் நோக்கி
”வல்ல மொழிபேசி வந்தாள் உன் முன்னவளும்
வெல்லவந்தேன் என்றாள் விடியுமுன் போகின்றாள்
நல்ல கதைபேச்சு நாடப்பதுவோ வேறென்றேன்

”கொல்லும் பகைவரெனும்  கோரப்பேய் ஆளுலகில்
நல்லவரின் நீதிவழி நடப்பவர்க்கு வாழ்வுஇல்லை
வல்லவளே உன்னாலே வரும் துன்பம் என்னையும்தான்
இல்லையென ஆக்கிவிடும் இறப்பதிவன் நீயில்லை

(நிச்சயமாக அடுத்ததில் முடியும்)

kirikasan

unread,
16 Apr 2013, 02:45:44
to santhav...@googlegroups.com

  புத்தாண்டே புதுவரவே (மூன்றாம் பகுதி)

வா இன்னும் பார்த்துவிட வழியில் பலதிருக்கும்
போவதற்குஇன்னும் பொழுதுண்டு பன்னிரண்டு
ஆவதுவரைதானும் அழிவுகளைக் கண்டொருக்கால்
பூவான துன்னுள்ளம் புரிந்திடுமோ வா” என்றேன்

கண்டு கொளாதிருள் மறைந்து கையில் உயிர்பிடித்துக்
கொண்டே அவளுடனே குலைநடுங்க ஓடுகிறோம்
தண்டும் தடி இலைகள் தடக்கி யொருசத்தமெழச்
செண்டும் மலர்க்கொடியும் சிதைவடைய ஓடுகீறோம்

எந்ததிசையிருந்து இடிமுழங்கி குண்டுவரும்
வந்து தான்பந்தாட வாரிச் சிரமெடுக்கும்
சிந்தனையில் அச்சமெழச் சேர்ந்தோடக் காலடியில்
அந்தோ என்சொல்வேன் ஐந்தாறு உடல்துடிப்பு

குற்றுயிராய் ஒன்றிருந்து குரல் இன்றிக் கதறுவதும்
மற்றுயிரோ மரணிக்க மயக்கமதைக் கொள்ளுவதும்
அற்று உயிர்போகுங்கால் அலங்கோலமாய் கிடந்த
சுற்றங்களைக் கடந்து சுழன்றே ஒடுகிறோம்

பெருஞ்சீற்ற சத்தமெழப் பேரிடியாய் தடதடென
உருண்டோடும் வண்டியதில் ஒளிவெள்ளம் தவிர்க்கஎன
அருகே ஒருவீட்டை அமைதியிலே ஆழ்ந்துறங்கித்
திறந்தே கிடந்ததனால் தெரியாமல் உள் நுழைந்தோம்

அய்யோஎன் சொல்வேன் அழகியதோர் பெண்மகளாம்
செய்யாத கோரங்கள் செய்தே உயிரழித்தும்
மெய்யில் குருதிவர மேனிச் சிதைத் தழித்து
செய்யும் கொடும் விலங்கோர் செய்தழித்துச் சென்றுவிட

புதுவருடபெண்ணோ பேச்சறியா திகைத்திட்டாள்
இதுவும் பூவிமீதில் இருப்பதுவோ என்பதுபோல்
மதுவிழிகள் நீர்சுரக்க மனது வெறித்தவளாய்
எதுபேச என்றெண்ணா என்முன்னே மொழியிழந்தாள்

பன்னிரண்டு மணியடித்து பாரில் ஒலியெழுப்ப
என்னுடைய நேரமிது ஏங்காதே உலகமதின்
சின்னதொரு வருடம் செயலாற்ற வந்தேனாம்
உந்தன் இனமழியும் உண்மைதனை நானறிந்தேன்

புலரும் புதுவருடம் புத்தாண்டு மட்டுமல்ல
நிலவும் பகைநீங்கி நிம்மதியை தருமாண்டு
பலதும்தீயவைகள் பழிநீங்கி நலம்காக்க
மலரும் வாழ்வுக்காய் மனம்கொண்டுழைத்திடுவேன்

போகும் பிணி தமிழன் புதுவாழ்வு கொள்ளவென
ஆகும் வழி செய்வேன் அஞ்சாதே என்றிட்டாள்
வேகமுடன் அவளோ விழிநோக்கி நான்காண
தேகமெடுத்தவளோ தென்றலிலே கரைந்திட்டாள்

முழுதாய் வியாபித்து மேதினில் பரவியவள்
அழுதவிழி துடைக்க அழியுமினம் காத்திடவே
பொழுதா மிவ்வாண்டடில் போதியன செய்வாளோ
எழுதும் விதியென்று எங்கள்துயர் மறப்பாளோ!

*******************************முடிந்தது)

kirikasan

unread,
20 Apr 2013, 07:47:42
to santhav...@googlegroups.com
 
          காத்தருள் தெய்வமே

விழிமீது ஒளிதந்து வெளிமீது நிலைகொண்ட
 அழியாத பெருந்தீபமே
எழிலான மலர்வாசம்  இழைகின்ற காற்றோடு
எமைவாழப் புவியீந்தனை
பொழிலாடி விரிகின்ற  புனல்மீது அலைபோலப்
பொலிகின்ற உணர்வீந்தெமை
வழிதேடி விரிகின்ற  வாழ்வின்பம் தனைவேண்டி
வழுவோடு அலை என்றனை

மொழிகூறிக் கதை பேசி  முழுதாகத் தமிழ்கூறி
முடிவான வரையாடினோம்
அழியாத உடலென்றே அகங்கார மதம்கொண்டு
அறிவானததைப் போக்கினோம்
பழியாவும் எமையென்று  பரிதாபம் உலகன்று
படைகொண்டே எமைமோதவும்
குழியாகப் பெரும்வாழ்வு குலைந்தாக எமையிங்கு
குடியாக்கி வழி செய்தனை

அழுதாலும் விழுந்தாலும் அதிதீபஒளியான
அருஞ்சோதி யெமதன்னையே
தொழுதோமே எமைக் காத்து துயரென்ன அதைக்கேட்டு
துடிக்காது இரு என்றனை
மழுவேந்தும் சிவன் வந்து மண்மீது நடமாடி
மறையென்று  முடிவாக்கியும்
தொழுதாலும் இரங்காது துயர்கண்டு இறங்காது
துடிஎன்று தொழில்செய்தனன்

புழுவாக வாழ்வென்ப புரியாமல் நெளிந்தோடிப்
பொழுதான பல ஓட்டினோம்
வழுவாக நடைபாதை வலமாக இடமாக
விழிமூடி  நடை கொண்டனம்
தொழுதோமின் றருள் வேண்டித் துகளோடு பெருங்கோளம்
தொலையண்டம் தனையாக்கியே
வழுகாது சுழன்றாடும் வகையான செய்தாயே
வா எம்மைக் காத்தன்பு செய்

kirikasan

unread,
20 Apr 2013, 08:31:09
to santhav...@googlegroups.com
           
                 எமனே இது ஏனோ?


வேட்டையாடு மெண்ணங் கொண்டு   வீரனென்று சூலமேந்தி
 வீதியோரம் வந்துநின்ற கூற்றா
ஆட்டமென்ன அன்னை சக்தி ஆளுமிந்த மேனிமீது
ஆசை கொண்டு நீயிருப்ப தாகா
போட்டி போட்டு நீயழிக்கும் பூமிமீது யாருயிர்க்கும்
போதுமென்றதோர் கணக்குப் போடு
போட்டதென் கணக்கு வேறு பொற்றமிழ் விளைக்க அன்னை
போட்டதே நிலைக்கும் விட்டு ஓடு


நாட்டிலே இவன்தனக்கு  நாளுமிட் டுயிர்தனுக்கு
நாட்களை வகுத்த தன்னை கேளாய்
பாட்டிலேயென் வாழ்வமைத்த பார்வதிக்கு மூத்த அன்னை-
பார் வதைக்கின்கேட்பள் விட்டு வாளாய்
கூட்டிலே உயிரிருத்தி கூடவே உணர்வமைத்து  கோடிகோடி
சூட்சுமங்கள் செய்தாள்
நீட்டியே நடந்துலாவி நின்றனம் இச் சிக்கலான
நீளுடல் அழிப்பதென்ன சொல்லாய்

தேட்டமென்று பாரில்நானும் தேடிவைத்த தொன்றுமில்லை
தேவி கூறும் வார்த்தை மட்டுமுண்டு
பூட்டியென்னை அன்பினாலே  பூமியில்நிலைக்க வைத்து
புன்னகைக்க வைத்த அன்னை கண்டு
காட்டியுன் குணத்தை நீயும்  கையிற்கொள் சுருள்கயிற்றைக்
கட்டியென் கழுத்திற்போட எண்ண
நீட்டியென்  அருள் கொடுக்கும் நீள்வலித்த சூலமேந்தி
நின் செயல் சினப்பளன்னை பாரு

தோட்டமும் பயிர்வளர்க்க துள்ளி யுன் எருதழிக்கத்
தோல்வியென்று நாமும் பின்னர்கண்டு
வாட்டமும் இழந்து வாயில் வார்த்தைக ளொறுத்துவாழ
வையகம்  நிறுத்தினாளோ சொல்லு
போட்டவன் வினை அறுப்பான் போனவர் வகுத்தநீதி
புல்லருக்கும் நல்லவர்க்குமொன்று
ஏட்டிலே இருக்கும்சொல்லும் இன்பமே விதைத்தவர்க்கு
இன்பமே அறுத்தெடுப்பர் எண்ணு

kirikasan

unread,
21 Apr 2013, 11:09:08
to santhav...@googlegroups.com

            வாழ்வீது!

குளுகுளு  என மனம் கொளும்இளம் அனுபவம்
குறைதனைப் புரியாது
பழுபழு எனக் கனி பழுத்துமின் சுவைதனைப்
பலபல்லும் அறியாது
கொழுகொழு வயல்நிறை குலுங்கும் நெல் அறுவடை
கொளும் நிலை உணராது
உழு உழு என வயல் உழுதும் நெல் எருதுண்ண
உரிமையும் கிடையாது

அழுஅழு எனும் நிலை அகிலமும் பிழைபட
அளித்திடும் வாழ்வொன்று
வழுவழுஎனப்பல வகையொடு வசதியை
வழிகொள்ளும் நினைவோடு
கழுகழு வென இறை கடைசியில் தரும் இடம்
கடும் வலி அறியாது
முழுமுழு தவறுகள்  முடிவில தெனும்வகை
முயன்றனம் அவையாது

தொழுதொழு இறையவள்  அருள்தரும்வகையதும்
தொகை யதும் குறையாது
எழுஎழு வுணர்வுகள் எழும்புதிதெனில் மனம்
எதனிலும் சிதையாது
நழு நழுவென எதில் நழுவிய பொழுதிலும்
நடைமுறை வழுவாது
தழு தழுவிடும் உடல் தனைத் தடையிலதென
தரும் முடிவெனுமேது

கொளுகொளு எதனிலும்  குறையல்ல நிறைவினைக்
குவலய வாழ்வீது
வெளுவெளு வெனக் கதிர்விடுமொரு இரவது
விடியவே விடியாது
புளு புளுவென வெயில் படுகையில் வதைஎனும்
புவிகொளும் வாழ்வீது
முழுவதும் அமைதியில் முடிவுற வரும்   அந்த
முழுமையில் குறையேது?

kirikasan

unread,
23 Apr 2013, 02:43:00
to santhav...@googlegroups.com

என் கவிதைகளில்காணும் முகமறியாதவள் யார்?

          கவிதை சொல்லும் காதலி


எந்தன் கவிதைக் காதலியாள்  
   ஏட்டில் மட்டும் வாழுகிறாள்
சந்தம் போட்டுப் பாடுகையில்  
   சற்றே எட்டிப் பார்க்கின்றாள்
சொந்தம் என்றோர் முகமறியாள்
    சொல்லும் பெயரும் யாதுமிலாள்
விந்தை அவளுக் குண்மையிலே   
   வாழும் வகையே  இல்லையய்யா

அன்றோர் மாலை நானிருந்தேன்  
   ஆற்றங் கரையின் ஓரத்திலே
நின்றேன் தென்றல் நீவுசுகம்
  நிலவின் ஒளியோ போதைதர
மென்றே விழுங்குங் கனிசுவையும்
   மதுவின் இனிமை மனங்கொள்ள
நின்றாள் பக்கம் நான் கண்டேன்
   நிலவின் தங்கை  வாஎன்றேன்

செந்தேன் வழியும்  சிறுகுரலும்
  செல்லக் கிளியின் வளைமூக்கும்
வந்தேன் என்றே வலைவீசும்
   வட்டக் கரிய விழிகளையும்
கொந்தேன் என்றே அணில் தாவிக்
  கொள்ளா காக்கும் கொய்யாவாய்
பந்தாய்ச் சுவரில் பட்டலையும்
  பார்வைகொண்டே சுட்டெரித்தாள்

சிந்தை கண்டு சிறுமகளே
  சொல்லாய் யார்நீ நீயென்றேன்
உந்தன் கவிதை சிற்பியெனில்
  உணர்வில் வடித்த சிலையென்றாள்
முன்னே என்னை அறியீரோ
    முழுதாயுள்ளம் கொண்டீரே
என்னைத் தொட்டுப் பாரென்றால்
    எதுவுமில்லை காற்றானாள்

தேகம் இல்லாத் திருமகளோ
  திங்கள் வதனம் பொய்யானால்
ஆகும் வார்த்தை அத்தனையும்
  அகத்தே யெழுந்த கற்பனையோ
வேலும் வில்லாம் விழியென்றால்
   வீசும் கலையும்  வேடிக்கை
நாலும் நாலும் இரண்டாமோ
  நற்தமிழ் சொல்லும் பொய்யாமோ

வானில் வெய்யோன் வலம் கொள்ள
  வார்க்கும் வெம்மைத் தகிப்பாலே
கானல் நீராய் தொலைதோன்றும்
   காட்சி  காணும் கலைமான்போல்
வேனில்காலத்  தாகத்தை  
   விருப்பைக் கொண்டு கலைந்தோடி  
தானிப் புவியில்  தடுமாறும்
   தணலில் பொழியும் மழையாமோ

எந்தன்  மனதில் கவிவானில்
   எண்ணப் பஞ்சாம் முகிலாவாள்
தந்தோம் என்றே கவிபாடத்   
    தோகையாக நடம்செய்வாள்
சந்தத் தமிழின் தங்கையவள்  
    சாரீரத்தின் உருவுடையாள்
சிந்தையென்றோர்  சிற்றூரில்  
     சொல்லும் கவிதைக் குறவானாள்

ஊனும் உடலம் இல்லாள் காண்
  உண்ணும் அன்னத் தோற்பையும்
தானும் கொள்ளாள் தண்ணிலவாள்
   தனியென் விழிமுன் நிழலாவாள்
தேனும்பாலும் போற்கவியில்
   திகழ்வாள் அவளைக் காணவென
வானும் வாழும் தேவர்களும்
 வந்தாற்கூட  வடிவாகாள்

kirikasan

unread,
23 Apr 2013, 03:23:00
to santhav...@googlegroups.com
     உயிரின் சுதந்திரம்

கட்டிக்கலை மெட்டுக்களை யெட்டுத்திசை கிட்டும்வரை
கொட்டிக்கரம் தட்டிப் பரவா
ஒட்டிக் கிட சட்டம் இது நட்டமிலை விட்டுப்படு
வட்டம் இது என்னத் தகுமோ
மட்டுப்பட இட்டத்துடன் விட்டுப்பெரு விண்ணில் எழு
பட்சிக்கென்ன  செட்டை இறைவா
முட்டுப்பட நெட்டுக் கிளை வட்டில்கூடு கட்டித்துயில்
தொட்டுகிட என்னத் தகுமோ

சிட்டுக் குருவிக்குத் தரை  விட்டுச்செல ரட்டைச் சிற
கொட்டக் குறு வெட்டக் கருதா
விட்டுப்பற வெட்டைவெளி அட்டப்பெரு திக்குக்கிடை
கட்டுப்பாடு  சொட்டுமிலையென்
பொட்டை யவள் நெட்டை நுதலிட்டோர்சிறு பொட்டேயென
கொட்டும்நிலா எட்டித்திரியும்
பட்டுக் குளிர் தொட்டுச்செலும் பஞ்சுச் சிறுதட்டாம் முகில்
எட்டும்சுகம்  என்னே ! என்னே !!

கட்டையுடல் வெட்டிச் சிறு காட்டில் விறகிட்டுக் கரி
கொட்டச் சுடும் சாம்பல் தனையே
மொட்டுக் களைச் சுட்டுக்கதிர் விட்டுபிரிந் திட்டோர் இதழ்
நெட்டில் மலர் நின்றேயாடும்
கட்டுத் தடையின்றிக் கரை தொட்டுத்திரிவட்டத் திரை
குட்டை நதிநீருள் கரைத்தால்
நட்டந் தனை நம்மைத் துணை யொட்டிதிரி உயிரும் உடல்
விட்டுச் செல என்னே செய்வோம்!

kirikasan

unread,
24 Apr 2013, 00:31:30
to santhav...@googlegroups.com

       ஆகலாமோ

பன்முகைத்துக் கட்டழிந்த
பொன்மலர்கள் மாலைநேரம் புன்னகைக்கலாம்
கன்னமிட்ட குங்குமத்தில்
காணுகின்ற வானமங்கு  புன்னகைக்கலாம்
தன்நிறத்தில் சூரியயன்நல்
தங்கமென்று மாறி அங்கு புன்னகைக்கலாம்
நன்மனத்தில் எண்ணம்மாறி
இன்னலுற்றபோது தெய்வம் புன்னகைப்பதோ

முன்கழுத்தில் தொங்கும்அந்தப்
பொன்னகைகள் மின்னிமின்னிப் புன்னகைக்கலாம்
சின்னலைகள் ஓடுமங்கு
துள்ளும் மீனின் நீர் தெறித்துப்  புன்னகைக்கலாம்
தென்னை ஓலை மீதுகைகள்
தென்றல்கொண்டு தொட்டதாலும் புன்னகைக்கலாம்
நன்னெறிக்கென் றான  உள்ளம்
நாசம் செய்யும்போது  வாழ்வும் புன்னகைப்பதோ

கண்ணில் காணும் காட்சியாவும்  
பொய்யென்றோதும் ஞானிஉள்ளம் புன்னகைக்கலாம்
மண்ணில் எங்கும் காணும்வாழ்வு  
மாயை என்று கூறின் யாரும் புன்னகைக்கலாம்
வண்ணம் கொண்டமேனி பூசி
வாசமிட்டபோதும் எண்ணம் புன்னகைக்கலாம்
உண்மைகூறும் நெஞ்சம்கண்டு
ஒன்றுமில்லை சூன்யம் என்று புன்னகைப்பதோ

***********************

kirikasan

unread,
24 Apr 2013, 09:29:26
to santhav...@googlegroups.com

  தீயாக நீ வந்து நில்லு


தினம் வந்து மனம்மீது தேனான தமிழ்தந்த
தெய்வமே நீ இங்கு நில்லு - என்
மனம் மீது எதுவேனும் மறு என்ப  துருவாகின்
மறுபேச்சு இலை என்னைக் கொல்லு
கனம் மீது கொள்கின்ற கதைபேசு முளம்கண்டு
கருகாமல் என ஏற்றுக் கொள்ளு  - உன்
வனம்மீது விளையாடும் வண்ணத்து சிறுபூச்சி
வழி தந்து எனை வாழ்த்திச் செல்லு

கலைஎன்று கவிபாடி கணமொன்றும் விரையாகா
களிகொண்டு என் காலம் ஓட  - அதில்
இலைஎன்று ஒரு நாதம்,  இசையென்று படுகோரம்
இதுவென்ன எனும் போது  வாட
மலையென்று தடைவந்து மதிகொண்ட நினைவான
மகிழ்வில்லை  எனவாகும்போது - அதை
அலைகொண்டகடல்மீது புயல்வந்த பொழுதாக
அரங்கேற்று விளையாடு வெல்லு

வலைகொண்டு மீனள்ளி வதைகொண்டு உயிரள்ளி
வாழ்ந்தேனா எனை வாழ்த்திச் செல்லு - என்
தலைகொண்டு போனாலும் தமிழ் என்று சொன்னேனே
தவறாது என்பக்கம் நில்லு
குலைஎன்று சொன்னாலும் குதிஎன்றுசொன்னாலும்
குழந்தையே நான் செய்வேன் கொள்ளு - உன்
விலையற்ற பெரும்சக்தி வீச்சோடு எனைச் சேர்க்கும்
விதியென்ப வருமட்டும் நில்லு

அழகான ஒருசோலை அதன்மீது பல மாலை
அணியென்று சொன்னாயே அன்று- நான்
அழுதேனா தாவென்று....அது உந்தன் வரமென்று
அறிவேனே அகம்வந்து சொல்லு
தொழுதாலும் துவண்டாலும் தொலயான பெருந்தீயே
தொடு..என்னை தொடு..என்னை வந்து - ஒரு
புழுவான எனையன்புப் பெருக்காலே இதுகாறும்
புலவனென் றாக்கினாய் வெல்லு

****************************

kirikasan

unread,
24 Apr 2013, 09:54:13
to santhav...@googlegroups.com
இங்கே போடும் கவிதைகளுக்கு நான் பொறுப்பில்லை  இறுதி இரண்டு கவிதைகளும் 10, 16 நிமிடத்தில் செய்தேன். இவ்ற்றை போடாவிட்டால்
சக்தி என்மீது கோபம் கொள்வாளோ என்று  பயந்து போடுகிறேன் தவறென்னில் மன்னிக்க
     தேவியின் கூற்று

போகாத வழிஒன்று போனேன் - ஒரு
பொல்லாத கனவொன்றில் புதிதாக நடைபோட்டுப்
போகாத வழியொன்று போனேன்

ஆகாத வழியென்று சொன்னார் - நான்
அலையாகிக் கடல்மீது அலைந்தாலும் விதியென்று
போகாத வழியொன்று  போனேன்

ஆகாதல் என்கின்ற ஊரில் - நான்
அவளோடு அவன்கண்டு அழகென்று சொன்னேன்
போகாத வழிஒன்று போனேன்

ஆகாத தன்மீது தெய்வம் வந்து
அழகான தமிழ் கொண்டு.. இசைபாடு என்றாள்
போகாத வழிஒன்று போனேன்

சாகாத வரம்தந்த அன்னை - அங்கு
சற்றேனும் தமிழ்பாடிக்  குதிஎன்ற தாலே
போகாத வழி கண்டு நின்றேன்

ஆகாத ஆகாத தென்றார் - நான்
அழகென்று கதைகூறும் பொழுதோடிவந்தார்
போகாத வழி மீது  நின்றேன்

நீகாதகன் என்று சொல்லி - என்
நினைவோடு விளையாடி நிலைமாற வைத்தார்
போகாத வழியொன்று போனேன்

வேகாத அமுதென்று வெம்பி - நான்
விருந்தென்று பொருள் கொண்ட வினையெண்ணி நொந்து
போகாத வழி தன்னில் நின்றேன்

தகாத வார்த்தைகள் இல்லை - இது
தமிழென்று சொன்னாலும் தடைபோட்ட சொல்லை
போகாத வழி மீது நின்றேன்

ஏகாத வழிமீது என்னை - நீ
ஏகென்றுசொன்னாளே அவள்தானே உண்மை
போகாத வழிஒன்று போனேன்

மாகாத தொலைமீது நின்று - என்
மனம்மீது விளையாடும்  மாதேவி சொல்லு
போகாத வழிஒன்றா போனேன்

kirikasan

unread,
24 Apr 2013, 10:04:25
to santhav...@googlegroups.com

           அவள் தந்த அழகு

உயர்ந்த மலைமழை ஊற்றிய மேகம் ஓடும் நதிமகளும்
நயந்து நறுமலர் வீழ்த்திய தருவும் நதியவள் அலைகாவும்
தயங்கு மிளமான் பருகிடு நளினம் தாவும் முயற் கூட்டம்
மயங்கு மெழில்விரி தோகையின் நடமும் மனதில் இனிமையன்றோ

அயர்ந்து நெகிழிதழ் அரும்பிய முகையும் அடர்வனமும் தருவும்
புயங்கள் திரளுறப் பிடிகிளை முறியப் பாயுங் குரங்கினமும்
தயங்கி இரவினில் தனிமதி யொளிரத் தழுவுஞ் சிறுமுகிலும்
இயைந்த அழகுடை இயற்கையின் பரிசாம் இன்பம் இன்பமன்றோ

வளர்ந்த கதிர்பொலி வயலிடை காற்றும் வருடிய சுகம்யாவும்
தளர்ந்து தளம்பிய குளமிடை  தாவும் தவளையும் அரவிந்தம்
கிளர்ந்து அலைதனில் ஆடிய வகையில் குலமகள் நீராடும்
குளிர்ந்த விழியிரு துயில்திரு வதனம் தொலையென வண்டோடும்

தெளிந்த வானிடை புள்ளினக் கூட்டம் தூரச் சிவந்தமுகில்
அழிந்த பகலொளி ஆதவன்சாய அந்தியின் மனமயக்கம்
நெளிந்த முகிலதும் நின்றிடு மலையும் நீலக் கருவானில்
ஒளிர்ந்த தாரகை ஊடெழு திங்கள் ஒளிபடர் கலை இறையோ

kirikasan

unread,
24 Apr 2013, 22:49:59
to santhav...@googlegroups.com
           கடலின் கரைமீது


தூரத்திலே அலை வீரத்திலே எழும்
நேரத்திலே விழும் பாரத்திலே
ஓரத்திலே மணல் ஈரத்திலே நானும்
உள்ளம் தனித்திடப்  பார்த்திருந்தேன்
ஆரத்திலே மணி கோர்த்ததென ஆங்கு
ஆடிவரும் அலைத் தூறலிலே
சாரலிலே  அதனோசையிலே  எந்தன்
சஞ்சலமும் கரைந் தோடவிட்டேன்

மேலையிலே ஒளிபோகையிலே மின்னும்
மாகடலில் மூழ்க ஆதவனும்
மாலையிலே வரும் காற்றினிலே கடல்
மங்கைதரு வாசம் மோந்து நின்றேன்
சேலையிலே நீலம் கொண்டவளாம் கடல்
சில்லென் றிருப்பினும் சீறுவளாய்
பாலையிலே மணல் போல் நெளிந்தும் -  அதன்
பார்வை குணம்மாறி இன்பமிட்டாள்

வாழ்க்கையிலே பல சோடிகளாய் பலர்
வந்திருந்தே கதை பேசிடவும்
ஆழ்மனமோ எனை யாரெனவே காணும்
அற்ப நினைவு வந்தாளக் கண்டேன்
சூழ்ந்தவிரி  நில வாழ்வினிலே இவன்
செய்வதென்ன வரை செய்ததென்ன
தாழ்வுணர்வும் வாழும் தன்மையிலும் என்ன
தாவும் குரங்கொப்ப ஆவதென்ன

ஏன்பிறந்தாய் நீயும் எங்கிருந்தாய் இங்கு
ஏன் நடந்தாய் உந்தன் எண்ணமென்ன
தீன் கொரித்தாய் மனை தீண்டிநின்றாய் குலம்
தோற்றுவித்தாய் இன்னும்தேவையென்ன
ஊன் துடித்தாய் உயிர் தான் துடித்தாய் உணர்
வோங்கி நின்றாய் உன்னை விட்டவர்யார்
தேன்குடிக்கு மொருமந்தியென  நீயும்
தீமைக் கிளைதாவி தொங்குவதேன்

வானரமோ இல்லை வாழ்வறமோ ஒரு
வீழ்நிலவோ தென்றல் வீசுவதோ
மானமதோ மரியாதைகளோ இவை
மாறுவதோ  மனக்கோபமென்ன
தானமதோ தட்டிப் பற்றுவதோ தலை
தாழுவதோ முடி சூடுவதோ
ஆனதென்ன அன்புபோனதென்ன மதி  
ஆணவமும் கொண்டு மாவதென்ன

ஆழ்கடலா அதன்ஆழமதா அது
ஆரம்பமா  அந்தம் உண்டல்லவா
சூழுலகில் ஒரு தூசியிவன் சுற்றுங்
கோள்களிடை யொரு சூனியமே
ஏழுவண்ணம் கொண்டவானவில்லில் இவன்
எந்தநிறம் மழை நின்றபின்னே!
வாழும்வரை  வந்த நீளழுகை இனி
போதுமென்னக்  கடல் சேர்ந்தழுதாள்

******************************

kirikasan

unread,
26 Apr 2013, 19:32:27
to santhav...@googlegroups.com

        கற்காலம்      

மெல்ல நடந்து சென்றேன் -  அந்தோ
.  மின்னுங்குள அலைமீதிருந்து துள்ளி
.  மீன் ஒன்றுவீழ்ந்த தடா
அல்லலுறுதல்கண்டேன் -  அதை
.  அள்ளியிரு கையில் நீரிலிட்டேனது                                                
.  எள்ளி நகைத்ததய்யா
சொல்லத் தெரியவில்லை - அதன்
.  சொந்தமனதிடை கொண்டநினைவென்ன
.  சொல்லு கயலே என்றேன்
நல்லவன் தானெனிலும் - என்னை
.  நாட்டில் விற்றுப்பணம் பெற்றிடுவார் மதி
.  யற்ற செயல் உன்னதாம்

வல்லதோர் கானகத்தே நான்
.  வந்தபோதிலொரு வேடன்வலையிடை
.  வீழ்ந்த புறாவைக் கண்டேன்
கொல்லென போட்டுவைத்தான் சிக்கிக்
.  கொண்ட புறாவினைக் கையி லெடுத்ததைக்
.  காற்றில் பறக்கவிட்டேன்
சொல்லவும் தேவையில்லை யாரோ
.  மெல்லச் சிரித்தென்னை மீண்டும்  இகழ்ந்திடும்
.  மென்னொலி கேட்டதையா
நல்லதைத் தானே செய்தேன்-  இந்த
.  நானிலம் மீதினில் தன்னலமற்றவர்
.  தாழ்ந்த நிலையினரோ

கல்லை எடுத்தெறிவோர் - அந்த
.  காதக வேலையை செய்வரெனில்  இந்தக்
.  காணுல கஞ்சுமடா
வல்லமன மெடுத்தால் - உந்தன்
.  வாழ்வி லுயிர்கொண்டு வாழமுடிந்திடும்
.  வைத்த விதி இதுவாம்
சொல்லை எறிந்தவர்க்கும் - மிகு
.  சூடெழவே பொய்மை சூழ்ச்சி இழைப்பவர்
.  சுந்தர வாழ்வுகொண்டார்
மெல்லெனும் பூவிதழாய் -  உந்தன்
.  உள்ளம் இருந்திடின் வெய்யில்கூடச் சுடும்
.  வேதனை மீதமப்பா

கையில் கிடைத்த உயிர் -  தன்னை
.  கொன்று சிரிப்பதே காணும் உலகிடை  
.  கௌரவமாகுதய்யா
செய்யில் கொலைகளெல்லாம் - மக்கள்
.  சொல்லின் வரம்பெற்று நல்லவனாய் முடி
.  கொண்டபின் செய்தல் நன்றா
வையகமென்ன சொல்லும் - அது
.  வல்ல அரசுடை கொள்கை இறைமை யென்
.  றுள்ளம் வியந்துகொள்ளும்
மெய்யில் விசர்பிடித்து - அவர்
.  மேனிவதைசெய்யும் காமவெறியெனில் 
.  மன்னித்து கைவணங்கும்

மன்னர் பகைமை கொண்டால்  -அன்றி
.  மற்றவர் தேசத்தை கொள்ள விரும்பினும்
.  மக்களைக் கொல்வதென்ன?
தன்னை எதிர்த்தவனை  விட்டு
.  தங்கை அண்ணன் பிள்ளை தம்பி சிறுமிகள்
.  தாய்க்குலம் கொல்வதென்ன ?
முன்னேறும் நாகரிகம் - இன்னும்
.  மேன்மைகொள் விஞ்ஞானம் அத்தனையும் சில
.  மக்களைக்    கொல்வதற்கா?
என்ன உலகமிது -  தினம்
.  இத்தனை சுற்றியும்இன்னும் இருப்பது
.  கற்குகைக் காலமன்றோ

*******************

kirikasan

unread,
28 Apr 2013, 09:27:51
to santhav...@googlegroups.com
         தமிழே என் அமுதே!


திங்கள் பிழிந்ததில் தேனெடுத்து வந்தே
தீந்தமிழ் ஆக்கிடவா- அன்பு
பொங்கும் இளந்தமிழ் பஞ்சணையிற் துயில்
கொள்ளெனப் பாட்டிடவா -சுற்றி
எங்கும் மலரிறைத் துன் நடை மென்மையின்
இன்ப மெழச் செய்யவா - எழில்
தங்குமென் னின்பத் தமிழ் மகளே உன்னைத்
தாயெனப் போற்றிடவா

கண்கள் சிரிக்குது  புன்னகை பூத்தெழில்
காணுது மென் தமிழே - உனை
யெண்ணில் மனத்திடை இன்பநதி யெழுந்
தோடுது பொங்கியுமே  - பல
வண்ண விளக்குகள் மின்னிஎரியுது
வந்து நீ நிற்கையிலே  - நினைத்
தண்ணமுதே உண்ண உண்ணத் திளைக்குது
தாகத்தில் நீரெனவே

புண்படு மென்நெஞ்சு பொல்லா வலிகொண்ட
போதிலும் இன்தமிழே -  நல்ல
பண்ணிசைத் தேநடம் ஆடிடப் போகுது
பக்கமில்லா தொழிந்தே - பலர்
மண்ணிலுன் மாபுகழ் பாடினும் கண்டிலேன்
மானிடனாய் வரவே - முதல்
அண்ணளவாய் வய தைந்தாமென் அன்னையும்
ஆவென்று பேர் சொல்லவே

விண்ணில் மலர்ந்திடும் பொன்னெழிற் தாரகை
வெண்ணிலவின் அருகே - நின்று
கண் சிமிட்டுமெழில் வண்ணக் கவித்தமிழ்க்
கன்னியுன் பொன்னெழிலே
தண்ணெழிற் பொய்கையில் நீரையள்ளிமுகந்
தன்னில்விடும் குளிரே -  உந்தன்
பண்சுவைப் பாடலில் பட்டது மேனியும்
புல்லிற் பனிதுளி நேர்

கூவுங் குயிலுண்ணும் மாவின்பழுத்த செம்
மாங்கனி  துண்டுசெய்தே - நல்ல
ஆவிற் கறந்த பால் தீயிலிட்டே பின்னை
ஆற வைத்து மெடுத்தே -  நறும்
பூவின் இதழிடை தேன் கவர்ந்தேயதை
பூசி அடைகள் செய்தே - எந்தன்
நாவும் இனித்திட  நல்கியுமுண்பனோ
நீ தமிழென் சுவைத்தேன்

kirikasan

unread,
28 Apr 2013, 11:04:44
to santhav...@googlegroups.com
மன்னிக்கவும் இது கற்காலம் திருத்தம்

மீண்டும் இடுகிறேன்


  கற்காலம்’’

மெல்ல நடந்து சென்றேன் -  அந்தோ
.  மின்னுங்குள அலைமீதிருந்து துள்ளி
.  மீன் ஒன்றுவீழ்ந்த தடா
அல்லலுறுதல்கண்டேன் -  அதை
.  அள்ளியிரு கையில் நீரிலிட விதி                                              
.  என்னை நகைத்ததடா
சொல்லாயீ தென்ன வென்றேன் - அட
    சுத்தமடமை நீ செய்ததென்ன அதைச்
    சந்தையில் விற்றிருந்தால்
நல்மனம் கொண்டவனே - அதில்
.  நாலு காசு வரும்  நீயும் செழித்தனை
.  நன்மை யிழந்துவிட்டாய்


வல்லதோர் கானகத்தே நான்
.  வந்தபோதிலொரு வேடன்வலையிடை
.  வீழ்ந்த புறாவைக் கண்டேன்
கொல்லெனப் போட்டுவைத்தான் சிக்கிக்

.  கொண்ட புறாவினைக் கையி லெடுத்ததைக்
.  காற்றில் பறக்கவிட்டேன்
சொல்லவும் தேவையில்லை விதி

.  மெல்லச் சிரித்தென்னை மீண்டும்  இகழ்ந்திடும்
.  மென்னொலி கேட்டதையா
நல்லதைத் தானே செய்தேன்-  இந்த
.  நானிலம் மீதினில் தன்னலமற்றவர்
.  நன்மதி கெட்டவரோ

கல்லை எடுத்தெறிவோர் - அந்தக்
.  காதக வேலையைச் செய்வரெனில்  இந்தக்

.  காணுல கஞ்சுமடா
வல்லமன மெடுத்தால் - உந்தன்
.  வாழ்வி லுயிர்கொண்டு வாழமுடிந்திடும்
.  வைத்த விதி இதுவா?
சொல்லினிற் பொய்மை யிட்டோர் - மிகு
.  சூடெழவே பொல்லாச்சூழ்ச்சி இழைப்பவர்

.  சுந்தர வாழ்வுகொண்டார்
மெல்லெனும் பூவிதழாய் -நீயும்
. மென்மைகொண் டிந்தநல் மேதினி வாழ்ந்திடில்

.  வேதனை மீதமப்பா

கையில் கிடைத்த உயிர் -  தன்னை
.  கொன்று சிரிப்பதே காணும் உலகிடை 
.  கௌரவ மாகுதய்யா
செய்யிற் கொலைகளெல்லாம் - மக்கள்
.  சொல்லும் வரம்பெற்று நல்லவனாய் முடி
.  சூடிப் பின் செய்தலும் ஏன்

வையகமென்ன சொல்லும் - அது
.  வல்ல அரசுடை கொள்கை இறைமை யென்
.  றுள்ளம் வியந்துகொள்ளும்
மெய்யில் விசர்பிடித்து - அவர்
.  மேனிவதைசெய்யும் காமவெறியெனில் 
.  மன்னித்து கைவணங்கும்

மன்னர் பகைமை கொண்டால்  -அன்றி
.  மற்றவர் தேசத்தைக் கொள்ள விரும்பினும்

.  மக்களைக் கொல்வதென்ன?
தன்னை எதிர்த்தவனை -  விட்டுத்

.  தங்கை அண்ணன் பிள்ளை தம்பி சிறுமிகள்
.  தாய்க்குலம் கொல்வதென்ன ?
முன்னேறு நாகரிகம் - இன்னும்
.  மேன்மை யறிவுவிஞ் ஞானமெலாம் சில

.  மக்களைக்    கொல்வதற்கா?
என்ன உலகமிது -  தினம்
.  இத்தனை சுற்றியும்இன்னும் இருப்பது
.  ஆதி கற்காலமன்றோ

ananth

unread,
28 Apr 2013, 17:04:15
to சந்தவசந்தம்
ஏன்பிறந்தாய் நீயும் எங்கிருந்தாய் இங்கு
ஏன் நடந்தாய் உந்தன் எண்ணமென்ன
தீன் கொரித்தாய் மனை தீண்டிநின்றாய் குலம்
தோற்றுவித்தாய் இன்னும்தேவையென்ன
ஊன் துடித்தாய் உயிர் தான் துடித்தாய் உணர்
வோங்கி நின்றாய் உன்னை விட்டவர்யார்
தேன்குடிக்கு மொருமந்தியென  நீயும்
தீமைக் கிளைதாவி தொங்குவதேன்?

துள்ளும் சந்த ஓசையும் பொதிந்துள்ள கருத்தும் சொற்களின் தேர்வுமாக மனத்தைக் கவரும் கவிதை.

அனந்த்


2013/4/24 kirikasan <kana...@gmail.com>

ananth

unread,
28 Apr 2013, 17:12:09
to சந்தவசந்தம்
கண்கள் சிரிக்குது  புன்னகை பூத்தெழில்
காணுது மென் தமிழே - உனை
யெண்ணில் மனத்திடை இன்பநதி யெழுந்
தோடுது பொங்கியுமே  - பல
வண்ண விளக்குகள் மின்னிஎரியுது
வந்து நீ நிற்கையிலே  - நினைத்
தண்ணமுதே உண்ண உண்ணத் திளைக்குது
தாகத்தில் நீரெனவே


அற்புதம்!

.. அனந்த்


2013/4/28 kirikasan <kana...@gmail.com>

kirikasan

unread,
28 Apr 2013, 21:57:07
to santhav...@googlegroups.com
மகா மகா மகா நன்றிகள் ஐயா! மகிழ்ச்சியே!!

kirikasan

unread,
28 Apr 2013, 22:09:59
to santhav...@googlegroups.com



(கணவன்
மனைவி  மாறிமாறிப்பாடுகிறார்கள்)
     
          உழுபவர்க்கில்லை இன்பம்


தேய்நிலவாய் வாடிமுகம் தேசுகுறைந் தாய்மனமும்
தோன்றுவதேன் ஆசை அத்தானே 
போயுழுது நாற்றுநட்டு பூமிநம்பி ஆசைப்பட்டு
பொன்விளையும் காத்திருந்தேனே

 தூயவளாம்  திருமணத்தை தைபிறக்க ஆகுமென்று
தேடி நின்றாள் மூத்தவள்அன்றே
பாயும் நதிகூடும்கடல் பார்த்துமனம் பேதலித்து
பாவை விழி யூற்றுவ தின்றே


நாயலையும் கேடுகெட்டு நல்லழைத்து மாடெனவே
நாமலைந்தும் துன்பம் வந்ததேன்
போயுமவர் ஏய்த்தவர்கள் பொன்னகைகள் மாடி இல்லம்
போகவண்டி என்று கொள்வதென்

மாயமிட்டுத் தெய்வமெங்கள் மனதெடுத்த வாழ்வளித்து
மேவும் சுகம் செய்வதுமுண்டோ
காயமிட்டுத் துன்பமிட்டு காலைவெயில் நாற்றுநட்டு
கண்டபயன் வேர்வை அல்லவோ

 
சாயமிட்டு வேடமிட்டு சத்தியத்தை கையும்விட்டோர்
சேர்த்து பணம் வழுகின்றாரேன்
தேயவிட்டு திங்களென தேகம்கெட்டும் நேர்மைகொண்டு
தூங்கியெழென் றெழுதிவைத்தானே

ஓயவில்லை நாள்முழுதும் ஓடிஉழைத் தென்னபயன்
உள்ள உயிர்மிச்சம் ஒன்றதே
தாயெனவே வந்தவளே தங்கமெந்தன் தேவி அதை
தானுமவன் விட்டுவைத்தானே!



kirikasan

unread,
28 Apr 2013, 23:51:32
to santhav...@googlegroups.com
வரலாற்று ரீதியாக கவிதை  காவியவகையில் எழுத என்னால் முடியாது
தெய்வ வழிபாட்டு முறையிலும் எழுதும் திறமையை கொண்டவனல்ல நான்.
கற்பனை ஒன்றே கட்டற்ற வெள்ளமாக ஊற்றெடுக்கிறது . அதனால்  வெறும் கற்பனை
ஓடத்தை நம்பி கடலில்  பயணம் செய்ய தொடங்குகிறேன். நடுக்கடலில் ஓடம்  மூழ்கிவிட்டால்
என்னை  குறைசொல்லாது மன்னிப்பீர்களாகுக. வழக்கம் போல வழுக்களையும் மன்னிப்பீர்களாக!
அனைத்தும் வெறும் கற்பனைபாத்திரங்களே! வாழ்ந்தவர்கள் வாழுபவர்கள் எவரையும் குறிப்பன அல்ல
முதல் தொடங்கியதை அப்படியே தந்துவிட்டு தொடர்கிறேன்

 1. வழி மாற்றம்

மணிவிழி புரவியின் சிறுநடை பழகிடு
மதனுடை யசைவுதனில்
அணியெனும் நினைவுகள் அலையென மனமெழ
அகமிடை துயரானாள்
தணிவது இலையென சடசட ஒலியுடன்
திரண்டன மழைமுகில் வான்
துணிவொடு நிமிர்ந்தனள் துலங்கிடப் பொலிவொடு
துயரெனும் கணம் தொலைய !

விளைந்திடு இருளெனும் வியன்தரு கருமையும்
விறுவிறு எனக்கவிய
குழைந்திடு குளிர்மையும் குலவிட கிடையிடை
குளுகுளு எனுமுணர்வும்
வளைந்திடும் தெருவிடம் விரைந்திடும் கணமதில்
வருவதுபெருமழை யென்
றுழைந்திடு துயருடன்  உளமதில் மெதுவெழ
எதிரிடை குடிகண்டாள்

இடியுடன் புயலெழும் ஒருவித கருமையில்
இயல்புற  மனமஞ்சி
கொடிதெனும்‌ தனிமையைக்  கொளும் மனம்மருகிட
குடிசையில் வருமிரவை
விடியலின் வரையங்கு விடுவதுஅறிவென
விரைந்தொரு வழிகண்டாள்
கடிதென வரும் இருள் கவிந்திடமுதலிடம்
காணவென்றுறுதி கொண்டாள்
 
தரதர எனத்தொலை தனில் விழும் அருவியின்
துளிதெறி யொலியிடையே     
அரவமும் சிலஎழில் அசைவுறு மலரிடை
அமைதியில் நெளிவதையும்
புரவியின் அசைவினில் பிறந்திடு மொலிசெவி
புகுந்திடச் சிறுவயதோர்
சரசர எனவரும் சிறுபயம்மனமெழச்
சடுதியில் குழுமியொரு

மரங்களின்  இடையினில் மறைவதும்  எவரென
மதியறிந்  துணர்வுபெறும்
வரை யொழித் திருந்திடும் வகை யுடன் சடுதியில்
விழி கொள்ளா விரைந்தேக
வரமிட முகிலிடை வருமொரு தேவதையும்
வருகுது புவியெனவே
உரமெடுதிருமுக ஒளியுற மணிவிழி
எழில் கண்டு வெளிநடந்தார்

மெலச் சிறுகுடிசைகள்  பரவியதிசையினில்
 முழுதென நுழைந்தவளை
பலர் மகிழ்வொடுதலை யசைவினைத் தரச்சிலர்
மனதினில் பிறன்வெறுத்தும்
சிலர்வருகையில் வரும்   சிறுபகை அழிவென
சினந்தவள் திசை உமிழ்ந்தே
மலரெனும்முகமதில் துயரெனும் சுடுவெயில்
மயங்கிடும் உணர்வுதந்தார்

மலர்களின் நறுமனம்அருகிட மணல்பொழி
மழையுடன் இணை சேரும்
உலர்மண மெழுவதில் யுணர்வுகள் மனதினில்
உந்துதல் தனைத்தார
சிலபல குரல்களும்,  வருமழை தனிலஞ்சி
சிறு உலர் பொருள்காக்கும்
பலகரு உருவமும் பரபரத்திடஅவள்
குதிரையும் கனைத்திடவே

எதுவெனப்  புரவியும் இடமிதில் நிலைத்தது
 எனவிழி அயல் நோக்க
புதுவிடமருகினில் பெரிதொரு மனைதனில்
பெயர்தனும் முன்னாலே
பொதுமனை  துயிலகம் மென இருந்திட அவள்
புரவியின் அறிவெண்ணி
இதுஎன துணையென பெருமையில்இருந்ததில்     
இறங்கிட தயாரானாள்

துளி சில விழுவதில் சிலதவை பலதென
தொலைவினில் பொலபொலென
வெளியதன் மறுகரை விழு மழைதனையெண்ணி
விரைவினில் வருகுதென
குளிர் மலை அருவியும் குதித்திடலென அவள்
குதிரையிருந்து விழ
செழுமலர், தருவினி லிருந்துகீழ் விழுதென
சிலரதை வியந்துநின்றார்

(இன்னும்வரும்)

kirikasan

unread,
29 Apr 2013, 00:25:15
to santhav...@googlegroups.com
மணிவிழி 2

(அதேவேளை  சிற்றூர் அரண்மனையில்)


வெள்ளிக் கொலுசுகள் சல்சல் சலவென
வேகம் கொண்டவளோ
துள்ளித் தடதட வென்று மினுங்கிடத்
தோகை நடனமிட்டாள்
தள்ளிப் பலவித  சோலைப்பூக்களும்
தொங்கிக் காற்றசைய
வெள்ளை கொடிமலர் விதமா யவள்நடம்
விழிகள் கண்டிருந்தான்

எண்ணக் கனவுடை  இன்பக் குளிரிடும்
இனிதோர் மாலையதில்
கண்ணைக் கவர்ந்திடு வண்ண குளியலில்
காணும் அவள் முகமோ
விண்ணில் திரிமதி மண்ணிற்பரவொளி
வேண்டிப் பூசியதாய்
அண்மித்திருந்தவன்  ஆவல் மெருகிட
அழகைக் கண்டிருந்தான்

உள்ளக் கிடக்கையிற் ஊரைக்காத்திடும்
உயர்வோர் மன்னனவன்
கள்ளை தேடிடு கருவண்டாய் அவள்
கண்ணின் சுழல் மெருகை
உள்ளத்திடை யெழு எண்ண திடையமிழ்ந்
திருப்போன் தனை  நெருங்கி
அள்ளி  தீயினை பஞ்சுப்பொதியிடை
இட்டோர் செய்கைதனை

மன்னன் தனைமெல அணுகிக்காவலன்
மடலொன் றினை ஈய
 சின்னஞ் சிறுமபுரிடல் சொல்லும்  தகவலை
சற்றே கண்கொண்டு
முன்னைப் பின் என கண்ணை கொண்டயல்
மீளப் பார்வையிட்டு   
தன்னை சூழ்ந்தவர் தம்மை கலைத்திடக்
தருணம் வந்ததென

மென்மைக் கொடிமலர்  மேடைக் கலைநடம்
மிட்டவள் திசைகண்டே
அன்னத் துறுஎழில் ஆடற் குலமகள்
ஆட்டம் போதுமென்றான்
மின்னற் கண்களை வெட்டிக் குவிமுகம்
மெல்லச் சிவந்துவிட
என்னேகுறைதனை இழைத்தேன் மன்னரே
ஏனோ நிற்பதென்றாள்

சொல்லிதிரும்பிடமுன்னே பேச்சதில்
சற்றே சினம் எழவும்
மெல்லக் கலைந்திட வேண்டுமென்பது
மன்னன் ஆணையென்றான்
சொல்லிற் சினமதை இல்லையென்னிலும்
சற்றே தடுமாறி
இல்லை இதைவிட எல்லை மற்றொரு
இகழ்வென் றெண்ணியவள்

கல்லிற் கருணையும் காணக் கூடிடும்
கடிதாம் மன்னர் மனம்
கொல்லும் வாளினைக் கையிலேந்துவர்
கொத்தாம் மலர்மென்மை
சொல்லும் ஒருமொழிஅறியார் என்றவள்
சொல்லிக் கண்பார்த்தாள்
என்னோர் திமிருடன் இயம்பத் துணிந்தனள்
என்றே தகிப்பெழவும்

உன்னை கலைதனில் ஒன்றாய்க் கண்டதில்
உயிரைக் காத்தனை காண்
சின்னப் பெண்ணுனை சிறையிலிட்டிட
சொன்னோர் மொழி போதும்
என்றான் பார்வையில் எண்ணமிகுந்திட
இட்டோர் தவறெண்ணி
கன்னிக் குறுவிழிகாணத் துளியெழக்
கைகள் கூப்பி நின்றாள்

சின்னத் தாமரை யென்னு மவள்முகம்
சற்றே நீர்தெளிப்பாய்
மன்னர்ப் பெருந்தொகை மின்னக் கண்டிது
மங்கை மதியென்றே
எண்ணிதனதிரு பொன்னைகொள்கிழி
பார்த்தே கைகொண்டு
கன்னிச்சிறுமியின் கைநேர் வீசியே
கால்கள் எடுத்துவைத்தான்

(வேறு)

கூட்டிப் பூக்கள்பல கட்டி எழில் மிஞ்சும்
கொத்துகள்  ஆக்கியெங்கும்
போட்டிருக்க அதைப் போதைகொண்டு
சில வண்டுகள் போட்டியிட
தேட்டத்திலே நிறை பொன்னைக்  கரம்கொண்டு
நீட்டி யெறிந்ததுபோல்
நாட்டிய மங்கையும்  நல்லுணர்வோடின்பம்
நல்கிச்  சிரித்துநின்றாள்

தீட்டியவாளுமத் தோன்றும்திடமுடன்
 தீங்கெனில் கோபமுறும்
மூட்டிய தீயென முன்னே  படைவர
மோதிச் சடசடக்கும்
கூட்டிய நற்றமி ழோடு மறந் தன்னை
கொள்கையில் தீரமுடன்
காட்டியவன் சற்று நெஞ்சம் கலங்கிட
கால்களெடுத்துவைத்தான்

காணும் பெருநிழலை
பாட்டினில் மேற்சுவர் பக்கமெங்குமவன்
பாதமெடுத்து வைக்க
நீட்டிக்  குறைத்தொரு
மூட்டிய தீபல மௌனமெனப் பழி
மூள எரிவதுவாய்
காட்டினிலே கரும் பேய்தனை போலோடிக்நெஞ்ச பயமுற
நாட்டியக் கோலம்செய்ய

மின்னிடும் பொன்கலை மேவஎழில் செய்த
மாபெரும் தூண்களிலே
தன்முகம் காட்டிடும் கண்ணாடித் துண்டுகள்
தன்னைப் பதித்திருந்தார்
சின்னஒளியுடன் தன்மனம்போற்  தடு
மாறும் அகல்விளக்கும்
உன்னதமாய் அழகோடு தூங்குமிடை
ஒற்றை மணிச்சரமும்

கண்டு மனதினில் கற்பனை மேவிட
காவலன் நேர்நடந்தான்
வண்டு தானும் ஒர் செண்டை சுழல்வதென்
றுள்ளம் துடிதுடிக்க
தண்டுமலர்சுனை கொண்டநிலையென
தாவிமனம் அலைய
கொண்டு வந்தோலை யின்  சேதிநினைத்தவன்
கூடியவேகம் கொண்டான்

(வரும்)

kirikasan

unread,
29 Apr 2013, 10:14:37
to santhav...@googlegroups.com
மணிவிழி தொடருமா என்பது = “?”

அழகான நாட்கள்

நேராக நிமிர்தோங்கும் தென்னை பனையோடு
நேருயர்ந்து நின்றதெங்கள் ஈழம்
தேரோட மணியோசை தெய்வ வலமென்று
திருவருள் பொலிந்தாடும் காலம்
ஏரோடி உழுதவயல் எழுந்தபயிர் பச்சை
இசைபாடுங் குயில் தோகை நடமும்
காரோட வளைந்தோடும் கரும்வீதி பக்கம்
கனிதூங்கும் மா நின்ற ஈழம்

பழமை கொண் டிருந்தாலும் பழுதின்றி ஓடும்
பாதைவிரை வண்டிகளின் தோற்றம்
இளமாலை சொரிகின்ற இதமான பூக்கள்
எழுந்த மரச்சோலைகளில் பறவை
மழை தூறிப் பெய்தாலும் தமிழ்சந்தம்போடும்
மனமெங்கும் சுகபோதைக் கானம்
துளைகுண்டு தினமோலம் எனவாக்கிஇறைவா
தெருவெங்கும் பிணம் போட்டதேனோ
.
அதிகாலைப் பொழுதேனும் அந்தியிருள் நேரம்
அமைதிகொள் இயற்கையின் தோற்றம்
புதிதாக விடிந்தாலும் போய் மறையும் கதிரின்
பின்னெழும் முன்பனிக் கூதல்
விதிமாறி வேற்றுமொழி வைக்கின்ற சட்டம்
விடியலில் எழும் அச்சம் இல்லை
சதியேதுமில்லை ஒருதனியான பிள்ளை
சற்றும் மனம் அச்சமின்றி ஏகும்

வீராதி வீரரென வெகுண்டெழும் பகைமை
விளையாடி வெல்லும் இள மாந்தர்
போராக எம்மீது படைகொண்டுதேசம்
பலிகொள்ள வந்த நிலையாதும்
பேராக எதிர்நின்றும் அணிகொண்டதாலே
பெரும் வீர த் திறன் கண்டு அச்சம்
வேரொடுவெட்டி இனம் முற்றாக வீழ்த்த
வெறி கொண் டிணைந்த முழு உலகும்

குளம்மீது அலர்கின்ற தாமரைகள் போலும்
குடிமக்கள் விழி பூத்தெழுந்து
தளம்புமலை மீது துள்ளும் சிறுமீன்துடிப்பில்
தன் வேலை கல்வியென்று ஓடும்
வளம் மிகுந்த திருநாடு விளங்கிய தோர்காலம்
வந்ததெங்கள் ஈழமகன்வம்சம்
உளம் மீதுநஞ்சுடனே உருவான எதிரி
ஒன்றாகிச் சிதைக்க விடலாமோ


********************


kirikasan

unread,
29 Apr 2013, 20:56:22
to santhav...@googlegroups.com


      வந்தனை தேவியே!

சிந்தனை உருவாக்கி சீழ்கொண்ட உடலீந்து
சேரென்றே எமைச் செய்தனை
தந்தனை உயிரோடு தரணியில் நிலையற்றுத்
தவிக்கின்ற வாழ்வீந்தனை
செந்தமிழ்க் கவிபாடி சிரிக்கின்ற போதெல்லாம்
சில்லென்று உணர்வாக்கினை
விந்தைவான் வெளிமீது விளையாடும் பொருளாகும்
விதமாகவோ செய்தனை

நொந்தது சரிபாதி நுகர்வதோ அதைமீறி
நேரென்று துயரிட்டனை
தந்ததும் செலவாகித் தாவென்று உனைவேண்ட
தந்தெமை மகிழ்வித்தனை
தொந்தியும்  வயிறாகி துளைகொண்ட உடலீந்து
துய்யென்று சுகம் வைத்தனை
வந்தொரு பெண்கூடி வளரென்று சேயீந்து
வாழ்வோடு பிணைத்திட்டனை

வெந்ததும் உடல் தீயில் விரைந்திடும் உயிரோடி
வீணென்று விட்டோடலேன்
சந்தண மரமான தணல்பற்றி எரிந்தபின்
தருகின்ற மணம் மிஞ்சுமோ
மந்தமும் மதியாகி மாபெரும் உரமோடி
மாயமாம்  வாழ்வென்றபின்
நந்தவ னம்தோறும் நறுமலர்மணமின்றி
நலம்காணும் வகையுமுண்டோ

சந்தமும் சரியாகி செந்தமிழ்க் கவிபாடும்
சுந்தர வாழ் வென்தும்
அந்தகன் போல்நாமும் அறிவெனும் ஒளிகுன்ற
அகம் வந்தே அருளீந்தனை
தந்தன தாஎன்று தருமமும் விலைபேச
தலைகொள்ள உயிர்காத்தனை
பந்தென உதைபோட்டு பறஎன்று யார்வந்தும்
பறித்திட முன்காத்திடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக