விடியுமா தேசம்.?
பனி படர்ந்து புல்வெளியிற் பரவி எழில்கொல்ல
பசுமைகொண்ட இலையழுது பலதுளி நீர்சிந்த
சினமெழுந்து கதிர்பனியைச் சுட்டழித்து வெல்ல
சிறகடித்துப் பறவையினம் சேதிசொல்லும் காலை
கனிசுவைக்க மாமரத்தைக் கிளி பறந்து சேரும்
கலகலத்த இலைமறைவிற் கனிகிடந்து நாணும்
இனிபழத்தின் முகம்சிவக்க இளங்கிளியோ உண்ணும்
ஈழமண்ணின் இயற்கையான இனியதொருகாலை!
வனமதிலே கள்நிறைந்து வாசமிடும் பூக்கள்
வந்துமலர் கொஞ்சியெழும் வான்பறக்கும்பூச்சி
இனம்மகிழச் சுதந்திரத்தை எண்ணும் ஈழமாந்தர்
ஏழைகளின் கனவுபோல என்றும் அதைத் தேட
குனிநடை கொள் குரங்கினமோ கொப்புகளில் தாவிக்
குழைஉதிரக் கலகமிடக் காணுமிளங் குயிலும்
தனியிருந்து ஒருகிளையில் துயரெழுந்து கூவ
தவழுமிளங் காற்றொலியைத் தானெடுத்து ஓடும்
எதிர்நிமிர்ந்த பெருமலையோ இசைக்குயிலின் கீதம்
எதிரொலிக்க இளம்பறவை இன்பமுடன் கண்டு
மதிமயங்கி துணையை எண்ண,, மறையு மிருள்கண்டு
மனமகிழ்வில் கதிரவனும் அனல்பெருத்து மூள
நதிநடந்த விதம் நெளிந்து நெடுங்கிடந்தபாதை
நடைபயணம் கொள்ளவுமென் நேரெதிரே முன்னே
விதிசினந்த சிறுவர்சிலர் வேதனையில் கூடி
விரிஉலகம் நிறைதமிழில் மொழியுரைத்தல் கேட்டேன்
கருமைநிறம், மேனிகளில் கசங்கியதோர் உடையும்
காய்ந் துலர்ந்த உதரமிடை கடும்பசியின் சுவடும்
இருவிழிநீர் வழிந்தவைகாண் இருமருங்கும் காய
எழுந்த துயர் பூமுகங்கள் எரித்த நிலை கண்டேன்
சரிகுழலும் வாரிவிடச் சற்றும் மனம் எண்ணா
சிறுமிகளும் தேகமது செழுமை பெருந்தீமை
தருமெனவே அஞ்சினரோ தனதெழிலை நினையா
தரைவிழுந்த புழுதிபட்ட தோர்மலராய் கண்டார்
அவர்களுடன் பலசிறுவர் அணியிருந்துபேசி
அதிசினந்து கொதியெழவும் ஆற் றொருவர் இன்றி
பவள இதழ் பனிபடர்ந்து பதைபதைத்துக் கூறும்
பலகுரலும் கேட்டு ஒரு பக்கம்நின்று பார்த்தேன்
தவளுமிளந் தமிழ்மொழியின் தடமழிக்கஎண்ணி
தவறிழைத்து இனமழிக்கும் தரணியிலே இவர்கள்
எவர் விளைத்த தவறுஇதோ ஏதிலியாய் நின்று
ஏங்கியழக் காரணம் மென்? இவ்வுலகே யன்றோ!
சிறுவர்தமை சேர்த்துப்பெரும் போரெடுத்தீர் என்று
செந்தமிழர் படையிற்குறை சொன்னவர்கள் இன்று
சிறுவருடன் மழலையரும் சிறுமியரும் கொன்று
சொல்லரிய தொகையினரைச் சிறையிலிடச் செய்தார்
உருவம்மாறி அங்கமின்றி உள்ளதெலாம்நொந்து
உயிர் பிழைக்க ஏதும்வழி இல்லைஎன்று கூறும்
சிறுமைதனை இவ்வுலகே சேர்ந்தளித்தகோலம்
சேர்ந்திவர்கள் செய்தகுற்றம் யார்கணக்கில் போகும்
(ஒரு சிறுமி)
அம்மா என்னைப் பெற்றவளே நீ அருகில்வாராயோ
அள்ளிகட்டிக் கொஞ்சிப்பேசு அன்பைத் தாராயோ
செம்மாதுளையின் முத்தே என்றே என்னைக் கூறாயோ
செந்தேன் தமிழில் சொல்லில் இனிமை சேரப் பேசாயோ
எம் மாபெரிதோர் துன்பம் கொண்டேன் இழிமை செய்தாரே
இருகண்வழியும் பெருநீரோடும் இமைகள் தழுவாயோ
வெம்மை கொண்டே இதயம்வேக விம்மிக் கேட்கின்றேன்
விடியும் வாழ்வோ விரைவில் என்றாய் விட்டேன்சென்றாயோ
மாவில் தூங்கும்கிளியைப்போலுன் மடியில்கிடந்தேனே
மலரைத்தூவி தலையிற் சூட்டி மகிழ்வைத் தந்தாயே
பாவி எங்கள் வாழ்வில்வந்தே பலியைக் கொண்டானே
பார்க்கக் கண்முன் பட்டப் பகலில் சுட்டுக் கொன்றானே
கூவி கேட்டும் தெய்வம்வாழும் கோவில் கும்பிட்டும்
கொன்றார் உயிரைக் கொல்லும் செயலில்குறைவே எழவில்லை
ஆவி உடலை விட்டுப் பதறி அலறிச் சாவென்று
அகிலம் கொண்ட அமைதிதானும் அதிலும் குறைவில்லை
(மற்றவள்)
படையும் அரசும்அழிப்பார் எம்மை பாவம் என்செய்தோம்
பகலில் இரவில் கடையில் தெருவில் பள்ளிக்கூடத்தில்
நடையாய் நடந்தே நம்மைகொன்று நாட்டைச் சிதைக்கின்றார்
நாங்களேதும் கேட்டால் உலகோ நம்மைப் பிழைஎன்றார்
தடைகள் போட்டுச் சாலை, தெருவில் தனியேபோய்விட்டால்
தலையேஇன்றி வெட்டிதுண்டாய் தரையுள் புதைக்கின்றார்
இடையே காக்கஇளைஞர் எழுந்தே எம்மைக் காத்திட்டால்
எல்லாஉலகும் ஒன்றாய் கூடி எரிகுண்டெறிகின்றார்
(சிறுவன்)
புகையும் தீயாய் எரியும் ஊரை பேசும் மொழியறியா
பிறிதோர் இனமே செய்தாரிங்கு, போனோமா நாமும்?
பகைவர்தம்மின் ஊரும் சென்றே படுத்தோர் தலைவெட்டி
பாதிஇரவில் வீட்டில் தீயைப் பற்றச் செய்தோமா?
நகைகள் திருடி நடுவீட்டினிலே நாக்குத்தொங்கத்தான்
நாமும் சிறியோர் பெற்றோர் தூக்கி நாசம்செய்தோமா?
வகைகள் தொகையும் காணாஅழிவை வாழ்வில் செய்கின்றார்
வையம்கண்டும் தொன்மைத்தமிழை வாரிப்புதை என்றார்
(இன்னொருவன்)
நாடும் உலகும் எதிராய் நின்றால் நல்லோர் என்செய்வார்
நாளும் சாகும் நம்மை காப்பாய் நாடே என்றோடி
ஆடும் வரையும் ஆடிக்கத்தி அலறித் தெருவோடி
அடர்ந்தகாடு அலைகொள்கடலும் அருகே நின்றாலும்
ஓடும் ஒழிவும் பயனோ நிலவுக்கொழித்தே பரதேசம்
நாடிச்சென்றால் விடுமோ அதுபோல் நம்மைக் கொன்றானே
வீடுமின்றி வெல்லும் திடமும் வெற்றிக் களிப்பின்றி
வீரிட்டலறி மயங்கும்வாழ்வே விதியாய் போயாச்சே !
(மற்றுமொருவன்)
ஆண்ட இனமோ மீண்டும் ஆள அடிமுன் வைத்தாலே
ஆழக் குழியைவெட்டும் உலகோ அறத்தின் எதிராமே
மீண்டும்இவரோ விட்டோர் பிழையை மீளச் செய்கின்றார்
மெல்ல பேசி உண்மைவிட்டு மிருகத்தைக் கூட்டி
நீண்டதாளில் நீதிக்கதைகள் நெடிதே எழுதித்தான்
நெஞ்சம் ஆற நெளிந்துவளையும் நீசப் பாம்பானார்
ஆண்ட இனமோ அழியும்வேகம் அடிக்கும் புயலென்றால்
அணைக்கும் உலகக் கரங்கள் ஆமையானால் பிழைப்போமா
(முதல் சிறுமி)
வேண்டாம் நம்பி விதியென் றெண்னி வீணேபோகாமல்
விரைந்து எழுவோம் வீரம்கொள்வோம் விடிவைக்காண்போமே
கூண்டில் ஏற்றிக் குற்றம் புரிந்தோர் கொள்ளும் நிலைகாண
கொள்கை கொண்டு நாமும்கூடிக் குரலைத் தருவோமே !
ஆண்ட இனமும் ஆளக்கேட்டால் அண்ணாந்தே பார்த்து
ஆளைஏய்க்கும் உலகில் நாமும் அறத்தைக் கேட்போமே
மீண்டும் எழுந்தோர் அரசு தொலைவில் மீட்கப் புறப்பட்டார்
மெல்லத் தெரியும் விடிவை விரைவில்கொள்ள புதிதாவோம்
(எல்லோரும் சேர்ந்து)
வெல்லட்டும்தமிழ்தேசம்! விளையட்டும் புதுவாழ்வு !!
செல்லட்டும் பெருங்கொடுமை! சிதறட்டும் பகைஆட்சி!!
கொல்லட்டும் துயர்,துன்பம்! கொள்ளட்டும் மனமின்பம் !!
தொல்தொட்டும் எம்பூமி திரும்பட்டும் எம்கையில்!!
சொல்லட்டும் புவி வாழ்த்து! சுதந்திரமே எம்மூச்சு!!
நில் தொட்டு நெஞ்சுறுதி நீகொண்டே நில் வெல்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக