வியாழன், 19 ஜூன், 2014



சிவரூபன் ரூபா 


பாவிகளின் பாலியல்.எங்கே போவேன்.?




அப்பான்னு நினச்சேன்
அசிங்கமாய்த் தொட்டான்......!

சகோதரன்னு பழகினேன்
சங்கடப்படுத்தினான்......!

மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்......!

உறவுகள் அனைத்தும்
உறவாடவே அழைக்கின்றது.....!
...
பாதுகாப்பை நாடி
பள்ளிக்குச் சென்றேன்
ஆசிரியனும் அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையுமென்றான்.....!

நட்புக் கரமொன்று
நண்பனாய்த் தலைகோதி
தூங்கென்றான்
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
மயங்கித் தூங்கையில்
கைபேசியில் படமெடுத்தான்
அவனும் ஆண்தானே....!

கதறி அழ
கடவுளைச் சரணடைந்தேன்
ஆறுதலாய்த் தொட்டுத்தடவி
ஆண்டவன் துணையென்றான்
சாமியாரும்......!

அலறி அடித்து ஓடுகின்றேன்
எங்கேபோவேன்.....?

சமத்துவம் வந்ததென
சத்தமாய்க் கூவுகின்றனர்...?
பெண்ணை......
பெண்ணாய் பாராமல்
மனிதராய் பார்க்கும் நாள்
எந்நாளோ.......?
பாவிகளின் பாலியல்
வன்முறை எப்போது ஓயுமோ......!???......!

திங்கள், 2 ஜூன், 2014


"இருக்கிறானா? இல்லையா?" எனும்
அய்யத்தை எழுப்புவது இருவர் ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்; இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்!
(பிரபாகரன் தாயார் மறைவின்போது கவிஞர் வாலி எழுதிய கவிதை இது)
"ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து - பின்
போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி
வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?
மாமனிதனின் மாதாவே! -
நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது உன் - பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்
கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று... சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் - உன்
இடுப்பில் உட்கார்ந்து உச்சி வெயிலில் - சூடும் சொரணையும் வர சூரியச் சோறு தின்றது அம்மா! அதற்கு நீயும் - அம்புலியைக் காட்டாமல் வெம்புலியைக் காட்டினாய்;
அதற்கு, தினச் சோறு கூடவே
இனச் சோறும் ஊட்டினாய்;
நாட்பட - நாட்பட - உன் கடைக்குட்டி புலியானது காடையர்க்கு கிலியானது!
'தம்பி! தம்பி!" என நானிலம் விளிக்க நின்றான் - அந்த நம்பி; யாழ் வாழ் - இனம் இருந்தது - அந்த...
நம்பியை நம்பி; அம்மா!
அத்தகு - நம்பி குடியிருந்த கோயிலல்லவா - உன் கும்பி! சோழத் தமிழர்களாம் ஈழத் தமிழர்களை...
ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி;
அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு உப்பாக்கி; செம்பொன்னாய் இருந்தோரை - செப்பாக்கி;
அவர்கள் வாழ்வை வெட்டவெளியினில்
நிறுத்தி வெப்பாக்கி;
மான உணர்வுகளை மப்பாக்கி;
தரும நெறிகளைத் தப்பாக்கி - வைத்த
காடையரை வீழ்த்த...
தாயே உன் தனயன் தானே - தந்தான் துப்பாக்கி! 'இருக்கிறானா? இல்லையா?" எனும்
அய்யத்தை எழுப்புவது இருவர் ஒன்று - பரம்பொருள் ஆன பராபரன்; இன்னொன்று ஈழத்தமிழர்க்கு - அரும்பொருள் ஆன பிரபாகரன்!
அம்மா! இந்த அவல நிலையில் - நீ...
சேயைப் பிரிந்த தாயானாய்;
அதனால் - பாயைப் பிரியாத நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி விமானம் ஏறி - வந்தாய் சென்னை; அது - வரவேற்கவில்லை உன்னை!
வந்த வழிபார்த்தே - விமானம் திரும்பியது; விமானத்தின் விழிகளிலும் நீர் அரும்பியது!
இனி அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள் கன்ன வயல்களை உழுது என்ன? பார்வதித்தாயே! - இன்றுனைப் புசித்துவிட்டது தீயே!
நீ - நிரந்தரமாய் மூடிக்கொண்டாய் விழி;
உனக்குத் தங்க இடம்தராத - எங்கள்
தமிழ்மண் - நிரந்தரமாய்த் தேடிக்கொண்டது பழி!

புதன், 7 மே, 2014

இந்த இணையத்தில் இருந்து காணொளிகள் ,படங்கள்,ஆக்கங்கள் ,கட்டுரைககளை பிரதி பண்ணுதல் தடை செய்யப்படுள்ளது. எமது அனுமதியின்றி பிரதி பண்ணியபின் எமது இணையத்துக்கு நன்றி என போடுதலும் கூடாது .தயவு செய்து இந்த விதி முறையை மீறி சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டாம் என  தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.நன்றி

வியாழன், 17 ஏப்ரல், 2014

காத்திருந்த கண்ணுக்குள்
பூத்திருந்த புது மலரே
நேற்று வந்த செய்தி ஒன்று
நெருப்பாகக் குத்துதடி
இடுப்பொடியத் தாலிகட்டி
இளம் சிவப்பில் பட்டுடுத்தி
சேர்ந்து படம்  பார்க்கச்
சிலநாளாய் ஆசையடி
கொல்லைப் புறம் வந்து
கொடுத்ததெல்லாம் நீ மறந்து
அல் வந்து எனையாழும்
செல்விருந்துத் தேவதையே
தொல்லை உனக்கென்று
தொலைதுர்ரம் சென்றாயோ
முல்லைக் கொடி நான் என்று
பாரி எந்தன் தேர் கேட்டாய்
கள்ழொழுகும் சிரிப்பில்
என் மெய் ஒழுக முத்தமிட்டு
மை ஒழுகும் கண்ணாளே
நீ மறைந்த மாயம் என்ன.
ஆத்தோரம் நீ நடந்து
அசலூர்க் காரனுடன்
சென்றுவிட்ட செய்தி கேட்டேன்
செத்தாலும் பதில் எழுது.
ஊராரின் பேச்சை
உமி அளவும் நம்பவில்லை
தேரோடு நிற்கின்றேன்
என் திருவிளக்கே வந்துவிடு.
பருவக் களமாடும்
பவழவல்லிக் கொடியே; உனக்குப்
பார்வைக் குண்டூசிகளைப்
படைத்தவன் எவனோ?
புகல் தந்த உன் இதயத்தால்
என் புலன்களை ஆளும்
உலகத்துப் புதிய அதிசயம் நீ;
சூரியனைத் தூங்கவைத்த
பூமிமங்கை நாணத்தில்
இருளாடை கட்டும் வேளை
எனக்குள்ளே நடக்கிறது
உன் நினைவு தோய்ந்த
புலன்விசாரணைகள்.

நீ புனலாடும் போதெல்லாம்
வெட்கத்தின் நிறம் போக்கி
கங்கை சிவக்கிறது
வள நதியில் இள வயதில்
களவியல் இலக்கணங்கள்
அன்றாடம் படிக்கும்
அரிச்சுவடி மாணவன் நான்.
அனிச்சத்தின் சிரிப்பிற்கு
அர்த்தஙகள் நான் தேடிக்
கணனித் திரையில் காத்திருக்கிறேன்!

உன் படைக்கல வலையத்துள்
நான் அடைக்கலம் ஆனபின்னும்
எனக்கு ஏன் ஆயுள்தண்டனை.
உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்-
வள்ளலாக நீ இருந்தும்
வதை செய்யும் தேவதையே! - உன்
மடியில் நான் உறங்க
ஒரு வினாடி போதுமடி.
உச்சி வெயிலை
உண்ணும் கடற்கரை;
பிச்சிப் பூக்களின்
வாசம் சுமந்த காற்று;
முகடுவழி விண்நோக்கித்
துள்ளும் மீன்கள்;
கரையேறிப் படம் கீறி
விளையாடும் சிறுநண்டுகள்;
உறு மீன்களுக்காய்த் தவம் கிடந்து
சிறு முரல்களை வரமாய்ப் பெறும்
ஏமாளிக் கொக்குகள்;
ஆம்பல் மரத்துள்
மறையும் அவசரக் குஞ்சுகள்
கலவிச் சோம்பலிற்
களைத்த ஜோடிப்புறாக்கள்;
ஆங்காங்கே அலரிமர நிழலின் மீது
பொடிவைத்துப் பேசுகின்ற
பெண்டிர் கூட்டம்;
கடல்மீது அலைநுரை
பொங்கும் சிரிப்பழகன்;
உடல்மீது இதழால்
உப்புக் கோலமிடும் கலை அரசன் ;

நாண்டு விட்ட பொழுதுகளில்
வஞ்சி இடை மீது
நண்டு விட்டுக்
கொஞ்சும்  நாயகன் - ஆழி
உறவாடும் திசை பார்த்து
நங்கை சென்றாள்.
துருத்தி வழிவந்த
வெப்பம் போல - இங்கு
பருத்தி வெடித்திருக்குப்
பரவைக் காட்டில்;
பனைமரத்து அன்றிலின்
காமக் கூச்சல் - அதை
உள்வாங்கும் உடலுக்குள்
ஏதோ காச்சல்
மட்டில்லா ஆசைகளை
மனதில் தாஙகி
நாணத்தில் சிவந்த
பாவை முகம்;
வலை விரித்தால்
அள்ளிக் கொள்ளும்
சுறாவைப் போல - அவன்
தலை அசைததால்
மையல் கொள்வாள்
இந்த மங்கை.
சிறு மணல் வீடுகளை
அழித்துச் சிரித்த
அலைகளைத் தின்ற
கடலின் நிசப்தம்.
முகில் வேட்டிக்கு
நிறம் தீட்டிக்களைத்துக்
குணதிசை மேவி
வெள்ளாடை அணிந்து
தீவெட்டி கொழுத்தி
புவியழகு பார்க்கும்
உதயத்துச் சூரியன்.
பன்னீர்க் குடம்
உடைந்த புற்கள்.
பூக்கள் மலரும்
மத்தாப்புச் சத்தம்
காதல் சிற்பங்களின்
கடைசி முத்தம்.

இரவுக்குறி வென்ற
சாமச் குஞ்சுகளில்
கரவுக் கண் எறியும்
வெள்ளைத் தலைகள்.
பறவைகளின் இசைக்குள்
மௌனித்த விலங்குள்.
விழி எழுதும்
முடங்கள் கண்டு
ஊனமுற்ற மொழிகள்.

மெய் சுகத்தில் மொய் எழுதி
ஊடலில் தோற்றவர்
வெல்லுகின்ற வேளையிலே
பொழுது விடிந்ததனால்
கட்டுமேனிக் கரம் விலக்கி
கட்டுமரக் கலமேறி
புள்விழும் திசைபார்த்துக்
கடல் சென்றான் காளை.
கைக்குட்டைத் திருக்கைகள்
கலைத்துவிட்ட குழலழகில்
கக்கிய கணவாய் மை.

வாழை மடல் துடையை
மனத்திற்குள் செருகிவிடும்
பருத்த வாளை மீன்கள்.
காதல் கடிசுமந்த
கழுத்தின் உருவத்தில்
வங்கத்துச் சங்கினங்கள்.
விரல் அனைய முரல்கள்.
இருளுக்கு இருள்பூசிய
நெய்தல் நிலத்தவனின்
உடல் அழகு பார்க்கதத்
திமில் ஏறிப்பாய்கின்ற
அடிக்கடல் மீன்கள்.

பார்க்கின்ற திசையெங்கும்
பாவையவள் முகம்காட்ட
ஊதக்காற்றுக்குள் ஒழித்திருந்து
கதைகள் சொன்னாள்.
மறுமைப் பிறப்பெடுத்தும்
மன்னுவேன் செல்லம் என்று
மார்தட்டி ஊர் சொல்லி
மகிழ்ந்திட்டான் மச்சக்காளை.
தரைநோக்கி வானம்
தவழ்ந்து வந்துவிட்டால்
பகலவன் பதிவில்வந்து
தாமரைக்கு இதழ்முத்தம்
தானாகக் கிடைத்துவிடும்.
ஒளிகசியும் கண்ணுக்குள்
உயிர்கசியும் மனத்தோடு
பருவத்தைக் களமாக்கிப
போராடும் புதுவசந்தும்.
பசலைக்கு வசப்பட்டுப்
படலைக்குள் காத்திருந்தாள்.
பூத்திருக்கும் மலர்களிலே
தேன் குடிக்கும் வண்டினங்கள்
கூத்தாடிக் களிப்பதனைப்
பார்த்திருந்து கண்வியர்த்துத்
தோழியிடம் தூதுசொல்லி
மான்குட்டித் துள்ளல்கொண்டு
இந்திரச் சுவைகள்காண
மந்திரத்தில் மறைந்தாள் பாவை.
இமயத்தைத் தூக்குபவன்
இளந்தாரிக் கற்கள் எல்லாம்
இருவிரலால் நகர்த்திக் காட்டும்
இரும்பனைய தோளுடையோன்
வரம்புகளை மீறுகின்ற
வாலிபத்தின் மிடுக்கோடு
முல்லைக்குத் தேராக
கிள்ளைக்குத் தோளானான்.
காற்றுப் புரவிக்குக்
கடிவாளம் அவளாகிப்
பள்ளிக்கு இடந்தேடி
கள்ளி வளர் காடுவரை
இருள்சூழும் வேளைக்குள
கரைமீது நடந்து சென்றான்
அங்குசக் கூர்கொண்டு
முதுகில் அறைகின்ற
அடித்துக் கனியும் பழமாக
நசிந்து கனிகிறது தனம்.
நால்வகைக் குணத்தாளில்
ஐந்துநில அழகுபார்த்து
ஆறுசுவை உணவையுண்டு
எழுபிறப்பின் பலனையெல்லாம்
எட்டுகின்ற இன்பச் சேற்றில்
நவரசம் கண்டார் இங்கே.
தூரத்தில் தோழி ஆங்கே
வெட்கத்தில் சிவந்து நின்றாள்.
அவிழ்ந்த குறிஞ்சிப் பூக்களை
உமிழ்ந்த விளைநிலம்
பூவியரசி முலை பார்க்க
அதிகாலையில் எழுந்த
சூரிய தாகங்களை விரட்ட
மலை முகடுகளை
மறைத்துச் சிலிர்க்கும்
முகில் சேலைகள்.
கொம்புத் தேன் சுமந்த
புலிப்பலணிந்த வரைமகளிர்.
கொற்றவன் மாடத்தில்
குவிந்திருந்த பூவனத்தை
இதழ்பிடுங்கிச் சுவைபருக
இசைந்திட்ட கள்வர் கூட்டம்.
அரண் சுமந்து அடைத்த செய்தி
கொஞ்சத்தில் தெரிந்து
அவன் நெஞ்சத்திலே
நெரிஞ்சி முள்ளாகி
மறவன் புலத்து மாவீரன்
நாராய அம்புருக்கிச்
செறுவரை நோக்கிச்
சிவந்த கண்ணாளன்.
எயில் உடைத்து ஆங்கு
தன் அக்கினிப் பழத்தைக்
கொண்டவர் தலை கொய்து
களம் நடாத்திக் கைபிடித்த
தேக்குநிலச் சந்தனக் கட்டை.
புருசப் பசிபோக்க
எந்நாளும் பூத்திருக்கும்
இவள் பரிசமேனி.
நியங்களைப் பகற்பொழுதில்
நிழற்படம் பிடித்தவன்
நீழ்துயில் கொள்ளுகின்ற
அயரும் மாலைப்பொழுது.
கானகத்து மஞ்ஞைகள்
கழிநடம் புரிந்தகாலை
கார்பொழில் கனத்த நெய்தல்.
நெறிபடு கூந்தல் கட்டி
எறிவளி கமழும் வேளை
பொன்வண்டு முகம் மோதும்
பகன்றைப்பூப் பரத்தையர்கள்.
கத்தாளைத் தொடைகொண்டு
கருவிளைப்பூ இடை மிளிர
ஆடிப்பாவையில் அழகுபார்த்து
மருள்விழிச் சேலை காட்டி
நடிப்பினில் நாணம் தாங்கி
நாணத்தில் நளினம் ஊற்றி
நளினத்தில் உயிரை வாங்கும்
மெத்தைக்கு வித்தைக்காரர்.
அப்பிய அங்கமெல்லாம்
அந்தரத்தில் தொங்குகின்ற
உப்பிய அழகு பார்த்துக்
குறும்பறை ஆடும்வேளை
சொற்பனத்தில் சுற்றினின்று
தணிகின்ற தணலாகி
நீறாகிப் போகின்றார்.
சாமத்துப் போர்க்களத்தில்
காமத்துத் தீவிரத்தில்
அடிபட்ட தேகங்கள்
நெரிபட்டுச் சுகம் கண்டு
சந்துகளில் சரசம் ஆடி
உயிருக்குள் சிந்துபாடி
விழலுக்கு நீரிறைத்து
விடியும்கரை கமம் செய்வார்.
ஊமைக் காயம் தாங்கி
தேய்புரி பழங்கயிறாய்
அல் வந்து இல் ஏகும்
உழவுநில  மாந்தருக்கு
நித்தம் ஒரு தேன் நிலவு.
நியங்களைப் பகற்பொழுதில்
நிழற்படம் பிடித்தவன்
நீழ்துயில் கொள்ளுகின்ற
அயரும் மாலைப்பொழுது.
கானகத்து மஞ்ஞைகள்
கழிநடம் புரிந்தகாலை
கார்பொழில் கனத்த நெய்தல்.
நெறிபடு கூந்தல் கட்டி
எறிவளி கமழும் வேளை
பொன்வண்டு முகம் மோதும்
பகன்றைப்பூப் பரத்தையர்கள்.
கத்தாளைத் தொடைகொண்டு
கருவிளைப்பூ இடை மிளிர
ஆடிப்பாவையில் அழகுபார்த்து
மருள்விழிச் சேலை காட்டி
நடிப்பினில் நாணம் தாங்கி
நாணத்தில் நளினம் ஊற்றி
நளினத்தில் உயிரை வாங்கும்
மெத்தைக்கு வித்தைக்காரர்.
அப்பிய அங்கமெல்லாம்
அந்தரத்தில் தொங்குகின்ற
உப்பிய அழகு பார்த்துக்
குறும்பறை ஆடும்வேளை
சொற்பனத்தில் சுற்றினின்று
தணிகின்ற தணலாகி
நீறாகிப் போகின்றார்.
சாமத்துப் போர்க்களத்தில்
காமத்துத் தீவிரத்தில்
அடிபட்ட தேகங்கள்
நெரிபட்டுச் சுகம் கண்டு
சந்துகளில் சரசம் ஆடி
உயிருக்குள் சிந்துபாடி
விழலுக்கு நீரிறைத்து
விடியும்கரை கமம் செய்வார்.
ஊமைக் காயம் தாங்கி
தேய்புரி பழங்கயிறாய்
அல் வந்து இல் ஏகும்
உழவுநில  மாந்தருக்கு
நித்தம் ஒரு தேன் நிலவு.

திங்கள், 10 பிப்ரவரி, 2014

பைந்தமிழிசை வல்லோன் பொன்.சுந்தரலிங்கம் (சுவிஸ் மதி )

ஐங்கரனே! ஆனைமுகத்தோனே! எங்கள் ஐயன் பொன் சுந்தரலிங்கனை 
அங்கையுள்வைத்துக் காத்தருளி
 மங்காப் புகழோடு பைந்தமிழிசை வல்லோனாய் வையமெல்லாம் வலம் வரவே காப்பாய்!
புங்கையூரின் கீழ்த்திசையில் தோன்றிய ஐந்தமிழின் இசை விளக்கம்!

ஏழிசைக் கடலில் இசை நுணுக்கம் அறியாது தத்தளிப்பவருக்கு நீ கலங்கரை விளக்கம்!
பாடிப்பாடிப் பயிற்சிப் பட்டறையால் வந்தது. செந்தமிழிசை நாப்பழக்கம்
பண்டிதர்க்கு மட்டுமல்ல பாமரர்க்கும் புரியப் பாடுவதே உன் வழக்கம்!
விசையொடிந்த உள்ளங்கட்கு இசையால் ஒத்தடம் கொடுக்கும் இசை மருத்துவன் நீ!
உன்னினமும் உன் சனமும் உள்ளவரை உன் பண்ணிசை முழங்கும.; கண்ணசையும்
காலசையும் உன் பண்ணமுதக் குரலோசை காற்றெடுத்துச் சென்று எண் திசையும் தான்; கலக்கும்
அதைக் கேட்டு விண்ணுலகம் கீழிறங்கும்!
பருந்தும் அதன் நிழலும் விலகாமல்
இருப்பதைப் போல், ஏற்றத்தாழ்வுகளுடன்
இசை நுணுக்கம் படப்பாடுதலில் வல்லவன் நீ! செவிக்கு விருந்தாகும் நோய்க்கு மருந்தாகும்!
ஐந்தறிவு ஜீவன்களும் உன்னிசையில் மயங்கும்
மரம், செடி, கொடிகள் யாவும் செவியினைப் பெற்றவை போல் களிப்புடன் இயங்கும்!
நீயோ! உலகெங்கும் பாடிப் பறக்கும் தமிழிசைப் பறவை! நாமோ உன் சங்கீத சாகர மழை அருந்தும் சக்கரவாகப் பறவை!
உன் நுண்மாண் நுழை புலத்தில் இசைப்பாடம் பயின்ற இளைய பறவைகள் புலமெங்கும்
பாடித் திரிவதால் நின் புகழ் சிறக்கும்! தாய் போலிருந்து விடுதலை வீரத்தைச் சீராட்டி வளர்த்தவன் நீ!
தாயுமாகித் தமிழுமாகித் தமிழிசையுமாகித் தமிழ்த் தேசமுமாகி, வானம் உள்ளவரை
வையம் உள்ளவரை தானமும் தளையும் இருப்பது போல், உன் தமிழிசைக் கானமும் தழைத்தோங்கி அழியாப் புகழேந்தி உன் கிளைகளோடு வாழ்க நீடு வாழ்கவே!
மனமுவந்த வாழ்த்தினை வழங்கும்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

முப்பொழுதும் தாய் நினைப்போடு...சுவிஸ் மதி

               முப்பொழுதும் தாய் நினைப்போடு...சுவிஸ் மதி



"ப" வடிவில் அமைந்து வாவென்று எல்லோரையும்
வரவேற்று உபசரித்து, மருந்தாயினும் விருந்தோடு
உண்ணும் பெருங் குணம் கொண்ட புங்குடுதீவுத்
தாயவளை வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்!