வியாழன், 31 ஜனவரி, 2013

அ.பகீரதன் கவிதைகள்


அதிசயத் தலைவன் எங்கள் பிரபாகரன்


தங்கத்தால் உடல் அமைஞ்சு

தாமரையால் மனசு செஞ்சு

தமிழ்த்தாயின் குருதி பாய்ச்சி

தமிழருக்காய் ஓர் வரவு

 

அடிமை வலி பொறுத்திருந்த

அருமைத்தாய் பார்வதியோ

இடுப்பு வலி பொறுக்காமல்

ஈன்றெடுத்தாள் ஒரு சேகுவரா

 

முதலிரவு கூடுகையில்-ஆத்தா

முருகனின் சித்திரத்தை நினைத்தாளோ?

முழுகாமல் இருக்கையிலே-ஆத்தா

மூவேந்தர் சரித்திரத்தை படித்தாளோ?

 

தொப்புள் கொடி யறுத்து-தாதி

தமிழ்க் கொடியை இணைத்தாளோ?

தலைகீழாய் பிடிக்கையிலே-தாதி

தமிழ்க் கீதம் இசைத்தாளோ?

 

ஆயுதமின்றி இருந்ததன் விளைவே

ஆயிரம் இழப்பென உணர்ந்தான்

கைமோதிரம் விற்று காசினைப் பெற்று

கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றான்

 

பட்டினியால் பச்சை மரவள்ளி உண்டான்-போர்

வித்தைகள் கற்று விஷக்கிருமிகள் கொன்றான்

எத்துணையுமின்றி அத்தனை பாடும் பட்டான்

தம்பியாய் இறங்கி அண்ணனாய் உயர்ந்தான்

 

சீலனாய் மில்லராய் திலீபனாய் சூசையாய்

சங்கராய் மாலதியாய் புதுவையாய்

அத்தனை துறையிலும் மிளிர்ந்தான்

ஆடுகளத்தில் தானும் புலியாய் நின்றான்

 

துரோகங்கள் துயரங்கள் தோல்விகள்

இடராக தொடராக வந்தும்

தியாகங்கள் மாயங்கள் வியூகங்கள்

வகுத்து தமிழ் மானத்தைக் காத்தான்

 

முடிவில்லாப் போரை முடிக்க முனைந்து

முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்தான்

மூவேழு நாட்டினை ஒன்றாக எதிர்த்து

முப்படையின் துணையோடு தனியாக நின்றான்

 

காவியர் நாடும் காந்தீய நாடும்

காவியத் தலைவனை வஞ்சகமாய் வீழ்த்த  

தன்னுடன் தந்தையும் தனயனுமாய்-மூன்று

தலைமுறையோடு களத்தில் நின்றான்

 

களத்தில் வீழ்ந்து புலத்தில் எழுந்தான்

காலத்திற்கு ஏற்ப புதுக்களத்தை வரைந்தான்

ஈழத்தின் தேவையை உலகத்தில் ஆழமாய் பதித்தான்

உலகத் தமிழரின் தலைவனாய் வரலாறு படைத்தான்

செவ்வாய், 22 ஜனவரி, 2013


கவிதை துளிகள் -ஆக்கம் சசி நவரத்தினம் புங்குடுதீவு 4./லண்டன் 
____________________________________________________________________
தினமும் கனவிற்காக 
கண்மூடிய நான் 
இப்போதெல்லாம் நாட்களை 
நகர்த்துவதற்காக
கண்மூடுகிறேன்
கானல் நீராய் கண்ணீர்க்குவளையாய்
கனவுகள் நிறைந்த வாழ்க்கை
துடுப்பிருந்தும் கரை ஒதுங்க முடியா
துர்ப்பாக்கிய  நிலை உறவுகளை பிரிந்து வாழ்வது
----------------------------------------------------------------

அன்று ராமனை பிரிந்த சீதை
அசோகவனத்தில்
உன்னை பிரிந்து நான்
இன்று அதே
சோகவனத்தில்....
........................................................................¨
உன்னிடம் மனம்
தொலைத்த கணம் முதல்
காதல் அழகாய் தெரிந்தது....

உன் வரவு பார்த்து
விழிகள் பூத்து
கண்ணீர் காய்ந்த
வேளைகள் கூட
அழகானதாய் .....

இள மனதின் ஏக்கங்கள்
புரியாமலேயே உன்
விழிகள் என்னைச் சுற்றி
வந்த வேளைகள் கூட
அழகாய் ......

உனக்கு என் காதலில்
வலியை புரிய வைக்க
எத்தனித்த வேளைகள்
வலி கூட்டினாலும்...
...
உன்னை விரும்பியதாலே...
உனக்காய் என்று
உருக்கிய நிமிடங்கள்
எல்லாம்
என் வாழ்வில்
மிக மிக அழகாக
மெருகேறியது உன்னை
மனம் விரும்பியதால்...
இன்று களையிழந்து
நின்றாலும்...
இந்த இதயம் எனக்கு மட்டும்,
இன்னும் அழகாய்
தென்படுகிறது
நீ அதில் இன்னும் வாழ்வதால்.....

search on www.nilaamuttam.blogspot.com

சனி, 19 ஜனவரி, 2013

இன்று --பிரியந்தி

இணையக்கவியரங்கம்

இன்று --பிரியந்தி

இவள் சொற்களில் தானாக வந்து
சிக்கிகொள்கிறது தமிழ்

வானவில்லின் வர்ணகலப்பாய்
ஒளிரும் கவிதையில்
உள்ளத்தை ஊடுருவும் சொற்களை
ஒளித்துவைக்கிற ரசவாதம்.

சமுக போலித்தனங்கள்மீது கூராய்
இறங்கும் சொற்கள்
அறிவொளியை கொழுத்துகிறது------

அறிவு யுகத்தின் முதல்குரலாய்------வாருங்கள் பிரியந்தி---

யார்க்கெடுத்துரைப்போம்

நினைவடர்ந்த பாதைகளின்
யாத்திரிகர் நாம்

எம் வெற்றுக் குவளைகளில்
கசந்த நினைவுகளின் ஒரு துளி
மிச்சமிருக்கின்றது எப்போதும்
எமது ஈமப் புன்னகையைச் சுமந்த படியே
அலைகிறது காற்று

இன்றும்
தீயாலானொரு ஆடை புனைந்தே
தெருவிலிறங்கும் நிர்ப்பந்தம் எமக்கு

கடந்து செல்லும் வாயிலிருந்து
காமம் இறங்கி வருகின்றது
நூல் பிடித்திறங்கும் மயிர்கொட்டியாய்

வழிநெடுக
தெரு நாய்க் கலவியாய்
எப்போதுமொன்று பின் தொடர்கின்றது
புணர்ச்சிக் கனவில் மிதந்தபடி

ஸ்பரிசத்தின் அத்தனை இதங்களின் மீதும்
தீ வாரி இறைக்கின்றது
பிறிதொன்றின் தீண்டல்

தெறித்தறுந்த இழையின் வழி
இறுதி இசையும் கசிந்து விட
மௌனித்திருக்கிறது யாழ்

மறுபடி மறுபடி
அறைகிறது இருள்

அழக்கூடத் திராணியற்ற யாழ்
பாழ்

இப்போதெல்லாம் நாம் புன்னகைப்பதில்லை
அல்லது
புன்னகைக்கான எந்த அவசியமும் இருப்பதில்லை

பிரளயம் காவுகொள்ளும் முன்னிருந்த
காலம்மீளும் எமதவாவை
யார்க்கெடுத்துரைப்போம்