வியாழன், 17 ஏப்ரல், 2014

பருவக் களமாடும்
பவழவல்லிக் கொடியே; உனக்குப்
பார்வைக் குண்டூசிகளைப்
படைத்தவன் எவனோ?
புகல் தந்த உன் இதயத்தால்
என் புலன்களை ஆளும்
உலகத்துப் புதிய அதிசயம் நீ;
சூரியனைத் தூங்கவைத்த
பூமிமங்கை நாணத்தில்
இருளாடை கட்டும் வேளை
எனக்குள்ளே நடக்கிறது
உன் நினைவு தோய்ந்த
புலன்விசாரணைகள்.

நீ புனலாடும் போதெல்லாம்
வெட்கத்தின் நிறம் போக்கி
கங்கை சிவக்கிறது
வள நதியில் இள வயதில்
களவியல் இலக்கணங்கள்
அன்றாடம் படிக்கும்
அரிச்சுவடி மாணவன் நான்.
அனிச்சத்தின் சிரிப்பிற்கு
அர்த்தஙகள் நான் தேடிக்
கணனித் திரையில் காத்திருக்கிறேன்!

உன் படைக்கல வலையத்துள்
நான் அடைக்கலம் ஆனபின்னும்
எனக்கு ஏன் ஆயுள்தண்டனை.
உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்-
வள்ளலாக நீ இருந்தும்
வதை செய்யும் தேவதையே! - உன்
மடியில் நான் உறங்க
ஒரு வினாடி போதுமடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக