விழித்தெழு தமிழா வியன்தரு வுலகில்
விளைவன துயராகும்
கழித்தனை காலம் கடுமிருள் நடுவே
கடையெனத் தமிழ் காணும்
பழித்தன ருணர்வைப் பறித்தன ருரிமை
பலப்பல அயல்நாடும்
அழித்தனர் இனமென் றாருயிர் தமிழர்
அடைந்தனர் பேரவலம்
நடந்தனை நடையில் நாட்டினை யாளும்
நயமெழப் பெருமையுடன்
இடந்தனைத் தரவே யிலையிந்த உலகும்
எழுந்துனைப் பந்தாடும்
தடந்தனைப் போட்டும் தமிழ்இனம் வீழ்த்தி
தவித்திட உனையாக்கக்
கிடந்தனை இருளில் கலங்கிய நினைவில்
கனவுகள் மேலோங்க
பொழுதினி உதயம் புதுவொளி காண்பாய்
புலர்ந்திடு மதிகாலை
அழுதிட வருமே அவைபொடிபடவே
அறமெடு விழிமூடின்
எழுமனதடங்கி இருந்திட எண்ணில்
இறுதியில் ஒருநாளில்
விழுவது நிகழும் வியன்தரு உலகில்
வல்லமை தான்வாழும்
இமையினுள் விழிபோ லெமதினி தமிழை
எடுத்தணைத் திடலின்றி
சுமையென விலகி சொலும் பிறமொழியில்
சிந்தனை பறிபோகா..
எமதினம் அடிமை எனவுறை உதிரம்
இனி. மெலச்சூடேற்றி
அமையொரு பாதை அடியெடு விரைவில்
அடுத்தது தமிழ் ஆளும்
*******************
செங்குருதி சீறிவிழச் சிரித்திடவோ மன்னா
எங்கிருந்து கற்றாய் இந் நீதி
அங்கு ருசி என்றுநிதம் ஆக்கஉடல் பாதி
எங்கள்விதி என்றிடவோ மீறி
தங்கமுடி கொண்டு தமிழ் ஆண்டவளே தேவி
சங்க குலஅன்னைதமிழ் காண்நீ
வெங்களங்கள் கண்டவர்கள் வெல்லுமிவர் சாதி
பொங்குதமிழ் எண்ணு அதைமீறி
உங்களிறை கண்ணயர்ந்து கீழுறங்க போதி
எம்கை தனில் ஏதுமற்ற நாதி
மங்கையவள் மானங்கெட ஆடைகளை வாய்நீ
எங்கள் கரம் போடவில்லை சோழி
வங்ககடல் பொங்கியெழும் எங்களினம் ஆதி
சங்கரனின் கண்ணெழுவ தாய்தீ
நங்கூர மிட்டுனது கோரம் முடிவாகி
பங்கு விலைபேசி வரும் நீதி
தெங்குவளர் செந்தமிழம் தெரியுமோர் சோதி
சங்கொலியும் முழங்குமொரு சேதி
பொங்குகடல் நீர்கடந்து பேருதவி நாடியெழ
எங்களிடம் வந்துதவும் தேதி
அங்கொருநாள் தொங்குங் கனி பாலில்விழத் தேனில்
எங்கும் மழை தூறலெனப் பார்நீ
தங்கமுடி தமிழ்சூடச் சோழர்வகை யாயுயர்ந்து
சிங்கமிலைக் கொடிபறக்கும் பார்நீ
*****************
தெங்குவளர் செந்தமிழம் தெரியுமோர் சோதி
சங்கொலியும் முழங்குமொரு சேதி
பொங்குகடல் நீர்கடந்து பேருதவி நாடியெழ
எங்களிடம் வந்துதவும் தேதி
அங்கொருநாட் தொங்குகனி பாலில்விழத் தேனில்
எங்கும் மழை தூறலெனப் பார்நீ
தங்கமுடி தமிழ்சூடச் சோழர்வகை யாயோர்
சிங்கமிலைக் கொடிபறக்கும் பார்நீ
--கிரிகாசன்
கனவில் வந்தாள்
கண்கள் மின்னக் கனவில் வந்தாள் களிகொண்டே
எண்கள் கூட்டி இதயந்தன்னை எட்டென்றாள்
விண்கல்பூமி வீழ்ந்தாற்போலும் வீழ்ந்தென்னில்
மண்கொள் என்றே மனதும் நடுங்கத் தான்வென்றாள்
தண்மை நீரில் துள்ளும் சின்னக் கயலொப்ப
பெண்கொள் விழிகள்- பேசாதென்னைக் குறிவைத்து
வெண்கல் லென்ன வீசும் பார்வைக் கண்கொண்டு
புண்கொள் என்றே போதை வலியைச் செய்தாளே
தன்நல் லிச்சை தணியத் தென்றல்தலை நீவி
அன்பில் பூத்த மலரின்வாசம் அதைமேவிப்
பொன்வெண்நிலவில் போயே வாழ்வென் றீந்தாலும்
என்னோர் பூவை இவளைக் கொள்ளா திருப்பேனோ
வெண்ணெய் விழிகள் வழியும் சேலை வனப்பூடே
கண்ணை அள்ளும் மின்னல்வண்ணக் கனிவைத்தான்
திண்ணையோரம் தென்றல்வருடத் தேனின்பூ
உண்ணும் வண்டை ஒத்தே இருவர் உருகோமோ?
நெல்லிக் கனியில் நிற்கும் சுவையாய் நீயும்நான்
அல்லல் செய்தே இன்பம் காணும் அதையும்தான்
எல்லைகோடு இட்டே பின்னர் அதைமீறிச்
செல்லச்செல்லச் சுகமேயென்று சொல்வோமோ
***********
நீயா , அவரா?
விழிகளில் உதிர்வது உதிரம்
விலை தமிழெனில் ஒரு சுழியம்
அழிவது தமிழ் இன உடலம்
அக மகிழ்ந்திடும் இந்த உலகம்
கொதித்தெழச் சிலகரம் தள்ளும்
கெடுநிலை விளைவெனச் சொல்லும்
பொறுமையில் விளைவ தனர்த்தம்
புரிந்திடில் விடிவது திண்ணம்
வழி நெடுகலும் பல அரவம்
வகைவகை கொளும் பல விஷமும்
நெளிவதும் வழுகிடு மியல்பும்
நெறி மறு உயிர் எனில் வதையும்
பழிபல சொலும் தமிழ் எனவும்
பரமனின் திருநடம் பயிலும்
அழி எனப் பெருவழி புகவும்
அறிஞரின் இழிமனம் உதவும்
துளிஎன விழும்மழை இடியும்
துயரமும் எனப் பகல் விடியும்
வெளி யெனப் புகுஇல்லம் அழிக்கும்
விரும்பிய அரசுகள் இணையும்
குடிநலம் பெரிதெனும் விதியும்
குழந்தகள் இறைஎன்னும் கதியும்
பொடிபட உடைஎனத் திமிரும்
புவி கொளும் அரசிடை பரவும்
அழியினம் தமிழெனக் கரமும்
அனுபவி எனமனம் ஒழுகும்
பொழுதினில் கருவிகள்பட விழியும்
பதிவுகள் தெளிவொடு பலஉமிழும்
அழகென அதிஉயர் ரசிகர்
அழிவதை விழிகொள மகிழும்
மெழுகென உருகிடுமின மெமதும்
மெதுவென விடஉயிர் பிரியும்
சரியென உனதிடை மனமும்
சகலமும் பொருள் கொளும்முடிவும்
கரியென உடல் எரி வதையும்
கடவுளின் செயலென நினைவும்
இருந்திடு மெனில் படுதோழா
இலையெனில் எழுவுடன் நேராய்
பருந்துகள் பறக்கட்டும் விண்ணில்
பருகிட உதிரமும் மண்ணில்
வரும் குறிகொண்டு சிறு குஞ்சில்
வெடிநெருப் பெழ அதிர் மெய்யில்
பெருகிடப் புயலென எழு விண்ணில்
பிரளயம் இடம் பெறும் தன்னில்
பலபல படித்திட அவர் வேண்டும்
படைத்தவ னுடமைகள் இவர்காயம்
கொலைஎனும் நிலை இலைவீரம்
கோழைகள் காமுகர் வெறியாகும்,
நிலையென தினி உருமாறும்
நிகழ்வுகள் பல நடந்தேறும்
குலைஅமைதியென் றிடும் வர்க்கம்
குறி கொளு முடி,வரும் சொர்க்கம்
*************
இதோ இதுதான் மனதில் கொண்ட கவிவடிவம் அதே கவிதை ,. சிலமாற்றங்கள்
நீயா அவனா?
விழிகளில் உதிர்வது உதிரம் - அதன்
விலை தமிழெனில் ஒரு சுழியம்
அக மகிழ்ந்திடு மிது உலகம்
கொதித்தெழச் சிலகரம் தள்ளும் - விடு
கெடும் நிலை விளைவெனச் சொல்லும்
பொறுமையில் விளைவதும் அனர்த்தம் - அதைப்
புரிந்திடில் விடிந்திடல் நிகழும்
வழி நெடுகலும் பல அரவம் - அது
வகைவகை கொளும் பல விஷமும்
நெறி மறு உயிர் எனில் வதையும்
பரமனின் திருநடம் பயிலும்
அறிஞரின் இழிமனம் உதவும்
துயரெனப் பகலதும் விடியும்
வெளி யெனப் புகுமனை யழிக்கும் - அதில்
விரும்பிய அரசுகள் இணையும்
குழந்தைகள் இறைஎன்னும் கதியும்
பொடிபட உடைஎனத் திமிரும் - இந்த
புவி கொளும் அரசிடை பரவும்
அனுபவி எனமனம் ஒழுகும்
பதிவுகள் படமென உமிழும்
அழகென அதிஉயர் ரசிகர் - தமிழ்
அழிவதை விழிகொள மகிழும்
மெதுவென விடநிலை யழியும்
சரியெனில் உனதிடை மனமும் - இதில்
சகலமும் பொருள் கொளும்முடிவும்
கடவுளின் செயலென நினைவும்
இதுவெனில் எழுந்திடு நேராய்
பருந்துகள் பறக்கட்டும் விண்ணில் - அவை
பருகிட உதிரமும் மண்ணில்
வெடிநெருப் பெழஅதிர் மெய்யில்
பெருகிடப் புயலென விண்ணில் - எழு
பிரளயம் இடம் பெறும் தன்னில்
படைத்தவ னுடமைகள் அள்ளும்
கொலைஎனும் நிலை இலைவீரம் - அது
கோழைகள் காமுகர் வாழ்வு
நிலையென தினி உருமாறும் - பார்
நிகழ்வுகள் பல நடந்தேறும்
குறி நினையெழு முடி,வரும் சொர்க்கம்
நகைச்சுவைக்காக எழுதினேன் .எவரையும் மனம் நோக வைக்க அல்ல! பகிர்ந்து கொள்கிறேன்
கவிதை எழுதக் கற்றுக் கொல்லுங்கள்
கவிதை வேண்டும் ஒன்றே கடனாய் பெறலா மென்று
புவியில் வட்டிக்கீயும் புலவர் உண்டோ பார்த்தேன்
தவிப்பில் கூகிள் எங்கும் தட்டிப் பார்த்தேன் இல்லை
குவிந்தே கிடக்கும் மின்நூல் கேட்பார் எடுப்பாரில்லை
`பீடிஎவ்`வென் றெழுதி பேணும் கவிதை தளங்கள்
தேடிப் பார்த்தும் ம்ஹூம் தேவை நிறைவே இல்லை
வாடி தமிழே யென்று வாழ்த்திப் போற்றிப் பார்த்தும்
கோடி யருளைத தாரும் கோதை வரவுமில்லை
ஆகச் சினமும் மீற அருந்தத் தண்ணீர் தேடிப்
பாகம் பாதிகொண்டாள் பதியாம் இவனின் சதியைப்
பாகம் நளனின் கலையைப் பழுதென்றாக்கும் மையம்
தேகம் வளர்க்குஞ் சமையல் திகழும் அரங்கஞ் சென்றேன்
போகத் தின்ஓர் தலைவி புரியும் செயலைக் கண்டேன்
வேகச் சட்டியுமிட்டு விளைந்திடு பச்சைக் காய்கள்
மேகம் என்னும் பஞ்சின் மென்மைக் கரமும் கொண்டு
ஏகம் நறுக்கிச் சேர்க்கும் எழிலைக் கண்டே தேவி,
ஏதென் றதனைக்கேட்டேன் இதுதான் சாம்பார், தோசை
தோதென் றிதனில் தொட்டு துவளும் தேகப் பசியை
நாதா நீக்காய் என்றாள் நாற்பது வாட்மின் குமிழோ
மூதென் றானோர் வயதில் மின்னி கொள்ளக் கண்டேன்
ஆகா கவிதை செய்வேன் அடியே நன்றி என்றே
போகக் கிடைக்கா சொர்க்கம் பின்வா சலினால் உள்ளே
போகும் வரமும் பெற்றோன் போல்நான் ஓடிச்சென்றேன்
தாகம் கொண்டே கணினி தன்னிற் கவிதை கண்டேன்
அங்கு மிங்கும் கொஞ்சம் அழகாய் வெட்டிச்சேர்த்து
எங்கும்காணாக் கவிதை எனுமோர் சாம்பார் செய்தேன்
வாங்க காலையுணவு வைத்தேன் ரெடி என்றாள்காண்
ஏங்கும் உள்ளத்தோடு என்கவி யும்தான் என்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக