கவிதை தந்தாள்
//ஒரு இணையத்தளதில் கவிதைப்போட்டியாம் ,கண்டேன்
போட்டிக்கு பாட்டெழுத என்னால் முடியுமா அதனால்........//
பாட்டெழுதப் பார்வதிக்குப் பாதியுடல் ஈந்தவனைப்
பார்க்கவெனக் கோவிலடி போனேன்
ஏட்டினிலே போட்டியினை எண்ணியொரு தீங்கவிதை
ஏற்றமுறத் தாவெனவே கேட்டேன்
நாட்டினிலே நாளிலன்று நாவினிக்க வோர் புலவன்
நீட்டியகை மீதுகவி யீந்தாய்
கேட்டவுடன் பாட்டெழுதிக் குற்றமெனக் கண்டவரை
போட்டுவிட்டதாகவும்தான் சொன்னார்
கேட்டுமொரு பாட்டினையே கூப்பிக் கரம் கொண்டிருக்க
கோவிலிடை சாமிகுரல் கேட்டேன்
”பாட்டெழுத வந்தவனுன் பாட்டினிலே பட்டழியும்
பாடுதனை எண்ணினையோ பாவி
பாட்டெழுதச் சொன்னவளும் பக்கமுண்டு பார்த்திருக்கப்
பாட்டெழுதக் கேட்டனை யுன்பாடு
பாட்டினிலே நானெழுதி பாடவென ஆகிவிடும்
பார்த்திருக்க ஓடியொழி என்றான்
ஓடு என்ற போதுமன தோடுகொண்ட ஆசைகளை
ஓடவிட்டே ஒடுமெண்ணம் இன்றி
ஓடு தலை மாலைகொண்டும் ஓடிநடம் பேய்கணங்க
ளோடு செய்யும் கூத்தன்நினை நம்பி
ஓடு ஏந்தும் யாசகனாய் உன்னை யெண்ணிவந்தவனை
ஒடுவென்பதென், கவிதையின்றி
ஓடுசுழல் பூமியிலே ஓடியுயிர் போய்விடினும்
ஓடுபவனல்லன் இவன் என்றேன்
நாடிவந்தபோது உந்தன் நாடுஎண்ணி வந்தனையோ
நாடுவதை ஈவதென்று எண்ண
நாடிதனில் ஓடும் கவி நாவிலெழக் கூறலின்றி
நாதனிடம் கேட்டதென்ன என்றாள்
நாடி நரம்பே யுறைய நான்வணங்கும் சக்திவர
நாதன்வேறு சக்திவேறென் றுண்டோ
நாடிய தொன் றென்றவனை நல்லினிய புன்னகையாள்
நான்வணங்கப் பூங்கவிதை ஈந்தாள்
**********************************
கண்டனங்கள் தெரிவிக்கலாம்
தமிழ் சொல்ல.. உயிர்கொல்ல..!
தமிழே உன்னைக் கண்டால் அஞ்சித் தலையேசுற்றுதடி
தாகம் கொண்டேன் வாழ்வில் என்னைத் தனியே விட்டுடடி
அமுதே என்றுஉன்னைக் கற்றேன் ஆனா என்றெழுதி
ஆனாலின்றோ தமிழைப்பேசத் தலையே போகுதடி
அம்மா என்று மண்ணில் எழுதி அழித்தேன் அருச்சுவடி
அதனால்தானோ அன்னை மண்ணுள் அழியப் போனவிதி
சும்மா தமிழைப் படியென் றப்பா சொல்லிப் போட்ட அடி
சொன்னாற் தமிழை விழுதேமுதுகில் எதிரி துவக்குப்பிடி
தாங்கா தலறும் போதிற் கூடத் தருணம் பார்த்துக்கடி
தமிழைப் பேசத் தலையும்போகும் சற்றே நிறுத்துங்கடி
நீங்காமனதில் கற்றோம்அன்று நெஞ்சில் கவிதையடி
நினவில் கனவில் நேரில் ஊரில்நிறைந்தாய் இன்பமடி
ஆனா லின்றோ தமிழைப்பேச அச்சம் கதவையடி
அக்கம் பக்கம் பார்த்தே மூடிப் பேசும் அவலமடி
தேனாய்ப் பேசிச் சிரித்தோம் தமிழை திமிரில் தலை நிமிர்த்தி
தேசமொன்று தமிழர் கையில் திருநாள் கொண்டதடி
வயலின் பக்கம் சென்றேன் மாடு அம்மா என்றதடி
விளைவை அறியா மிருகம் வேளை எதிரி இல்லையடி
அயலில் ஆடு இலையைத் தின்று அம்மே என்றதடி
ஆகா இதுவே அருமைபோதும் உயிர் என்னென்குதடி
முடியை வெட்டக் கடையில் நின்றேன் முன்னே அவன்நின்றான்
முரட்டுப் பார்வை கண்டேன்”தமிழன் தானேநீ”யென்றான்
இடிபோ லெண்ணி ஏனோ என்றேன் இகழக் கண்சிமிட்டி
முடியைவெட்டத் தேவையில்லை தலையைவெட்டென்றான்
முடியைவெட்டும் துணிவே போதும் தமிழன் தலைவெட்ட
முழுதாய் ஈழத்தமிழன் வாழ்வு பலியேஉயிர் கொள்ள
குடிநீர் கிணற்றில் பிணமேகாணும் கொடுமை என்சொல்ல
கேட்பார் எவரும் இல்லைத்தமிழே பிழைநீ நாமல்ல
புயலே வந்து புகுந்தாற்கூடத் தமிழே கொல்லுதடி
புனலும் ஓடிப் புகுந்தாற் கூட போவது ஈழமடி
அயலே நின்று அரவம் கூட ஆளைத் தீண்டுதடி
யார்தான் இவரேதமிழன் என்றால் ஆடிக் கொத்துதடி
இனிதே வாழ்ந்தோம் இன்பமும்கொண்டோம் என்றும்அன்பிலடி
இன்றோ வாசல்கதவை திறந்தால் எருதில் ஒருவனடி
தனியே நின்று தமிழைக் காக்கத் தவிக்கும் வேளையடி
தலையேஇன்றி போகும் நிலைமை தமிழர்க் கானதடி
உரிமை என்றால் உயிரும்போயே உடல்தான் மிஞ்சுதடி
உணவைக் கேட்டால் உதைதான் நெஞ்சில் ஓங்கிப் படுகுதடி
அருமைதமிழை அறியா துரைத்தால் அருகில் ’கத்தி’யடி
அய்யோ என்று அலறக்கூட அச்சம் உறையுதடி
இருளில் வாழ்ந்து உயிரை கையில் எட்டிப் பிடித்தடி
எத்தனைகாலம் வீட்டுள் வாழ்வோம் சுற்றி கொடுமையடி
அருகில் வந்து கதவின் ஓரம் ஆபத்து நின்றபடி
அகலத்திறக்கும் தருணம் பார்த்து ஆளைத் தின்னுதடி
தமிழே எந்தன் தாயே உந்தன் புதல்வர் கோடியடி
தரணி எங்கும் பரந்தே வாழ்ந்தார் தனிநாடில்லையடி
தமிழன் கொல்லத் தட்டிக் கேட்க தலைமை இல்லையடி
தமிழால் நலிந்தோம் நாமும்,நாளை இன்னோர் தேசமடி
உலகத்தமிழா எண்ணிக்கொள்ளு இற்றை வரையும்நீ
எதுவுமில்லா அகதி, உரிமை எங்கும் அற்றாய்நீ
கலகம் எல்லாம் ஈழம்தானேகவலை ஏதென்று
கணக்குபோட்டால் கழித்துப்பாரெம் விடையே உன்மீதி
காலைப்பிடித்து கெஞ்சிகேட்டு வாழும்நிலைமைதான்
கடலில் கொல்லக் கவிதைபாடி காலம் போகும்தான்
வேலை செய்து நாளும்போகும் வயிறும்நிறையும்தான்
வீரம்பேச காலைஊன்ற தேசம் இரவல்காண்
பாசமும் பாவமும் கொண்டுபுனைந்தே
பால்வெளி வீதியிற் கோள்களுமிட்டு
தேசமு மாழியுந் தென்றலுங் கொண்டு
திங்கள் வலம்வரப் பூமியுஞ் செய்து
நாசமும் தீமைகொள் நாடுக ளாக்கி
நாம்பெறு மேனியை நீரொடு மண்ணும்
கேசமுந் தோலுடன் கொட்டவும் ரத்தம்
கூடியெலும் புடன் கொள்ளப் பிணைத்து
ஆசை பொறாமைகொள் ளகமும் வைத்து
ஆடித் துடித்திடு மங்கமும்செய்து
பாசை ,வினோத மெனப் பயி லாட்டம்
பேசி மகிழ்ந்தவர் பெண்ணவள் ஆணும்
கூசுங் குரோதங்கள் கொள்ளிழி வாழ்வில்
கூடிக் குலாவெனக் கோலமுஞ் செய்து
பூசி மறைத்தொரு புன்மைகொள் மேனி
பூ இதுவேயெனக் காதிலும் சுற்றி
கூடி யிணைந்தொரு குழந்தையுஞ் செய்து
கொண்டபெருஞ் சுக மென்று மரற்றி
மூடி விழித்திட மோகமு மின்பம்
மெல்லச் சிரிப்பதில் மேனி சிலிர்த்து
தேடிப் பொருள்கொள ஆவெனக் கத்தி
தென்ற லுடல்மணங் கொள்ள முகர்ந்து
ஓடிநடந்திடுஞ் செய்கை வியந்து
ஒரடியில் விழ உள்ளங் கலங்கிப்
பாலைக் குடித்திடப் பரவசமாகிப்
பார்த்தே யழநிலை பதைபதைத் தேது
சேலை படுக்கையில் சிற்றெறும் புண்டோ
செய்வினை செய்தெவர் விட்டமை தானோ
சூலை வயிற்றிடை செய் யழல்போலே
சொல்லவொணா வலி சேர்ந்திடலாமோ
மேலை யிருந்தருள் செய்கண நாதா
மென்மை வலித்திட செய்வது நீயா
என்றே துடித்தவ ளள்ளி யணைத்தே
ஆற்றிட எண்ணவு மரும்புக் காலால்
முன்னே யுதைத்திட முகமதிற் பட்டு
மெல்ல வலித்திட புன்னகை கொண்டும்
தன்னில் விடும்சிறு நீரில் குளித்து
தலையிடைகேசமும் பற்றியிழுத்தும்
கூனென மேனிகிடந்திட முதுகில்
கொண்டவள் சூ வெனக் குதிரையுமாடி
ஆயிரமாய்ப் பல வேதனைப் பட்டும்
அம்மா வெனுமொரு சொல்லினைக் கேட்டு
போயுளஞ் சூட்டினில் போட்டது வெல்லம்
போலு மினித்திடும் பாகென உருகி
நேய மெடுத்தவ ளம்மையை யிறைவன்
நீட்டியகையினிற் தாயுயிர் கேட்டோன்
காய மழிந்திடக் கருவத னுயிரை
கள்வனென் றேகவர் வேளையிற் கதற
மேனி எடுத்தவன் நாமும் புலம்பி
மீளக் கொடுப்பனோ மெய்யது பொய்யே
மாநிலம்விட்டொரு மாபெரும்வெளியில்
மங்குமொளிக் கரு மாயவிநோதச்
சூனிய வானிடை சோதியாம் சக்தி
சூட்டினிலே பெரும் சூடெனும் தீயை
தானிணைந்தே நலம் காணில் விடுத்தே
தன்மை இயல்பெனில் பொன்மகள் தேறாய்!
*****************************
அய்யோ என்று அலறக்கூட அச்சம் உறையுதடி
நன்றிகள் ஐயா !!! மிக்க நன்றிகள்!!
அன்புடன்
கிரிகாசன்
இது ஒரு திருமண ஜோடிக்கான வாழ்த்து
தித்திக்க தித்திக்கத் தேனாகி வாழ்வு இனித்திடவும் - இனி
எத்திக்கும் ஆனந்தராகம் இசைகொண் டெழுந்திடவும்
சத்தியத்தோடு நற் செல்வம் விளைந்தன்பு பொங்கிடவும் - மனம்
சித்திக்கும் வாழ்வினில் செல்வம் நிறைந்திட வாழ்த்துகின்றோம்
ஆனந்த மேவிடு வாழ்வில் அகமென்றும் தூய்மையுடன் - எழிற்
பூவந்த நந்த வனத்தின்எழில் மலர்ப் புன்னகையும்
ஓரந்தம் இன்றியே உள்ளம் களிகொண்டு வாழ்ந்திடவும் - இனி
வேறேந்த இன்னலும் இன்றிக் கரம் கொள்ள வாழ்த்துகின்றோம்
தேன் உண்ண வண்டினம் வந்தருந்தும் பின்னர் ஓடிவிடும் - மலர்
தான் நின்ற பொய்கைநீர் வற்றினாலும்அங்கு தானிருக்கும்
நான் அந்த வண்டல்ல நீர்க்குளத்தின் அன்புத் தாமரையாம் - இதைக்
காணென்று வாழ்வினில் கையிணைந் தொன்றாகி வாழ்ந்திடுவீர்
சேயுடன் தாயென்று செல்வம் பொலிவளர் சீருடனும் - துள்ளிப்
பாயு மலை கடல் போலும் விரிந்திடும் சந்ததியும்
காய் என்று தான்முதிர் வாழ்வு கனிந்தின்பம் கண்டிடவும் -என்றும்
வாய்த்திடும் வாழ்வுக்கு வாழ்த்துக்கள் அள்ளி வழங்குகிறோம்
இது ஒரு திருமண ஜோடிக்கான வாழ்த்து
இன்னொன்று
வாழ்வினில் ஆனந்தம் பொங்கட்டும் - உள்ளம்
வண்ணமலர்ச் சோலையாகட்டும்
ஆழ்மன தொன்றி இணையட்டும் -இவர்
ஆசை களும் நிறைவேறட்டும்
தாழ்விலும் நேர்நிலை கொள்ளட்டும் - எண்ணம்
தங்கும் மனம் நிறைவாகட்டும்
ஆரம் என்றே அன்பு பூணட்டும் - இது
ஆரம்பநாள் இனிப் பொங்கட்டும்
தேய்வது வானிடை வெண்ணிலா - இவர்
தேரும் வாழ்வு முழுப் பொன்நிலா
பாய்வது ஆனந்த நீர்நதி - விழி
பார்ப்பது அன்பென்ற ஓர் விதி
காய்வது ஈரத்தில் தோய்நிலம் - இவர்
கற்பனைகள் கரம் கிட்டிடும்
சாய்வது நாணலின் தன்மைகாண் - இவர்
சற்றும் தளரா த மாமலை
பூத்திடும் நன்மலர்ச்சோலையில் - காலை
போகுந் தென்றல் தரும் இன்சுகம்
காத்திடும் உள்ளக் கனவுகள்- என்றும்
கண்களின் மின்னிடும் பொன்னொளி
ஆத்திரம் கொள் சினம் என்பது - இவர்
அன்பெனும் வாழ்வினில் இல்லையாம்
கூத்திடும் புத்துணர் வோங்கிட - கரம்
கொண்ட இன்வாழ்வென்றும் ஓங்குக
****************************
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக