அதிசய ஊற்று
பொழிலலை தளும்பிய பொழிதினி லிதழுடை
புதுமலரென மனமும்
எழிலுற அலைதென்ற லிளமல ரழைந்தென
இதமுட னெவர்முதுகும்
வழிசெலும் பொழுதிடை வருடிய சுகமெழ
விழி கிறங்கிய வகையும்
மொழிதமிழ் கவிதைகள் முழுதெனப் புனைசந்த
மெழவூறும் வசந்தமிதோ
கருவிடை யுயிர்தரு கடவுளு மருள்சொரி
கலைபயி லறிவகமோ
குருவிடை பயிலெனக் குறுஅறி வுடனிரு
கலைமகன் அறிவெழுமோ
தருபலகனிகளும் தலைநிலம் பிறழ்படத்
திகழ்பெருந் தருவிதுவோ
பெருமள கவிதரு புலமையில் இணைதொலை
பலகையும் இதுவெனவோ
மெருகிடக் கலைமகள் வருவளோ கமலவெண்
மலர்தனும் இதிலுளதோ
முருகெனு மிளையவன் முதுமைகொ ளறிவினன்
மகிழ்வுற எழுஞ்சபையோ
பருகிட மதுவிழும் பலவண்ண நறுமணம்
படர்விழை மலர்வனமோ
வருபவ ரெவர்தனும் வளமுறத் தகமையை
வழங்கிடு மரசவையோ
அறிவினிற் பலமின்னு மகமிடை கருகொளும்
அதிசயத் திருவிடமோ
பிறிதில்லை மலையிடை பெருகிடு மருவியின்
புனலுதிர் பரவசமோ
பொறியெழ அனலுடை பெருவெளிகொதி யழல்
பரவிய வலிமையதோ
அறமெழ மனதினில் அழகுறுங் கவிபொலி
அமுதளி சுரபியிதோ
***************
சக்தியே ஆணையிடு
கண்கள்பாதி போனதென்ன காட்சிமங்குதே - இந்தக்
காயமென்ன செய்தபாவம் காணும் துன்பமே
எண்ணமிங்கு மேகமிட்டு என்னைதூக்குதே - அங்கு
ஏகும்பாதை வானின் தோன்றி ஏறு என்குதே
கிண்ணமிட்ட பாலும் பொங்கி கீழே ஊற்றுதே - அந்த
கேணி நீரும் வற்ற மீனின் மூச்சுமுட்டுதே
அண்டவானில் ஆதவன்கள் அள்ளிவீசினாய் - சக்தி
ஆசைகொண்ட நெஞ்சம் வாழ ஆணைகூட்டுவாய்
வண்ணமிட்ட சித்திரங்கள் வாழ்வு வேண்டுதே -சுற்றி
வற்றும் நீரைகண்டு பூக்கள் வாடிச் சோர்வதேன்
மண்ணில் சுட்ட பாத்திரத்தை ஏந்தி நிற்கிறேன் - என்னை
மன்னன் என்று பேரும் வைத்து மாலைசூடவா
வண்ணமிட்ட பூக்களாலே வாசல் தோரணம் - உள்ளே
வைத்த பானை அன்னமின்றி கொண்டகாரணம்
உண்மை நெஞ்சில் அன்னைநீயு மெண்ணும் நீதியும் - விட்டு
ஓரம்வைத்துப் பார்ப்பதென்ன உள்ளே வைத்திடு
திண்ணையோரம் வந்தொருவன் காத்திருக்கிறான் - கையில்
தேவையென்று பாசமென் கயிற்றைக் கொள்கிறான்
கண்ணை மூடித் தூங்குமட்டும் காவல்நிற்கிறான் - போகும்
காலம் என்னும் பாதைசெல்ல என்னை கேட்கிறான்
அன்னை சக்தி கண்கள்விட்டு உள்ளம் காண்கிறேன் - அவள்
ஆக்கும் சக்தி ஈந்த அன்பில் வீறுகொள்கிறேன்
எண்ணமெங்கும் சக்திதீபம் ஏந்திநிற்கிறேன்- இங்கு
என்னயல்ல என்னையீந்த தாயென்றாகிறேன்
தொட்டுத்தொட்டுத் தூரிக்கையால் வண்ணம்பூசென - நல்ல
தூய தமிழ்சொல் கொடுத்து தூண்டி விட்டவள்
கட்டியெனைப் போட்டுவிட்டுக் காண்பதென்னவோ - இனி
கால் விலங்கும் அன்பு கொண்ட காவல் என்பதோ
எட்டிநடை போடுமெந்தன் கால் நிறுத்தியே - எண்ண
இறக்கை தந்து எல்லையற்ற வான்பறக்கவே
வட்டமிட்டு தேடும்வண்டு பூவின் காண்பதாய் - புவி
வாழு மென்னை தீந்தமிழில் வாசமிட்டதேன்
அன்னைமீது சத்தியத்தின் ஆணை வேண்டினேன் . மேனி
ஆலையில் கரும்புபோல ஆகப் போகமுன்
நின்மனம் அருள் புரிந்து என்னைக் காத்திடு - எந்தன்
நிழல்பிரிந்து கொள்ள முன்நிறுத்தி வைத்திடு
தன்னை மீறி ஓடும் காற்று உள்நிறுத்திடு - நல்ல
தாயின் அன்பு உள்ளத்தோடு என்னைப் பார்த்திடு
பொன்னையல்ல பூமியல்ல பொழுது வேண்டினேன் - வாழப்
போகும்நாளும் புதிது கொள்ள விதியும் வேண்டினேன்
*************************
சினம் கொள்ளாதே! (பாப்பா)
செல்லக்கண்ணே சின்னோர் வதனம்
செந்நிற மானதுமேன்
வெல்லம்போலும் கன்னம் இரண்டில்
வீழும் அருவியுமேன்
சொல்லில்சினமும் செய்கை முரணும்
சேர்ந்தே காணுதடி
எல்லைமீறிச் சீறும்கண்ணீர்
இதயம் நோகுடுதடி
நல்லோர் சினமும் கொள்ளார் அன்பை
நாடும் மனங்கொள்ளு
அல்லோர் தீமை செய்யும்போதும்
அதனிற் சினங்கொள்ளா
பல்நேர் விதிகள் முறைகள் கூறிப்
பக்குவமாய்ப் பேசு
பொல்லாப் பகையும் காணும்நேர்மை
பேச்சில் தணிவடையும்
சொல்லை கூட்டி அன்புக் கதைகள்
சொல்லப் பழகிவிடு ,
நில்லாய் என்றால் நிற்கும் அன்பில்
நெகிழும் உலகமிது
கல்லைக் கட்டிக் கடலில் இறங்க
கருதும் மனம்கொண்டு
தொல்லை கட்டி வாழ்வைக் கொண்டால்
தொலையும் இன்பமது
கீதம் போலே இனிமைகாணும்
குழந்தை மொழிகொண்டாய்
நாதம்போலும் நற்தேன் வார்த்தை
நாளும் கூறிடுவாய்
வாதம் பொய்கள் வார்த்தே செய்யும்
வார்த்தை மனங்கவரும்
ஈதெம் வாழ்விம் இன்பம்தருமா
என்றால் இலையம்மா
நாளும் பூக்கும் மலர்கள் போலும்
நீயும் பூத்திடுவாய்
வாழும் போதில் வந்தேஎங்கும்
வண்ணம் பொலிவாழ்வும்
ஆழும் மனதில் அன்புக்கோலம்
அரசென்றுரு வாக்கி
கேளும் பாவாய் கருணைஆட்சி
காண்பாய் இளவரசி
உன்னைசுற்றி நிற்போர் என்றும்
உன்னைத் தூசித்தால்
மென்மை தன்னை மறவாதென்றும்
முன்னின் றெதிர் கூறு
தன்மை புரிதல் தவறும்மனிதர்
தன்னை எதிர் கொண்டால்
புன்மை கொள்ளும் கயவர்முன்னே
புயலென் றெதிர் கொள்வாய்
கல்லை எறிந்தால் பூக்கள்போலக்
காணல் தவறம்மா
சொல்லை பேச்சை உயர்வாய் திடமாய்
சேர்த்தே உறுதியுடன்
நில்லாய் நேர்மைதெளிவும் கொண்டு
நீயும் மலைபோலும்
வெல்லும் அறிவு கூர்மை கொள்ள
சூழும் பகை தாழும்
என் நாட்டைப் போல வருமா?
பனிதூங்கு மிலையாடப் படர்காற்றில் குளிர்மேவப்
பெரும்போர்வை கொளும் நாடிதே
இனிதான தமிழோசை எழுங்காலைப் பொழுதெங்கே
இடி மேகம் இசைகீதமே
குனிந்தெங்கள் நடைமாறிக் குணம் மாறிக் குரல்மாறி
கொளவென்று விதிகூறுதே
இனியென்று மனதாசை இன்பங்கள் பொலிகின்ற
எழில்நாட்டைக் கண்காண்பதோ
கனிதூங்கு மாவின்கிளி கலகலத் தோடு மணில்
கிளை தூங்கி மந்தி யாடும்
நுனி தாங்கி நெல்முதிர நிலம் நோக்கு வயற்கதிரும்
நிமிர் வானம் தொடுமாலயம்,
புனை பானை நிரைக ளயல் புதுவாழை கனியழகும்
பேச்சினொலி தமிழ்நயந்து
நனைந்தாடு தாமரைகள் நங்கை மதிமுகம்போலும்
நளினமிவை காண்பதெப்போ
இலைமீது தனைமோதி எழுந்தோடி வருங்காற்று
இன்பவரு டலின்போதையும்
கலைவண்ண நடமாடும் கண்கவருந் தோகையொடு
காயும் புகை யிலைவாசமும்
அலையோடு குளக்காற்று ஆலமரத்தடி, கோவில்
அயலுள்ள பெட்டிக்கடையும்
இலையென்ற வாழ்வாகி இருந்திங்கே என்பாடு
எனதாகு மேமாற்றமே
பனை உரசல் சர்ரென்று பழம்வீழ அணிலோட
பயந்தோடும் குருவி கூச்சல்
தனியாகக் குயிலொன்று தருமீது துணையின்றித்
தருமோசை துயர் கீதமும்
மனையோடு ஒருவேம்பு மாதுளையும் கமுகென்று
மனம் பொங்கு மெழிற்காட்சிகள்
இவைகாணா தொருவாழ்வும் இருந்தென்னபோயென்ன
எனமனது அலைந்தோடுதே
நீள்சாலை நிலம்கீழே நெடிதோடும் வண்டிகளும்
நிழல் மரங்கள் அற்றபாதை
தோள் மாறித் திடமற்ற துணிவழிந்த கோலமுடன்
தோல்வி மனம் தொய்ந்ததான
வாழ்வுணர்வு என்றாகி வண்ணங் கரு காக்கைநிறம்
வகையேனோ தோலென்றெண்ணி
நாளென்ன பொழுதென்ன நலமாயி னுளம்காணும்
நலிவு மிகுந்தேங்கும் வாழ்வே!
*********************
ஆனா + இன் + பூவினில் = அ + ன் + பு (அன்பினில்)
வந்தேனா அதுகொண்டோமென நானா + இட்டோர் + பூவுடனே = ந + ட் + பு டனே
மீனா (மி) அயல் அச்”ச்சம்” = மிச்சம்
கணம் = கண் + அம்
(மிஞ்சுவது எது விதியோ விடு என்றுகூற ,கண் அம்மீறும் வழி நீருள் மறையும்
இதுபோல
தானந்தனும் தையாஎன சானாந்தமும் வீசும்வ
சந்தமதில் வீசும் காற்றே
வீனா வதினோடு மிருபூவின் வடிவோடும்(விதியின் வடிவத்தில்) மனம்
வேண்டா துயரென்றே மலரும்
-கிரிகாசன்
மறுக்காதே தாயே!
களிமிகு புவியிடை கருவென வுயிர்தரு
கருணையே வருவாயோ
அளிபல அமுதெனு மருஞ்சுவை தமிழிசை
அகமெழ வருளாயோ
துளிபல உதிர்வெடு கடுமழை எனமனம்
தமிழ்பொழிந் திடத்தாயே
எளிதென மனமுயர் இசைகவி பலவெழும்
இதயமும் தாராயோ
புவியசைந் திடுமதைப் பு[ரிந்திடும் உணர்வினைப்
பொழுதுளம் இழந்தாலும்
செவியினி தமிழ்சொலும் .திறமெடு தகமையைச்
சிறுமதி புரியாது
கவினுறு மலர்தன்னும் கனிபிழி சுவைமது
கொளும்நிலை மறந்தாகி
ரவியெழ ஒளிவரத் தனைமறந் தொழுகிடும்
இனிமலரென வெனைச்செய்
குழிவிழ குறுகிட குவயலம் தனிலுள
கொடுமைகள் எதுகொளினும்
அழியென கவிமனம் அடங்கிட புரிசெயல்
அரிதெனும் பெருங்கேடாம்
பொழிலுடை எழில்மலர் பிடுங்கியே தரையிடும்
பிழைதனைப் போற்றாது
தொழிலதை விடுஅருந் துயர்களை மனமெடு
துணையிரு தமிழ்த்தாயே
மொழிசொல மனதினில் முழுதென உயிர்திட
மொடுநிலை வளர்ந்தோங்க
கழிஎன குறியிடுங் கணிதமென் றுயிர்கொளும்
கடமையும் சரியாமோ
ஒழிஎன முடிவினை உயரெனக் கருதிடல்
ஒருமுறை விடுதாயே
பழிஎனப் பழமையின் தவறெதும் நினைந்திவன்
பயில்கலை மறுக்காதே
*****************
எங்கே சுதந்திரம்
காலை புலர்ந்திடக் காட்சி விரியுது
சோலை முழுதிலும் சுந்தரப்பூ வண்ணச்
சுற்றெழில் கொள்ளுமோ சொல்லுபெண்ணே!
கோலஞ் சிவந்திடக் கீழத்திசை வானில்
கூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்
கையில் கிடைக்குமோ ஞானப் பெண்ணே
ஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்
சீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்
சேரடிவானத்து வெண்முகில்கள்
நேரெழில்போலுஞ் சுதந்திரத்தை
சாலச் சிறந்தெம துள்ளம் மகிழ்வுறச்
சற்றெனும் கொள்வமோ ஞானப் பெண்ணே
கோலமுந் தீயவர் கொள்கை பரந்தது
கூறடி ஏனிது ஞானப்பெண்ணே
தூலமென்றே துயர் தூரப் பறந்திடத்
தோன்றும் விடிவெங்கே கூறுபெண்ணே
ஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ
மூலவிதி கெட்டு வாழும்நிலை பெற்று
முன்னே சுதந்திரம் கொள்வதெப்போ
வாடியுயிர் செல்லல் நீதியதோ
மோசமென்றே நிலை முற்றும் எழுந்திட
மூளும் தீயாகிடச் சுட்டிடவோ
தேசம் இருளுறத் தெய்வம் மறந்தது
தேவையென் னாவது கூறுபெண்ணே
வாழ்ந்திட நாளதுமுண்டோ பெண்ணே
காகங் கரையுது சேதி வருகுது
மேகம் குவிந்திட மின்னலிடியெழும்
பூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்
பூமழை தீயெனக் கொட்டுதலாய்
தேசம் விடிந்திடும் தீயில் விரலிட்ட
தீமைகள் போய்விட காணாய் பெண்ணே
பூவிதழ் காணவும் பொன்னெழிற் காலையில்
புத்துணர் வோடு நீ புன்னகைத்து
நாவில் சுதந்திர கீதமிசைத்திட
கோவில் தெய்வமெழக் கொண்டகுடிமனை
தாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்
**************
இயற்கையின் பதில் ??
செக்கச் சிவந்த வானம், சிறுவெண் பனிநீரோடை
பக்கத் தினிலோர் கோவில், பாடித்திரியும் குயிலும்
சொக்கும் அழகில் வயல்கள், சுதந்திரக்காற் றின்வீச்சு
பக்க மடித்திட மெய்யில் படர்ந்தே யின்பமுந் தருமே
தங்கம் போலொரு தோற்றம் தகதகமின்னும் வெய்லோன்
செங்கல் குவித்த சூளை சேரும் செம்மை வானம்
தங்கும் முகிலின் வண்ணம் தானென் றாக்கி மேற்கில்
எங்கோ வீழ்ந்த்திடப் போகும் இரவின் பகையாம் இரவியும்
தெங்கும் பனைவிட்டோலை திடுமென் றதிரிடவீழ
செங்கனி தின்றிடு மணிலும் திகைத்தே அஞ்சியுமோட
எங்கும் பரவிடு மௌனம் இரையும் காற்றின் சரசம்
அங்கம் சிலிர்க்கும் அமைதி அடடா என்றே கண்டேன்
முட்டித் தலையிடி போட்டு மூர்க்கம் பிடிக்கும் ஆடு
திட்டித் தீர்த்திடுங் கிழவி தெளிவற் றொதுக்கும் சிறுபெண்
சட்டெனத் தாவிடும் மீன்கள் சலசல வென்றிடு சுனைநீர்
மொட்டவிழ் மாலைப்பூக்கள் மயங்கும் மனங்களன்றோ
பட்டுச் சுருங்கு மிலைகள் படர்ந்த தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் தோலினை பற்றி தீயாயெரி காஞ்சோன்றி
முட்களில் பட்டேநோகும் முனையுடன் நாகதாளி
எட்டிக் கொத்திடு மரவம் இயற்கை எத்தனை அழகு
எட்டா ஆழமென்கிணறு இறைக்கு மியந்திரச் சத்தம்
முட்ட வழிந்திடும் தொட்டி மூழ்கி எழுமோர் சிறுவன்
தட்டச் சிதறிடும் தண்ணீர் தரையில் குளிர்மைச் சுகமும்
வெட்டவெளி எதிர்சத்தம் விளைக்கும் இன்பம் பெரிதே
பட்டிலெழிற் பாவாடை பாவை யணிந்தவள் செல்ல
கொட்டவிழித்திடும் கண்கள் குறுநகை சிந்திட நாணம்
மொட்டு மலர்விரி வதனம் மௌன மழைமுகில் குழலும்
தட்டினை ஏந்திய தாயார் தன்கரம் கொண்டுசெல் கோவில்
வட்டக் குளத்திடை பூக்கள் வந்தம ருஞ்சிறு குருவி
வீட்டெறிகல் கவண் சிறுவன் விளையாட்டில் தீதெண்ணம்
பட்டுவிழுந்தால் குருவி படு முயிர்வேதனை சொல்லி
குட்டியவன் பொருள்கொண்டு குரலழ கூட்டிநடந்தாள்
இத்தனை அழகிய வாழ்வில் இருந்தவர் இடிவிழவைத்து
கொத்தென கூட்டியழித்து குரலற கத்தியும் பார்த்து
செத்தனர் என்றுலகன்று சிறுமை கொண்டெதிர் கண்டு
வைத்த நெருப்பதுஎன்று வையகத்தில் தீதழிக்கும்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
Swaminathan Sankaran
நுழை துளையுள் மூங்கிலிடை நுகர்மலரின் வாசம்
அளையு மிளந்தென்றலோடி அதில் இசைக்கும் ராகம்
விளையினிமை ஓசைதொட மனங் களிப்பில் காணும்
குளஅலையைப் போலெழுமோர் குதூகலத்தைக் கொண்டேன்
அன்புடன் கிரிகாசன்
*********************************
தாமரையோ தங்கநிலா தனிமையிலே ஓடம்
தனிலிருந்து நீரலைமேற் தான்செலுத்தும் நேரம்
சாமரையும் வீசப் புனல் சலசலத்து ஓடும்
சரிகம வென்றோர் குரலும் சந்தமுறப் பாடும்
தேமதுரக் குழலிசைகள் தேன்நில வேகாந்தம்
தித்திக்கும் இன்சுவைகள் பக்கத்திலே காணும்
அமரவொரு பஞ்சணையும் அகில்புகையின்வாசம்
அடஅடடா என்னேசுகம் அதையிதிலே கண்டேன்
அன்புடன் கிரிகாசன்
சே, என்னே வாழ்க்கை!
இருந்தென்ன எழுந்தென்ன இருகால்கள் நடந்தென்ன
இந்த இடம் சொந்தமில்லையே
அருந்தென்ன அருஞ்சுவைகள் அளித்தென்ன புசித்தென்ன
அடிவயிற்றில் நிற்பதில்லையே
பெரும்மன்னர் படைகளென்ன பொற்கவசம் வாள்சுமந்து-
இருந்தென்ன போவதுதனியே
வருந்தென்னைக் குருத்தன்ன வாழையிலை பொலிவன்ன
வாளெடுக்க துண்டுகள்தானே
சரிந்தென்ன நிமிர்ந்தென்ன சாய்தலின்றி வளர்ந்தென்ன
சார்ந்துவிதி சாம்பலாக்குதேன்
எரிந்தென்ன புகைந்தென்ன எழுங்கடலின் அலைபெருகி
எடுக்கயுயிர் ஊர்புகுந்ததேன்
புரிந்தென்ன அறிந்தென்ன புவியெழுந்து நடுநடுங்கப்
புதைகுழியில் போய்விழும் வாழ்வே
கரியென்றே உடலழியக் கனலெழுந்த எரிமலையாய்
காணுவதும் பூமியின்கோபம்
சிரித்தென்ன பகைத்தென்ன சிங்காரம் புரிந்தென்ன
சிறுமைகொண்ட வாழ்விதுவன்றோ
உரித்தென்ன உடைத்தென்ன உடலழிந்துபோகையிலே
ஒன்றுமில்லை வெறுங்கரமன்றோ
கரித்துண்டைக் காவிமனம் கற்பனையில் வாழுகிறோம்
கஸ்தூரி சந்தணமென்றே
எரிக்கின்ற வேளயிலும் எழும் புகையும் ஏற்றதில்லை
இருந்தவரை ஆணவமும் ஏன்?
உருண்டென்ன வளைந்தென்ன உதய ஒளிச் சூரியனை
உலகுவிட்டு இருளில் ஓடுதே
இருண்டென்ன விடிந்தென்ன இரவுமென்ன பகலுமென்ன
ஏதுமொளி வாழ்வில் இல்லையே
நடந்தென்ன கிடந்தென்ன நடனமிட்டுக் குதித்தென்ன
நடுவனத்தில் விட்டதாகுதே
குடந்தேனைக் கொள்ளவெனக் குறுந்தடியைக் கைபிடிக்கக்
கொட்டியது குழவி மொத்தமே
கடந்தென்ன பாய்ந்தென்ன கடலெனவே துயரிருக்க
கருணையுள்ளம் ஒன்றுமில்லையே
இடந்தன்னை இழந்ததெமது இன்பவாழ் வழிந்தபின்னும்
இன்றுகூட தீர்வுஇல்லையே
படந்தன்னைப் பிடிததவரும் பாதிவழி திரிந்தவரும்
பருகிய நீர் பரமபோதையோ
நடந்ததென்ன அழிந்ததென்ன நல்லதமிழ் காப்பதற்கு
நாதியற்ற நீதிவாழ்ந்ததோ
வருந்தியென்ன வந்திடுமோ வளங்களினிப் பெறுவதுண்டோ
வருவதன்முன் காக்க வில்லையே
திருந்தியென்ன தேறியென்ன திரும்பியின்று பார்த்துமென்ன
தேவையான போது இல்லையே!
அருந்தவமாய் பிறந்த இனம் அழகுதமிழ் வீரகுணம்
அழியவென்று விதிபடைத்தபின்
உருவழிந்து வாழ்வதிலும் உணர்விழந்து சோர்வதிலும்
உறுதியிட்டு முடிவு செய்வதோ
பருந்தன்ன குஞ்செனவும் பழகும்விதி மாற்றவெனப்
பறந்துசெல்லு வானம் எட்டிடும்
கருந்தேளும் அரவங்களும் காணும்வழி நீநடக்க
கவனமெடு பாதை கிட்டிடும்
மருந்தென்ன மாயமென்ன மனதிலொரு திண்ணமெடு
மாற்றமொன்று கையில் வந்திடும்
தரு, தென்னை பனைமரமும் தலைநிமிர்ந்து வாழ்வதென
தமிழ்மகனே நீயும் வாழ்ந்திடு !
இதுவும் ஒரு மணிவிழியின்கதை .ஆனாலும் புதிய கதை புதிய பார்வை.
இது யாரையும் குறித்தது அல்ல. நல்ல தூய நோக்கத்துடன் ஈழ தேசத்தை குறித்து
எழுதப்படும் ஒரு கற்பனைகதை. இதை ஒருகருவைமனதில் வைத்து தொடங்கிவிட்டேன் .
முடிப்பதற்கு சக்தி உதவ வேண்டும். இடையில் நிற்காது என நம்புகிறேன் .
அனைவரது வாழ்த்துக்களும் தேவை
சிங்காசனம் -1
கூடுமுயிர் ஓடும்வரை ஓடுமிருகாலும் நடை
போடும் நடம் காணுமே நிதம்
தேடும்விழி மூடும்வரை தேகம்சுடும் நாளுமிசை
பாடிமனம் ஆடுமேசுகம்
நாடுமினிப் போதும்சுடு காடுமுன தாகுமெனப்
போடும்விதி மாறுமே கணம்
ஓடுமுயிர் கூடுமுடல் சூடும்எரி தீயிடையே
கூடுமெனப் போகுமே வானம்
நாடும்மகிழ் வோடுநடை போடுமெவர் வாழ்வில்பெருங்
கேடுமொரு வேளைவரும்கொள்
ஊடும் அதில் துன்பமெமைத் தேடும்வரும் சேருமதன்
பாடும்பெரும் பாடெனவே காண்
சூடும்அனல் தீண்டுமெனத் தீமைமன தோடும்பல
காயமதை ஆக்குமே உளம்
பீடும்பிணி யாகும் அதில்மூடும் இருள் கூடும் ஒளி
போயும் படு நோவுகள் எழும்
நாடுமதை யாளுமொரு நல்லரசன் ஆனவனின்
தீரம் பலவீன மாவதோ
காடும் அதில் வாழ்மிருகம் காணும்பெருங் கோரமுகம்
காவலனின் தோற்றமாவதோ
வீடும் மனை மக்களிவர் வேண்டுமுயிர் காப்பதொன்றே
வேந்தனவன் வேலையல்லவோ
கேடும் கொலை துன்பமெனக் கீழ்விலங்கென் றானவனை
கொற்றவனாய் காணல் நீதியோ
1. இரவின் மடியில்
மணிவிழி புரவியின் சிறுநடை பழகிடு
மதனுடை யசைவுதனில்
அணியெனும் நினைவுகள் மனமதி லெழவொரு
அதிதுயர் நிலைகொண்டாள்
தணிவது இலையென சடசட ஒலியெழத்
திரண்டது மழைமுகில் வான்
துணிவினை யெடுமனம் திகழ்ந்தது பொலிவொடு
துயரெனும் கனம் பெறினும்
விளைந்திடு இருளெனும் வியன்தரு கருமையும்
விறுவிறு எனக்கவிய
குழைந்திடு குளிர்மையும் குலவிட உடலிடை
குளுகுளு எனுமுணர்வும்
வளைந்திடும் தெருவினில் விரைந்திடும் கணமதில்
வருவது பெருமழையாம்
உழைந்திடத் துயரமும் உளமதில் மெதுவெழ
எதிரினில் குடிகண்டாள்
இடியுடன் புயலெழும் இறுகிய கருமையில்
இயல்புற மனமஞ்சி
கொடிதெனும் தனிமையும் கொளுமனம் வெருகிட
குடிசையில் வருமிரவை
விடியலின் வரையங்கு விடுவது றிவென
விரைந்திட மனம் கருதிப்
படிமலர் நிறையிரு பகுதியில் குதிரையும்
பணிவுற நடைசெய்தாள்
அரவமும் சிலஎழில் அசைவுறு மலரிடை
அமைதியில் நெளிவதையும்
தரதர எனத்தொலை தனில்விழு அருவியின்
துளிதெறி யொலியிடையே
புரவியின் அசைவினில் பிறந்திடு மொலிசெவி
புகுந்திடச் சிறுவயதோர்
சரசர எனஉளம் சிறுபயம் மருவிட
சடுதியில் கலைந்தனர் காண்
மரமதின் மறைவினில் வருபவர் எவரென
மலர்முகம் துயரறவும்
கரமதை உயர்வினில் விடைதரும்குறியென
கனிவுடன் அசைவுசெய்தார்
வரமிடும் முகிலிடை திரியெழிற் தேவதை
வருவது புவியெனவே
உரமெடு திருமுக ஒளியுற மணிவிழி
எழில் தனில் வெளிநடந்தார்
மெலச்சிறு குடிசைகள் பரவிய திசையினில்
மறுத்திடு மனதுடனே
பலயிடி பொலிந்திடும் பசுமைகொள் முகில்களும்
பதுமையே கவனமென
நிலமிசை பெருந்துயர் நினையடை வதுவென
நிகழ்வுகள் எதிரொலிக்க
குலமகள் விதிகண்டு பிடிபிடிபிடியென
கொடிதுகொண் டுறுமியதோ?
(வளரும்)
செத்தால் சிரிக்கவோ தேவி?
செத்தேனாம் என்றாற் சிரித்திடவோ யன்னைநீ சித்தங் கொண்டாய்
எத்தேனும் பாகுடனே இனிப்புங் கலந்துன்னை இரந்துகொள்வேன்
வித்தேனோ என்னில் விரும்பித் தமிழூன்றி விளைத்தா யின்றோ
கத்தேனோ ஒவென்று கத்திக் கதறுமுயிர் காவாயோ சொல்
உற்றேனோ உள்ளத்தே யுருகித் தமிழ்சொல்லும் உணர்வையீந்தாய்
சற்றேனும் நெஞ்சத் தழல் தனை ஆற்றென்னச் சஞ்சலத்தில்
பற்றேனோ என்றேதீ பற்றவே கூற்றுவன் பாதாளத்தில்
நிற்போனைக் கொண்டுடல் நீறாக்கி நீரிடவோ நெஞ்சங்கொண்டாய்
கற்றேனோ யின்பங்கொள் கவிசெய்யும் சொற்கூட்டக் கலையைஎங்கும்
சொற்தேனோ கொள்ளச் சுவைமிக்க பாமலர்கள் செய்யும் வண்ணம்
பற்றேனோ கொண்டென்னில் பரவச வுணர்வீந்து பாடவைத்தாய்
முற்றேனோ வைத்திடவும் முடிவுசெய்தாயின்று மூலப் பொருளே
சொல்லுஞ் சுவைக்கரும்பில் சுற்றிமலர் பூந்தமிழின் சோலைப்பூக்கள்
வில்லுங் கணையென்றே வித்தகனாய் வைத்துமங் கதன்போ லென்னை
அல்லு ம் பகற்கணைகள் அள்ளியெறி என்றுவிதி யாக்கிப் பின்னே
சொல்லுன் தூயமனம் தீயெண்ணங் கொள்ளென்னச் செய்தவர் யார்?
எள்ளு மிவன் என்றே யெண்ணியுன் திருப்பாதம் கொண் டுதைத்து
தெள்ளென் சுவைப்பாவைத் தீட்டிய நல்லோவியத்தை திங்கள்வானில்
உள்ளதெனப் பிரகாச ஒளிசெய்தாற் போலென்னை உணரவைத்துக்
கொள்ளக் குறையாகித் தேயென்று கொடும்வரத்தைக் கொடுத்ததேனோ
அள்ளித்தா எனதன்பின் அன்னையிலும் மேலான அருட்சுடரே
கொள்ளத் தணல்மீது குற்றுயிராய் கிடவென்று கூறல்விட்டு
வெள்ளி தாரகையாய் வானத்தின் கதிரெறிக்கும் வீச்சாய்சக்தி
துள்ளித்தான் கொண்டோடிச் சுந்தரமாய் தூயதமிழ் செய்யென்றாக்காய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக