புதன், 2 நவம்பர், 2016கற்களாய் உம்மை நட்ட காணிகளில் தேடுகின்றோம், ஒரு புற்களைக்கூட காணோம், நிர் மூலமாய்க் கிடக்கின்றன. நெய்விளக்குப் பந்தங்கள் நின்றெரிந்த திருவிடங்கள் எந்தப் பூதம் விழுங்கியது. எங்கள் கண்மணிகள் பெருநாள்  நாள் இன்று.
உள்ளுக்குள் ஒரு சுடர் ஏற்றுவோம்!
ஓ………….மாவீரர்களே
கண்ணயரா கண்மணிகளே
விண்ணேறிப்போனவரே
விலாசமின்றிப்போவீரோ?
பனிக்கின்றன விழிகள்
பதைக்கின்றது நெஞ்சம்
நினைக்க நினைக்க
என்னென்னோ எல்லாம் செய்கிறது உடம்பில்
ஆற்றாமல் அழுகின்றோம்
அழுத படி தொழுகின்றோம்: அறிவீரோ?
ஓ…………மாவீரச் செல்வங்களே
கற்களாய் உம்மை நட்ட
காணிகளில் தேடுகின்றோம்
ஒரு புற்களைக்கூட காணோம்
நிர் மூலமாய்க் கிடக்கின்றன
நெய்விளக்குப் பந்தங்கள் நின்றெரிந்த திருவிடங்கள்
எந்தப் பூதம் விழுங்கியது
இறந்த ஆத்மாக்களின் இல்லிடங்களை?
சுடலைத் தெய்வங்களை சுக்கு நுhறாக்கிய
சுத்த மடையா; யாராய் இருப்பர்?
விதையாய் நாம் விதைத்த விதைகுழிகள்
முற்றிலுமாய் காணாமல் போயினவே
முகவரிகள் அற்று
என் செய்வேன் இனி?
எத்திசை நோக்கி எப்படித் தொழுவோம்?
மண்துகள்களாய் தானும் வாழ்வதற்கே
உரிமை மறுக்கப்பட்டவரே – உம்மை
கண்டெடுத்து கைதொழுவதெந்நாள்?
கார்த்திகை 27
தவங்கிடந்து வரம் வேண்டும் நாளில்
நினைவுப்படங்களைக்கூட காணோம்
நீர்; நடந்த தடங்கள் மட்டும் கண்களில்
நீர்; செய்த குறும்புத்தனங்கள் மனங்களில்
நிழல் அற்றுப் போகாது உம் நினைவுகள்
உள்ளுக்குள் ஒரு சுடர் ஏற்றுவோம்: உமக்காக
தொலைத்து விடவில்லை எதையும்
உம் நினைவுகளை
உம் கனவுகளை
சுமந்தபடி திரிகின்றோம் எக்கணமும்
காத்திருக்கின்றோம் நம்பிள்ளைகள் வரவுக்காய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக