புதன், 2 நவம்பர், 2016

ஒர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில்
எலும்பும் சதையுமாக
எரிந்து கொண்டிருந்தது
முள்ளிவாய்க்கால்.
இறந்த தாயின் முலையில்
குழந்தை பால் குடிக்க
இழுத்து வந்து
நெருப்பு மூட்டினர்
இருளின் நடுவே
சிலுவை தாங்கி
இறைவன் வருவான்
என நிலவைப் பார்த்தோம்
கண்களை மூடி
இது உன் விதி என்றது
எங்களின் வீட்டினுள்
யூதர்கள் நுழைந்தனர்
யேசுவைக் கேட்டனர்
ஆயிரம் ஆயிரம் சிலுவையில்
அவர்களை அறைந்தனர்
அடையாளம் காட்ட யூடாஸ் வந்தான்
மாவீரன் கல்லறையில்
மீண்டும் இரத்தம் வடிய
உயிர்த்திருந்தவர்களை
இன்னெருமுறை
புதைத்தனர்
கனவுகள் உடைந்து
கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது
இரத்தமும் சதையுமாய்
எழுப்பிய சுவருக்குள்
எங்கள் முகங்கள்
எரிந்து கருகின.
முள்ளிவாய்க்கால் முழுமையாக
மூச்சிழந்தது
ஆயிரம் சிலுவையோடு அணைந்து போனது
அந்த உயிர்களின் கனவும் வாழ்வும்
கங்கையில் மிதந்த
பிணங்களைப் போல்
எங்களின் வயல்களில்
பிணங்கள் நீந்தின
எல்லாமே எரிந்து முடிந்தது
மிஞ்சிக் கிடக்கும் சாம்பலில் இருந்து
எலும்பை எண்ணிக் கணக்கெடுக்க
அங்கு யாரும்
சாட்சிகள் இல்லை
எரிந்து கிடக்கும் சாம்பலைத் தவிர
எஞ்சியிருப்பதற்கு
எங்களிடம் ஒன்றுமில்லை
மிஞ்சியிருக்கும் காக்கையும் குருவியும்
கரைந்த படி திரிய
நாறிக் கிடந்தன பிணங்கள்
நாங்கள் மனிதரில்லை என்றே
மூடிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால்
புத்தரின் காவியினால்.
தாகம் தீர்த்தது சத்திய சோதனை
எங்களின் குருதியினால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக