புதன், 2 நவம்பர், 2016

மாவீரர் நாளில் கார்த்திகை பூ எடுத்து வாடா ..!

நவம்பர் 17, 2009
கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா…!
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.!
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..!
உங்கள் ‘உயிர்விலைக்கு’ எது இங்கே ஈடாகும்?
உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..!
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும்.
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள்
ஆணிவேரான ஆலமரங்களே..!
ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம்
இல்லை
தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும்.
கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக்
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும்.
கண்களிலே கண்ணீர் கவி எழுதும்
கையிரண்டும் உமை நோக்கி கூம்பி எழும்.
கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா…!
துயிலும் இல்லங்கள் எங்கள் தேசத்தின் ஆலயங்கள்-அதில்
வாழும் நீங்கள் எங்கள் ஆதிமூலங்கள்.
சாவினை கழுத்தினில் கட்டிக்கொண்டீர்-அந்த
சாவினை சரித்திரமாய் ஆக்கிக்கொண்டீர்.
விடுதலைத்தீயினை விழி சுமந்தீர்
வீர வித்துக்காளாய் மண்ணுக்குள் நீர் புதைந்தீர்.
கண்முன்னே கணப்பொழுதில் கரைந்துது போனீர்-அந்த
காலனுக்கே கணக்கெழுதி வைத்துப்போனீர்.
மண்ணின்று மறத்தமிழர் மானம் காத்தீர்-பின்
விண் சென்றும் மங்காத விடிவெள்ளியானீர்.
கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா…!
எவன் சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று?
கூட்டிவா அவனுக்கு உமைக்காட்டுகிறேன்.
சுட்டெரிக்கும் புழுதிமணல் வெளியில் உங்கள் ‘கால்த்தடம்’
கத்தும் கடலோசையில் உங்கள் ‘உயிர்மூச்சு’
காண்டாமணி ஓசையில் உங்கள் ‘கணீர்க்குரல்’
மூண்டெரியும் தீயினில் உங்கள் ‘பூமுகம்’
கல்லறையில் பூத்திருக்கும் பூக்களில் உங்கள் ‘புன்னகை’
எவனடா சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று?
கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா…!
இப்போது கொஞ்ச நாளாய் எங்கள் வானம் கறுத்துக்கிடக்கிறது.
எப்போதும் இல்லாமல் ‘வெயில்’ கொளுத்தித்தியும் எறியுது.
ஏறுக்குமாறாய் ஏதேதோ நடக்கிறது..!
எவருக்குமே விளங்கவில்லை..!
எங்கள் தேசம் எப்போதும் சுமக்காத ‘சிலுவை’ சுமக்கிறது..!
எங்கள் சனமும் எப்போதும் சுமக்காத ‘வலி’ சுமக்கிறது..!
எதிரி எம்மண் ஏறி ஏறி வந்து ‘எல்லாம்’ முடிந்த்தாய்
எக்காளம் போட்டு ‘இறுமாப்பு’ காட்டுகிறான்.
கண்மணிகளே..!
கல்லறை வந்து உமைக்கட்டித்தழுவி-எங்கள்
கவலைகள் சொல்லி கண்ணீர் வடிக்கிறோம்
என்ன நடக்கிறது எங்கள் தேசத்தில் இன்று?
எவனுக்குமே விளங்கவில்லை..!
யார் சொன்னது?
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகளே உமக்குத்தெரியும்.!
காற்றோடு கலந்திருக்கும் கருவேங்கைகளுக்குத்தெரியும்.!
காலம் கனியகாத்திருக்கும் ‘கரிகாலனுக்கும்’ தெரியும்.!
கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா..!
மூன்று சாகாப்தமாய் தேசத்தாய் ‘விடுதலைக்கரு’ சுமக்கிறாள்
எப்போது வேண்டுமானாலும் ‘விடுதலைக்குழந்தை’ பிறக்காலாம்
இது கார்த்திகை மாதம்.! பெரும்பாலும் விடுதலைக்கு ‘பேறுகாலம்’.!
நம்பிக்கை இல்லாதவன் நாற்பதடி தள்ளி நில்லு
நாளை பிறக்கும் நம் தேசத்தில்
நம்பிக்கை இல்லாதவனுக்கு இடமே இல்லை.!
‘முடியும்’ என நினைத்தால் மூன்று யுகங்களானாலும் காத்துக்கிடக்கலாம்
விதைத்து முடிந்ததும் ‘அறுவடை’ கிடைக்காது.
விடிந்து எழுந்ததும் ‘கனவு’ பலிக்காது.
விடுதலை என்பது ‘உயிர்விலை’ கொடுத்துப்பெறுவது.
விடுதலை என்பது ‘நீண்ட நெருப்பாறு’
கடக்கும்போது கால் சுடலாம்.! தடக்கியும் விழலாம்.!
விழுவது என்பது வெட்கமல்ல.!
விழுந்து கிடப்பதுதான் வெட்கம்.!
எழுவது பெரிதல்ல.!
எழுந்து அடிப்பதுதான் பெரிது.!
உயிர்களை விதைத்துவிட்டு உலைவைத்து காத்திருக்கிறோம்
எங்கள் வானம் திறந்து மழை பொழியும்.!
எங்கள் வயல் செழிக்கும்.!
காய்ந்து கிடக்கும் எங்கள் ‘பூவரசு’ பூப்பூக்கும்.!
நம்பு உன்னை நம்பு
உன் தேசத்தை நம்பு
தேசத்தின் புயல்களை நம்பு
அண்ணனை நம்பு அவன் நெஞ்சினில் எரியும் நெருப்பினை நம்பு.!
எவ்வளவோ செய்த அவன் இனியும் செய்வான் என நம்பு.!
எத்தனை ‘வலி’ சுமந்தோம்?
எத்தனை ‘உயிர்’ கொடுத்தோம்?
எல்லாமே வீண்தானா?
இல்லை
கல்லறைகளுக்குள் தமிழனின் ‘கனவுகள்’ கருக்கொண்டு கிடக்கின்றன.!
சிந்திய குருதியின் சூடு தணியாமல் கிடக்கிறது.!
மனங்களில் மாறாத வடுக்கள் கிடக்கிறது.!
நாம் செய்வது வேள்வி-தியாகவேள்வி- நீண்ட வேள்வி.!
முடிவதற்கு மாதங்கள் ஆகலாம்.! வருடங்களும் ஆகலாம்.!
ஆனால்
தமிழன் செய்த வேள்வி வீணானதில்லை-அதைச்
சரித்திரம் சொல்கிறது.
இது கார்திகைமாதம்..!
கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்
கல்லறைகள் பூப்பூக்கும் மாதம்
களமாடி வெல்லும் மாதம்
கட்டுக்கதைகளையும் கற்பனைகளையும் எண்ணி காலம் கழிக்காதே.!
பூநகரி என்ன புதுக்குடியிருப்பையும் சேர்த்துப்பிடிக்கட்டும்
புலியின் ‘குணம்’ அறிந்தவனுக்கு ‘புதிர்’ புரியும்.!!!
நீ
கார்த்திகை பூ எடுத்து வா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக