சனி, 18 ஜனவரி, 2020

மண்மணக்கும் கிராமத்து வாழ்க்கை

ஆடிப் பாடி வளர்ந்த
ஆற்றங்கரை மணலும்,

கால் கொலுசை பறித்துக் கொண்ட
சேற்று வயல் நிலமும்,

துள்ளிக் குதித்து திரியும்
சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டியும்,

பயமின்றி பாசத்துடன்
முட்டிப் பழகும் கன்றுக்குட்டியும்,

தாகம் தணிக்கும்
தென்னை மரமும்,

களைப்புற்ற வேளையிலே இளைப்பாற
நிழல் தரும் வேப்ப மரமும்,

கோடைக் காலத்தில்
ருசிக்கொண்டு ஈர்க்கும் புளியமரமும்,

கிளையெங்கிலும் கொத்து கொத்தாய்
பழங்கள் தரும் மாமரமும்,

சிறு பிள்ளைகளில் தாவி விளையாடிய
ஆலமர விழுதுகளும்,

அம்மரங்களில் கூடு கட்டி
கூட்டாய் வாழும் பறவைகளும்,

மண்வாசத்தோடு சேர்ந்து வீசும்
மல்லிகை மணமும்,

எங்களின் அன்பைப் போல்
என்றும் வற்றாத கிணறும்,

அக்கிணற்றிலே நீச்சல்
பயின்ற நினைவுகளும்,

ஆசை கொஞ்சும் மாளிகையாய்
அழகிய ஓட்டு வீடும்,

அதிகாலை சூரியனை வரவேற்கும்
வாசற் கோலங்களும்,

கண்ணுக்கு விருந்தளிக்கும்
மங்கையின் பாவாடை தாவணியும்,

கண்ணுக்கெட்டிய தூரம் வரையில்
வெள்ளாமை காடுகளும்,

திரும்பிய திசையெல்லாம்
பசுமை கொஞ்சும் இயற்கையும்,

பாடுபட்டு சிந்தும் என் தந்தையின்
வியர்வைத் துளிகளும்,

இவ்வுலகம் உண்ண காரணமாய்
விளங்கும் விவசாயிகளும்,

எங்கள் மண்மணக்கும்
கிராமத்து வாழ்க்கையில் மட்டுமே..!
இதைவிட சொர்க்கமென்று ஏதாவதுண்டோ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக