சனி, 18 ஜனவரி, 2020

எங்க ஊருபோல வருமா

எங்க ஊருபோல வருமா
நெத்திக்கண் செவந்து நெருப்பைத் தந்தவன்
வடக்குத் தெசயில் அருள் பொழிய
சித்திரையில் வடம் புடித்துத் தேரிழுத்தால்
தெக்கே அம்மனும் உச்சி குளிர்ந்திடுவாள்...


சாலையில் பூக்களின் ஊர்வலம் போல
கூட்டம் கூட்டமாய் நடந்தே மழலைகள்
மேற்கில் பள்ளிக் கொடத்துக்குச் செல்வார்கள்
மாலை வந்ததும் மகிழ்ச்சியில் துள்ளுவார்கள்...


கெழக்கே மழைநீர் நெரம்பும் கொளத்தில்
அழகாய் அல்லியும் நின்னு சிரிக்கும்
கரையினைச் சுத்தி மரங்களும் அசைந்தாடும்
சிறுவரும் முங்கி நீச்சலும் அடிப்பார்கள்...


சேவல் கூவிட கண்ணத் தொறந்ததும்
வீசும் தென்றலில் ஒடம்பும் சிலிர்க்கும்
சாணம் தெளித்து மாக்கோலம் போட
வாசல் தெனமும் வண்ணமாய் இருக்கும்...


வெதச்ச நெல்லும் வெளஞ்சு நிக்கும்
மொளச்ச பூச்செடியும் மலர்ந்து சொக்கும்
ஆடும் மாடும் அஞ்சறிவு சொந்தம்
ஆசயில் பழகிட அன்பாக கொஞ்சும்...


வேதனை இருந்தாலும் வேர்வையில் நனைந்திட
ராத்திரி தூக்கம் ரணம் குறைக்கும்
தெருவில் குடிசைகள் தோரணமாய் அலங்கரிக்கும்
குடிசைக்குள் கோபுர நெஞ்சங்கள் வரவேற்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக