சனி, 10 நவம்பர், 2012


பூர்வீகம்

பூவல் வெட்டி
புதுத் தண்ணீர் ஊறும் போது
ஆவல் கொண்டு
அள்ளிக் குடித்த பூமி
அந்நியமாகிக் கிடக்கிறது!

சேவல் கூவும் முன்னரே
சுபஹ¥க்கு கண்விழித்து
நாவல் மரத்தடி வட்டையில்
நன்செய்யும் பூமி
வெறிச்சோடிக் கிடக்கிறது!

பாத்திருந்து பாத்திருந்து
பயிர் செய்த பூமியிலே
சோத்துக்குப் பஞ்சமில்லை
சொட்டேனும் கவலையில்லை
அப்படிதான்
அழகிய வாழ்வு அன்று!

வீரப்பழம் பறித்து
விருப்பமுடன் சுவைத்து
கோரப்பாய் இழைத்து
குடிசையிலே படுத்துறங்கிய
நேரத்தை நினைத்து
அழவேண்டி இருக்கிறது!

வரம்பினிலே பிள்ளையாய்
வடிவாக விளையாடி
வாய்க்காலில் குளித்துவிட்டு
பொழுதுபட்டால்
விளக்கினிலே படிப்போம்!

புல்லறுத்து மாடு வளர்த்த
பூர்வீகம் அந்நியமாகி
நெல்லறுத்த பூமியது
நெஞ்சுக்குள் கனவாகி
சள்ளெடுக்க இயலாமல்
தலைவர்கள் ஊமையாகி

பொண்ணாங்கன்னி பறித்து
பாலாணம் ஆக்கி
வல்லாரைச் சம்பல் செய்து
வடிவான குமுட்டி சுண்டி
வாய்க்காலில் குரட்டை வடித்து
வாயுறும் குழம்பாக்கி
உண்டு மகிழ்ந்த பூர்வீகம்
பறிபோன மாயமென்ன?

ஆடுகளும் கோழிகளும்
அதிகமாக வளர்த்து
மாடுகளை மேய்ந்து
மண்ணிலே பயிர் செய்து..
பூவலுக்குள் நீர் குடித்த
பூர்வீகம் நாம் இழந்தோம்
ஆவல் கொண்டு அதைக்கேட்க
ஆருமில்லை நாம் துடித்தோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக