செவ்வாய், 20 நவம்பர், 2012

Posted Image
ஈழமெழுமெனப்
போரிட்ட வீரப்பெண் சேனையை
தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே
மாவீரர் நினைவேந்தக்
கார்த்திகைக்கு
மலர்தூவப் போவீரோ..


வாழ வழியேதுமற்றுச்
சாகக் கிடந்தால்
சுருக்கிட்டு சாவெனச் சொல்லும்
ஈனச் சமூகமிது
பசியால் துடிக்கும்
குழந்தையைப் பெற்றவள்
இதயத் துடிப்பறியா இனமே
உடலைவருத்தி உலையேற்றினால்
பாலியல் தொழிலாயிது ?

வயிற்றுக் கஞ்சிக்கு
கைநீட்டினால் பிச்சைக்காரரென்கிறது
உடலைக் கடித்துக் குதறி
காசெறியும் காமப்பிசாசுகள்
அதற்கும்
விபச்சாரியென்கிறது

தோள் சுமந்த
எறிகணைகள் வெடித்துச் சிதறியபோது
சுதந்திரப் பறவைகளென்றோம்
தரைப்படை
வான்படை
கடற்படை கட்டிக் களமாடென
சிங்களப்படை வீழ்கிறதென
எக்காளமிட்டபடி
கோடிகளாய் அல்லவா
கொடிபிடித்தபடி அள்ளியிறைத்து
முள்ளிவாய்க்கால் வரை கொண்டுபோய்விட்டவர்கள்,
கட்டுக் கோப்புடைந்து
தமிழ்க் கலாச்சாரம் பிறண்டதாய்
மாரடிக்கும் திமிரை ஏதென்போம்

ஈழமெழுமெனப்
போரிட்ட வீரப்பெண் சேனையை
தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே,
மாவீரர் நினைவேந்தக்
கார்த்திகைக்கு
மலர்தூவப் போவீரோ..

இன்னமும் எம்முள் போரிடும்
ஈழப்பெண் தெரிகிறதா
இந்திய இராணுவமும்
ஏவல் படைகளும்
இனவெறியேற்றிய மகிந்தவின் குடும்பமும்
எம் தெருக்களை மிதித்து
சதிராடிய வடுக்களை
எப்படி மறந்தீர்
இன்னமும் எம்முள் போரிடும்
ஈழப்பெண் வீரப்பெண்ணவள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக