சனி, 10 நவம்பர், 2012


தனிமை பொறுக்கவில்லை

அன்னிய மண்ணில் உன்னை யெண்ணி
அத்தான் இருக்கின்றேன்!- தினம்
சென்னி வருந்த சிரிப்பை இழந்திச்
செய்தி தருகின்றேன்!

பேரப் பிள்ளைகள் பலன்தா னெம்மைப்
பிரித்து வைத்ததுவோ? - நெடுந்
தூர மிருந்து துடித்து வருந்தும்
துயரம் தந்ததுவோ?

அருகில் இருந்து பருகும் விருந்து
அந்தம் ஆனதடி! - உனை
இரவில் கலந்து கொள்ளும் தூக்கம்
எங்கோ போனதடி!

அறுசுவை யோடு அடிசி லிருந்தும்
அன்பே பசியில்லை! -உன்
குறுநகை தனையே காணா வாழ்வு
குறையே, “ருசி”யில்லை!

கட்டிய வீடும் காரும் சீரும்
களிப்பைத் தந்திடுமா? -நிதம்
கட்டி யணைத்து காணும் சுகந்தான்
காசால் வந்திடுமா?

உழைத்துப் பணத்தைச் சேர்த்து மென்ன
உன்னயல் நானில்லை! - உடல்
இழைத்துப் போனேன் உந்தன் நினைவு
இருப்பது தான் தொல்லை!

இங்கோர் திருமணம் முடித்திட என்றும்
இதயம் நினைக்கவில்லை! - என்
தங்கக் கட்டி நீயின்றி வாழும்
“தனிமை பொறுக்கவில்லை”!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக