சனி, 3 நவம்பர், 2012


கோழிமுட்டை விளம்பரம்

கோழி ஓர் முட்டையிட்டு
கொக்கரித்துப் பறக்கிறது
ஆழியில் ஓர் ஆமை
அமைதியாக மறைகிறது

திண்ணையிலே கழிக்கிறது கோழி
வேலியிலே குதிக்கிறது
மண்கிழறிச் சிரிக்கிறது
மறுபடியும் “கொக்கரக்கோ”

முட்டையிட்ட சேதியை
ஊருக்கு அறிவித்துவிட்டு
கோழி பொழுதுபட்டால்
கூட்டுக்குள் அடங்கிவிடும்

ஊர் அமைதியான பின்
உசுப்பாமல் ஓர் ஆமை
கடல்விட்டுக் கரையேறி
திடல் வந்து தோண்டி...

ஆயிரம் முட்டைகளை
அடுக்கடுக்காய் விட்டபின்னர்
அமைதியாக மூடிவிட்டு
ஆரவாரமின்றி ஆழிபோகும்.

கோழியின் ஓர் முட்டை
கொழும்புவரை தெரிகிறது
ஆமையின் ஆயிரம்
அயலவர்க்கே தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக