வெள்ளி, 16 ஜனவரி, 2015

எங்கள் ஊர்

சத்யானந்தன்


எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
கோயில் கோபுரங்களில்
குருவிகள் இல்லை
கைபேசிக்கான கோபுரங்கள்
ஏகப்பட்டவை வந்து விட்டன
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
சிறுவர்கள் தெருவில்
விளையாடுவதில்லை
கணிப்பொறி தொலைக்காட்சி
திரைகளின் முன்னே சிறுவர்கள்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
வரப்புக்களின் இடையே
பயிர்கள் இல்லை
வீட்டுமனைக்கான விளம்பரப் பலகைகள்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
நட்பு உறவுக்குள்
கைமாத்து கொடுப்பதில்லை
அடகுக் கடைகளில்
வரிசையில் மக்கள்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
மாணவரும் ஆசிரியரும்
ஒரே இடத்தில்
மது அருந்துகிறார்கள்
நூலகத்தில்
புத்தகங்கள் தூசியுடன்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
நெடுஞ்சாலையில்
சுமைதாங்கிகள் இல்லை
வாகனக் கட்டண வசூல்
தடுப்புகள் வந்தன
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
விசேஷங்களில் முன்வரிசையில்
குடும்பப் பெரியவர் இல்லை
அரசியல்வாதிகளே
அமர்கிறார்கள்
ஒன்றே ஒன்று மட்டும்
மாறவில்லை
கரு சுமக்கும் தாயின் கண்ணில்
நம்பிக்கை
ஒளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக