சின்ன இடை அசைந்தாட சிங்காரி நடக்கையிலே
சிறகடிக்கும் அன்னங்கள் ஏங்கும் -அவள்
சிரித்திட்டால் முத்தும் கடன் வாங்கும்.
மன்னவனை எதிர் பார்க்கும் மங்கையவள் மார்பதிலே
மதிப்புள்ள கனியிரண்டு தூங்கும் - மனதில்
மச்சானின் எண்ணங்கள் ஓங்கும்.
வளைகின்ற பாம்பெனவே வஞ்சியவள் கூந்தலெழில்
வற்றாத வாசமதை வீசும்.- அதை
வாங்குவதை நாடும் என் நாசும்.
மழை மேகம் கண்டாடும் மயிலான அவளழகில்
மயங்கி யெந்தன் விழி யிரண்டும் கூசும்.- புது
மௌன மொழி வந்தங்கு பேசும்.
ஆடி வரும் தென்றலது அவளாடை தூக்குகையில்
அங்கங்கள் தங்கமென மின்னும்.-அதை
அப்படியே என் விழிகள் தின்னும்.
ஓடி வரும் மதிகூட ஒய்யாரி முக அழகின்
ஒளிகண்டு மேகத்துள் பின்னும்.- இனி
ஒரு போதும் உறங்காதென் கண்ணும்.
செவ்வாழைத் தொடையழகும் செதுக்காத இடையழகும்
சிந்து கவி பாட எனை வைக்கும்- அவள்
சிந்தனையால் என் மனது தைக்கும்
கொவ்வை யிதழ் குவித்தென்னை கோதையவள் பார்க்கையிலே
கொங்கையினை என் கண்கள் மொய்க்கும் -இக்
குவலயமே என் உளத்துள் கைக்கும்.
வஞ்சி நீ வர வேண்டும்
மதியன்பன்
கன்னி யுனைக் காணாமல் காளை நெஞ்சம்
கலங்குதடி கல்விழுந்த நீரைப் போல.
எண்ணி யுனை இரவு பகல் தூக்கம் இல்லை
ஏங்குகிறேன் ஏரியிலே கொக்காய் இன்று.
தண்ணியிலா மீனாகத் தவிக்கும் என்னை
தனிமையிலே விட்டு வைக்க உனக்கேன் ஆசை?
கண்மணியே காத்திருப்பேன் உனக்காய் இன்று.
கட்டாயம் வந்தென்னை அணைக்க வேண்டும்.
அந்தி வெயில் சாய்கின்ற நேரம் பார்த்து
அன்னமென நீ நடந்து போகும் வேளை
சந்திரனா போவதென்று வியப்புக் கொண்டு
சந்தேகம் தீர்ப்பதற்காய் பின்னால் வந்து
உந்தனது அழகினிலே சொக்கிப் பின்னே.
உள்ளத்தை உன்னிடத்தில் ஒப்புவித்தேன்.
எந்தனது உள்ளத்தை கொள்ளை கொண்ட
இளங்கிளியே எனை வந்து அணைக்க வேண்டும்.
பள்ளி செல்லும் வேளையியே உந்தன் பாதம்
படுகின்ற இடமெல்லாம் தொட்டுக் கொஞ்சி
உள்ளத்தில் உனைவைத்துப் பூஜை செய்து
உத்தமியே நானுந்தன் பக்தன் ஆனேன்.
கள்ளமிலா என் உள்ளம் உன்னைத் தேடி
கருமுகிலாய் ஓடுதடி அங்கும் இங்கும்.
வெள்ளை மனம் கொண்டவளே ஓடி வந்து
வெந்திருக்கும் என்னை நீ அணைக்க வேண்டும.
தேர்தல் காலத் தேரைகள்
மதியன்பன்
தேர்தல் எனும் வலைக்குள்ளே பின்னப் பட்டு
தேவையில்லாப் பிரச்சனையை அள்ளிப் போட்டு
சேர்ந்திருந்த உறவையெல்லாம் ஒதுக்கி விட்டு
சேர்த்து வைத்த பொருளையெல்லாம் அள்ளிக் கொட்டி
ஆர்வமுடன் செய்து வந்த தொழிலை விட்டு
ஆசையுடன் வேட்பாளர் பின்னே சென்று
சீர் குலைந்து போகின்ற மாந்தர் தன்னை
சிந்தித்துப் பார்க்கையிலே இதயம் நோகும்.
வீதி யெல்லாம் வேட்பாளர் சின்னம் கீறி
வீரமுடன் எதிர்ப்பவரை வெட்டிக் குத்தி
ஊதியமாய் சில்லறையைப் பெற்றுக் கொண்டு
ஊருக்குள் ஆங்காங்கு கூட்டம் வைத்துப்
பீதியுடன இ;ராப் பொழுதைக் கழித்துக் கொண்டு
பித்தாகி வேட்பாளர் பின்னே சென்று
நாதியற்றுத் திரிகின்ற மாந்தர் தன்னை
நமக்குள்ளே காணுகையில் இதயம் நோகும்.
வேட்பாளர் சொல்லுகின்ற கருத்தையெல்லாம்
வேதமெனச் செவி சாய்த்து கைகள் தட்டி
கூட்டத்தார் முன்னாலே கோசம் போட்டு
கோடாரிக் காம்புகளாய் மாறியிங்கே
வீட்டிற்கும் நாட்டிற்கும் துரோகம் செய்து
வீணாக வாழ்க்கையினைக் கழித்துக் கொண்டு
மீட்சியின்றித் திரிகின்ற மாந்தர் தன்னை
மீண்டும் இங்கே காணுகையில் இதயம் நோகும்.
சுவனமடி உனது மடி சோதி
மதியன்பன்
புலராத பொழுதினிலே பூமகளே உனது மனை
தளராது வருவேனடி தனியே - களவாக
ஒருவருமே காணாத ஓசையிலா வேளையிலே
இருவருமே ஓடிடலா மினி.
புனிதமுறு காதலினை புரியாத மனிதரிடை
இனி வாழ முடியாது எழிலே - தனியாக
குடி யேறி வாழுவதே குணமாகு மெனமனது
அடி நாத மோதுதடி அறி.
உனதழகை நானெழுத உவமையிலை மொழிகளிலே
கனவுலகே காணாத கனியே. - மனமுருகி
இவனடியே சரணமென இளமயிலே வருவாயா
சுவனமடி உனது மடி சோதி.
மாறாத நினைவுகளை மனமிதுவோ களையவிலை
ஆறாக பெருகுதடி அவையே.- சேராது
வேறாகி வாழுவதா..வேதனையே மீதமடி
கூறாதோ நமது கதை கோடி
மாவிலையோ தோரணமோ மாலைகளோ தேவையிலை
தேவியினி திருமணமே தேவை - வாவியிலே
கரை தேடு மோடமென காளையிவ னாகு முனே
விரைவாக கூறிவிடு விடை.
குறிப்பு:
மெய்யெழுத்துக்கள் எதுவுமே இல்லாமல் எழுதப்பட்ட கவிதை.
மழை வேண்டியோர் மகஜர்
மதியன்பன்
அனல் வெப்பம் தாங்காது உள்ளம் நொந்து
அழுவதற்கு விழிகளிலே நீரும் இன்றி
புனல் இங்கு வேண்டுமெனக் கைகள் ஏந்திப்
புலம்புகிறோம் இறையோனே இந்த மண்ணின்
கனல் தெறிக்கும் நிலை தன்னை மாற்றுதற்கு
கார்மேகம் மழை தன்னைப் பொழியச் செய்வாய்.
மணல்மீது வாழுதற்கு முடியா நிலையில்
மாறியுள்ள எங்களது நிலையைக் கேளாய்..
மழையில்லாக் காரணத்தால் மண்ணின் மேலே
மலர்ந்திருந்த மரம் செடியும் காய்ந்து போச்சி.
முளைத்திருந்த நெற்கதிரும் அனலா லின்று
முற்றாகத் தரையோடு கருகிப் போச்சி.
வளைந்தோடும் நதிகூட வற்றி மண்ணின்
வளமெல்லாம் மழையின்றிப் பாழாய்ப் போச்சி.
குலைபோட்ட வாழையுடன் கமுகை தென்னை
குற்றுயிராய் அத்தனையும் செத்துப் போச்சி.
வருபுனலின் வருகையிலாக் காரணத்தால்
வருகின்ற புழுதியினால் வருத்தம் வேறு.
பெருகிவரும் நீரில்லை என்றதாலே...
பெறுமதியாம் மின்சார வெட்டும் வேறு.
கருமேகம் வந்தாலும் காற்று வந்து
கலைப்பதனால் எங்களுக்குள் கவலை வேறு.
உருகிப் போய் உன்னிடத்தில் வேண்டுகின்றோம்.
உன்னருளாம் மழை தன்னை பொழியச் செய்வாய்.
எயிட்ஸ் எனும் எமன்
மதியன்பன்
எயிட்ஸ் எனும் நோயாலே உலகம் இன்று
எதிர் நோக்கும் பிரச்சனைகள் கொஞம் அல்ல.
உயிருக்கு சவாலான இந்நோய் இன்று
உருவெடுத்து வந்ததனால் விஞ்ஞானத்தின்
வைத்தியமும் இந்நோயை ஒளிப்பதற்கு
வழியின்றித் தவிக்கிறது மக்களெல்லாம்
பைத்தியமாய் அலைகின்றார். இந்நோய் எம்மில்
படராது காத்திட வேண்டும் என்றால்...
தாரமுடன் உடலுறவைக் குறைக்க வேண்டும்.
தன்னினத்துச் சேர்க்கையினைத் தவிர்க்க வேண்டும்.
காரமான மதுவகையை ஒழிக்க வேண்டும்.
கள்ளப் பெண் உடலுறவை நிறுத்த வேண்டும்.
பூரணமாய் புகை பிடித்தல் மறக்க வேண்டும்.
பூதலத்தில் இத்தனையும் விட்டு விட்டால்
சாராது எயிட்ஸ் என்னும் இந்த நோய்தான்.
சத்தியமாய் இந்நோய்தான் உடலில் வந்தால்
கண் மங்கும் கைகால்கள் சோர்ந்து போகும்.
காய்ச்சலுடன் மூட்டுக்கள் வலிப்புக்காணும்.
உண்ணிபோல் ஏதேதோ உடலில் தோன்றும்.
உள்ளுறுப்பு அத்தனையும் உருகிப் போகும்.
தன்னடையின் வேகத்தில் தளர்வு காணும்.
தாகத்தின் மேலீட்டால் மயக்கம் தோன்றும்.
உண்மையிலே இத்தனையும் வந்து விட்டால்
உயிருக்கு ஆபத்து உணந்து கொள்வீர்..
யாருக்குப் பெருநாள்
மதியன்பன்
முப்பது நாட்கள் நோன்பை
முழுமையாய் நோற்றதோடு
தப்பேதும் செய்யா வண்ணம்
தனியிறை அருளை வேண்டி
வெப்பமும் குளிரும் தாங்கி
விருப்பமாய் வணக்கம் செய்து
இப்படி வாழ்ந்தோ ருக்கே
இந்தநாள் பெருநாள் ஆகும்.
பொய்யுடன் களவும். சூதும்
பொல்லாத தீமை எல்லாம்
ஐயகோ வேண்டாம் என்று
அல்லாஹ்வின் அருளை வேண்டி
கையிலே இருந்த வற்றை
களிப்புடன் ஏழைக் கீந்து
வையகம் வாழ்ந்தோ ருக்கே
வந்தநாள் பெருநாளாகும்.
அடுத்தவன் பசித்தபோது
அவன்பசி தீர்த்து வாழ்ந்து
குடும்பத்து வறுமை தன்னை
குறைத்திட வழிகள் செய்து
நடுநிசி எழுந்து நின்று
நாயனைத் தொழுது வேண்டி
கடுமையாய் உழைத் தோருக்கே
களிப்புறப் பெருநாள் ஆகும்.
எல்லாம் இன்ப மயம்
மதியன்பன்
மொட்டவிழ்த்த முல்லை யென முறுவலிக்கும் மங்கையரின்
கட்டுடலைக் காண்பதிலே காளையர்க்குத் தனி இன்பம்.
வெட்டவெளிக் காட்சியென வட்டமிடும் வெண்ணிலவை
எட்ட நின்று பார்ப்பதிலே இளையவர்க்குப் பேரின்பம்.
மலையேறிக் கொழுந்து தனை மங்கையர்கள் பறிப்பதனை
நிலை கொண்டு பார்ப்பதிலே நிறை கொள்ளா ஓர் இன்பம்.
முலைமீது வாய் வைத்து முறுவலித்துப் பால் சுவைக்கும்
கலை முத்து மழலைகளின் இதயத்துள் சுவை இன்பம்.
வயலுக்குள் களை பிடுங்கும் வஞ்சியரின் அசைவுதனை
நயமோடு ரசிப்பதிலே நமக்குள்ளோர் தனி இன்பம்.
சுயமாக இயங்குகின்ற இயற்கையின் நிகழ்வுதனை
வியப்புடனே ரசிப்பதிலே விளைவதுவோ பல இன்பம்.
காரிகையை அரவணைத்து கன்னத்தில் முத்தமிட்டுச்-
சாரிக்குள் சல்லாபம் புரிவதிலே தனி இன்பம்.
தூரிகையின் துணையாலே தாள்மீது கவி வடித்துப்
பேருவகை கொள்வதிலே கவிஞருக்குப் பேரின்பம்.
வானகத்துத் தாரகைகள் கண்சிமிட்டும் காட்சியினை
வந்து நின்று பார்ப்பதிலே வருவதுவோ தனி இன்பம்.
கானகத்துக் குயிலினங்கள் பாட்டிசைக்கும் ஓசையினை
காது உற்றுக் கேட்பதிலே கிடைப்பதுவோ பேரின்பம்.
பொழுது புலரும் வேளையிலே
மதியன்பன்
கடலோடு கைகுலுக்கி கதிரவனும் பவணி வர
காலையெனும் பொற்பொழுது புலரும் - ஒளிக்
கதிர் பட்டு எல்லாமே மலரும்.
மடல்மீது படிந்திருந்த பனித்துளிகள் அத்தனையும்
மறு கனமே அங்கிருந்து விலகும் - நல்
மறுமலர்ச்சி காணும் இவ்வுலகும்.
கூட்டுக்குள் அடைபட்டு குடியிருந்த பறவை யினம்
கூடு விட்டுச் சிறகுகளை விரிக்கும். - அதன்
குஞ்சுகளோ மனம் விட்டுச் சிரிக்கும்.
வீட்டுக்குள் களைப்பாலே விழிகொண்ட மானிடர்கள்
விருப்போடு துயிலகன்று எழுவர் - தம்
வினை தீர்க்கும் இறையோனைத் தொழுவர்.
கைகளிலே நூலெடுத்து களிப்புடனே மாணவர்கள்
கல்லூரி தனை நோக்கிச் செல்வர் . அவர்
கற்பதையே இலட்சியமாய் கொள்வர்
பையதனை தானெடுத்துப் பக்குவமாய் தொழிலாளர்
பசிபோக்க தொழிலுக்குப் போவர்- அவர்
பணிசெய்தே மேலோராய் ஆவர்.
வண்ணமுடன் காட்சிதரும் வண்டெனவே பறக்கின்ற
வாகனங்கள் வீதியெங்கும் ஓடும். - தெருவில்
வருவோரைப் போவோரைத் தேடும்.
சின்னவரும் பெரியவரும் அதிலேறிப் பயணங்கள்
சீக்கிரமே வேறிடங்கள் செல்வர்;. – அவர்
சிறப்புறவே கடன் முடித்து வெல்வர்.
05.05.2014
படைத்தவன் மலைத்தானோ...
மதியன்பன்
பாவையின் பார்வையில் பரிதியின் கதிரினை
படந்திடச் செய்தானோ - இந்தப்
பூவையின் நெஞ்சிலே பொற்குடம் இரண்டினை
பொருத்தியே வைத்தானோ....
கன்னியின் கால்களில் கண்கவர் அன்னத்தை
கட்டியே போட்டானோ. - இந்தப்
பொன்னியின் மேனியில் புடமிட்ட தங்கத்தை
புதைத்துமே வைத்தானோ...
அரிவையின் வதனத்தில் அழகுறு மதியினை
அமர்ந்திடச் செய்தானோ - அவளின்
விரிகின்ற வாய்க்குள்ளே விலையுதிர் முத்துக்கள்
வெட்டியும் வைத்தானோ...
வஞ்சியின் தொடைகளிள் வாழையின் மடல்களை
வைத்துமே இணைத்தானோ - அவளின்
கொஞ்சிடும் இதழ்களில் கொவ்வைப் பழத்தினை
குவித்துமே வைத்தானோ...
அணங்கவள் கழுத்திலே ஆழ்கடல் சங்கினை
அமைத்துமே தந்தானோ - இங்கு
மணக்கின்ற மலரினை மங்கையின் கேசத்துள்
மறைத்துமே வைத்தானோ...
கோதையின் கன்னத்தில் தோட்டத்துக் கனியினை
கொய்துமே வைத்தானோ - இந்தப்
பேதையின் இடுப்பிலே பெருங் கொடியொன்றினை
பிணைத்துமே விட்டானோ...
நுளம்புகளே உங்களைத்தான்
மதியன்பன்
குறுப்பு ரெத்தம் எதுவானாலும்
குடிப்போம் என்னும் கொள்கையுடன்
உறுப்புகள் மேலே வந்தமர்ந்து
உதிரம் உறுஞ்சும் நுளம்புகளே...
சிறியோர் பெரியோர் பாராமல்
சேர்ந்து வந்து குத்துகின்றீர்.
பொறுமை எல்லை தாண்டுவது
போதும் இனிமேல் நெருங்காதீர்...
உதிரம் தன்னை உறுஞ்சுவதால்
உங்கள் தாகம் தீர்ந்து விடும்.
எதிராய் எங்கள் மேனியிலே
ஏறும் நோய்கள் பல விதமே..
அதிகம் நீங்கள் குத்துவதால்
அயர்ந்து தூங்க முடியவில்லை.
மிதித்து விடுவோம் நுளம்புகளே..
மீறி இங்கே நெருங்காதீர்...
இரவு நேரம் நாமிருக்கும்
இடத்தைத் தேடி படை சூழ
அரவத்தோடு வந்தெம்மை
அண்டி நீங்கள் குத்துவதால்
சிரமம் எமக்கே. உமக்கல்ல.
சிறியோர் பெரியோர் எல்லோரும்
வரட்டும் உம்மை ஒளிப்போமென
வாசலில் உள்ளார் நெருங்காதீர்.....
மச்சான் வருவதெப்போ...?
மதியன்பன்
ஹஜ்ஜுக்கு வருவேன் என்று
கடிதத்தில் எழுதி எந்தன்
இச்சையைத் தூண்டி விட்டு
இதயத்தைக் கொள்ளை கொண்ட
மச்சானுன் வரவு இன்றி
மனதிலே ஏக்கம் வந்து
துச்சமாய்ப் போச்சு வாழ்வு.
துடைத்திட வருவ தெப்போ..?
திருமணம் செய்து மற்றத்
திங்களோ சென்றதாலே
அரும்பிய உணர்வு எல்லாம்
அலைமோதித் திரியுதிங்கே...
இருவரும் பிரிந்ததாலே
ஈருடல் ஆனால் வாழ்வில்
ஒரு உயிர் போல ஆனோம.
உணர்திங்கு வருவதெப்போ..?
உண்ணுகின்ற போது உங்கள்
உருவமே வந்து என்னில்
பின்னுது அதனைப் போல
படுக்கையில் புரளும் போதும்
கன்னத்தை வருடி விட்டுக்
கதைக்குது. அதனாலெந்தன்
எண்ணத்தில் நிறைந்து விட்ட
எழிலரே வருவ தெப்போ...?
மூடக் கொள்கையும் முஸ்லிம்களும்
மதியன்பன்
கலிமாவுடன் கடமைகள் ஐந்து என்று
கற்றதுடன் புத்தகத்தை மூடிவிட்டு
ஆலியப்பா அவுலியாக்கள் என்று சொல்லி
அனுதினமும் நேர்ச்சைகள் செய்வதோடு
களிக்கின்றார் கடலுக்கு சோறும் ஊட்டி
கபுறடியின் கம்புக்கு மண்ணும் கூட்டி
பொலிவு தரும் என்று இதைச் செய்தெல்லாம்
புனிதமுறு இஸ்லாத்தில் எங்கும் இல்லை.
பாவாக்கள் என்று ஒரு கூட்டம் வந்தால்
பக்தியுடன் அவர்கள் முன் நாணிச் சென்று
வாருங்கள் அமருங்கள் என்று சொல்லி
வறுமையிலே வாழ்ந்தாலும் அள்ளிக் கொட்டி
தாருங்கள் எந்தனக்கு பைஅத் என்றால்
தலைமயிரைப் பிடித்து அவர் ஏதோ ஊத-
மாறாத அலங்கோலக் காட்சியெல்லாம்
மார்க்கத்தின் கடமைகளாய் எங்கும் இல்லை.
இறந்தவர் வீட்டினிலே இருட்டுக் கத்தம்.
இருப்பவர் நோய் உற்றால் அதற்கும் கத்தம்.
மறக்காமல் மௌலூதும் பாத்திஹாவும்
மனைவியின் வயிற்றிலே பிள்ளை என்றால்
உறங்காமல் தலைப் பாத்திஹாவும் ஓதி
ஊராரை அழைத்தங்கு விருந்தும் வைப்பார்.
மறந்திட்டார் மார்க்கத்தின் கடமை தன்னை.
மடச் செயலை தன்னோடு அழைத்துக் கொண்டார்.
தீபாவளித் திருநாள்...
மதியன்பன்
கொடுமைகள் செய்து வாழ்ந்த
கொடியவன் நரகா சுரனை
படுகொலை செய்து விஷ்னு
பகவான் வாங்கித் தந்த
வீடுதலை நாளை எண்ணி
விருப்புடன் மக்கள் இன்று
அடுக்காகத் தீபம் ஏற்றி
அவணியிற் கொண்டாடு கின்றார்.
வைகறை எழுந்து மக்கள்
வளமுடன் எண்ணை தேய்த்து
மெய்யதைச் சுத்தம் செய்து
மேலான வாசம்; பூசி
ஒய்யார உடை உடுத்து
உணவுண்டு மகிழும் காட்சி
வையக மீதில் தீபா-
வளி யெனும் திரு நாளாகும்.
சுடர் விடும் தீபம் எங்கும்
சிந்திடும் ஒளியைப் போல-
இடர் படும் உள்ளம் எல்லாம்
இலங்கிடச் செய்ய இங்கு
படந்துள தீபா வளியை
பாருள மக்கள் ஒன்றாய்
சுடரெனும் தீபம் ஏற்றி
சுகத்துடன் மகிழ்கின்றார்கள்.
அருள் சொரியும் மாதம்
மதியன்பன்
அடிவானிற் பிறை தெரிய அகமெல்லாம் நகை விரிய
அல்லாஹ்வின் ஏவல் வரும் நோன்பாய் - அதை
அகம் மகிழ ஏற்றிடுவோம் மாண்பாய்
விடிகின்ற பொழுதுடனே விருப்பமுடன் நோன்பிருந்து
வினைதீர்க்கும் இறையோனைத் தொழுவோம் - நம்
வினை யென்னி மனமுருகி அழுவோம்.
நோன்பிருக்கும் காலத்தில் நோவினைகள் செய்யாது
நொந்தவர்க்கு உதவிகளைச் செய்வோம் - நல்ல
நோக்கமிதால் இறையருளைக் கொய்வோம்.
வான் மறையை ஓதுவதை வல்லோன் துதி பாடுவதை
வழமையென தனதாக்கிக் கொள்வோம். - உயர்
வளமான சொர்க்கத்தை வெல்வோம்.
இரக்கின்ற மாந்தருக்கு இருப்பதனை ஈந்தவரின்
இதயத்தை அன்பாலே வெல்வோம். - வரும்
இடர்களினை அதனாலே கொல்வோம்.
சுரக்கின்ற இறையருளைச் சுமந்து வரும் ரமளானை
சுமையென்று எண்ணாது ஏற்போம். - நம்
சுற்றத்தை அன்போடு சேர்ப்போம்.
பகல்நேரம் பசித்திருந்து படைத்தவனைப் பணிந்திருந்து
பக்தியுடன் நோன்பதனை நோற்போம். - இன
பந்துக்கள் உறவுதனைச் சேர்ப்போம்.
நிகரில்லா இறையவனை நின்று நிதம் வணங்குவதை
நிலையாக வாழ்க்கையிலே கொள்வோம். - பின்னர்
நிறைவான சொர்க்கத்தை வெல்வோம்.
புழு வந்து அரித்து விடும்..
மதியன்பன்
பொய் சொல்லித் திரிவோரே உங்கள் நாவை
புழு வந்து அரித்து விடும். அதனால் இனிமேல்
மெய் சொல்ல எப்போதும் பழகிக் கொள்வீர்.
மேதினியில் இது ரொம்ப நல்லதாகும்.
வையகத்தில் நீயுரைக்கும் பொய் யொன்றாலே
வருகின்ற விளைவுகளைச் சொல்லப் போனால்
ஐயய்யோ அத்தனையும் கொடுமை கேளீர்.
ஆகையினால் மெய்யுரைக்கப் பழகிக் கொள்வீர்.
ஒரு பொய்யைச் சொல்லிட்டால் உந்தன் வாக்கை
ஒரு போதும் உலகத்தார் நம்ப மாட்டார்.
உருப்படியாய் ஏதேனும் செய்தால் கூட
உண்மையினும் அது பொய்யே என்றுரைப்பார்
தெருக்களிலே நீ போனால் பொய்யன் என்று
தினமுனக்கு பட்டத்தை சூட்டி நிற்பார்.
உருக்கமுடன் இதை ஏற்று வாழும் நாளில்
உண்மைதனை உரைப்பதற்கு பழகிக் கொள்வீர்.
சத்தியத்தைச் சொல்லுதற்கு தயங்குவோரே
சத்தியமாய் உன்நாவை புழுக் கடிக்கும்.
இத்தரையில் நீ சொல்லும் பொய்களாலே
இலாபங்கள் இருந்தாலும் மறுமை நாளில்
கத்தியால் உன்நாவை அறுத்து அங்கு
கடுமையாய் வேதனைகள் செய்யக் கூடும்.
முத்திரையாய்ச் சொல்லுகின்றேன். இனிமே லேனும்
முழுமையாய் மெய்யுரைக்கப் பழகிக் கொள்வீர்.
புது யுகம் படைக்க வாரீர்
மதியன்பன்
ஏழையுளம் பூரிக்கும் காலம் ஒன்றை
என்தன் விழி காணும் வரை துயில மாட்டேன்.
வாழையடி வாழையான வறுமை தன்னை
வந்த வழி அனுப்பும் வரை துயில மாட்டேன்.
ஊளையிடும் நரிக் கூட்டம் ஊருக்குள்ளே
ஊடுருவ ஒரு போதும் விடவும் மாட்டேன்.
நாளையொரு புது யுகத்தை இந்த மண்ணில்
நான் காண அதுவரைக்கும் துயில மாட்டேன்.
பொதுப் பணத்தில் விளையாடும் போலித் தலைகள்
பூண்டோடு அழியும் வரை பொறுக்க மாட்டேன்.
வதுவையரை வாழ வைக்கும் கூட்டம் ஒன்றை
வையகத்தில் நிலை நாட்டத் தயங்க மாட்டேன்.
எது வரினும் சத்தியத்தின் வழியில் செல்ல
எவர் தலையும் துண்டிக்கத் தயங்க மாட்டேன்.
இதுக் கெல்லாம் துணிவுள்ள இளைஞர் இங்கே
இருந்திட்டால் வாருங்கள் ஒன்றாய்ச் செல்வோம்.
சீதனத்தால் வீடிருக்கும் ஏழைப் பெண்கள்
சிறப்போடு வாழுதற்கு எதையும் ஈவேன்.
நீதமுடன் செயலாற்றும் கூட்டம் ஒன்றை
நித்திலத்தில் ஆக்காமல் ஓய மாட்டேன்.
மோதலுக்கும் ஊழலுக்கும் பாதை வெட்டும்
மோசகாரக் கும்பலுக்கு கத்தி வைப்பேன்.
ஆதலினால் துணிவுள்ள ஆண்கள் இங்கே-
ஆருள்ளார்? புது யுகம் படைக்க வாரீர்.....
சீதனமே செத்துப் போ
மதியன்பன்
பாப்பாவாய் இருந்த காலை பள்ளி சென்று
பாடங்கள் பல கற்றேன். எந்தன் பெற்றோர்
பூப் பெய்தி விட்டேனாம் என்று சொல்லி
பூட்டி சிறை வைத்துள்ளார் வீட்டிற்குள்ளே..
மூப் பெய்தி விட்டாலும் எந்தன் வாழ்வில்
மூன்றுமுடிச் சேறாது. இதுவே உறுதி.
மாப்பிள்ளை என்றிட்டால் கடையில் வாங்கும்
மணிச் சரக்காய் போனதனால் என்ன செய்வேன்.?
ரொக்கமுடன் நகை நட்டு மேலும் காணி
ரோசமில்லா ஆடவர்கள் கேட்பதாலே
அக்கொடுமை தாங்காத பெற்றோரெல்லாம்
அவதியுறும் நிலை கண்ட கன்னிப் பெண்கள்
துக்கமுடன் எதை யெதையோ போட்டுக் கொண்டு
தூங்குகின்றார் நிரந்தரமாய் உலகை விட்டு.
இக் கொடுமை வேண்டா மினிச் சீதனமே...
இங்கிருந்து ஓடிவிடு. இளசுகளை வாழ விடு.
பணம் வந்தால் எந்தனக்குப் போதும் அந்த
பாவையவள் குணமொன்றும் தேவையில்லை.
மனந்திறந்து சொல்லுகின்ற ஆடவர்க்கு-
மணமுடிக்க யோக்கியதை என்ன உண்டு...?
பிணத்திற்கு தாலிகட்டும் மூடனுக்கும் - இப்
பணத்திற்கு தாலிகட்டும் மனிதனுக்கும்
இனத்தாலே ஒற்றுமைகள் நிறைய உண்டு.
இவர்வாழ அருகதைகள் என்ன உண்டு...?
பாடத்தைப் படிக்க வாரீர்
மதியன்பன்
புலுருகின்ற பொழுதெழுவோம். உடலைக் கழுவி
புத்தாடை புனைந்திடுவோம். பின்னர் இறையை
உளமுருகத் தொழுதிடுவோம். வீட்டில் உள்ள
உணவு தனை உட்கொள்வோம். முடிந்த பின்னர்
மலருகின்ற அரும்புகளாய் பள்ளி நோக்கி
மங்களமாயச் சென்றிடுவோம். சென்று அங்கே
அளவில்லாக் கல்வியினை அள்ளி எங்கள்
அகத்துள்ளே சேர்த்திடுவோம் தோல்வி யில்லை.
பள்ளியிலே ஆசான்மார் சொல்லைக் கேட்டு
பாடத்தைப் பக்குவமாயப் படித்திடுவோம். நண்பர் கூட
உள்ளமெல்லாம் ஒன்றாகி இணைந்திருப்போம்.
ஊருக்குள் உத்தமனாய் வாழ்ந்திடுவோம்.
வெள்ளை நிறப் பூப்போல மனத்தை என்றும்
வெண்மையுடன் வைத்திருப்போம். அதிலே என்றும்
கள்ளமெனும் கருமைக்கு கொஞ்ச மேனும்
காருண்யம் காட்டாமல் காத்துக் கொள்வோம்.
மாலையிலே விளையாட்டில் லயித்திருப்போம். பிறர்
மனமேற்கும் காரியத்தில் திழைத்திருப்போம்.
வேளை வந்த பின்னாலே வீடு வந்து
வேட்கையுடன் படித்தவற்றை மீட்டிக் கொள்வோம்.
பாலையிலே நீருற்றாய்ப் பெற்றோர் உள்ளம்
பாசமுறப் பொங்குவதைக் காணச் செய்வோம்.
மூலையிலே முடங்காமல் முன்னே வந்து
மூத்தவங்க வார்த்தைக்கு மதிப்புச் செய்வோம்...
கற்று வாழ்ந்தால் கஸ்டமில்லை
மதியன்பன்
கைநிறையப் புத்தகத்தை அள்ளிக் கொண்டு
கல்லூரி செல்லுகின்ற கன்னிப் பெண்னே..
மையலுடன் கல்வி தனைக் கற்கா விட்டால்
மங்களமாம் உன்வாழ்வு மங்கிப் போகும்.
தையலுனைப் பாதையிலே வந்து நின்று
தடுத்திடுவார் ஆடவர்கள். அதனைக் கண்டு
மெய்யசைத்து நின்றிட்டால் போதும் தோழி
மேதினியில் உன் வாழ்வு விணாய்ப் போகும்.
வெள்ளத்தால் அழியாது கல்விச் செல்வம்.
வெந்தனலால் வேகாது. அதனை யென்றும்
கள்வர்கள் வந்தெம்மை அடித்திட்டாலும்
கண்டிப்பாய் அது எம்மை விட்டுப்போகா...
அள்ளுவதால் குறையாத செல்வம் என்றால்
அவணியிலே அது ஒன்றே கல்வி யாகும்.
உள்ளத்தைத் தெளிவாக வைத்துக் கொண்டு
உண்ணதமாம் கல்வியினைக் கற்று வாழ்வீர்.
அரிவையர்கள் அடுப்பூதும் காலம் மாறி
அழகுறவே கல்வியினைக் கற்கும் நேரம்
தெரிவாகி உலகத்தில் அமுலாய்ப் போச்சி
தேவையென மாறி விட்ட கல்வி தன்னை-
உரிமையுடன் கற்பதற்கு பள்ளி செல்லும்
உண்ணதமாம் தோழிகளே.. நீங்ளெல்லாம்
விரிகின்ற ஆசைக்கு அணையைப் போட்டு
விருப்ப முடன் கல்வி தனைக் கற்க வாரீர்....
அவளன்பே சீதனம்
மதியன்பன்
பட்டங்கள் பல பெற்றேன். பாரின் கண்ணே.
பதவிகளும் நான் வகித்தேன். எந்தன் கையில்
துட்டில்லை என்றதனால் கண்டோரெல்லாம
தூவென்று வெறுத்தார்கள் அதனால் நானும்
இட்டமுடன் அயல் சென்று பணத்தைக் கொஞ்சம்
இரட்டிப்பாய்க் கொணர்ந்ததனால் எந்தன் வீட்டில்
பெட்டியுடன் சீர் வரிசை. - என்னைப் பார்த்துப்
பெண்கொடுக்க வருகின்றார் வரிசையில் இன்று.
அறுபதுடன் நகை நட்டும் அள்ளித் தாறேன்
அழகு மயில் ஆயிஷாவைக் கட்டித் தாறேன்.
வறுமைக்கு விலை சொன்ன உதுமான் போடி
வந்தின்று கேட்கின்றார். என்னைப் பார்த்து
வறுமையிலே நான் வாழ்ந்த காலம் அப்போ-
வற்றாத அன்பதனை என்மேல் கொட்டி.
சிறுமியென நின்றவள்தான் எந்தன் ரோசி.
சீர்வரிசை தேவையில்லை. அவளை ஏற்பேன்.
எத்தனையோ செல்வங்கள் இருந்திட்டாலும்
எந்தனுயிர் ரோசிக் கீடாய் இல்லை.
சொத்தெல்லாம் அழிந்துவிடும். ஆனாலவளின்
சுகமான அன்பொன்றே நிலைத்து நிற்கும்.
கொத்துக்குள் கனிபோல அழகென்றாலும்
குணமில்லாப் பெண் என்றால் இன்பம் இல்லை.
இத்தரையில் நான் தாலி இடுவதென்றால்
இனியவளாம் ரோசியவள் கழுத்தின் மேல்தான்.
மங்கையரே மயங்கிடாதீர்கள்
மதியன்பன்
கைப்பிடிப்பேன் கலங்காதே கண்ணே என்று
கவிதையிலே காதல் மொழி பேசி உன்னை
மெய்யுருகப் பொய் உரைத்துக் காதல் செய்யும்
மினி மைனர் வார்த்தையிலே மயங்கிடாதீர்.
வானுண்டு மதியில்லை நீதான் அங்கே - முழு
வட்டமெனப் பட்டங்கள் பலவும் சூட்டி
நானுண்டு நீயுண்டு காதல் என்று
நாடுகின்ற வாலிபரில் மயங்கிடாதீர்.
மாரியம்மன் கோவில்தான் எமக்குச் சொந்தம்.
மாவிலைகள் தோரணங்கள் வாழ்த்துச் சொல்ல
வாரியுன்னை அணைத்திடுவேன் என்று சொல்லும்
வாலிபர்கள் வார்த்தையிலே மயங்கிடாதீர்..
கனியென்றும் கரும்பென்றும் கட்டித் தழுவி
கலவியிலே இன்பத்தைக் கண்டு விட்டு
புனிதமுறு காதலுக்கு களங்கம் செய்யும்
புல்லர்கள் வார்த்தையிலே மயங்கிடாதீர்..
சீதனமோ ஆதனமோ தேவையில்லை
சிறப்பான உளமொன்றே எனக்குப் போதும்
கோதையுனை வாழ வைப்பேன் என்று சொல்லும்
கோழையர்கள் வார்த்தையிலே மயங்கிடாதீர்...
கவிஞனே என் காதலன்
மதியன்பன்
நாட்டினை நல் வளத்தினை
நங்கையின் உடை அழகினை
வீட்டினை விளை யாட்டினை
வீதியின் அவ நிலையினை
காட்டினை கனிப் பொருளினை
கல்வியை கருந் தமிழினை
தீட்டிடும் நற் கவிஞனே
தேடும் என் காதலன்.
மதியினை மலர் அழகினை
மங்கையின் நடை உடையினை
நதியினை நற் தொழிலினை
நலிவுறும் வாழ் நிலையினை
பதியினை போதை வஸ்தினை
பழகிடும் பைந் தமிழினை
புனைகின்ற நற் கவிஞனே
புவியிலே என் காதலன்.
குடியினை குண நலனினை
குறைவிலா இறை அருளினை
விடிவினை பரிதி மறைவினை
வீசிடும் புயற் காற்றினை
இடியினை கொட்டும் மழையினை
இனிய நற் தமிழிலே
வடிக்கின்ற நற் கவிஞனே
வாழ்க்கையில் என் காதலன்.
நரகத்தின் நாயகர்கள்
மதியன்பன்
ஆண்டவனின் கட்டளைக்கு அடிபணியா மானிடரும்
அன்னை தந்தை பெரியாரை மதிக்காத பிள்ளைகளும்.
வீண் சண்டை வம்புக்கு விதை போடும் விசமிகளும்
விலை மாதர் உறவு தனை விரும்புகின்ற ஆடவரும்
வேண்டி நிற்கும் ஏழைகளை விரட்டுகின்ற செல்வர்களும்
வேலை செய்யும் தொழிலாழி ஊதியத்தை மறுப்பவரும்
நான் என்னும் அகங்காரம் தலைக்கேற வாழ்பவரும்
நாளைக்கு வரவிருக்கும் நரகத்து நாயகர்கள்...
விலைகூடும் என்று சொல்லி பொருட்களினைப் பதுக்குவோரும்
வித விமாய் மதுவருந்தி சுகபோகம் காண்பவரும்
நிலையில்லா இவ்வுலகில் நினைத்த படி வாழ்பவரும்
நிறுக்கின்ற பொருட்களிலே நிறை மோசம் செய்பவரும்
அலைமோதும் பொய் வதந்தி ஆங்காங்கு சொல்பவரும்
அடுத்தவனின் பொருட்களினை அபகரித்து வாழ்பவரும்
கொலை களவு கொள்ளை யென கொடும் பாவம் செய்பவரும்
கொடுமை யுறு நரகிற்கு வர விருக்கும் நாயகர்கள்.
பெற்றோரைப் பரிந்திருக்கும் பிள்ளைகளை வதைப்போரும்
பெரு வட்டி வாங்கலுடன் கொடுமதிகள் செய்பவரும்.
ஒற்றுமையைக் குலைக்கின்ற உதவாத மனிதர்களும்
ஒப்பில்லா இறைவனுக்கு உவமானம் சொல்பவரும்
கற்றபடி ஒழுகாத கற்றறிந்த ஆலிம் களும்
கண்டபடி ஆட்சி செய்யும் நீதியில்லாத் தலைவர்களும்
உற்றாரை உறவினரை ஒதுக்கி நிதம் வாழ்பவரும்
உண்மையிலே நரகிற்கு வரவிருக்கும் நாயகர்கள்...
இறையில்லம் ஏகும் இனியோரே
மதியன்பன்
மண்ணுலகும் விண்ணுலகும் படைத்துக் காத்து
மறை தந்து நிறைவுடனே வாழச் செய்த
முன்னவனாம் அல்லாஹ்வின் சொல்லை ஏற்று
முகம்மலர கஹ்பாவை காணச் செல்லும்
புண்ணியங்கள் பெற்றிட்ட பெரியார் நீவிர்
புதலத்தில் பாவங்கள் எல்லாம் நீங்கி
இன்றிங்கு பிறந்திட்ட மழலை போன்று
ஏகிடுவீர். இறையில்லம் சென்று வாரீர்.
மார்க்கத்தின் கடமைகள் முழுமை காண
மக்கநகர் செல்லுங்கால் அங்கே நீவீர்
ஆர்வமுடன் கஹ்பாவைக் காணும் பேறும்
அத்தோடு சபா மர்வா என்னும் குன்றுள்
ஈர்க்கின்ற தொங்கோட்டம் ஓடும் பேறும்
இப்பாரில் ஒப்பில்லா ஸம்ஸம் நீரை
தேர்ந் தெடுத்துக் குடிக்கின்ற பேறும்; பெறுவீர்.
சோதரர்காள் இறையில்லம் சென்று வாரீர்.
சத்தியத்தின் தலைமகனாய் செகத்தில் வாழ்ந்து
சாத்வீகப் புரட்சி யொன்றைத்; தோற்று வித்த
உத்தமனாம் நபி நாதர் றவுழா ஸரீபை
உஹது மலைச் சாரலிலே காணும் வாய்ப்பும்
அத்தோடு ஸஹாபாக்கள் அவுலியாக்கள்
அவர்களது கபுறுகளைக் காணும் வாய்ப்பும்
இத்தரையில் பார்க்கின்ற பேறே பேறு.
இறை நேசச் செல்வர்காள் சென்று வாரீர்....
இதயம் நோகும்
மதியன்பன்
தானியத்தை கடைக்குள்ளே பதுக்கி வைத்து
தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருக்கும்
வாணிபத்துக் குரியவர்கள் வையகத்தில்
வாழுவதைக் காணுகையில் இதயம் நோகும்.
கைநீட்டி சில்லறையை கேட்கும் ஏழை
கண்கலங்கி நிற்கின்ற நிலையைக் கண்டும்
பை திறந்து கொடுக்காத செல்வர் தன்னை
பார்க்கின்ற வேளையிலே இதயம் நோகும்.
அயல் வீட்டில் இருப்பவர்கள் பசித்திருக்க
அவர் பசியைப் போக்காமல் புசித்து வாழும்
சுய நலத்தில் வாழ்பவர்கள் காசினியில்
சுற்றுவதைக் காணுகையில் இதயம் நோகும்.
உழைப்பவரின் ஊதியத்தைக் கணக்குப் பார்த்து
உருப்படியாய் கொடுக்காமல் வேலை வாங்கி
பிழைக்கின்ற செல்வரினைப் பாரின் கண்ணே.
பார்க்கின்ற வேளையிலும் இதயம் நோகும்.
கிளி போன்ற மனைவியினை வீட்டில் விட்டு
கீழ் சாதிப் பெண்களினை நாடிச் சென்று
விழிக்கின்ற ஆசையினைத் தீர்த்துக் கொள்ளும்
வீணர்களைக் காணுகையில் இதயம் நோகும்.
பொறுப்புகளோ குடும்பத்துள் நிறைந்திருக்க
பொஞ்சாதி பிள்ளைகளோ பசித்திருக்க
விருப்புடனே மது அருந்தி ஊரைச் சுற்றும்
வீணர்ககைளக் காணுகையில் இதயம் நோகும்...
மானம் மறந்த மங்கையர்
மதியன்பன்
மா நபி குலத்தில் வந்த
மங்கையர் நாங்கள் என்று
பூவிலும் மென்மை யான
பூவையர் புலம்பு கின்றார்.
நாவினால் கலிமாச் சொன்ன
நங்கையர் கூட்டம் இன்று
தாவிடும் குரங்கைப் போல
தடுமாறித் துள்ளு கின்றார்.
முக்காட்டைக் கழற்றி விட்டு
முழுமையாய்ப் பாவம் செய்து
ஹக்கான மார்க்கம் தன்னை
கறைபடியச் செய்து விட்டார்.
அக்காலப் பெண்டிர் எல்லாம்
ஆடையுள் மறைந்து நின்று
தக்வாவில் வாழ்ந்த வற்றை
தங்கையர் மறந்து விட்டார்..
அச்ச மடம் நாணம் என்னும்
அழகிய ந(h)ற் குணத்தை
துச்சமெனக் கொண்ட தாலே
துள்ளிடும் அழகை யெல்லாம்
மெச்சிடும் ஆடை கொண்டு
மிகை படக் காட்டுகின்றார்.
இச் செயல் வேண்டாம் தங்காய்.
இஸ்லாத்தில் வாழ வாரீர்...
இரங்காதா இவர்கள் இதயம்
மதியன்பன்
மாடி மேலே மாடி வைத்து வீடு கட்டி
மலர்க் கொத்து பஞ்சனையும் அதிலே வைத்து
கோடியெனச் செல்வங்கள் குவித்து வாழும்
குவலயத்துச் சீமான்கள் கண்கள் முன்னே
வீடு கட்டி வாழுதற்கு வசதி யின்றி
வீதியினை இல்ல மென மாற்றிக் கொண்டு
பாடு படும் ஏழையரைக் கண்ட பின்பும்
பரிந்துதவ இரங்காதா இவர்கள் உள்ளம்...
பல்வேறு ருசியான சமையல் செய்து
பழரசமும் குடி வகையும் அதிலே சேர்த்து
இல்லத்து அரசியுடன் உண்டு வாழும்
இவ்வுலகச் சீமான்கள் கண்கள் முன்னே
ஒரு வேளை உணவுக்கு வழியோ இன்றி
ஊர் ஊராய் கை நீட்டி பிச்சை வாங்கி
உருக் குலைந்து திரிவோரைக் கண்ட பின்பும்
உணவளிக்க இரங்காதா இவர்கள் இதயம்...
செல்வ மகள் சிறப்புடனே வாழுதற்காய்
சீதனமாய் ஆயிரங்கள் அள்ளிக் கொட்டி
பல்லிளிக்கும் காளையரைத் தேடிச் செல்லும்
பதி வாழும் சீமான்கள் கண்கள் முன்னே-
பூப் பெய்தும் வாழுதற்கு நாதியற்று
பூட்டிய வீட்டிற்குள்ளே தவமிருக்கும்
மூப் பெய்தும் குமருகளைக் கண்ட பின்பும்
முன் உதவ இரங்காதா இவர்கள் இதயம்...
விவாகரத்தை வேண்டுகிறேன்
மதியன்பன்
காலையிலே அவளெழுந்து கண்விழிக்கு முன்னாலே
காப்பியுடன் தண்ணீரும் காலடிக்குப் போக வேண்டும்.
சேலைமுதல் செருப்புவரை சிங்காரி உடுப் பெல்லாம்
சீராகக் காலடியே தினந்தோறும் வர வேண்டும்.
மாலையிலே மனை பெருக்கி மங்களமாய் விளக்கேற்றி
மாடாக நானுழைக்க மாதவளோ ஊரு சுற்றி
வேலையின்றி அலைவதனால் வெட்கம் எனக்கேதான்.
வேறுவழி யில்லையினி விவாகரத்தை வேண்டுகிறேன்.
பிள்ளையினைத் தொட்டிலிலே போட்டு நிதம் தாலாட்டி
பீங்கானுடன் கோப்பைகளை கழுவி யிங்கு அடுக்கி விட்டு
உள்ளிருக்கும் குப்பைகளை கொண்டு வந்து வீதியிலே
உதறுவது மட்டுமல்ல... குசினிக்குள் சென்று அங்கு
அள்ளி யொரு பிடி அரிசி அதைச் சோறாய் ஆக்குவதும்
அழகான கறி சமைத்து அவளுக்கு ஊட்டுவதும்
உள்ளபடி அழகல்ல ஆண் குலத்துக் கவமானம்..
உத்தமிதான் என்றாலும் விவாகரத்தை வேண்டுகிறேன்
கட்டிய கணவனென்றால் கட்டிலுக்கு மட்டுமல்ல
கடமைகள் என்ன வென்று கண்டிப்பாய் அறிந்திருந்து
தொட்டு உறவாடி துயரினைத் துடைக்க வேண்டும.
தூவென்று நடக்கின்ற துணையிவளை இனிமேலும்
கட்டி வாழுவதால் காலமெல்லாம் கஸ்டம்தான்.
காலை முதல் மாலை வரை என் வாழ்வு நரகந்தான்.
கட்டிய கணவனுக்கு கடமை களைச் செய்யாத
காரிகையே வேண்டாமினி விவாகரத்தை வேண்டுகிறேன்.
ஊருக்காய் உழைப்பவனே
மதியன்பன்
சீரோங்கும் காத்தநகர் மண்ணில் வாழும்
சிறப்புமிகு உலமாக்கள் வரிசை தன்னில்
ஊருக்காய் பணி செய்து ஓடாயப் போன
ஊழியனே மௌலவிலே ஆதம் லெவ்வை
நீரோடும் மீனாகச் சமூகத் துள்ளே
நீந்தி விளை யாடி நீயோ சேவை செய்தாய்.
பேராளன் அல்லாஹ்வின் அருளைப் பெற்று
பல்லாண்டு நலம் வாழ வாழ்த்து கின்றோம்.
கலவரத்தால் காத்த நகர் அழிந்த வேளை
காத்திரமாய் முன்னெழுந்து பணிகள் செய்தாய்..
உலவுகின்ற பிரச்சனைகள் தேடிச் சென்று
உருப்படியாய் அவை தீர்த்துப் புதுமை செய்தாய்.
நிலவெனவே இருண்டவரின் வாழ்க்கை ஒளிர
நிறைவாகக் குறைகளினைத் தீர்த்து வைத்தாய்.
நலமான நற்பணிகள் இன்னும் செய்து
நானிலத்தில் சுகம் வாழ வாழ்த்து கின்றோம்..
பள்ளியிலே கதீபாகக் கடமை செய்து
படைத்தவனின் கட்டளையை நிறைவு செய்தாய்.
துள்ளி வரும் சிறாருக்கு குர்ஆன் ஓதும்
தூய பணி செய்வதிலும் முன்னே நின்றாய்.
கள்ளமில்லா மனத்தோடு இல்லந் தோறும்
கடமை செயும் பண்புக்கு கட்டுப் பட்டாய்...
நல்ல மனம் கொண்டவனே..மௌலவி ஆதம்..
நற்பணிகள் செய்து வாழ வாழ்த்து கின்றோம்...
மீன் பாடும் தேன் நாடு
மதியன்பன்
பாடும் மீன் வாழும் இடம் மட்டு நகர்
பார்க்கின்ற விழிகளுக்கு சொர்க்க மாகும்.
ஓடுகின்ற நதியோடு ஓடும் மீன்கள்
ஓசையது காது களுக் கின்பமாகும்.
ஆடுகின்ற அலையோடு கடலின் மேலே
ஆடிவரும் ஓடங்கள் அழகைக் காட்டும்.
கூடுகளில் வாழுகின்ற புள்ளினங்கள்
குரலெடுத்துப் பாடுவது இனிமை கூட்டும்.
நகருக்குள் அமைந்திருக்கும் மதகு மேலே
நங்கையரும் ஆடவரும் சேர்ந்திருந்து
சுகமான காற்றோடு கை குலுக்கும்
சுவையான காட்சியதும் இனிமையாகும்.
பகலவனின் விடிவுதனைக் கண்டு அங்கே-
பளபளத்து வெலெவெலத்த வாவிப் பெண்ணாள்
முகம் சிவக்க கதிரவானார் மேகத்துள்ளே
முடங்குவதும் விழிகளுக்கு விருந்தேயாகும்.
வயலுக்குள் நிற்கின்ற நெல்லின் கதிரின்
வனப்பழகும் கண்களுக்கு குளிர்ச்சி யூட்டும்.
உயர்ந்த பனை தென்னையுடன் கமுகை மற்றும்
உயர்சாதி மரமனைத்தும் கவர்ச்சி காட்டும்.
இயற்கை யெழில் அத்தனையும் இந்த நகருள்
இணைந்துள்ள காட்சியிதே இன்பமாகும்.
வியக்கின்ற மானிடரே! எழுந்து வந்து
விருப்பமுடன் மட்டு நகர் எழிலைக் காணீர்......
சேவையின் செம்மலே றஹீம்
மதியன்பன்
விளையாட்டின் பெருமையினைக் காத்து நிற்கும்
வீரர்கள் கொண்ட அணி யுனைட்டட் தன்னில்
சளையாது பணி செய்து மெழுகாய் உருகும்
சத்தியத்தின் சகோதரனே. மௌலவி றஹீமே.
உழைக்கின்ற பொருளையெல்லாம் அள்ளிக் கொட்டி
உயர்வுடனே நம் கழகம் சிறந்து ஓங்க
சளைக்காது பணி செய்தீர். உம்மை நாங்கள்
சாந்தியுடன் வாழ்த்து கின்றோம். வாழ்க. வாழ்க ...
உதை பந்து கிரிகெட்டு எல்லை என்று
ஊருக்குள் பல போட்டி நடாத்தி வைத்து
சிதைவுற்ற தமிழ் முஸ்லிம் உறவு தன்னை
சீரோங்க பல பணிகள் செய்து வைத்தாய்.
புதையுண்டு போயிருந்த விளையாட்டெல்லாம்
புத்துயிரைக் காண வழி காட்டித் தந்தாய்.
இதை யெண்ணி உமை நாங்கள் வாழ்த்து கின்றோம்.
இன்னல்கள் இல்லாமல் என்றும் வாழ்க..
பதினேழு ஆண்டு காலம் கழகத் தோடு
பாசமுடன் ஒன்றினைந்து சேவை செய்தாய்.
புதியவர்கள் வருகின்ற போது எல்லாம்
புரிந்துணர்வால் அவர்தம்மைச் சேர்த் தெடுத்தாய்.
மதியுடையார் போற்று கின்ற பண்பு கொண்டாய்.
மற்றவரை மதிக்கின்ற தன்மை கொண்டாய்.
கதிரவனாய் கழகத்தை ஒளிரச் செய்தாய்-
காலமெல்லாம் சிறந்தோங்க வாழ்த்து கின்றோம்....
இறப்பிலும் வாழும் இளமதி
மதியன்பன்
பாசத்தால் எம்மை யெல்லாம் ஆண்டு வந்த
பண்புக்குத் தலை மகனே பைசால் நீங்கள்
தேசத்தின் சொத்தாக வாழ்ந்து மக்கள்
தேவைகள் கேட்டறிந்து பணிகள் செய்தீர்.
மாசற்று வாழ்ந்ததனால் மக்கள் மன்றில்
மறுவில்லா முழு மதியாயக் காட்சி தந்தீர்;..
ஓசற்றுப் போனீரே.. உலகம் விட்டு-
ஓயாமல் அழுகின்றோம் உங்கள் பிரிவால்...
விஷ்டமெனும் கழகத்தைத் தொடக்கி வைத்து
விதவிதமாய்ப் பணி செய்து குறைகள் தீர்த்தீர்.
கஸ்டமுறும் ஏழையர்க்கு சமுர்த்தி தந்து
கவலையினைப் போக்கு தற்கு வழிகள் செய்தீர்.
இஸ்லாத்தின் வழியினிலே வாழ்வமைத்து
இல்லார்க்கு இருப்பதனை ஈந்து நின்றீர்.
புஸ்பத்தின் மெல்லினமாயப் புன்னகைத்து
புவி மீது நோகாமல் நடந்து கொண்டீர்.
செஞ்சிலுவைச் சங்கத்தில் அங்கம் வைத்துச்-
சிறப்பான சேவைகளைப் பெற்றுத் தந்தீர்.
அஞ்சாத சிங்கமென எழுந்து வந்து
அநியாய அரக்கர்களைத் தோற்கடித்தீர்.
நெஞ்சத்துள் நேர்மையினை நிறைத்து வைத்து
நேசத்தால் உளங்களினை ஆட்சி செய்தீர்.
சஞ்சலத்தில் எமையெல்லாம் ஆழ்த்தி விட்டு
சகோதரனே .. தனியாகச் சென்று விட்டீர்.
நல்ல பொருள் கடைகளிலே நிலைப் பதில்லை
நல்லவரும் அப்படித்தான் வாழ்வதில்லை.
சொல்லி வைத்த நல்மகனே சென்று விட்டீர்.
சோகத்தில் எம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டீர்.
வல்லவனே அல்லாஹ்வே உன்னிடத்தில்
வந்தமகன் பைவாலுக்கு உன்னருளை
எல்லையின்றிச் சொரிந்திடுவாய்.சுவனம் தன்னில்
என்றென்றும் வாழ வைப்பாய். பிராத்திக்கின்றோம்....
அவன் வாழ்வு பூஜ்யமே
மதியன்பன்
வரண்டிருக்கும் பூமிமேலே நெல்லைப் போட்டு
வாய்க்காலை வெட்டியங்கு நீரைப் பாய்ச்சி
திரண்டு வரும் ஆசைக்கு லஞ்சம் போல
திருமறையும் மௌலீதும் ஓதிப் பின்னே
உரமோடு வயலுக்குள் காப்போரெல்லாம்
உடல் வளைத்துக் களை பிடுங்கி வேலை செய்து
சுரந்து வரும் நெற்கதிரைக் காணுமட்டும்
சுய வேலை போல நிதம் உழைத்து நிற்பர்..
பச்சையுடை தரித்தாற்போல் பூமி மேலே
படர்ந்திருக்கும் நெற்கதிரைக் கண்டபோது
இச்சையுடன் எழுந்திடுவர் போடி மார்கள்.
இறையச்சம் அன்றோடு அற்றுப் போகும்.
கச்சையுடன் பல பேர்கள் ஒன்றாய்க் கூடி
களை வேறு நெல் வேறாய்ப் பிரித்து வைத்து
உச்சி வெயில் மறையு மட்டும் ஓடியோடி
உழைத்திடுவர் ஊதியத்தை பெரிதாய்ப் பார்த்து.
அறுவடைக்கு மெசினோடு முல்லைக் காறன்
அதிகாலை வந்திடுவான். அவனின் பின்னே..
பெறுபேறைப் பார்த்து வரும் நோக்கத்தோடு
புறப்பட்டு வந்திடுவார் போடி மார்கள்.
சுறுசுறுப்பாய் சூடடித்த நெல்லை யெல்லாம்
சுழையாகச் சாக்குக்குள் மூட்டை கட்டி
முறுவலித்த முகமுடனே மெசினில் ஏற்றி
முழுதையுமே அனுப்பிடுவார் போடிமார் இல்லம்.
வயலுக்குள் உழைத்திட்;ட கூலிக் காறன்
வாய்க்கரிசி இல்லாமல் வீட்டில் தூங்க
நயமாக உண்ட பின்னர் கட்டில் மேலே
நன்றாகத் தூங்ககிறார் போடி மார்கள்
விடிவுண்டு துணிந்து நில்லு
மதியன்பன்
கதையினைக் கேட்டேன் கண்ணே
கலக்கம் நீ கொள்ள வேண்டாம்.
சதையினைச் சுவைத்தோ ரெல்லாம்
சத்தியம் அழிந்து போவார்.
சிதைந்திட்ட உன்றன் வாழ்வு
சீராகும். கவலை வேண்டாம்.
விரும்பி நீ சென்று உடலை
விற்கவோ இல்லை உன்னை
தெருவோர நாய்கள் வந்து
தீண்டியே வேசை யாக்கி
கருவையும் சுமக்கச் சொல்லி
களங்கமும் படுத்தி விட்டார்.
இருக்கிறான் இறைவன் உன்னை
என்றுமே வாழச் செய்வான்.
படைத்தவன் பாது காப்பான்
பதியிலே நீதி காப்பான்.
உடையுடன் உணவும் தந்து
உலகிலே வாழ வைப்பான்.
இடையிலே உயிரை மாய்த்து
இறப்பதால் இலாபம் இல்லை.
விடிவிலா வாழ்வுக் கொரு நாள்
விடிவுண்டு துணிந்து நில்லு.
வந்துவிடு கண்ணே
மதியன்பன்
தொட்டிலில் பிள்ளை தூங்க
தோளிலே மானம் தூங்க
கட்டிய கணவன் பேச்சை
கருத்திலே எடுக்கா வண்ணம்
கிட்டிய ஆணை நம்பி
கிடந்ததை சுருட்டிக் கொண்டு
சிட்டாகப் பறந்து விட்டாய்.
சீதேவி சவூதி நோக்கி.
ஒட்டி நாம் இருந்த வேளை
ஒருபிடி உணவென்றாலும்
மட்டிலா மகிழ்ச்சியோடு
மனமாற உண்டு வந்தோம்.
கொட்டிடும் உன்றன் அழகு
குறைந்திடும் என்று சொல்லி
புட்டிப்பால் கொடுத்துத் தானே
பிள்ளையை வளர்த்து வந்தோம்.
இப்படி வாழ்ந்து வந்த
இல்லற வாழ்வை மீறி
எப்படி உந்தன் உள்ளம்
எடுத்தது இந்த முடிவை.
தப்பிது எந்தன் கண்ணே
தாயகம் வந்து சேரு.
உப்புடன் சோறென் றாலும்
உன்னுடன் உண்ண வேண்டும்.
கோடியாய்; உழைத்திட்டாலும்
குடும்பமாய் இல்லை யென்றால்
வாடிய செடியாய் வாழ்வு
வரண்டிடும் உணர்ந்து கொள்ளு.
தேடிய கொக்காய். இன்னும்
தேய்கிறேன் மதியைப் போல.
ஓடிநீ வந்து என்னை
ஒரு முறை அணைக்க் வேண்டும்.
உனை மறந்திடுமோ உளம்
மதியன்பன்
எண்ணிலாச் சேவையால் எங்களு} ராண்டவனே
எத்தரின் குண்டுக்குச் சரிந்தாய் - நீ
எங்களை விட்டுமே பிரிந்தாய்.
உண்மையைச் சொன்னதால் உத்தமனானவனே
ஊருக்கு நீதானே களம். - இங்கு
உனை மறந்திடுமோ உளம்.
கலவரக் காற்றினால் கதியற்ற வேளையில்
கலங்கரை விளக்காக வந்தாய் - அந்தக்
காற்றினை அடக்கியும் தந்தாய்.
உலவிடும் ஊழலை ஒளிக்கவே அன்று நீ
ஊருக்குத் தலைவனாய் ஆனாய் - அந்த
ஊழலை ஒளித்துமே போனாய்.
அந்நிய படையெமை அடக்கிய வேளையில்
அடங்காது முன்னெழுந்து சென்றாய் - அவர்
அதிகாரம் அடக்கியே வென்றாய்.
இன்னல்கள் பட்டவர், இறந்தவர். மற்றவர்
இழப்புக்கு நிவாரணம் கேட்டாய் - நீ
இருந்ததை அள்ளியே போட்டாய்.
நல்லவை என்று நீ நாடிய அனைத்தையும்
நடத்திட நித்தமும் துடித்தாய். – அவை
நயமுடன் நடத்தியும் முடித்தாய்.
இல்லாத ஏழையர் இரந்தநல் வேளையில்
இருந்ததை அள்ளியே கொடுத்தாய் - அவர்
இதயத்தை அன்பாலே எடுத்தாய்.
ஆட்சியை நடத்திய ஆளும் அணியினை
அண்டியே சேவைகள் செய்தாய். - ஊரில்
அனேகரின் அன்பையும் கொய்தாய்.
ஈட்டியாய் தீயவர் எதிர்த்த தவ் வேளையில்
இரக்கமாய் அவரினை அணைத்தாய். - தன்
இதயத்தை அவரோடு இணைத்தாய்.
ஊர்ப் பணி ஒன்றுதான் உயிர்மூச் செனக்கென
உண்மையாய் அன்றுநீ உரைத்தாய். - தன்
உடலினை மெழுகெனக் கரைத்தாய்.
கார்கால மேகமாய் கடமையை மழையென
காத்தவூர் மண்ணிலே பொழிந்தாய். - பின்னர்
கடைசியில் குண்டுக்கு அழிந்தாய்.
மத்ரசா பள்ளிகள் மருத்துவ மனையென
மங்காத சொத்துக்கள் தந்தாய். - பல
மனங்களில் மதியெனெ வந்தாய்.
சத்தியம் நேர்மையாய் அரசியல் நடத்தியே
சரித்திரம் ஒன்றினைப் படைத்தாய். - மனம்
சலித்தவர் விழிகளைத் துடைத்தாய்.
வங்கியில் நம்மவர் வைத்திட்ட நகையெல்லாம்
வஞ்சகர் எடுத்ததைப் படித்தாய். - அதை
வாங்கிட நித்தமும் துடித்தாய்.
எங்களில் ஒருவனாய் எதிலுமே சேர்ந்து நீ
இளம்பிறை யாகவே வாழந்;தாய். - பலர்
இதயத்துள் முழுமதியாகவே வீழ்ந்தாய்.
வள்ளலுக்கோர் வாழ்த்து
மதியன்பன்
உலகத்து நிகழ்வை யெல்லாம்
உள்வீட்டுக் குள்ளே அறியும்
வளமிகு கம்பி யூட்டர்
வற்றாத செல்வம். இதனை
இலங்கையில் இலங்கச் செய்யும்
இதயமே முஸ்தபா உங்கள்
அளப் பெரும் சேவை கண்டோம்.
ஆனந்தக் களிப்புக் கொண்டோம்.
செல்வந்தர் மட்டும் அல்ல.
சேரியில் வாழ்வோர் தாமும்
கல்வியில் உயர வேண்டும்.
கணணியைப் பயில வேண்டும்.
இல்லாத மாணார் கட்கும்
இலவச புலமைப் பரிசில்
அள்ளியே கொடுத்தோர் நீங்கள்.
அறிவினை வளர்த்தோர் நீங்கள்.
படித்தவர் பட்டம் பெற்றுப்
பாதையில் அலையும் போது
துடித்தது உங்கள் உள்ளம்.
துணிவுடன் அழைத்து நீங்கள்
படித்ததன் கல்விக் கேற்ப
பெற்றுமே கொடுத்தீர் வேலை.
விடிந்தது கல்விச் சாலை.
வேந்தரே வாழ்த்து கின்றோம்.
காத்தமா நகர மக்கள்
கணனியைக் கற்றுக் கொள்ள
பூத்தது இங்கோர் நிலையம்.
பூரிப்பில் லயித்துப் போனோம்.
ஏத்ததோர் கணனிக் கூடம்
எங்களுக் காக ஈந்த
ஆத்துமா உம்மை நாங்கள்
அணைத்துமே வாழ்த்துகின்றோம்.
ஓராண்டைப் பூர்த்தி செய்யும்
ஒப்பற்ற எங்கள் கூடம்
பாராட்டைப் பெற்றுக் கொள்ளப்
பணிபல செய்தீர் நீங்கள்.
நீரோட்டம் போல நின்று
நிழலாக உழைத்தோ ரெல்லாம
சீரோங்க வாழ்த்து கின்றார்.
சிறப்போடு வாழ்க. வாழ்க.
ஏழையர்க் குதவும் எங்கள்
ஏந்தலே உங்கள் சேவை
வாழையாய் வந்து எங்கள்
வம்சத்தைச் சேர வேண்டும்.
நாளைய சமூகம் உங்கள்
நன்றியில் வாழ வேண்டும்.
நீளமாய் ஆயுள் வேண்டி
நீட்டி னோம் கைகள் வாழ்க.
மறுவிலா மதியே மஹ்ரூப்
காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த அல்ஹாஜ் ஆ மஹறூப் டீயு ளுடுழுளு டுடுடீ அவர்கள் கடல் கடந்த சேவைக்காக தெரிவு செய்யப்பட்டு டோகா கட்டார் நாடு செல்வதையொட்டி காத்தான்குடி பலநோக்குக் கூட்டுறவு சந்கத்தால் 08-10-1998 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட பாராட்டு வைபவ நிகழ்ச்சியின்போது வாசித்து வழங்கப்பட்ட வாழ்த்துப்பா..
மதியன்பன்
கற்றோர்கள் வாழுகின்ற காத்தான் குடியின்
காவியத்து நாயகனே மஹ்ருப் நீங்கள்
பெற்றுள்ள பதவியினை யெண்ணி யெண்ணிப்
பேரின்பம் அடைகின்றோம். வல்ல அல்லாஹ்
இற்றரையில இன்னும் நற் பதவி பெற்று
இனபேதம் இல்லாமற் சேவை செய்யும்
பொற்காலம் ஒன்றிற்காய் வாழ்த்து கின்றோம்.
புகழோடு நீடுளி வாழ்க. வாழ்க.
கடல் கடந்த சேவைக்காய் கட்டார் தேசம்
காலெடுத்து வைத்துள்ளீர். இலங்கை நாட்டில்
உடனிருந்த வேளையிலே பணிகள் செய்து
ஊருக்காய் பெருமையினை சேர்த்துத் தந்தீர்.
திடமான உளத்தோடு பொலிசார் படையில்
திறம்படவே கடமையினைச் செய்து நின்றீர்.
சுடரொளிரும் கல்வியினைப் போதிக்கின்ற
தூயபணி அத்னையும் இங்கே செய்தீர்.
சங்கங்கள் பலவற்றை நடத்தி நல்ல
சமூகத்துப் பணி செய்து வெற்றி கண்டீர்.
சிங்ளவர் தமிழ் முஸ்லிம் பேதம் இன்றி
சிறப்பாக அடுத்தவரின் நலனும் காத்தீர்.
இங்கிதமாய்ப் பணி செய்து உயர்வு பெற்ற
இளமதியே மஹ்றூபே சமூகத்துள்ளே
பங்கயமாய் சுடர்விட்டு ஒளிர வேண்டும்.
பலநோக்குச் சங்கத்தால் வாழ்த்துகின்றோம்.
பெற்றுள்ள பதவியினை வைத்துக் கொண்டு
பிறந்தகத்தின் பெருமைக்காய் உழைக்க வேண்டும்.
வற்றாத இன்பங்கள் பெற்று வாழ்வில்
வழமோடு வாழ நாம் வாழ்த்து கின்றோம்.
என்னதான் செய்கின்றோம்..?
மதியன்பன்
ஆண்டுகள் மாறும் போது
அவணியில் மீழும் இந்த
மாண்புறு நோன்பு தன்னை
மாந்தர் நாம் நோக்கின்றோமா.?
தீன்கூறும் நல்ல வற்றை
திறம்படச் செய்கின்றோமா.?
வீண் பேச்சு விளையாட்டென்று
வீணாகக் கழிக்கின்றோமா..?
குணநபி நாதருக்கு
குர்ஆனோ வந்த மாதம்.
உணவிலா ஏழையர்க்கு
உதவிகள் செய்யும் மாதம்.
பணமுளோர் வறியோருக்கு
பகிர்ந் தளிக்கின்ற மாதம்.
அனலுடன் குளிரும் தாங்கி
அமல்களோ செய்யும் மாதம்.
தறாவீஹ் தொழுகை தன்னை
தவறாது தொழுகின்றோமா..?
இராக்காலம் விழித் திருந்து
இறைவனைத் துதிக்கின்றோமா..?
அனாதைகள் மீது நல்ல
அன்பினைச் சொரிகின்றோமா..?
என்னதான் செய்கின்றோம் நாம்.?
எண்ணி நல் அமலைச் செய்வோம்.
வெண்ணிலவு மங்கை
மதியன்பன்
வதனத்தில் வெண்ணிலவை வரவளைத்து
அதரத்தில் மைவைத்த மாது - சிதறுகின்ற
முத்தாக ஒளிவீசும் பற்கள்
பித்தாக்கும் ஆணினத்தை என்றும்.
நாவுக்குள் குயிலினத்தை குடியமர்த்தி
பாவுக்குள் கருவான பாவை - பூவுக்குள்
தேனாக இனிக்கின்ற சொற்கள்.
தானாக மயங்கிடுவர் ஆண்கள்.
கொடிமரத்தை இடையினிலே சுற்றியிங்கு
அடிமரமாய் நிற்கின்ற அரிவை - விடிகின்ற
பொழுதைப் போல் நிறமுடைய மங்கை
விழுந்திடுவார் ஆடவர்கள் அங்கே.
அன்னத்தின் நடைபயின்று செல்லும்
பெண்ணினத்துப் பேரழகுப் பேதை - கன்னத்தில்
தோட்டத்துக் கனியொன்றை வைத்து
ஊட்டத்தைத் தந்திடுவாள் இங்கே..
மலையொத்த முலையிரண்டு கண்டு
சிலையாக நின்றிடுவர் ஆண்கள் - அலையாக
பேரெழுந்து வருகின்ற உணர்ச்சி
தீராது அவளின்றி அதிர்ச்சி..
நாட்டின் இன்றைய நிலை
மதியன்பன்
சிறீ லங்கா என்னும் இந்த
சிறப்புறு நாடு இப்போ
வெறி லங்கா வாகிப் போச்சி
விளை நிலம் சுடு காடாச்சி
ஒருவரை ஒருவர் வெட்டி
உதிரத்தை ஓட்டுகின்ற
பெரும்பணி நிறைய லாச்சி
பேரின்பம் செத்துப் போச்சி.
சிங்களவர் தமிழர் முஸ்லிம்
சிறப்புடன் வாழ்ந்து வந்த
மங்களமாம் நாட்கள் இப்போ
மருந்துக்கும் இல்லை யாச்சி.
பிட்டுடன் தேங்காய்ப் பூவாய்
பிரித்திட முடியா தென்ற
ஒட்டிய சமூகம் இப்போ
ஒதுங்கி வாழ் நிலையிலாச்சி.
கலையுடன் கலாச்சாரங்கள்
களிப்புடன் நடந்த நாட்டில்
கொலையுடன் விபச்சாரங்கள்
குதூகல மாகிப் போச்சி.
விலைகளோ விமானம் போல
விண்ணையும் முட்டியாச்சி.
நிலை கண்ட மாந்தர் உள்ளம்
நிற்கதி யாகிப் போச்சி.
இந்நிலை மாற வேண்டும்
இலங்கை வாழ் மக்க ளெல்லாம்
முன்னரைப் போல நித்தம்
மூவேளை உண்ண வேண்டும்.
இன்னல்கள் இல்லா வாழ்வு
இல்லத்துள் ஓங்க வேண்டும்.
கண்ணனும் காசிம் சில்வா
கைகோர்த்து வாழ வேண்டும்.
ஈழத் தாய் ஈன் றெடுத்த
இனமெல்லாம் ஓர் இனம்தான்
நாளத்தில் ஓடுகின்ற
நல் ரெத்தம் ஓர் நிறந்தான்.
ஓர்தாயின் பிள்ளை போன்று
ஒற்றுமையாய் வாழ்ந்து என்றும்
போர் முறைக்கு ஆப்பு வைப்போம்
புத்துலகைப் படைத் தெடுப்போம்.
ஒற்றுமை என்னும் கயிற்றை
ஒன்றென நாங்க ளெல்லாம்
பற்றிட வேண்டும் அப்போ
பாழாகிப் போன இந்த
வற்றிய வளங்க ளெல்லாம்
வனப்புடன் பொலிவு காணும்.
தொற்றிய துவேசப் பேயும்
தூரவே ஓடிப் போகும்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச இலக்கிய விழா நிகழ்ச்சியில் பாலர் பாடசாலைகளுக்கிடையிலான அபிநயப் பாடல் போட்டியில் முதலாம் இடம் பெற்ற பாடல்
பாடல் அபிநயம்: மில்லத் பாலர் பாடசாலை.
மதியன்பன்
வயலை நோக்கிப் போகிறோம்.
வளைந்து வளைந்து போகிறோம்
துயரை நீக்கப் போகிறோம்.
துள்ளி துள்ளி போகிறோம். - நாங்கள்
துள்ளி துள்ளி போகிறோம்.
புல்லை அங்கே புடுங்கிறோம்
புதர்களையும் உடைக்கிறோம்.
நெல்லை அங்கே தூவுறோம்
நீரைப் பாய்ச்சி மகிழ்கிறோம். - நாங்கள்
நீரைப் பாய்ச்சி மகிழ்கிறோம்.
குருவி தன்னைத் துரத்துறோம்
குரங்குகளை விரட்டுறோம்
அருவியிலே குளிக்கிறோம்.
ஆடைகளை மாற்றுறோம். - நாங்கள்
ஆடைகளை மாற்றுறோம்.
நெல்லு முற்றிக் கதிராகும்
நிலையைக் கண்டு சிரிக்கிறோம்.
அள்ளிப் பிடித்து அவற்றினை
அரிந்து கையில் எடுக்கிறோம். - நாங்கள்
அரிந்து கையில் எடுக்கிறோம்
அரிந்த நெல்லைக் குவிக்கிறோம்.
அடித்து வேறாய் ஆக்குறோம்.
விரிந்த படங்கில் வைத்ததை
வீடு கொண்டு போகிறோம். - நாங்கள்
வீடு கொண்டு போகிறோம்.
நெல்லை அடுப்பில் வைக்கிறோம்.
நெருப்பில் அதனை அவிக்கிறோம்.
கொல்லைப் புறத்து வெயிலிலே
கொட்டிக் காய வைக்கிறோம். - நாங்கள்
கொட்டிக் காய வைக்கிறோம்.
உரலில் நெல்லைக் கொட்டுறோம்
உலக்கை கொண்டு குத்துறோம்.
அரிசி ஆன பின்னாலே
அதனைச் சோறாய் ஆக்குறோம். - நாங்கள்
அதனைச் சோறாய் ஆக்குறோம்.
சோற்றை ஒன்றாய் தின்கிறோம்.
சோர்வை யெல்லாம் களைகிறோம்.
பேறாம் இறைவன் அருளுக்கு
நன்றி சொல்லித் தூங்கிறோம். - நாங்கள்
நன்றி சொல்லித் தூங்கிறோம்..
போதையின் தீது கேளீர்
மதியன்பன்
கஞ்சாவை அபினை உதடு
காதலித் திடுதல் தீதே...
நெஞ்சாற இதை யறிந்தும்
நித்தமும் அதனுள் வீழ்ந்து
நஞ்சினை உடம்பில் ஏற்றி
நாசமாய்ப் போகின்றாயே...
அஞ்சினேன் கண்டு. போதை
அணிகலன் வேண்டாம் தோழா!
பீடியை சிகரட் தன்னை
பிரியமாய் ஊதித் தள்ளி
தேடினாய் நோயை. இனியும்
தீயுடன் விளையாடாதே...
நாடியே தளர்ந்து உடலம்
நலிந்ததைக் கண்டு நாளும்
அடியே போனேன் அன்பா
ஆகையால் போதை வேண்டாம்
படிப் படி யாகத் தூளை
பாவித்து வந்தால் நீயும்
பொடிப் பொடியாகி ஓர் நாள்
பொசுங்கியே போவாய், கண்ணீர்
வடித்திடும் குடும்பம் தன்னை
வாழ்விலே நூறு கண்டேன்
துடிக்கிறேன் உன்னைக் கண்டு
தோழனே போதை வேண்டாம்
லேகியம் என்ற சாத்தான்
லேசிலே போக மாட்டான்
வேகியே உடம்பு நூலாய்
வெந்திடும், நடக்கும் பிணமாய்
ஆகியே போவாய் நாளும்
ஆடியே நடந்து செல்வாய்
நோகுதே நெஞ்சம் தோழா!
நோய் தரும் போதை வேண்டாம்.
மதுவெனும் சாராயத்தை
மாந்தியே நாளும் ஊர்க்குப்
புதினமே காட்டுகின்றாய்
புழுவெனத் தாழ்ந்து போனாய்
மதுவினைத் தொட்ட தாலே
மதியினை இழந்து விட்டாய்
இதுபெரும் தீது தோழா!
இன்னுமா போதை? வேண்டாம்
மழையது பெய்தால் கூட
மதுக்கடை ஓரம் நிற்றல்
பிழையெனச் சொல்வேன். போதை
பேய்களை விரட்டி வாழ்வாய்
களைகளை விட்டு வைத்தால்
காணியில் அறுவடைக்கு
பிழையது வருமே, போதைப்
பழக்கமெல்லாமே வீண்தான்
போதையின் தீதையெல்லாம்
போதனை செய்தேன் பாவில்
ஆதலால் கேட்போ ரெல்லாம்
அடுத்தவர் காதில் இதனை
உதிட வேண்டும் - இந்த
உலகமே உய்ய வேண்டும் .
முழு மதியின் முற்றுப் புள்ளி
மதியன்பன்
காயித் மில்லத் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் - அவர்
காலமான செய்தி கேட்டு கவலையில் ஆழ்ந்தோம்.
பாவி மனம் கதறியது துடித்து அழுதது - இந்த
பாருலகே கண்ணீரில் மிதந்தது துடித்தது .
காத்த நகர் மக்களுக்கு மதியென வந்தார் - நம்
கல்புகளில் நீங்காத ஒளியினைத் தந்தாh.;
பூத்த புகழ் கொண்டு இந்த பூமியில் வாழ்ந்தார் - இவர்
புவி மறைந்து போனதினால் புண்பட்டு போனோம்.
முஸ்லிம் சமூகம் கல்வியிலே பின் நின்ற வேளை!
முழு மூச்சாக முயன்றுழைத்து முன்னேறே வைத்தார்
இஸ்லாத்தின் உடையினிலே பள்ளிக்குச் செல்ல - இளம்
பெண்களுக்கு அனுமதியை அவர் பெற்றுக் கெடுத்தார்.
ஈழமணித் திருநாட்டு வானொலி தன்னில்
இன்றொலிக்கும் முஸ்லிம் சேவை அவர் பெற்றுத் தந்தார்
தாழமுக்கம், சூறாவளி அடித்திட்ட வேளை - அவர்
தயங்காது ஓடிவந்து பணிபல செய்தார்.
கபுறடியில் அன்னாரை வைத்துமே நாங்கள்
காசு கொட்டி நிறுத்தெடுத்தோம் தராசிலே வைத்து
நிறுத்த காசை அன்னார்கள் கல்விக்கு தந்தார்
நிமிர்ந்து நிற்கும் மில்லத் கூடம் அதற்கிங்கு சாட்சி.
இறக்கும் வரை சமூகம் சமூகம் என்றதனாலே - அவர்
இருக்கும் போதே மில்லத் எனும் பட்டத்தை பெற்றார்.
உறக்கமின்றி விழித்திருந்து சேவைகள் செய்தார் - அவர்
உணர்வை யெல்லாம் சமூகத்திற்கு அர்ப்பணம் செய்தார்.
வல்ல நாயன் அன்னாரின் பிழைகளைப் பொறுப்பான்
வளம் நிறைந்த சொர்க்கத்தினை அவருக்குக் கொடுப்பான்.
இரு கரமும் ஏந்தி நாங்கள் இறையை வேண்டினோhம்
இறைவா எம் பிராத்தனையை ஏற்றருள் புரிவாய்.....
அழகு நகை தேவையில்லை
மதியன்பன்
கண்களில் மையைப் பூசி
காலிலே நடையன் போட்டு
பின்னிய கூந்த லுக்கு
பிறை போல சட்டி வைத்து
முன்னிதழ் ஒவ் வொன்றுக்கும்
முளுச் சாயம் சிவப்புத் தீட்டி
அன்னமாய்ப் போகும் பெண்ணே
அழகல்ல அலங்கா ரங்கள்.
கொடியிடை என்று சொல்லி
கொடிபோல சாரி கட்டி
அடிவயிற்றைக் காட்டு கின்றாய்.
அத்தோடு நகங்க ளுக்கும்
வடிசாயம் தீட்டு கின்றாய்.
வட்டமாய் நெற்றி மேலே
மடிவிரல் பொட்டு வைத்தால்
மாறுமோ உன்றன் தோற்றம் ?.
கார்குழல் என்று சொல்லி
கடைப் பொருள் வாங்கி வைத்து
மார்பினை உயர்த்திக் காட்ட
மறை பொருள் அதிலே சேர்த்து
நார் எனத் தொங்கும் மின்னி
நாய் கட்டும் சங்கிலிகள்
சேர்த்திடல் அழகு அல்ல.
சிவந்த உன் மேனிமேலே...
பெண்ணவள் என்று சொன்னால்
பிறப்பிலே அவள்தான் அழகு.
பொன்னகை போட்டாலென்ன..
புது உடை தரித்தாலென்ன..
என்னதான் பூசிட்டாலும
எடுபடா இயற்கை யோடு.
பெண்களே அலங்காரங்கள்
போதுமினி விட்டி டுங்கள்.
சுறுட்டித் தள்ளிய சுனாமி
மதியன்பன்
பின்னோக்கிப் போனாயே பெருங்கடலே - விழி
பிதுங்காமல் வேடிக்கை பார்த்தோமே
முன்னோக்கிப் பாய்ந்தாயே பேய்போலே - நாம்
மூழ்கிவிட்டோம் தண்ணீரில் மீன்போல
இல்லமெல்லாம் இல்லையென்று ஆச்சே - எங்க
இடுப்புத் துணி தண்ணீரோடு போச்சே.
பல்பேரும் விட்டாரே மூச்சை - நெஞ்சு
பதறிடுமே சொன்னால் அப்பேச்சை
நிலமெல்லாம் பாளமென வெடிக்க - அன்று
நிலை கெட்டு எல்லோரும் துடிக்க
கடல்நீரை எல்லோரும் குடிக்க - இந்தக்
காவியத்தை எப்படி நான் படிக்க
எல்லோரும் தறி கெட்டு ஓட - சிலர்
ஸ்கூலில்; பள்ளிகளில் கூட
அகதி எனும் பட்டம் வந்து சூட - இந்த
அவலங்களை எப்படி நான்; பாட
செழிப்பான கடலோரம் சிதைய - எங்க
செல்வங்கள் கடலோடு புதைய
வேதனையை பாடுகிறோம் கதையாய் - கேட்டால்
வெந்திடுமே உங்களது இதயம்.
கூடார வாழ்க்கையிலே வந்து - குடி
நீர்கூட இல்லாமல் வெந்து
அடிபட்டு திரும்பி வரும் பந்து - போல
ஆனதனால் அழுகின்றோம் நொந்து
நிவாரணத்தைத் தேடித் தேடி அலைந்தோம் - நாங்க
நிம்மதியே கெட்டுப் போய் குலைந்தோம்
எறிபட்ட தேன் கூடாய்க் கலைந்தோம் - நாங்க
எப்படியோ எங்கெங்கோ தொலைந்தோம்.
ஊரிலுள்ள தலைவர்களே போங்க - பல
உதவிகளைப் பெற்றுவந்து தாங்க
ஒலமிடும் அவலங்கள்; நீங்க - உதவி
செய்திடுக எம் வாழ்வு ஓங்க
செல்வந்தர் எமைக் கண்டு உருக - பல
சிறப்பான உதவிகளும் பெருக
அல்லாஹ்வே உனதருளைத் தருக - இனி
என்னாளும் இன்பங்கள் வருக.
கல்விக்கு உயிர்தந்த காவியத் தலைவன் நீ
மதியன்பன்
அழிவில்லாச் செல்வ மிந்தக் கல்விக்காக
அயராது உழைத்துவரும் சமூகத் தொண்டன்
விழியெங்கள் ஹிஸ்புல்லாஹ். இன்று நீங்கள்
வெற்றி வாகை சூடி வந்தீர். உங்கள் வரவால்
ஒளிகாணும் நம் சமூகம். ஒரு போதும் தோற்றிடாது.
ஒப்பில்லாத் தலைமகனே! - உன்னை நாங்கள்
களிப்போடு வாழ்த்துகின்றோம்.! வல்ல அல்லாஹ்
கருணையினைப் பெற்று நீங்கள் என்றும் வாழ்க!
பாடசாலை மாணவர்கள் வெளியில் சென்று
பல்லறிவும் பெற்றுவர பஸ்ஸூம் தந்தாய்!;
கோடான கோடி ரூபா கொண்டு வந்து
குழந்தைகள் கல்விக்காய் பணிகள் செய்தாய்!
வீடிருந்து படிக்காத மாணவர் தம்மின்
விருப்பத்திற் கிசைவாக ஹொஸ்டல் தந்தாய்!
ஏடிருக்கும் கல்விதனைக் கற்றுக் கொள்ள
எழிலான நூலகமும் அமைத்துத் தந்தாய்.!;
சரியான வளங்களின்றி இருந்த எங்கள்
சரித்திரத்துப் பாடசாலை, இதனை நீங்கள்
விரிவாக்க எண்ணினீர்கள். அரசாங்கத்தின்
விருப்போடு தேசிய பாடசாலை யாக்கித் தந்தீர்!
அரிதான கட்டிடங்கள் இன்னும் இன்னும்
ஆய்வு கூடம் என்று பல அமைத்துத் தந்தீர்!
மரியாதை வைத்து நாங்கள் வாழ்த்து கின்றோம்!
மாமைந்தா ஹிஸ்புல்லாஹ் என்றும் வாழ்க.!
கல்வி கற்கும் மாணவரின் சுகாதாரத்தை
காலடிக்குக் கொண்டுவர சித்தம் கொண்டீர்.!
பல்சிகிச்சை நிலைய மொன்றை அமைத்துத் தந்து
படிப்போடு சுகாதாரம் வளரச் செய்தீர்.!
கல்லூரி வளாகத்தின் தேவைக்கேற்ப
கட்டங்கள் பலமாடி அமைத்துத் தந்தீர்!
எல்லையிலாச் சேவைகளைச் செய்த மகன்
என்றும் நீ வாழ்கவென்று வாழத்துகின்றோம்!
வளமாக வாழ வாழ்த்தும் : -
அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மற்றும் பெற்றோர்கள்.
கவிதை – மதியன்பன் - 01.06.2010
வல்ல அல்லாஹ் உன்னருளைச் சொரிவாயே....
வழமுடன் வாழ வாழ்த்துகின்றோம்
மதியன்பன்
பல்வளமும் சேர்ந்திலங்கும் எங்களுராம்
பாலமுனை எழிலிந்த கிராமம் தன்னில்
நல்லபணி செய்துழைத்து ஓடாய்ப் போன
நற்குணத்து நாயகனே! அப்துல் மஜீதே..!
கல்விதனை ஊட்டுவதில் இருபதாண்டு
காத்திரமாய் பணி செய்து ஓய்வு பெற்றீர்.
நல்லபணி செய்தவரே உங்களை நாம்
நன்றியுடன் வாழ்த்துகிறோம். வாழ்க!வாழ்க!
பள்ளியிலே பல்லாண்டு பேஸ் இமாமாய்
பணி செய்யும் காலத்தில் முஅல்லிமாக
துள்ளிவரும் சிறாருக்கு குர்ஆன் தன்னை
துல்லியமாய் ஓதவழி காட்டி நின்றீர்.
உள்ளவற்றை அடுத்தவர்க்குப் பங்கு வைத்து
உயர்ந்த பணி ஊருக்குள் காட்டி வைத்தீர்.
கள்ளமில்லா உளத்தோடு என்றும் நீங்கள்
காத்திரமாய் பணி செய்து வெற்றி கண்டீர்.
சேவைசெயும் காலத்தில் தூய்மையோடு
தேடிவரும் ஆட்களினைப் பாசத்தோடு
நேயமுடன் அரவணைத்து பணிகள் செய்தீர்!
நேர்மையினை விளக்காக ஏந்திக் கொண்டீர்.!
ஓயாமல் ஊரெங்கும் ஓடி யோடி
உதவிகளை எராளம் செய்து நின்றீர்!
தேயாது உங்களது சேவை என்றும்
தேடி வரும் நன்மைகள் கோடி உண்டு.
நல்ல பணி செய்தவரே! அப்துல் மஜீதே!
நலமோடு நீண்ட காலம் நீங்கள் வாழ-
வல்ல இறை உங்களுக்கு நல்ல நல்ல
வளங்களினை வாழ்வினிலே வழங்க வேண்டும்.
தொல்லை தரும் நோய் நொடிகள் ஏதுமின்றி
தூய இறை அருள் வந்து சூழ வேண்டும்.
எல்லையிலா இறையோனை வேண்டுகின்றோம்
என்றுமிங்கே நலமுடனே வாழ்க! வாழ்க!
சிறகடிக்கும் அன்னங்கள் ஏங்கும் -அவள்
சிரித்திட்டால் முத்தும் கடன் வாங்கும்.
மன்னவனை எதிர் பார்க்கும் மங்கையவள் மார்பதிலே
மதிப்புள்ள கனியிரண்டு தூங்கும் - மனதில்
மச்சானின் எண்ணங்கள் ஓங்கும்.
வளைகின்ற பாம்பெனவே வஞ்சியவள் கூந்தலெழில்
வற்றாத வாசமதை வீசும்.- அதை
வாங்குவதை நாடும் என் நாசும்.
மழை மேகம் கண்டாடும் மயிலான அவளழகில்
மயங்கி யெந்தன் விழி யிரண்டும் கூசும்.- புது
மௌன மொழி வந்தங்கு பேசும்.
ஆடி வரும் தென்றலது அவளாடை தூக்குகையில்
அங்கங்கள் தங்கமென மின்னும்.-அதை
அப்படியே என் விழிகள் தின்னும்.
ஓடி வரும் மதிகூட ஒய்யாரி முக அழகின்
ஒளிகண்டு மேகத்துள் பின்னும்.- இனி
ஒரு போதும் உறங்காதென் கண்ணும்.
செவ்வாழைத் தொடையழகும் செதுக்காத இடையழகும்
சிந்து கவி பாட எனை வைக்கும்- அவள்
சிந்தனையால் என் மனது தைக்கும்
கொவ்வை யிதழ் குவித்தென்னை கோதையவள் பார்க்கையிலே
கொங்கையினை என் கண்கள் மொய்க்கும் -இக்
குவலயமே என் உளத்துள் கைக்கும்.
வஞ்சி நீ வர வேண்டும்
மதியன்பன்
கன்னி யுனைக் காணாமல் காளை நெஞ்சம்
கலங்குதடி கல்விழுந்த நீரைப் போல.
எண்ணி யுனை இரவு பகல் தூக்கம் இல்லை
ஏங்குகிறேன் ஏரியிலே கொக்காய் இன்று.
தண்ணியிலா மீனாகத் தவிக்கும் என்னை
தனிமையிலே விட்டு வைக்க உனக்கேன் ஆசை?
கண்மணியே காத்திருப்பேன் உனக்காய் இன்று.
கட்டாயம் வந்தென்னை அணைக்க வேண்டும்.
அந்தி வெயில் சாய்கின்ற நேரம் பார்த்து
அன்னமென நீ நடந்து போகும் வேளை
சந்திரனா போவதென்று வியப்புக் கொண்டு
சந்தேகம் தீர்ப்பதற்காய் பின்னால் வந்து
உந்தனது அழகினிலே சொக்கிப் பின்னே.
உள்ளத்தை உன்னிடத்தில் ஒப்புவித்தேன்.
எந்தனது உள்ளத்தை கொள்ளை கொண்ட
இளங்கிளியே எனை வந்து அணைக்க வேண்டும்.
பள்ளி செல்லும் வேளையியே உந்தன் பாதம்
படுகின்ற இடமெல்லாம் தொட்டுக் கொஞ்சி
உள்ளத்தில் உனைவைத்துப் பூஜை செய்து
உத்தமியே நானுந்தன் பக்தன் ஆனேன்.
கள்ளமிலா என் உள்ளம் உன்னைத் தேடி
கருமுகிலாய் ஓடுதடி அங்கும் இங்கும்.
வெள்ளை மனம் கொண்டவளே ஓடி வந்து
வெந்திருக்கும் என்னை நீ அணைக்க வேண்டும.
தேர்தல் காலத் தேரைகள்
மதியன்பன்
தேர்தல் எனும் வலைக்குள்ளே பின்னப் பட்டு
தேவையில்லாப் பிரச்சனையை அள்ளிப் போட்டு
சேர்ந்திருந்த உறவையெல்லாம் ஒதுக்கி விட்டு
சேர்த்து வைத்த பொருளையெல்லாம் அள்ளிக் கொட்டி
ஆர்வமுடன் செய்து வந்த தொழிலை விட்டு
ஆசையுடன் வேட்பாளர் பின்னே சென்று
சீர் குலைந்து போகின்ற மாந்தர் தன்னை
சிந்தித்துப் பார்க்கையிலே இதயம் நோகும்.
வீதி யெல்லாம் வேட்பாளர் சின்னம் கீறி
வீரமுடன் எதிர்ப்பவரை வெட்டிக் குத்தி
ஊதியமாய் சில்லறையைப் பெற்றுக் கொண்டு
ஊருக்குள் ஆங்காங்கு கூட்டம் வைத்துப்
பீதியுடன இ;ராப் பொழுதைக் கழித்துக் கொண்டு
பித்தாகி வேட்பாளர் பின்னே சென்று
நாதியற்றுத் திரிகின்ற மாந்தர் தன்னை
நமக்குள்ளே காணுகையில் இதயம் நோகும்.
வேட்பாளர் சொல்லுகின்ற கருத்தையெல்லாம்
வேதமெனச் செவி சாய்த்து கைகள் தட்டி
கூட்டத்தார் முன்னாலே கோசம் போட்டு
கோடாரிக் காம்புகளாய் மாறியிங்கே
வீட்டிற்கும் நாட்டிற்கும் துரோகம் செய்து
வீணாக வாழ்க்கையினைக் கழித்துக் கொண்டு
மீட்சியின்றித் திரிகின்ற மாந்தர் தன்னை
மீண்டும் இங்கே காணுகையில் இதயம் நோகும்.
சுவனமடி உனது மடி சோதி
மதியன்பன்
புலராத பொழுதினிலே பூமகளே உனது மனை
தளராது வருவேனடி தனியே - களவாக
ஒருவருமே காணாத ஓசையிலா வேளையிலே
இருவருமே ஓடிடலா மினி.
புனிதமுறு காதலினை புரியாத மனிதரிடை
இனி வாழ முடியாது எழிலே - தனியாக
குடி யேறி வாழுவதே குணமாகு மெனமனது
அடி நாத மோதுதடி அறி.
உனதழகை நானெழுத உவமையிலை மொழிகளிலே
கனவுலகே காணாத கனியே. - மனமுருகி
இவனடியே சரணமென இளமயிலே வருவாயா
சுவனமடி உனது மடி சோதி.
மாறாத நினைவுகளை மனமிதுவோ களையவிலை
ஆறாக பெருகுதடி அவையே.- சேராது
வேறாகி வாழுவதா..வேதனையே மீதமடி
கூறாதோ நமது கதை கோடி
மாவிலையோ தோரணமோ மாலைகளோ தேவையிலை
தேவியினி திருமணமே தேவை - வாவியிலே
கரை தேடு மோடமென காளையிவ னாகு முனே
விரைவாக கூறிவிடு விடை.
குறிப்பு:
மெய்யெழுத்துக்கள் எதுவுமே இல்லாமல் எழுதப்பட்ட கவிதை.
மழை வேண்டியோர் மகஜர்
மதியன்பன்
அனல் வெப்பம் தாங்காது உள்ளம் நொந்து
அழுவதற்கு விழிகளிலே நீரும் இன்றி
புனல் இங்கு வேண்டுமெனக் கைகள் ஏந்திப்
புலம்புகிறோம் இறையோனே இந்த மண்ணின்
கனல் தெறிக்கும் நிலை தன்னை மாற்றுதற்கு
கார்மேகம் மழை தன்னைப் பொழியச் செய்வாய்.
மணல்மீது வாழுதற்கு முடியா நிலையில்
மாறியுள்ள எங்களது நிலையைக் கேளாய்..
மழையில்லாக் காரணத்தால் மண்ணின் மேலே
மலர்ந்திருந்த மரம் செடியும் காய்ந்து போச்சி.
முளைத்திருந்த நெற்கதிரும் அனலா லின்று
முற்றாகத் தரையோடு கருகிப் போச்சி.
வளைந்தோடும் நதிகூட வற்றி மண்ணின்
வளமெல்லாம் மழையின்றிப் பாழாய்ப் போச்சி.
குலைபோட்ட வாழையுடன் கமுகை தென்னை
குற்றுயிராய் அத்தனையும் செத்துப் போச்சி.
வருபுனலின் வருகையிலாக் காரணத்தால்
வருகின்ற புழுதியினால் வருத்தம் வேறு.
பெருகிவரும் நீரில்லை என்றதாலே...
பெறுமதியாம் மின்சார வெட்டும் வேறு.
கருமேகம் வந்தாலும் காற்று வந்து
கலைப்பதனால் எங்களுக்குள் கவலை வேறு.
உருகிப் போய் உன்னிடத்தில் வேண்டுகின்றோம்.
உன்னருளாம் மழை தன்னை பொழியச் செய்வாய்.
எயிட்ஸ் எனும் எமன்
மதியன்பன்
எயிட்ஸ் எனும் நோயாலே உலகம் இன்று
எதிர் நோக்கும் பிரச்சனைகள் கொஞம் அல்ல.
உயிருக்கு சவாலான இந்நோய் இன்று
உருவெடுத்து வந்ததனால் விஞ்ஞானத்தின்
வைத்தியமும் இந்நோயை ஒளிப்பதற்கு
வழியின்றித் தவிக்கிறது மக்களெல்லாம்
பைத்தியமாய் அலைகின்றார். இந்நோய் எம்மில்
படராது காத்திட வேண்டும் என்றால்...
தாரமுடன் உடலுறவைக் குறைக்க வேண்டும்.
தன்னினத்துச் சேர்க்கையினைத் தவிர்க்க வேண்டும்.
காரமான மதுவகையை ஒழிக்க வேண்டும்.
கள்ளப் பெண் உடலுறவை நிறுத்த வேண்டும்.
பூரணமாய் புகை பிடித்தல் மறக்க வேண்டும்.
பூதலத்தில் இத்தனையும் விட்டு விட்டால்
சாராது எயிட்ஸ் என்னும் இந்த நோய்தான்.
சத்தியமாய் இந்நோய்தான் உடலில் வந்தால்
கண் மங்கும் கைகால்கள் சோர்ந்து போகும்.
காய்ச்சலுடன் மூட்டுக்கள் வலிப்புக்காணும்.
உண்ணிபோல் ஏதேதோ உடலில் தோன்றும்.
உள்ளுறுப்பு அத்தனையும் உருகிப் போகும்.
தன்னடையின் வேகத்தில் தளர்வு காணும்.
தாகத்தின் மேலீட்டால் மயக்கம் தோன்றும்.
உண்மையிலே இத்தனையும் வந்து விட்டால்
உயிருக்கு ஆபத்து உணந்து கொள்வீர்..
யாருக்குப் பெருநாள்
மதியன்பன்
முப்பது நாட்கள் நோன்பை
முழுமையாய் நோற்றதோடு
தப்பேதும் செய்யா வண்ணம்
தனியிறை அருளை வேண்டி
வெப்பமும் குளிரும் தாங்கி
விருப்பமாய் வணக்கம் செய்து
இப்படி வாழ்ந்தோ ருக்கே
இந்தநாள் பெருநாள் ஆகும்.
பொய்யுடன் களவும். சூதும்
பொல்லாத தீமை எல்லாம்
ஐயகோ வேண்டாம் என்று
அல்லாஹ்வின் அருளை வேண்டி
கையிலே இருந்த வற்றை
களிப்புடன் ஏழைக் கீந்து
வையகம் வாழ்ந்தோ ருக்கே
வந்தநாள் பெருநாளாகும்.
அடுத்தவன் பசித்தபோது
அவன்பசி தீர்த்து வாழ்ந்து
குடும்பத்து வறுமை தன்னை
குறைத்திட வழிகள் செய்து
நடுநிசி எழுந்து நின்று
நாயனைத் தொழுது வேண்டி
கடுமையாய் உழைத் தோருக்கே
களிப்புறப் பெருநாள் ஆகும்.
எல்லாம் இன்ப மயம்
மதியன்பன்
மொட்டவிழ்த்த முல்லை யென முறுவலிக்கும் மங்கையரின்
கட்டுடலைக் காண்பதிலே காளையர்க்குத் தனி இன்பம்.
வெட்டவெளிக் காட்சியென வட்டமிடும் வெண்ணிலவை
எட்ட நின்று பார்ப்பதிலே இளையவர்க்குப் பேரின்பம்.
மலையேறிக் கொழுந்து தனை மங்கையர்கள் பறிப்பதனை
நிலை கொண்டு பார்ப்பதிலே நிறை கொள்ளா ஓர் இன்பம்.
முலைமீது வாய் வைத்து முறுவலித்துப் பால் சுவைக்கும்
கலை முத்து மழலைகளின் இதயத்துள் சுவை இன்பம்.
வயலுக்குள் களை பிடுங்கும் வஞ்சியரின் அசைவுதனை
நயமோடு ரசிப்பதிலே நமக்குள்ளோர் தனி இன்பம்.
சுயமாக இயங்குகின்ற இயற்கையின் நிகழ்வுதனை
வியப்புடனே ரசிப்பதிலே விளைவதுவோ பல இன்பம்.
காரிகையை அரவணைத்து கன்னத்தில் முத்தமிட்டுச்-
சாரிக்குள் சல்லாபம் புரிவதிலே தனி இன்பம்.
தூரிகையின் துணையாலே தாள்மீது கவி வடித்துப்
பேருவகை கொள்வதிலே கவிஞருக்குப் பேரின்பம்.
வானகத்துத் தாரகைகள் கண்சிமிட்டும் காட்சியினை
வந்து நின்று பார்ப்பதிலே வருவதுவோ தனி இன்பம்.
கானகத்துக் குயிலினங்கள் பாட்டிசைக்கும் ஓசையினை
காது உற்றுக் கேட்பதிலே கிடைப்பதுவோ பேரின்பம்.
பொழுது புலரும் வேளையிலே
மதியன்பன்
கடலோடு கைகுலுக்கி கதிரவனும் பவணி வர
காலையெனும் பொற்பொழுது புலரும் - ஒளிக்
கதிர் பட்டு எல்லாமே மலரும்.
மடல்மீது படிந்திருந்த பனித்துளிகள் அத்தனையும்
மறு கனமே அங்கிருந்து விலகும் - நல்
மறுமலர்ச்சி காணும் இவ்வுலகும்.
கூட்டுக்குள் அடைபட்டு குடியிருந்த பறவை யினம்
கூடு விட்டுச் சிறகுகளை விரிக்கும். - அதன்
குஞ்சுகளோ மனம் விட்டுச் சிரிக்கும்.
வீட்டுக்குள் களைப்பாலே விழிகொண்ட மானிடர்கள்
விருப்போடு துயிலகன்று எழுவர் - தம்
வினை தீர்க்கும் இறையோனைத் தொழுவர்.
கைகளிலே நூலெடுத்து களிப்புடனே மாணவர்கள்
கல்லூரி தனை நோக்கிச் செல்வர் . அவர்
கற்பதையே இலட்சியமாய் கொள்வர்
பையதனை தானெடுத்துப் பக்குவமாய் தொழிலாளர்
பசிபோக்க தொழிலுக்குப் போவர்- அவர்
பணிசெய்தே மேலோராய் ஆவர்.
வண்ணமுடன் காட்சிதரும் வண்டெனவே பறக்கின்ற
வாகனங்கள் வீதியெங்கும் ஓடும். - தெருவில்
வருவோரைப் போவோரைத் தேடும்.
சின்னவரும் பெரியவரும் அதிலேறிப் பயணங்கள்
சீக்கிரமே வேறிடங்கள் செல்வர்;. – அவர்
சிறப்புறவே கடன் முடித்து வெல்வர்.
05.05.2014
படைத்தவன் மலைத்தானோ...
மதியன்பன்
பாவையின் பார்வையில் பரிதியின் கதிரினை
படந்திடச் செய்தானோ - இந்தப்
பூவையின் நெஞ்சிலே பொற்குடம் இரண்டினை
பொருத்தியே வைத்தானோ....
கன்னியின் கால்களில் கண்கவர் அன்னத்தை
கட்டியே போட்டானோ. - இந்தப்
பொன்னியின் மேனியில் புடமிட்ட தங்கத்தை
புதைத்துமே வைத்தானோ...
அரிவையின் வதனத்தில் அழகுறு மதியினை
அமர்ந்திடச் செய்தானோ - அவளின்
விரிகின்ற வாய்க்குள்ளே விலையுதிர் முத்துக்கள்
வெட்டியும் வைத்தானோ...
வஞ்சியின் தொடைகளிள் வாழையின் மடல்களை
வைத்துமே இணைத்தானோ - அவளின்
கொஞ்சிடும் இதழ்களில் கொவ்வைப் பழத்தினை
குவித்துமே வைத்தானோ...
அணங்கவள் கழுத்திலே ஆழ்கடல் சங்கினை
அமைத்துமே தந்தானோ - இங்கு
மணக்கின்ற மலரினை மங்கையின் கேசத்துள்
மறைத்துமே வைத்தானோ...
கோதையின் கன்னத்தில் தோட்டத்துக் கனியினை
கொய்துமே வைத்தானோ - இந்தப்
பேதையின் இடுப்பிலே பெருங் கொடியொன்றினை
பிணைத்துமே விட்டானோ...
நுளம்புகளே உங்களைத்தான்
மதியன்பன்
குறுப்பு ரெத்தம் எதுவானாலும்
குடிப்போம் என்னும் கொள்கையுடன்
உறுப்புகள் மேலே வந்தமர்ந்து
உதிரம் உறுஞ்சும் நுளம்புகளே...
சிறியோர் பெரியோர் பாராமல்
சேர்ந்து வந்து குத்துகின்றீர்.
பொறுமை எல்லை தாண்டுவது
போதும் இனிமேல் நெருங்காதீர்...
உதிரம் தன்னை உறுஞ்சுவதால்
உங்கள் தாகம் தீர்ந்து விடும்.
எதிராய் எங்கள் மேனியிலே
ஏறும் நோய்கள் பல விதமே..
அதிகம் நீங்கள் குத்துவதால்
அயர்ந்து தூங்க முடியவில்லை.
மிதித்து விடுவோம் நுளம்புகளே..
மீறி இங்கே நெருங்காதீர்...
இரவு நேரம் நாமிருக்கும்
இடத்தைத் தேடி படை சூழ
அரவத்தோடு வந்தெம்மை
அண்டி நீங்கள் குத்துவதால்
சிரமம் எமக்கே. உமக்கல்ல.
சிறியோர் பெரியோர் எல்லோரும்
வரட்டும் உம்மை ஒளிப்போமென
வாசலில் உள்ளார் நெருங்காதீர்.....
மச்சான் வருவதெப்போ...?
மதியன்பன்
ஹஜ்ஜுக்கு வருவேன் என்று
கடிதத்தில் எழுதி எந்தன்
இச்சையைத் தூண்டி விட்டு
இதயத்தைக் கொள்ளை கொண்ட
மச்சானுன் வரவு இன்றி
மனதிலே ஏக்கம் வந்து
துச்சமாய்ப் போச்சு வாழ்வு.
துடைத்திட வருவ தெப்போ..?
திருமணம் செய்து மற்றத்
திங்களோ சென்றதாலே
அரும்பிய உணர்வு எல்லாம்
அலைமோதித் திரியுதிங்கே...
இருவரும் பிரிந்ததாலே
ஈருடல் ஆனால் வாழ்வில்
ஒரு உயிர் போல ஆனோம.
உணர்திங்கு வருவதெப்போ..?
உண்ணுகின்ற போது உங்கள்
உருவமே வந்து என்னில்
பின்னுது அதனைப் போல
படுக்கையில் புரளும் போதும்
கன்னத்தை வருடி விட்டுக்
கதைக்குது. அதனாலெந்தன்
எண்ணத்தில் நிறைந்து விட்ட
எழிலரே வருவ தெப்போ...?
மூடக் கொள்கையும் முஸ்லிம்களும்
மதியன்பன்
கலிமாவுடன் கடமைகள் ஐந்து என்று
கற்றதுடன் புத்தகத்தை மூடிவிட்டு
ஆலியப்பா அவுலியாக்கள் என்று சொல்லி
அனுதினமும் நேர்ச்சைகள் செய்வதோடு
களிக்கின்றார் கடலுக்கு சோறும் ஊட்டி
கபுறடியின் கம்புக்கு மண்ணும் கூட்டி
பொலிவு தரும் என்று இதைச் செய்தெல்லாம்
புனிதமுறு இஸ்லாத்தில் எங்கும் இல்லை.
பாவாக்கள் என்று ஒரு கூட்டம் வந்தால்
பக்தியுடன் அவர்கள் முன் நாணிச் சென்று
வாருங்கள் அமருங்கள் என்று சொல்லி
வறுமையிலே வாழ்ந்தாலும் அள்ளிக் கொட்டி
தாருங்கள் எந்தனக்கு பைஅத் என்றால்
தலைமயிரைப் பிடித்து அவர் ஏதோ ஊத-
மாறாத அலங்கோலக் காட்சியெல்லாம்
மார்க்கத்தின் கடமைகளாய் எங்கும் இல்லை.
இறந்தவர் வீட்டினிலே இருட்டுக் கத்தம்.
இருப்பவர் நோய் உற்றால் அதற்கும் கத்தம்.
மறக்காமல் மௌலூதும் பாத்திஹாவும்
மனைவியின் வயிற்றிலே பிள்ளை என்றால்
உறங்காமல் தலைப் பாத்திஹாவும் ஓதி
ஊராரை அழைத்தங்கு விருந்தும் வைப்பார்.
மறந்திட்டார் மார்க்கத்தின் கடமை தன்னை.
மடச் செயலை தன்னோடு அழைத்துக் கொண்டார்.
தீபாவளித் திருநாள்...
மதியன்பன்
கொடுமைகள் செய்து வாழ்ந்த
கொடியவன் நரகா சுரனை
படுகொலை செய்து விஷ்னு
பகவான் வாங்கித் தந்த
வீடுதலை நாளை எண்ணி
விருப்புடன் மக்கள் இன்று
அடுக்காகத் தீபம் ஏற்றி
அவணியிற் கொண்டாடு கின்றார்.
வைகறை எழுந்து மக்கள்
வளமுடன் எண்ணை தேய்த்து
மெய்யதைச் சுத்தம் செய்து
மேலான வாசம்; பூசி
ஒய்யார உடை உடுத்து
உணவுண்டு மகிழும் காட்சி
வையக மீதில் தீபா-
வளி யெனும் திரு நாளாகும்.
சுடர் விடும் தீபம் எங்கும்
சிந்திடும் ஒளியைப் போல-
இடர் படும் உள்ளம் எல்லாம்
இலங்கிடச் செய்ய இங்கு
படந்துள தீபா வளியை
பாருள மக்கள் ஒன்றாய்
சுடரெனும் தீபம் ஏற்றி
சுகத்துடன் மகிழ்கின்றார்கள்.
அருள் சொரியும் மாதம்
மதியன்பன்
அடிவானிற் பிறை தெரிய அகமெல்லாம் நகை விரிய
அல்லாஹ்வின் ஏவல் வரும் நோன்பாய் - அதை
அகம் மகிழ ஏற்றிடுவோம் மாண்பாய்
விடிகின்ற பொழுதுடனே விருப்பமுடன் நோன்பிருந்து
வினைதீர்க்கும் இறையோனைத் தொழுவோம் - நம்
வினை யென்னி மனமுருகி அழுவோம்.
நோன்பிருக்கும் காலத்தில் நோவினைகள் செய்யாது
நொந்தவர்க்கு உதவிகளைச் செய்வோம் - நல்ல
நோக்கமிதால் இறையருளைக் கொய்வோம்.
வான் மறையை ஓதுவதை வல்லோன் துதி பாடுவதை
வழமையென தனதாக்கிக் கொள்வோம். - உயர்
வளமான சொர்க்கத்தை வெல்வோம்.
இரக்கின்ற மாந்தருக்கு இருப்பதனை ஈந்தவரின்
இதயத்தை அன்பாலே வெல்வோம். - வரும்
இடர்களினை அதனாலே கொல்வோம்.
சுரக்கின்ற இறையருளைச் சுமந்து வரும் ரமளானை
சுமையென்று எண்ணாது ஏற்போம். - நம்
சுற்றத்தை அன்போடு சேர்ப்போம்.
பகல்நேரம் பசித்திருந்து படைத்தவனைப் பணிந்திருந்து
பக்தியுடன் நோன்பதனை நோற்போம். - இன
பந்துக்கள் உறவுதனைச் சேர்ப்போம்.
நிகரில்லா இறையவனை நின்று நிதம் வணங்குவதை
நிலையாக வாழ்க்கையிலே கொள்வோம். - பின்னர்
நிறைவான சொர்க்கத்தை வெல்வோம்.
புழு வந்து அரித்து விடும்..
மதியன்பன்
பொய் சொல்லித் திரிவோரே உங்கள் நாவை
புழு வந்து அரித்து விடும். அதனால் இனிமேல்
மெய் சொல்ல எப்போதும் பழகிக் கொள்வீர்.
மேதினியில் இது ரொம்ப நல்லதாகும்.
வையகத்தில் நீயுரைக்கும் பொய் யொன்றாலே
வருகின்ற விளைவுகளைச் சொல்லப் போனால்
ஐயய்யோ அத்தனையும் கொடுமை கேளீர்.
ஆகையினால் மெய்யுரைக்கப் பழகிக் கொள்வீர்.
ஒரு பொய்யைச் சொல்லிட்டால் உந்தன் வாக்கை
ஒரு போதும் உலகத்தார் நம்ப மாட்டார்.
உருப்படியாய் ஏதேனும் செய்தால் கூட
உண்மையினும் அது பொய்யே என்றுரைப்பார்
தெருக்களிலே நீ போனால் பொய்யன் என்று
தினமுனக்கு பட்டத்தை சூட்டி நிற்பார்.
உருக்கமுடன் இதை ஏற்று வாழும் நாளில்
உண்மைதனை உரைப்பதற்கு பழகிக் கொள்வீர்.
சத்தியத்தைச் சொல்லுதற்கு தயங்குவோரே
சத்தியமாய் உன்நாவை புழுக் கடிக்கும்.
இத்தரையில் நீ சொல்லும் பொய்களாலே
இலாபங்கள் இருந்தாலும் மறுமை நாளில்
கத்தியால் உன்நாவை அறுத்து அங்கு
கடுமையாய் வேதனைகள் செய்யக் கூடும்.
முத்திரையாய்ச் சொல்லுகின்றேன். இனிமே லேனும்
முழுமையாய் மெய்யுரைக்கப் பழகிக் கொள்வீர்.
புது யுகம் படைக்க வாரீர்
மதியன்பன்
ஏழையுளம் பூரிக்கும் காலம் ஒன்றை
என்தன் விழி காணும் வரை துயில மாட்டேன்.
வாழையடி வாழையான வறுமை தன்னை
வந்த வழி அனுப்பும் வரை துயில மாட்டேன்.
ஊளையிடும் நரிக் கூட்டம் ஊருக்குள்ளே
ஊடுருவ ஒரு போதும் விடவும் மாட்டேன்.
நாளையொரு புது யுகத்தை இந்த மண்ணில்
நான் காண அதுவரைக்கும் துயில மாட்டேன்.
பொதுப் பணத்தில் விளையாடும் போலித் தலைகள்
பூண்டோடு அழியும் வரை பொறுக்க மாட்டேன்.
வதுவையரை வாழ வைக்கும் கூட்டம் ஒன்றை
வையகத்தில் நிலை நாட்டத் தயங்க மாட்டேன்.
எது வரினும் சத்தியத்தின் வழியில் செல்ல
எவர் தலையும் துண்டிக்கத் தயங்க மாட்டேன்.
இதுக் கெல்லாம் துணிவுள்ள இளைஞர் இங்கே
இருந்திட்டால் வாருங்கள் ஒன்றாய்ச் செல்வோம்.
சீதனத்தால் வீடிருக்கும் ஏழைப் பெண்கள்
சிறப்போடு வாழுதற்கு எதையும் ஈவேன்.
நீதமுடன் செயலாற்றும் கூட்டம் ஒன்றை
நித்திலத்தில் ஆக்காமல் ஓய மாட்டேன்.
மோதலுக்கும் ஊழலுக்கும் பாதை வெட்டும்
மோசகாரக் கும்பலுக்கு கத்தி வைப்பேன்.
ஆதலினால் துணிவுள்ள ஆண்கள் இங்கே-
ஆருள்ளார்? புது யுகம் படைக்க வாரீர்.....
சீதனமே செத்துப் போ
மதியன்பன்
பாப்பாவாய் இருந்த காலை பள்ளி சென்று
பாடங்கள் பல கற்றேன். எந்தன் பெற்றோர்
பூப் பெய்தி விட்டேனாம் என்று சொல்லி
பூட்டி சிறை வைத்துள்ளார் வீட்டிற்குள்ளே..
மூப் பெய்தி விட்டாலும் எந்தன் வாழ்வில்
மூன்றுமுடிச் சேறாது. இதுவே உறுதி.
மாப்பிள்ளை என்றிட்டால் கடையில் வாங்கும்
மணிச் சரக்காய் போனதனால் என்ன செய்வேன்.?
ரொக்கமுடன் நகை நட்டு மேலும் காணி
ரோசமில்லா ஆடவர்கள் கேட்பதாலே
அக்கொடுமை தாங்காத பெற்றோரெல்லாம்
அவதியுறும் நிலை கண்ட கன்னிப் பெண்கள்
துக்கமுடன் எதை யெதையோ போட்டுக் கொண்டு
தூங்குகின்றார் நிரந்தரமாய் உலகை விட்டு.
இக் கொடுமை வேண்டா மினிச் சீதனமே...
இங்கிருந்து ஓடிவிடு. இளசுகளை வாழ விடு.
பணம் வந்தால் எந்தனக்குப் போதும் அந்த
பாவையவள் குணமொன்றும் தேவையில்லை.
மனந்திறந்து சொல்லுகின்ற ஆடவர்க்கு-
மணமுடிக்க யோக்கியதை என்ன உண்டு...?
பிணத்திற்கு தாலிகட்டும் மூடனுக்கும் - இப்
பணத்திற்கு தாலிகட்டும் மனிதனுக்கும்
இனத்தாலே ஒற்றுமைகள் நிறைய உண்டு.
இவர்வாழ அருகதைகள் என்ன உண்டு...?
பாடத்தைப் படிக்க வாரீர்
மதியன்பன்
புலுருகின்ற பொழுதெழுவோம். உடலைக் கழுவி
புத்தாடை புனைந்திடுவோம். பின்னர் இறையை
உளமுருகத் தொழுதிடுவோம். வீட்டில் உள்ள
உணவு தனை உட்கொள்வோம். முடிந்த பின்னர்
மலருகின்ற அரும்புகளாய் பள்ளி நோக்கி
மங்களமாயச் சென்றிடுவோம். சென்று அங்கே
அளவில்லாக் கல்வியினை அள்ளி எங்கள்
அகத்துள்ளே சேர்த்திடுவோம் தோல்வி யில்லை.
பள்ளியிலே ஆசான்மார் சொல்லைக் கேட்டு
பாடத்தைப் பக்குவமாயப் படித்திடுவோம். நண்பர் கூட
உள்ளமெல்லாம் ஒன்றாகி இணைந்திருப்போம்.
ஊருக்குள் உத்தமனாய் வாழ்ந்திடுவோம்.
வெள்ளை நிறப் பூப்போல மனத்தை என்றும்
வெண்மையுடன் வைத்திருப்போம். அதிலே என்றும்
கள்ளமெனும் கருமைக்கு கொஞ்ச மேனும்
காருண்யம் காட்டாமல் காத்துக் கொள்வோம்.
மாலையிலே விளையாட்டில் லயித்திருப்போம். பிறர்
மனமேற்கும் காரியத்தில் திழைத்திருப்போம்.
வேளை வந்த பின்னாலே வீடு வந்து
வேட்கையுடன் படித்தவற்றை மீட்டிக் கொள்வோம்.
பாலையிலே நீருற்றாய்ப் பெற்றோர் உள்ளம்
பாசமுறப் பொங்குவதைக் காணச் செய்வோம்.
மூலையிலே முடங்காமல் முன்னே வந்து
மூத்தவங்க வார்த்தைக்கு மதிப்புச் செய்வோம்...
கற்று வாழ்ந்தால் கஸ்டமில்லை
மதியன்பன்
கைநிறையப் புத்தகத்தை அள்ளிக் கொண்டு
கல்லூரி செல்லுகின்ற கன்னிப் பெண்னே..
மையலுடன் கல்வி தனைக் கற்கா விட்டால்
மங்களமாம் உன்வாழ்வு மங்கிப் போகும்.
தையலுனைப் பாதையிலே வந்து நின்று
தடுத்திடுவார் ஆடவர்கள். அதனைக் கண்டு
மெய்யசைத்து நின்றிட்டால் போதும் தோழி
மேதினியில் உன் வாழ்வு விணாய்ப் போகும்.
வெள்ளத்தால் அழியாது கல்விச் செல்வம்.
வெந்தனலால் வேகாது. அதனை யென்றும்
கள்வர்கள் வந்தெம்மை அடித்திட்டாலும்
கண்டிப்பாய் அது எம்மை விட்டுப்போகா...
அள்ளுவதால் குறையாத செல்வம் என்றால்
அவணியிலே அது ஒன்றே கல்வி யாகும்.
உள்ளத்தைத் தெளிவாக வைத்துக் கொண்டு
உண்ணதமாம் கல்வியினைக் கற்று வாழ்வீர்.
அரிவையர்கள் அடுப்பூதும் காலம் மாறி
அழகுறவே கல்வியினைக் கற்கும் நேரம்
தெரிவாகி உலகத்தில் அமுலாய்ப் போச்சி
தேவையென மாறி விட்ட கல்வி தன்னை-
உரிமையுடன் கற்பதற்கு பள்ளி செல்லும்
உண்ணதமாம் தோழிகளே.. நீங்ளெல்லாம்
விரிகின்ற ஆசைக்கு அணையைப் போட்டு
விருப்ப முடன் கல்வி தனைக் கற்க வாரீர்....
அவளன்பே சீதனம்
மதியன்பன்
பட்டங்கள் பல பெற்றேன். பாரின் கண்ணே.
பதவிகளும் நான் வகித்தேன். எந்தன் கையில்
துட்டில்லை என்றதனால் கண்டோரெல்லாம
தூவென்று வெறுத்தார்கள் அதனால் நானும்
இட்டமுடன் அயல் சென்று பணத்தைக் கொஞ்சம்
இரட்டிப்பாய்க் கொணர்ந்ததனால் எந்தன் வீட்டில்
பெட்டியுடன் சீர் வரிசை. - என்னைப் பார்த்துப்
பெண்கொடுக்க வருகின்றார் வரிசையில் இன்று.
அறுபதுடன் நகை நட்டும் அள்ளித் தாறேன்
அழகு மயில் ஆயிஷாவைக் கட்டித் தாறேன்.
வறுமைக்கு விலை சொன்ன உதுமான் போடி
வந்தின்று கேட்கின்றார். என்னைப் பார்த்து
வறுமையிலே நான் வாழ்ந்த காலம் அப்போ-
வற்றாத அன்பதனை என்மேல் கொட்டி.
சிறுமியென நின்றவள்தான் எந்தன் ரோசி.
சீர்வரிசை தேவையில்லை. அவளை ஏற்பேன்.
எத்தனையோ செல்வங்கள் இருந்திட்டாலும்
எந்தனுயிர் ரோசிக் கீடாய் இல்லை.
சொத்தெல்லாம் அழிந்துவிடும். ஆனாலவளின்
சுகமான அன்பொன்றே நிலைத்து நிற்கும்.
கொத்துக்குள் கனிபோல அழகென்றாலும்
குணமில்லாப் பெண் என்றால் இன்பம் இல்லை.
இத்தரையில் நான் தாலி இடுவதென்றால்
இனியவளாம் ரோசியவள் கழுத்தின் மேல்தான்.
மங்கையரே மயங்கிடாதீர்கள்
மதியன்பன்
கைப்பிடிப்பேன் கலங்காதே கண்ணே என்று
கவிதையிலே காதல் மொழி பேசி உன்னை
மெய்யுருகப் பொய் உரைத்துக் காதல் செய்யும்
மினி மைனர் வார்த்தையிலே மயங்கிடாதீர்.
வானுண்டு மதியில்லை நீதான் அங்கே - முழு
வட்டமெனப் பட்டங்கள் பலவும் சூட்டி
நானுண்டு நீயுண்டு காதல் என்று
நாடுகின்ற வாலிபரில் மயங்கிடாதீர்.
மாரியம்மன் கோவில்தான் எமக்குச் சொந்தம்.
மாவிலைகள் தோரணங்கள் வாழ்த்துச் சொல்ல
வாரியுன்னை அணைத்திடுவேன் என்று சொல்லும்
வாலிபர்கள் வார்த்தையிலே மயங்கிடாதீர்..
கனியென்றும் கரும்பென்றும் கட்டித் தழுவி
கலவியிலே இன்பத்தைக் கண்டு விட்டு
புனிதமுறு காதலுக்கு களங்கம் செய்யும்
புல்லர்கள் வார்த்தையிலே மயங்கிடாதீர்..
சீதனமோ ஆதனமோ தேவையில்லை
சிறப்பான உளமொன்றே எனக்குப் போதும்
கோதையுனை வாழ வைப்பேன் என்று சொல்லும்
கோழையர்கள் வார்த்தையிலே மயங்கிடாதீர்...
கவிஞனே என் காதலன்
மதியன்பன்
நாட்டினை நல் வளத்தினை
நங்கையின் உடை அழகினை
வீட்டினை விளை யாட்டினை
வீதியின் அவ நிலையினை
காட்டினை கனிப் பொருளினை
கல்வியை கருந் தமிழினை
தீட்டிடும் நற் கவிஞனே
தேடும் என் காதலன்.
மதியினை மலர் அழகினை
மங்கையின் நடை உடையினை
நதியினை நற் தொழிலினை
நலிவுறும் வாழ் நிலையினை
பதியினை போதை வஸ்தினை
பழகிடும் பைந் தமிழினை
புனைகின்ற நற் கவிஞனே
புவியிலே என் காதலன்.
குடியினை குண நலனினை
குறைவிலா இறை அருளினை
விடிவினை பரிதி மறைவினை
வீசிடும் புயற் காற்றினை
இடியினை கொட்டும் மழையினை
இனிய நற் தமிழிலே
வடிக்கின்ற நற் கவிஞனே
வாழ்க்கையில் என் காதலன்.
நரகத்தின் நாயகர்கள்
மதியன்பன்
ஆண்டவனின் கட்டளைக்கு அடிபணியா மானிடரும்
அன்னை தந்தை பெரியாரை மதிக்காத பிள்ளைகளும்.
வீண் சண்டை வம்புக்கு விதை போடும் விசமிகளும்
விலை மாதர் உறவு தனை விரும்புகின்ற ஆடவரும்
வேண்டி நிற்கும் ஏழைகளை விரட்டுகின்ற செல்வர்களும்
வேலை செய்யும் தொழிலாழி ஊதியத்தை மறுப்பவரும்
நான் என்னும் அகங்காரம் தலைக்கேற வாழ்பவரும்
நாளைக்கு வரவிருக்கும் நரகத்து நாயகர்கள்...
விலைகூடும் என்று சொல்லி பொருட்களினைப் பதுக்குவோரும்
வித விமாய் மதுவருந்தி சுகபோகம் காண்பவரும்
நிலையில்லா இவ்வுலகில் நினைத்த படி வாழ்பவரும்
நிறுக்கின்ற பொருட்களிலே நிறை மோசம் செய்பவரும்
அலைமோதும் பொய் வதந்தி ஆங்காங்கு சொல்பவரும்
அடுத்தவனின் பொருட்களினை அபகரித்து வாழ்பவரும்
கொலை களவு கொள்ளை யென கொடும் பாவம் செய்பவரும்
கொடுமை யுறு நரகிற்கு வர விருக்கும் நாயகர்கள்.
பெற்றோரைப் பரிந்திருக்கும் பிள்ளைகளை வதைப்போரும்
பெரு வட்டி வாங்கலுடன் கொடுமதிகள் செய்பவரும்.
ஒற்றுமையைக் குலைக்கின்ற உதவாத மனிதர்களும்
ஒப்பில்லா இறைவனுக்கு உவமானம் சொல்பவரும்
கற்றபடி ஒழுகாத கற்றறிந்த ஆலிம் களும்
கண்டபடி ஆட்சி செய்யும் நீதியில்லாத் தலைவர்களும்
உற்றாரை உறவினரை ஒதுக்கி நிதம் வாழ்பவரும்
உண்மையிலே நரகிற்கு வரவிருக்கும் நாயகர்கள்...
இறையில்லம் ஏகும் இனியோரே
மதியன்பன்
மண்ணுலகும் விண்ணுலகும் படைத்துக் காத்து
மறை தந்து நிறைவுடனே வாழச் செய்த
முன்னவனாம் அல்லாஹ்வின் சொல்லை ஏற்று
முகம்மலர கஹ்பாவை காணச் செல்லும்
புண்ணியங்கள் பெற்றிட்ட பெரியார் நீவிர்
புதலத்தில் பாவங்கள் எல்லாம் நீங்கி
இன்றிங்கு பிறந்திட்ட மழலை போன்று
ஏகிடுவீர். இறையில்லம் சென்று வாரீர்.
மார்க்கத்தின் கடமைகள் முழுமை காண
மக்கநகர் செல்லுங்கால் அங்கே நீவீர்
ஆர்வமுடன் கஹ்பாவைக் காணும் பேறும்
அத்தோடு சபா மர்வா என்னும் குன்றுள்
ஈர்க்கின்ற தொங்கோட்டம் ஓடும் பேறும்
இப்பாரில் ஒப்பில்லா ஸம்ஸம் நீரை
தேர்ந் தெடுத்துக் குடிக்கின்ற பேறும்; பெறுவீர்.
சோதரர்காள் இறையில்லம் சென்று வாரீர்.
சத்தியத்தின் தலைமகனாய் செகத்தில் வாழ்ந்து
சாத்வீகப் புரட்சி யொன்றைத்; தோற்று வித்த
உத்தமனாம் நபி நாதர் றவுழா ஸரீபை
உஹது மலைச் சாரலிலே காணும் வாய்ப்பும்
அத்தோடு ஸஹாபாக்கள் அவுலியாக்கள்
அவர்களது கபுறுகளைக் காணும் வாய்ப்பும்
இத்தரையில் பார்க்கின்ற பேறே பேறு.
இறை நேசச் செல்வர்காள் சென்று வாரீர்....
இதயம் நோகும்
மதியன்பன்
தானியத்தை கடைக்குள்ளே பதுக்கி வைத்து
தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருக்கும்
வாணிபத்துக் குரியவர்கள் வையகத்தில்
வாழுவதைக் காணுகையில் இதயம் நோகும்.
கைநீட்டி சில்லறையை கேட்கும் ஏழை
கண்கலங்கி நிற்கின்ற நிலையைக் கண்டும்
பை திறந்து கொடுக்காத செல்வர் தன்னை
பார்க்கின்ற வேளையிலே இதயம் நோகும்.
அயல் வீட்டில் இருப்பவர்கள் பசித்திருக்க
அவர் பசியைப் போக்காமல் புசித்து வாழும்
சுய நலத்தில் வாழ்பவர்கள் காசினியில்
சுற்றுவதைக் காணுகையில் இதயம் நோகும்.
உழைப்பவரின் ஊதியத்தைக் கணக்குப் பார்த்து
உருப்படியாய் கொடுக்காமல் வேலை வாங்கி
பிழைக்கின்ற செல்வரினைப் பாரின் கண்ணே.
பார்க்கின்ற வேளையிலும் இதயம் நோகும்.
கிளி போன்ற மனைவியினை வீட்டில் விட்டு
கீழ் சாதிப் பெண்களினை நாடிச் சென்று
விழிக்கின்ற ஆசையினைத் தீர்த்துக் கொள்ளும்
வீணர்களைக் காணுகையில் இதயம் நோகும்.
பொறுப்புகளோ குடும்பத்துள் நிறைந்திருக்க
பொஞ்சாதி பிள்ளைகளோ பசித்திருக்க
விருப்புடனே மது அருந்தி ஊரைச் சுற்றும்
வீணர்ககைளக் காணுகையில் இதயம் நோகும்...
மானம் மறந்த மங்கையர்
மதியன்பன்
மா நபி குலத்தில் வந்த
மங்கையர் நாங்கள் என்று
பூவிலும் மென்மை யான
பூவையர் புலம்பு கின்றார்.
நாவினால் கலிமாச் சொன்ன
நங்கையர் கூட்டம் இன்று
தாவிடும் குரங்கைப் போல
தடுமாறித் துள்ளு கின்றார்.
முக்காட்டைக் கழற்றி விட்டு
முழுமையாய்ப் பாவம் செய்து
ஹக்கான மார்க்கம் தன்னை
கறைபடியச் செய்து விட்டார்.
அக்காலப் பெண்டிர் எல்லாம்
ஆடையுள் மறைந்து நின்று
தக்வாவில் வாழ்ந்த வற்றை
தங்கையர் மறந்து விட்டார்..
அச்ச மடம் நாணம் என்னும்
அழகிய ந(h)ற் குணத்தை
துச்சமெனக் கொண்ட தாலே
துள்ளிடும் அழகை யெல்லாம்
மெச்சிடும் ஆடை கொண்டு
மிகை படக் காட்டுகின்றார்.
இச் செயல் வேண்டாம் தங்காய்.
இஸ்லாத்தில் வாழ வாரீர்...
இரங்காதா இவர்கள் இதயம்
மதியன்பன்
மாடி மேலே மாடி வைத்து வீடு கட்டி
மலர்க் கொத்து பஞ்சனையும் அதிலே வைத்து
கோடியெனச் செல்வங்கள் குவித்து வாழும்
குவலயத்துச் சீமான்கள் கண்கள் முன்னே
வீடு கட்டி வாழுதற்கு வசதி யின்றி
வீதியினை இல்ல மென மாற்றிக் கொண்டு
பாடு படும் ஏழையரைக் கண்ட பின்பும்
பரிந்துதவ இரங்காதா இவர்கள் உள்ளம்...
பல்வேறு ருசியான சமையல் செய்து
பழரசமும் குடி வகையும் அதிலே சேர்த்து
இல்லத்து அரசியுடன் உண்டு வாழும்
இவ்வுலகச் சீமான்கள் கண்கள் முன்னே
ஒரு வேளை உணவுக்கு வழியோ இன்றி
ஊர் ஊராய் கை நீட்டி பிச்சை வாங்கி
உருக் குலைந்து திரிவோரைக் கண்ட பின்பும்
உணவளிக்க இரங்காதா இவர்கள் இதயம்...
செல்வ மகள் சிறப்புடனே வாழுதற்காய்
சீதனமாய் ஆயிரங்கள் அள்ளிக் கொட்டி
பல்லிளிக்கும் காளையரைத் தேடிச் செல்லும்
பதி வாழும் சீமான்கள் கண்கள் முன்னே-
பூப் பெய்தும் வாழுதற்கு நாதியற்று
பூட்டிய வீட்டிற்குள்ளே தவமிருக்கும்
மூப் பெய்தும் குமருகளைக் கண்ட பின்பும்
முன் உதவ இரங்காதா இவர்கள் இதயம்...
விவாகரத்தை வேண்டுகிறேன்
மதியன்பன்
காலையிலே அவளெழுந்து கண்விழிக்கு முன்னாலே
காப்பியுடன் தண்ணீரும் காலடிக்குப் போக வேண்டும்.
சேலைமுதல் செருப்புவரை சிங்காரி உடுப் பெல்லாம்
சீராகக் காலடியே தினந்தோறும் வர வேண்டும்.
மாலையிலே மனை பெருக்கி மங்களமாய் விளக்கேற்றி
மாடாக நானுழைக்க மாதவளோ ஊரு சுற்றி
வேலையின்றி அலைவதனால் வெட்கம் எனக்கேதான்.
வேறுவழி யில்லையினி விவாகரத்தை வேண்டுகிறேன்.
பிள்ளையினைத் தொட்டிலிலே போட்டு நிதம் தாலாட்டி
பீங்கானுடன் கோப்பைகளை கழுவி யிங்கு அடுக்கி விட்டு
உள்ளிருக்கும் குப்பைகளை கொண்டு வந்து வீதியிலே
உதறுவது மட்டுமல்ல... குசினிக்குள் சென்று அங்கு
அள்ளி யொரு பிடி அரிசி அதைச் சோறாய் ஆக்குவதும்
அழகான கறி சமைத்து அவளுக்கு ஊட்டுவதும்
உள்ளபடி அழகல்ல ஆண் குலத்துக் கவமானம்..
உத்தமிதான் என்றாலும் விவாகரத்தை வேண்டுகிறேன்
கட்டிய கணவனென்றால் கட்டிலுக்கு மட்டுமல்ல
கடமைகள் என்ன வென்று கண்டிப்பாய் அறிந்திருந்து
தொட்டு உறவாடி துயரினைத் துடைக்க வேண்டும.
தூவென்று நடக்கின்ற துணையிவளை இனிமேலும்
கட்டி வாழுவதால் காலமெல்லாம் கஸ்டம்தான்.
காலை முதல் மாலை வரை என் வாழ்வு நரகந்தான்.
கட்டிய கணவனுக்கு கடமை களைச் செய்யாத
காரிகையே வேண்டாமினி விவாகரத்தை வேண்டுகிறேன்.
ஊருக்காய் உழைப்பவனே
மதியன்பன்
சீரோங்கும் காத்தநகர் மண்ணில் வாழும்
சிறப்புமிகு உலமாக்கள் வரிசை தன்னில்
ஊருக்காய் பணி செய்து ஓடாயப் போன
ஊழியனே மௌலவிலே ஆதம் லெவ்வை
நீரோடும் மீனாகச் சமூகத் துள்ளே
நீந்தி விளை யாடி நீயோ சேவை செய்தாய்.
பேராளன் அல்லாஹ்வின் அருளைப் பெற்று
பல்லாண்டு நலம் வாழ வாழ்த்து கின்றோம்.
கலவரத்தால் காத்த நகர் அழிந்த வேளை
காத்திரமாய் முன்னெழுந்து பணிகள் செய்தாய்..
உலவுகின்ற பிரச்சனைகள் தேடிச் சென்று
உருப்படியாய் அவை தீர்த்துப் புதுமை செய்தாய்.
நிலவெனவே இருண்டவரின் வாழ்க்கை ஒளிர
நிறைவாகக் குறைகளினைத் தீர்த்து வைத்தாய்.
நலமான நற்பணிகள் இன்னும் செய்து
நானிலத்தில் சுகம் வாழ வாழ்த்து கின்றோம்..
பள்ளியிலே கதீபாகக் கடமை செய்து
படைத்தவனின் கட்டளையை நிறைவு செய்தாய்.
துள்ளி வரும் சிறாருக்கு குர்ஆன் ஓதும்
தூய பணி செய்வதிலும் முன்னே நின்றாய்.
கள்ளமில்லா மனத்தோடு இல்லந் தோறும்
கடமை செயும் பண்புக்கு கட்டுப் பட்டாய்...
நல்ல மனம் கொண்டவனே..மௌலவி ஆதம்..
நற்பணிகள் செய்து வாழ வாழ்த்து கின்றோம்...
மீன் பாடும் தேன் நாடு
மதியன்பன்
பாடும் மீன் வாழும் இடம் மட்டு நகர்
பார்க்கின்ற விழிகளுக்கு சொர்க்க மாகும்.
ஓடுகின்ற நதியோடு ஓடும் மீன்கள்
ஓசையது காது களுக் கின்பமாகும்.
ஆடுகின்ற அலையோடு கடலின் மேலே
ஆடிவரும் ஓடங்கள் அழகைக் காட்டும்.
கூடுகளில் வாழுகின்ற புள்ளினங்கள்
குரலெடுத்துப் பாடுவது இனிமை கூட்டும்.
நகருக்குள் அமைந்திருக்கும் மதகு மேலே
நங்கையரும் ஆடவரும் சேர்ந்திருந்து
சுகமான காற்றோடு கை குலுக்கும்
சுவையான காட்சியதும் இனிமையாகும்.
பகலவனின் விடிவுதனைக் கண்டு அங்கே-
பளபளத்து வெலெவெலத்த வாவிப் பெண்ணாள்
முகம் சிவக்க கதிரவானார் மேகத்துள்ளே
முடங்குவதும் விழிகளுக்கு விருந்தேயாகும்.
வயலுக்குள் நிற்கின்ற நெல்லின் கதிரின்
வனப்பழகும் கண்களுக்கு குளிர்ச்சி யூட்டும்.
உயர்ந்த பனை தென்னையுடன் கமுகை மற்றும்
உயர்சாதி மரமனைத்தும் கவர்ச்சி காட்டும்.
இயற்கை யெழில் அத்தனையும் இந்த நகருள்
இணைந்துள்ள காட்சியிதே இன்பமாகும்.
வியக்கின்ற மானிடரே! எழுந்து வந்து
விருப்பமுடன் மட்டு நகர் எழிலைக் காணீர்......
சேவையின் செம்மலே றஹீம்
மதியன்பன்
விளையாட்டின் பெருமையினைக் காத்து நிற்கும்
வீரர்கள் கொண்ட அணி யுனைட்டட் தன்னில்
சளையாது பணி செய்து மெழுகாய் உருகும்
சத்தியத்தின் சகோதரனே. மௌலவி றஹீமே.
உழைக்கின்ற பொருளையெல்லாம் அள்ளிக் கொட்டி
உயர்வுடனே நம் கழகம் சிறந்து ஓங்க
சளைக்காது பணி செய்தீர். உம்மை நாங்கள்
சாந்தியுடன் வாழ்த்து கின்றோம். வாழ்க. வாழ்க ...
உதை பந்து கிரிகெட்டு எல்லை என்று
ஊருக்குள் பல போட்டி நடாத்தி வைத்து
சிதைவுற்ற தமிழ் முஸ்லிம் உறவு தன்னை
சீரோங்க பல பணிகள் செய்து வைத்தாய்.
புதையுண்டு போயிருந்த விளையாட்டெல்லாம்
புத்துயிரைக் காண வழி காட்டித் தந்தாய்.
இதை யெண்ணி உமை நாங்கள் வாழ்த்து கின்றோம்.
இன்னல்கள் இல்லாமல் என்றும் வாழ்க..
பதினேழு ஆண்டு காலம் கழகத் தோடு
பாசமுடன் ஒன்றினைந்து சேவை செய்தாய்.
புதியவர்கள் வருகின்ற போது எல்லாம்
புரிந்துணர்வால் அவர்தம்மைச் சேர்த் தெடுத்தாய்.
மதியுடையார் போற்று கின்ற பண்பு கொண்டாய்.
மற்றவரை மதிக்கின்ற தன்மை கொண்டாய்.
கதிரவனாய் கழகத்தை ஒளிரச் செய்தாய்-
காலமெல்லாம் சிறந்தோங்க வாழ்த்து கின்றோம்....
இறப்பிலும் வாழும் இளமதி
மதியன்பன்
பாசத்தால் எம்மை யெல்லாம் ஆண்டு வந்த
பண்புக்குத் தலை மகனே பைசால் நீங்கள்
தேசத்தின் சொத்தாக வாழ்ந்து மக்கள்
தேவைகள் கேட்டறிந்து பணிகள் செய்தீர்.
மாசற்று வாழ்ந்ததனால் மக்கள் மன்றில்
மறுவில்லா முழு மதியாயக் காட்சி தந்தீர்;..
ஓசற்றுப் போனீரே.. உலகம் விட்டு-
ஓயாமல் அழுகின்றோம் உங்கள் பிரிவால்...
விஷ்டமெனும் கழகத்தைத் தொடக்கி வைத்து
விதவிதமாய்ப் பணி செய்து குறைகள் தீர்த்தீர்.
கஸ்டமுறும் ஏழையர்க்கு சமுர்த்தி தந்து
கவலையினைப் போக்கு தற்கு வழிகள் செய்தீர்.
இஸ்லாத்தின் வழியினிலே வாழ்வமைத்து
இல்லார்க்கு இருப்பதனை ஈந்து நின்றீர்.
புஸ்பத்தின் மெல்லினமாயப் புன்னகைத்து
புவி மீது நோகாமல் நடந்து கொண்டீர்.
செஞ்சிலுவைச் சங்கத்தில் அங்கம் வைத்துச்-
சிறப்பான சேவைகளைப் பெற்றுத் தந்தீர்.
அஞ்சாத சிங்கமென எழுந்து வந்து
அநியாய அரக்கர்களைத் தோற்கடித்தீர்.
நெஞ்சத்துள் நேர்மையினை நிறைத்து வைத்து
நேசத்தால் உளங்களினை ஆட்சி செய்தீர்.
சஞ்சலத்தில் எமையெல்லாம் ஆழ்த்தி விட்டு
சகோதரனே .. தனியாகச் சென்று விட்டீர்.
நல்ல பொருள் கடைகளிலே நிலைப் பதில்லை
நல்லவரும் அப்படித்தான் வாழ்வதில்லை.
சொல்லி வைத்த நல்மகனே சென்று விட்டீர்.
சோகத்தில் எம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டீர்.
வல்லவனே அல்லாஹ்வே உன்னிடத்தில்
வந்தமகன் பைவாலுக்கு உன்னருளை
எல்லையின்றிச் சொரிந்திடுவாய்.சுவனம் தன்னில்
என்றென்றும் வாழ வைப்பாய். பிராத்திக்கின்றோம்....
அவன் வாழ்வு பூஜ்யமே
மதியன்பன்
வரண்டிருக்கும் பூமிமேலே நெல்லைப் போட்டு
வாய்க்காலை வெட்டியங்கு நீரைப் பாய்ச்சி
திரண்டு வரும் ஆசைக்கு லஞ்சம் போல
திருமறையும் மௌலீதும் ஓதிப் பின்னே
உரமோடு வயலுக்குள் காப்போரெல்லாம்
உடல் வளைத்துக் களை பிடுங்கி வேலை செய்து
சுரந்து வரும் நெற்கதிரைக் காணுமட்டும்
சுய வேலை போல நிதம் உழைத்து நிற்பர்..
பச்சையுடை தரித்தாற்போல் பூமி மேலே
படர்ந்திருக்கும் நெற்கதிரைக் கண்டபோது
இச்சையுடன் எழுந்திடுவர் போடி மார்கள்.
இறையச்சம் அன்றோடு அற்றுப் போகும்.
கச்சையுடன் பல பேர்கள் ஒன்றாய்க் கூடி
களை வேறு நெல் வேறாய்ப் பிரித்து வைத்து
உச்சி வெயில் மறையு மட்டும் ஓடியோடி
உழைத்திடுவர் ஊதியத்தை பெரிதாய்ப் பார்த்து.
அறுவடைக்கு மெசினோடு முல்லைக் காறன்
அதிகாலை வந்திடுவான். அவனின் பின்னே..
பெறுபேறைப் பார்த்து வரும் நோக்கத்தோடு
புறப்பட்டு வந்திடுவார் போடி மார்கள்.
சுறுசுறுப்பாய் சூடடித்த நெல்லை யெல்லாம்
சுழையாகச் சாக்குக்குள் மூட்டை கட்டி
முறுவலித்த முகமுடனே மெசினில் ஏற்றி
முழுதையுமே அனுப்பிடுவார் போடிமார் இல்லம்.
வயலுக்குள் உழைத்திட்;ட கூலிக் காறன்
வாய்க்கரிசி இல்லாமல் வீட்டில் தூங்க
நயமாக உண்ட பின்னர் கட்டில் மேலே
நன்றாகத் தூங்ககிறார் போடி மார்கள்
விடிவுண்டு துணிந்து நில்லு
மதியன்பன்
கதையினைக் கேட்டேன் கண்ணே
கலக்கம் நீ கொள்ள வேண்டாம்.
சதையினைச் சுவைத்தோ ரெல்லாம்
சத்தியம் அழிந்து போவார்.
சிதைந்திட்ட உன்றன் வாழ்வு
சீராகும். கவலை வேண்டாம்.
விரும்பி நீ சென்று உடலை
விற்கவோ இல்லை உன்னை
தெருவோர நாய்கள் வந்து
தீண்டியே வேசை யாக்கி
கருவையும் சுமக்கச் சொல்லி
களங்கமும் படுத்தி விட்டார்.
இருக்கிறான் இறைவன் உன்னை
என்றுமே வாழச் செய்வான்.
படைத்தவன் பாது காப்பான்
பதியிலே நீதி காப்பான்.
உடையுடன் உணவும் தந்து
உலகிலே வாழ வைப்பான்.
இடையிலே உயிரை மாய்த்து
இறப்பதால் இலாபம் இல்லை.
விடிவிலா வாழ்வுக் கொரு நாள்
விடிவுண்டு துணிந்து நில்லு.
வந்துவிடு கண்ணே
மதியன்பன்
தொட்டிலில் பிள்ளை தூங்க
தோளிலே மானம் தூங்க
கட்டிய கணவன் பேச்சை
கருத்திலே எடுக்கா வண்ணம்
கிட்டிய ஆணை நம்பி
கிடந்ததை சுருட்டிக் கொண்டு
சிட்டாகப் பறந்து விட்டாய்.
சீதேவி சவூதி நோக்கி.
ஒட்டி நாம் இருந்த வேளை
ஒருபிடி உணவென்றாலும்
மட்டிலா மகிழ்ச்சியோடு
மனமாற உண்டு வந்தோம்.
கொட்டிடும் உன்றன் அழகு
குறைந்திடும் என்று சொல்லி
புட்டிப்பால் கொடுத்துத் தானே
பிள்ளையை வளர்த்து வந்தோம்.
இப்படி வாழ்ந்து வந்த
இல்லற வாழ்வை மீறி
எப்படி உந்தன் உள்ளம்
எடுத்தது இந்த முடிவை.
தப்பிது எந்தன் கண்ணே
தாயகம் வந்து சேரு.
உப்புடன் சோறென் றாலும்
உன்னுடன் உண்ண வேண்டும்.
கோடியாய்; உழைத்திட்டாலும்
குடும்பமாய் இல்லை யென்றால்
வாடிய செடியாய் வாழ்வு
வரண்டிடும் உணர்ந்து கொள்ளு.
தேடிய கொக்காய். இன்னும்
தேய்கிறேன் மதியைப் போல.
ஓடிநீ வந்து என்னை
ஒரு முறை அணைக்க் வேண்டும்.
உனை மறந்திடுமோ உளம்
மதியன்பன்
எண்ணிலாச் சேவையால் எங்களு} ராண்டவனே
எத்தரின் குண்டுக்குச் சரிந்தாய் - நீ
எங்களை விட்டுமே பிரிந்தாய்.
உண்மையைச் சொன்னதால் உத்தமனானவனே
ஊருக்கு நீதானே களம். - இங்கு
உனை மறந்திடுமோ உளம்.
கலவரக் காற்றினால் கதியற்ற வேளையில்
கலங்கரை விளக்காக வந்தாய் - அந்தக்
காற்றினை அடக்கியும் தந்தாய்.
உலவிடும் ஊழலை ஒளிக்கவே அன்று நீ
ஊருக்குத் தலைவனாய் ஆனாய் - அந்த
ஊழலை ஒளித்துமே போனாய்.
அந்நிய படையெமை அடக்கிய வேளையில்
அடங்காது முன்னெழுந்து சென்றாய் - அவர்
அதிகாரம் அடக்கியே வென்றாய்.
இன்னல்கள் பட்டவர், இறந்தவர். மற்றவர்
இழப்புக்கு நிவாரணம் கேட்டாய் - நீ
இருந்ததை அள்ளியே போட்டாய்.
நல்லவை என்று நீ நாடிய அனைத்தையும்
நடத்திட நித்தமும் துடித்தாய். – அவை
நயமுடன் நடத்தியும் முடித்தாய்.
இல்லாத ஏழையர் இரந்தநல் வேளையில்
இருந்ததை அள்ளியே கொடுத்தாய் - அவர்
இதயத்தை அன்பாலே எடுத்தாய்.
ஆட்சியை நடத்திய ஆளும் அணியினை
அண்டியே சேவைகள் செய்தாய். - ஊரில்
அனேகரின் அன்பையும் கொய்தாய்.
ஈட்டியாய் தீயவர் எதிர்த்த தவ் வேளையில்
இரக்கமாய் அவரினை அணைத்தாய். - தன்
இதயத்தை அவரோடு இணைத்தாய்.
ஊர்ப் பணி ஒன்றுதான் உயிர்மூச் செனக்கென
உண்மையாய் அன்றுநீ உரைத்தாய். - தன்
உடலினை மெழுகெனக் கரைத்தாய்.
கார்கால மேகமாய் கடமையை மழையென
காத்தவூர் மண்ணிலே பொழிந்தாய். - பின்னர்
கடைசியில் குண்டுக்கு அழிந்தாய்.
மத்ரசா பள்ளிகள் மருத்துவ மனையென
மங்காத சொத்துக்கள் தந்தாய். - பல
மனங்களில் மதியெனெ வந்தாய்.
சத்தியம் நேர்மையாய் அரசியல் நடத்தியே
சரித்திரம் ஒன்றினைப் படைத்தாய். - மனம்
சலித்தவர் விழிகளைத் துடைத்தாய்.
வங்கியில் நம்மவர் வைத்திட்ட நகையெல்லாம்
வஞ்சகர் எடுத்ததைப் படித்தாய். - அதை
வாங்கிட நித்தமும் துடித்தாய்.
எங்களில் ஒருவனாய் எதிலுமே சேர்ந்து நீ
இளம்பிறை யாகவே வாழந்;தாய். - பலர்
இதயத்துள் முழுமதியாகவே வீழ்ந்தாய்.
வள்ளலுக்கோர் வாழ்த்து
மதியன்பன்
உலகத்து நிகழ்வை யெல்லாம்
உள்வீட்டுக் குள்ளே அறியும்
வளமிகு கம்பி யூட்டர்
வற்றாத செல்வம். இதனை
இலங்கையில் இலங்கச் செய்யும்
இதயமே முஸ்தபா உங்கள்
அளப் பெரும் சேவை கண்டோம்.
ஆனந்தக் களிப்புக் கொண்டோம்.
செல்வந்தர் மட்டும் அல்ல.
சேரியில் வாழ்வோர் தாமும்
கல்வியில் உயர வேண்டும்.
கணணியைப் பயில வேண்டும்.
இல்லாத மாணார் கட்கும்
இலவச புலமைப் பரிசில்
அள்ளியே கொடுத்தோர் நீங்கள்.
அறிவினை வளர்த்தோர் நீங்கள்.
படித்தவர் பட்டம் பெற்றுப்
பாதையில் அலையும் போது
துடித்தது உங்கள் உள்ளம்.
துணிவுடன் அழைத்து நீங்கள்
படித்ததன் கல்விக் கேற்ப
பெற்றுமே கொடுத்தீர் வேலை.
விடிந்தது கல்விச் சாலை.
வேந்தரே வாழ்த்து கின்றோம்.
காத்தமா நகர மக்கள்
கணனியைக் கற்றுக் கொள்ள
பூத்தது இங்கோர் நிலையம்.
பூரிப்பில் லயித்துப் போனோம்.
ஏத்ததோர் கணனிக் கூடம்
எங்களுக் காக ஈந்த
ஆத்துமா உம்மை நாங்கள்
அணைத்துமே வாழ்த்துகின்றோம்.
ஓராண்டைப் பூர்த்தி செய்யும்
ஒப்பற்ற எங்கள் கூடம்
பாராட்டைப் பெற்றுக் கொள்ளப்
பணிபல செய்தீர் நீங்கள்.
நீரோட்டம் போல நின்று
நிழலாக உழைத்தோ ரெல்லாம
சீரோங்க வாழ்த்து கின்றார்.
சிறப்போடு வாழ்க. வாழ்க.
ஏழையர்க் குதவும் எங்கள்
ஏந்தலே உங்கள் சேவை
வாழையாய் வந்து எங்கள்
வம்சத்தைச் சேர வேண்டும்.
நாளைய சமூகம் உங்கள்
நன்றியில் வாழ வேண்டும்.
நீளமாய் ஆயுள் வேண்டி
நீட்டி னோம் கைகள் வாழ்க.
மறுவிலா மதியே மஹ்ரூப்
காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த அல்ஹாஜ் ஆ மஹறூப் டீயு ளுடுழுளு டுடுடீ அவர்கள் கடல் கடந்த சேவைக்காக தெரிவு செய்யப்பட்டு டோகா கட்டார் நாடு செல்வதையொட்டி காத்தான்குடி பலநோக்குக் கூட்டுறவு சந்கத்தால் 08-10-1998 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட பாராட்டு வைபவ நிகழ்ச்சியின்போது வாசித்து வழங்கப்பட்ட வாழ்த்துப்பா..
மதியன்பன்
கற்றோர்கள் வாழுகின்ற காத்தான் குடியின்
காவியத்து நாயகனே மஹ்ருப் நீங்கள்
பெற்றுள்ள பதவியினை யெண்ணி யெண்ணிப்
பேரின்பம் அடைகின்றோம். வல்ல அல்லாஹ்
இற்றரையில இன்னும் நற் பதவி பெற்று
இனபேதம் இல்லாமற் சேவை செய்யும்
பொற்காலம் ஒன்றிற்காய் வாழ்த்து கின்றோம்.
புகழோடு நீடுளி வாழ்க. வாழ்க.
கடல் கடந்த சேவைக்காய் கட்டார் தேசம்
காலெடுத்து வைத்துள்ளீர். இலங்கை நாட்டில்
உடனிருந்த வேளையிலே பணிகள் செய்து
ஊருக்காய் பெருமையினை சேர்த்துத் தந்தீர்.
திடமான உளத்தோடு பொலிசார் படையில்
திறம்படவே கடமையினைச் செய்து நின்றீர்.
சுடரொளிரும் கல்வியினைப் போதிக்கின்ற
தூயபணி அத்னையும் இங்கே செய்தீர்.
சங்கங்கள் பலவற்றை நடத்தி நல்ல
சமூகத்துப் பணி செய்து வெற்றி கண்டீர்.
சிங்ளவர் தமிழ் முஸ்லிம் பேதம் இன்றி
சிறப்பாக அடுத்தவரின் நலனும் காத்தீர்.
இங்கிதமாய்ப் பணி செய்து உயர்வு பெற்ற
இளமதியே மஹ்றூபே சமூகத்துள்ளே
பங்கயமாய் சுடர்விட்டு ஒளிர வேண்டும்.
பலநோக்குச் சங்கத்தால் வாழ்த்துகின்றோம்.
பெற்றுள்ள பதவியினை வைத்துக் கொண்டு
பிறந்தகத்தின் பெருமைக்காய் உழைக்க வேண்டும்.
வற்றாத இன்பங்கள் பெற்று வாழ்வில்
வழமோடு வாழ நாம் வாழ்த்து கின்றோம்.
என்னதான் செய்கின்றோம்..?
மதியன்பன்
ஆண்டுகள் மாறும் போது
அவணியில் மீழும் இந்த
மாண்புறு நோன்பு தன்னை
மாந்தர் நாம் நோக்கின்றோமா.?
தீன்கூறும் நல்ல வற்றை
திறம்படச் செய்கின்றோமா.?
வீண் பேச்சு விளையாட்டென்று
வீணாகக் கழிக்கின்றோமா..?
குணநபி நாதருக்கு
குர்ஆனோ வந்த மாதம்.
உணவிலா ஏழையர்க்கு
உதவிகள் செய்யும் மாதம்.
பணமுளோர் வறியோருக்கு
பகிர்ந் தளிக்கின்ற மாதம்.
அனலுடன் குளிரும் தாங்கி
அமல்களோ செய்யும் மாதம்.
தறாவீஹ் தொழுகை தன்னை
தவறாது தொழுகின்றோமா..?
இராக்காலம் விழித் திருந்து
இறைவனைத் துதிக்கின்றோமா..?
அனாதைகள் மீது நல்ல
அன்பினைச் சொரிகின்றோமா..?
என்னதான் செய்கின்றோம் நாம்.?
எண்ணி நல் அமலைச் செய்வோம்.
வெண்ணிலவு மங்கை
மதியன்பன்
வதனத்தில் வெண்ணிலவை வரவளைத்து
அதரத்தில் மைவைத்த மாது - சிதறுகின்ற
முத்தாக ஒளிவீசும் பற்கள்
பித்தாக்கும் ஆணினத்தை என்றும்.
நாவுக்குள் குயிலினத்தை குடியமர்த்தி
பாவுக்குள் கருவான பாவை - பூவுக்குள்
தேனாக இனிக்கின்ற சொற்கள்.
தானாக மயங்கிடுவர் ஆண்கள்.
கொடிமரத்தை இடையினிலே சுற்றியிங்கு
அடிமரமாய் நிற்கின்ற அரிவை - விடிகின்ற
பொழுதைப் போல் நிறமுடைய மங்கை
விழுந்திடுவார் ஆடவர்கள் அங்கே.
அன்னத்தின் நடைபயின்று செல்லும்
பெண்ணினத்துப் பேரழகுப் பேதை - கன்னத்தில்
தோட்டத்துக் கனியொன்றை வைத்து
ஊட்டத்தைத் தந்திடுவாள் இங்கே..
மலையொத்த முலையிரண்டு கண்டு
சிலையாக நின்றிடுவர் ஆண்கள் - அலையாக
பேரெழுந்து வருகின்ற உணர்ச்சி
தீராது அவளின்றி அதிர்ச்சி..
நாட்டின் இன்றைய நிலை
மதியன்பன்
சிறீ லங்கா என்னும் இந்த
சிறப்புறு நாடு இப்போ
வெறி லங்கா வாகிப் போச்சி
விளை நிலம் சுடு காடாச்சி
ஒருவரை ஒருவர் வெட்டி
உதிரத்தை ஓட்டுகின்ற
பெரும்பணி நிறைய லாச்சி
பேரின்பம் செத்துப் போச்சி.
சிங்களவர் தமிழர் முஸ்லிம்
சிறப்புடன் வாழ்ந்து வந்த
மங்களமாம் நாட்கள் இப்போ
மருந்துக்கும் இல்லை யாச்சி.
பிட்டுடன் தேங்காய்ப் பூவாய்
பிரித்திட முடியா தென்ற
ஒட்டிய சமூகம் இப்போ
ஒதுங்கி வாழ் நிலையிலாச்சி.
கலையுடன் கலாச்சாரங்கள்
களிப்புடன் நடந்த நாட்டில்
கொலையுடன் விபச்சாரங்கள்
குதூகல மாகிப் போச்சி.
விலைகளோ விமானம் போல
விண்ணையும் முட்டியாச்சி.
நிலை கண்ட மாந்தர் உள்ளம்
நிற்கதி யாகிப் போச்சி.
இந்நிலை மாற வேண்டும்
இலங்கை வாழ் மக்க ளெல்லாம்
முன்னரைப் போல நித்தம்
மூவேளை உண்ண வேண்டும்.
இன்னல்கள் இல்லா வாழ்வு
இல்லத்துள் ஓங்க வேண்டும்.
கண்ணனும் காசிம் சில்வா
கைகோர்த்து வாழ வேண்டும்.
ஈழத் தாய் ஈன் றெடுத்த
இனமெல்லாம் ஓர் இனம்தான்
நாளத்தில் ஓடுகின்ற
நல் ரெத்தம் ஓர் நிறந்தான்.
ஓர்தாயின் பிள்ளை போன்று
ஒற்றுமையாய் வாழ்ந்து என்றும்
போர் முறைக்கு ஆப்பு வைப்போம்
புத்துலகைப் படைத் தெடுப்போம்.
ஒற்றுமை என்னும் கயிற்றை
ஒன்றென நாங்க ளெல்லாம்
பற்றிட வேண்டும் அப்போ
பாழாகிப் போன இந்த
வற்றிய வளங்க ளெல்லாம்
வனப்புடன் பொலிவு காணும்.
தொற்றிய துவேசப் பேயும்
தூரவே ஓடிப் போகும்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச இலக்கிய விழா நிகழ்ச்சியில் பாலர் பாடசாலைகளுக்கிடையிலான அபிநயப் பாடல் போட்டியில் முதலாம் இடம் பெற்ற பாடல்
பாடல் அபிநயம்: மில்லத் பாலர் பாடசாலை.
மதியன்பன்
வயலை நோக்கிப் போகிறோம்.
வளைந்து வளைந்து போகிறோம்
துயரை நீக்கப் போகிறோம்.
துள்ளி துள்ளி போகிறோம். - நாங்கள்
துள்ளி துள்ளி போகிறோம்.
புல்லை அங்கே புடுங்கிறோம்
புதர்களையும் உடைக்கிறோம்.
நெல்லை அங்கே தூவுறோம்
நீரைப் பாய்ச்சி மகிழ்கிறோம். - நாங்கள்
நீரைப் பாய்ச்சி மகிழ்கிறோம்.
குருவி தன்னைத் துரத்துறோம்
குரங்குகளை விரட்டுறோம்
அருவியிலே குளிக்கிறோம்.
ஆடைகளை மாற்றுறோம். - நாங்கள்
ஆடைகளை மாற்றுறோம்.
நெல்லு முற்றிக் கதிராகும்
நிலையைக் கண்டு சிரிக்கிறோம்.
அள்ளிப் பிடித்து அவற்றினை
அரிந்து கையில் எடுக்கிறோம். - நாங்கள்
அரிந்து கையில் எடுக்கிறோம்
அரிந்த நெல்லைக் குவிக்கிறோம்.
அடித்து வேறாய் ஆக்குறோம்.
விரிந்த படங்கில் வைத்ததை
வீடு கொண்டு போகிறோம். - நாங்கள்
வீடு கொண்டு போகிறோம்.
நெல்லை அடுப்பில் வைக்கிறோம்.
நெருப்பில் அதனை அவிக்கிறோம்.
கொல்லைப் புறத்து வெயிலிலே
கொட்டிக் காய வைக்கிறோம். - நாங்கள்
கொட்டிக் காய வைக்கிறோம்.
உரலில் நெல்லைக் கொட்டுறோம்
உலக்கை கொண்டு குத்துறோம்.
அரிசி ஆன பின்னாலே
அதனைச் சோறாய் ஆக்குறோம். - நாங்கள்
அதனைச் சோறாய் ஆக்குறோம்.
சோற்றை ஒன்றாய் தின்கிறோம்.
சோர்வை யெல்லாம் களைகிறோம்.
பேறாம் இறைவன் அருளுக்கு
நன்றி சொல்லித் தூங்கிறோம். - நாங்கள்
நன்றி சொல்லித் தூங்கிறோம்..
போதையின் தீது கேளீர்
மதியன்பன்
கஞ்சாவை அபினை உதடு
காதலித் திடுதல் தீதே...
நெஞ்சாற இதை யறிந்தும்
நித்தமும் அதனுள் வீழ்ந்து
நஞ்சினை உடம்பில் ஏற்றி
நாசமாய்ப் போகின்றாயே...
அஞ்சினேன் கண்டு. போதை
அணிகலன் வேண்டாம் தோழா!
பீடியை சிகரட் தன்னை
பிரியமாய் ஊதித் தள்ளி
தேடினாய் நோயை. இனியும்
தீயுடன் விளையாடாதே...
நாடியே தளர்ந்து உடலம்
நலிந்ததைக் கண்டு நாளும்
அடியே போனேன் அன்பா
ஆகையால் போதை வேண்டாம்
படிப் படி யாகத் தூளை
பாவித்து வந்தால் நீயும்
பொடிப் பொடியாகி ஓர் நாள்
பொசுங்கியே போவாய், கண்ணீர்
வடித்திடும் குடும்பம் தன்னை
வாழ்விலே நூறு கண்டேன்
துடிக்கிறேன் உன்னைக் கண்டு
தோழனே போதை வேண்டாம்
லேகியம் என்ற சாத்தான்
லேசிலே போக மாட்டான்
வேகியே உடம்பு நூலாய்
வெந்திடும், நடக்கும் பிணமாய்
ஆகியே போவாய் நாளும்
ஆடியே நடந்து செல்வாய்
நோகுதே நெஞ்சம் தோழா!
நோய் தரும் போதை வேண்டாம்.
மதுவெனும் சாராயத்தை
மாந்தியே நாளும் ஊர்க்குப்
புதினமே காட்டுகின்றாய்
புழுவெனத் தாழ்ந்து போனாய்
மதுவினைத் தொட்ட தாலே
மதியினை இழந்து விட்டாய்
இதுபெரும் தீது தோழா!
இன்னுமா போதை? வேண்டாம்
மழையது பெய்தால் கூட
மதுக்கடை ஓரம் நிற்றல்
பிழையெனச் சொல்வேன். போதை
பேய்களை விரட்டி வாழ்வாய்
களைகளை விட்டு வைத்தால்
காணியில் அறுவடைக்கு
பிழையது வருமே, போதைப்
பழக்கமெல்லாமே வீண்தான்
போதையின் தீதையெல்லாம்
போதனை செய்தேன் பாவில்
ஆதலால் கேட்போ ரெல்லாம்
அடுத்தவர் காதில் இதனை
உதிட வேண்டும் - இந்த
உலகமே உய்ய வேண்டும் .
முழு மதியின் முற்றுப் புள்ளி
மதியன்பன்
காயித் மில்லத் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் - அவர்
காலமான செய்தி கேட்டு கவலையில் ஆழ்ந்தோம்.
பாவி மனம் கதறியது துடித்து அழுதது - இந்த
பாருலகே கண்ணீரில் மிதந்தது துடித்தது .
காத்த நகர் மக்களுக்கு மதியென வந்தார் - நம்
கல்புகளில் நீங்காத ஒளியினைத் தந்தாh.;
பூத்த புகழ் கொண்டு இந்த பூமியில் வாழ்ந்தார் - இவர்
புவி மறைந்து போனதினால் புண்பட்டு போனோம்.
முஸ்லிம் சமூகம் கல்வியிலே பின் நின்ற வேளை!
முழு மூச்சாக முயன்றுழைத்து முன்னேறே வைத்தார்
இஸ்லாத்தின் உடையினிலே பள்ளிக்குச் செல்ல - இளம்
பெண்களுக்கு அனுமதியை அவர் பெற்றுக் கெடுத்தார்.
ஈழமணித் திருநாட்டு வானொலி தன்னில்
இன்றொலிக்கும் முஸ்லிம் சேவை அவர் பெற்றுத் தந்தார்
தாழமுக்கம், சூறாவளி அடித்திட்ட வேளை - அவர்
தயங்காது ஓடிவந்து பணிபல செய்தார்.
கபுறடியில் அன்னாரை வைத்துமே நாங்கள்
காசு கொட்டி நிறுத்தெடுத்தோம் தராசிலே வைத்து
நிறுத்த காசை அன்னார்கள் கல்விக்கு தந்தார்
நிமிர்ந்து நிற்கும் மில்லத் கூடம் அதற்கிங்கு சாட்சி.
இறக்கும் வரை சமூகம் சமூகம் என்றதனாலே - அவர்
இருக்கும் போதே மில்லத் எனும் பட்டத்தை பெற்றார்.
உறக்கமின்றி விழித்திருந்து சேவைகள் செய்தார் - அவர்
உணர்வை யெல்லாம் சமூகத்திற்கு அர்ப்பணம் செய்தார்.
வல்ல நாயன் அன்னாரின் பிழைகளைப் பொறுப்பான்
வளம் நிறைந்த சொர்க்கத்தினை அவருக்குக் கொடுப்பான்.
இரு கரமும் ஏந்தி நாங்கள் இறையை வேண்டினோhம்
இறைவா எம் பிராத்தனையை ஏற்றருள் புரிவாய்.....
அழகு நகை தேவையில்லை
மதியன்பன்
கண்களில் மையைப் பூசி
காலிலே நடையன் போட்டு
பின்னிய கூந்த லுக்கு
பிறை போல சட்டி வைத்து
முன்னிதழ் ஒவ் வொன்றுக்கும்
முளுச் சாயம் சிவப்புத் தீட்டி
அன்னமாய்ப் போகும் பெண்ணே
அழகல்ல அலங்கா ரங்கள்.
கொடியிடை என்று சொல்லி
கொடிபோல சாரி கட்டி
அடிவயிற்றைக் காட்டு கின்றாய்.
அத்தோடு நகங்க ளுக்கும்
வடிசாயம் தீட்டு கின்றாய்.
வட்டமாய் நெற்றி மேலே
மடிவிரல் பொட்டு வைத்தால்
மாறுமோ உன்றன் தோற்றம் ?.
கார்குழல் என்று சொல்லி
கடைப் பொருள் வாங்கி வைத்து
மார்பினை உயர்த்திக் காட்ட
மறை பொருள் அதிலே சேர்த்து
நார் எனத் தொங்கும் மின்னி
நாய் கட்டும் சங்கிலிகள்
சேர்த்திடல் அழகு அல்ல.
சிவந்த உன் மேனிமேலே...
பெண்ணவள் என்று சொன்னால்
பிறப்பிலே அவள்தான் அழகு.
பொன்னகை போட்டாலென்ன..
புது உடை தரித்தாலென்ன..
என்னதான் பூசிட்டாலும
எடுபடா இயற்கை யோடு.
பெண்களே அலங்காரங்கள்
போதுமினி விட்டி டுங்கள்.
சுறுட்டித் தள்ளிய சுனாமி
மதியன்பன்
பின்னோக்கிப் போனாயே பெருங்கடலே - விழி
பிதுங்காமல் வேடிக்கை பார்த்தோமே
முன்னோக்கிப் பாய்ந்தாயே பேய்போலே - நாம்
மூழ்கிவிட்டோம் தண்ணீரில் மீன்போல
இல்லமெல்லாம் இல்லையென்று ஆச்சே - எங்க
இடுப்புத் துணி தண்ணீரோடு போச்சே.
பல்பேரும் விட்டாரே மூச்சை - நெஞ்சு
பதறிடுமே சொன்னால் அப்பேச்சை
நிலமெல்லாம் பாளமென வெடிக்க - அன்று
நிலை கெட்டு எல்லோரும் துடிக்க
கடல்நீரை எல்லோரும் குடிக்க - இந்தக்
காவியத்தை எப்படி நான் படிக்க
எல்லோரும் தறி கெட்டு ஓட - சிலர்
ஸ்கூலில்; பள்ளிகளில் கூட
அகதி எனும் பட்டம் வந்து சூட - இந்த
அவலங்களை எப்படி நான்; பாட
செழிப்பான கடலோரம் சிதைய - எங்க
செல்வங்கள் கடலோடு புதைய
வேதனையை பாடுகிறோம் கதையாய் - கேட்டால்
வெந்திடுமே உங்களது இதயம்.
கூடார வாழ்க்கையிலே வந்து - குடி
நீர்கூட இல்லாமல் வெந்து
அடிபட்டு திரும்பி வரும் பந்து - போல
ஆனதனால் அழுகின்றோம் நொந்து
நிவாரணத்தைத் தேடித் தேடி அலைந்தோம் - நாங்க
நிம்மதியே கெட்டுப் போய் குலைந்தோம்
எறிபட்ட தேன் கூடாய்க் கலைந்தோம் - நாங்க
எப்படியோ எங்கெங்கோ தொலைந்தோம்.
ஊரிலுள்ள தலைவர்களே போங்க - பல
உதவிகளைப் பெற்றுவந்து தாங்க
ஒலமிடும் அவலங்கள்; நீங்க - உதவி
செய்திடுக எம் வாழ்வு ஓங்க
செல்வந்தர் எமைக் கண்டு உருக - பல
சிறப்பான உதவிகளும் பெருக
அல்லாஹ்வே உனதருளைத் தருக - இனி
என்னாளும் இன்பங்கள் வருக.
கல்விக்கு உயிர்தந்த காவியத் தலைவன் நீ
மதியன்பன்
அழிவில்லாச் செல்வ மிந்தக் கல்விக்காக
அயராது உழைத்துவரும் சமூகத் தொண்டன்
விழியெங்கள் ஹிஸ்புல்லாஹ். இன்று நீங்கள்
வெற்றி வாகை சூடி வந்தீர். உங்கள் வரவால்
ஒளிகாணும் நம் சமூகம். ஒரு போதும் தோற்றிடாது.
ஒப்பில்லாத் தலைமகனே! - உன்னை நாங்கள்
களிப்போடு வாழ்த்துகின்றோம்.! வல்ல அல்லாஹ்
கருணையினைப் பெற்று நீங்கள் என்றும் வாழ்க!
பாடசாலை மாணவர்கள் வெளியில் சென்று
பல்லறிவும் பெற்றுவர பஸ்ஸூம் தந்தாய்!;
கோடான கோடி ரூபா கொண்டு வந்து
குழந்தைகள் கல்விக்காய் பணிகள் செய்தாய்!
வீடிருந்து படிக்காத மாணவர் தம்மின்
விருப்பத்திற் கிசைவாக ஹொஸ்டல் தந்தாய்!
ஏடிருக்கும் கல்விதனைக் கற்றுக் கொள்ள
எழிலான நூலகமும் அமைத்துத் தந்தாய்.!;
சரியான வளங்களின்றி இருந்த எங்கள்
சரித்திரத்துப் பாடசாலை, இதனை நீங்கள்
விரிவாக்க எண்ணினீர்கள். அரசாங்கத்தின்
விருப்போடு தேசிய பாடசாலை யாக்கித் தந்தீர்!
அரிதான கட்டிடங்கள் இன்னும் இன்னும்
ஆய்வு கூடம் என்று பல அமைத்துத் தந்தீர்!
மரியாதை வைத்து நாங்கள் வாழ்த்து கின்றோம்!
மாமைந்தா ஹிஸ்புல்லாஹ் என்றும் வாழ்க.!
கல்வி கற்கும் மாணவரின் சுகாதாரத்தை
காலடிக்குக் கொண்டுவர சித்தம் கொண்டீர்.!
பல்சிகிச்சை நிலைய மொன்றை அமைத்துத் தந்து
படிப்போடு சுகாதாரம் வளரச் செய்தீர்.!
கல்லூரி வளாகத்தின் தேவைக்கேற்ப
கட்டங்கள் பலமாடி அமைத்துத் தந்தீர்!
எல்லையிலாச் சேவைகளைச் செய்த மகன்
என்றும் நீ வாழ்கவென்று வாழத்துகின்றோம்!
வளமாக வாழ வாழ்த்தும் : -
அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மற்றும் பெற்றோர்கள்.
கவிதை – மதியன்பன் - 01.06.2010
மர்ஹூம் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்கள் இறையடி சேர்ந்ததன் பின்னர் இடம்பெற்றநனைவுக் கூட்டம் ஒன்றில் படிப்பதற்காக எழுதிய பாடல்
மெட்டு - ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில்
கன்றினைப்போல..
மதியன்பன்
ஆல மரத்தின் ஆணிவேரு அமைச்சர் அஷ்ரப் இறப்புசெய்தி
அறிந்தவுடன் துடி துடித்துப் போனோமே.. பலர்
ஓல மிட்டு அழுவதையும் ஒப்பாரி வைப்பதையும்
இன்னு மின்னும் கண்டு மனம் அழுகிறதே..
இன்னு மின்னும் கண்டு மனம் அழுகிறதே..
புனர் வாழ்வு - புணரமைப்பு கப்பல் துறை அமைச்சராகி
புதிய தொரு சரித்திரத்தை தந்தீரே..! உங்க
பணிகளிலே வெற்றி கண்டோம்! பாதையிலே யுக்தி கண்டோம்
புனித ஜிஹாத் வரிசையிலே சென்றீரே...!
புனித ஜிஹாத் வரிசையிலே சென்றீரே...!
சட்டத்துறையில் வல்லவனாய்.. சமூகத்திலே நல்லவனாய்..
சமாதானத் தூதுவனாய் வாழ்ந்தீரே...! - புதிய
திட்டங்களைத் தீட்டி வைத்தீர் - தீயவற்றை ஓட்டிவைத்தீர்!
பூட்டி வைத்த விலங் கொடித்துத் தந்தீரே...!
பூட்டி வைத்த விலங் கொடித்துத் தந்தீரே...!
பாராளு மன்றத்திலே பங்காளிக் கட்சியமைத்து
சீராக நாட்டுப் பணி செய்தீரே! - இங்கு
தோணியென வந்தீரே ! - ஏணியென நின்றீரே
துடிப்பிழந்த ஓடமெனப் போனோமே..
துடிப்பிழந்த ஓடமெனப் போனோமே..
இலங்கை இனப் பிரச்சனைக்கு - இணக்கமான தீர்வு ஒன்றை
விளக்கமுடன் அரங்கினிலே சொன்னீரே ! - உங்க
உள்ளத்திலே கள்ள மில்லை - கயமையில்லை கபடமில்லை
வெள்ளை மனம் கொன்டவரே சென்றீரே!
வெள்ளை மனம் கொன்டவரே சென்றீரே!
பல்லினத்து மாந்தர்களும் பதறியழும் காட்சி கண்டோம்
பாதியிலே உலகை விட்டுப் போனீரே ! - எங்க
இரு விழியும் அழுகிறதே ! இதயம் ரெத்தம் வடிக்கிறதே
உருக்குலைத்து போனோமே அறிவீரோ...
உருக்குலைத்து போனோமே அறிவீரோ
உலக நாடு சுற்றிச் சுற்றி உதவிகளைப் பெற்ற வந்து
இலங்கை நாட்டு மக்களுக்காய் இறைத்தீரே..! இங்கே
வளங் கொளிக்கும் ஹாபரையும் வசதியுள்ள கெம்பசையும்
கிழக்கு மக்கள் நலங்கருதி தந்தீரே..
கிழக்கு மக்கள் நலங்கருதி தந்தீரே..
பிளவு பட்ட சமூகத்தினை பிட்டு தேங்காய் பூவெனவே
உறவாட வைத்தவரே மறைந்தீரே..! நீங்க
அமைத்துத் தந்த காங்கிரசும் ஐக்கிய முன்னணியும்
சமைத் தெடுக்கும் புதிய தொரு சரித்திரமே...
சமைத் தெடுக்கும் புதிய தொரு சரித்திரமே...
வல்லவனே அல்லாஹ்வே அமைச்சர் அஷ்ரப் அவர்களது
குற்றம் குறை பாவங்களைக் களைவாயே..! அவர்
கபுறு ஒளி காண்பதற்கும் சுவனம் சென்று வாழ்வதற்கும்
வல்ல அல்லாஹ் உன்னருளைச் சொரிவாயே...
வழமுடன் வாழ வாழ்த்துகின்றோம்
மதியன்பன்
பல்வளமும் சேர்ந்திலங்கும் எங்களுராம்
பாலமுனை எழிலிந்த கிராமம் தன்னில்
நல்லபணி செய்துழைத்து ஓடாய்ப் போன
நற்குணத்து நாயகனே! அப்துல் மஜீதே..!
கல்விதனை ஊட்டுவதில் இருபதாண்டு
காத்திரமாய் பணி செய்து ஓய்வு பெற்றீர்.
நல்லபணி செய்தவரே உங்களை நாம்
நன்றியுடன் வாழ்த்துகிறோம். வாழ்க!வாழ்க!
பள்ளியிலே பல்லாண்டு பேஸ் இமாமாய்
பணி செய்யும் காலத்தில் முஅல்லிமாக
துள்ளிவரும் சிறாருக்கு குர்ஆன் தன்னை
துல்லியமாய் ஓதவழி காட்டி நின்றீர்.
உள்ளவற்றை அடுத்தவர்க்குப் பங்கு வைத்து
உயர்ந்த பணி ஊருக்குள் காட்டி வைத்தீர்.
கள்ளமில்லா உளத்தோடு என்றும் நீங்கள்
காத்திரமாய் பணி செய்து வெற்றி கண்டீர்.
சேவைசெயும் காலத்தில் தூய்மையோடு
தேடிவரும் ஆட்களினைப் பாசத்தோடு
நேயமுடன் அரவணைத்து பணிகள் செய்தீர்!
நேர்மையினை விளக்காக ஏந்திக் கொண்டீர்.!
ஓயாமல் ஊரெங்கும் ஓடி யோடி
உதவிகளை எராளம் செய்து நின்றீர்!
தேயாது உங்களது சேவை என்றும்
தேடி வரும் நன்மைகள் கோடி உண்டு.
நல்ல பணி செய்தவரே! அப்துல் மஜீதே!
நலமோடு நீண்ட காலம் நீங்கள் வாழ-
வல்ல இறை உங்களுக்கு நல்ல நல்ல
வளங்களினை வாழ்வினிலே வழங்க வேண்டும்.
தொல்லை தரும் நோய் நொடிகள் ஏதுமின்றி
தூய இறை அருள் வந்து சூழ வேண்டும்.
எல்லையிலா இறையோனை வேண்டுகின்றோம்
என்றுமிங்கே நலமுடனே வாழ்க! வாழ்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக