வெள்ளி, 16 ஜனவரி, 2015

எங்கள் ஊர்

img_3011-small.jpg
தென்னம் ஓலைகளில்
வழுக்கி விளையாடும்
ஈரக் காற்று.
வாழை இலைகளில்
உட்கார முயன்று முயன்று
தோற்றுப் போய்
வரப்புக் குச்சிகளில்
வந்தமரும் கொக்குகள்,
ஓடையில்
தங்க மணலின் மேல்
வெள்ளி முதுகுடன்
துள்ளி விளையாடும் மீன்கள்,
அடர்ந்து வளர்ந்த
ஆலமர நிழலில்
அமைதியாய் துயிலும்
சர்ப்பக் குளம்,
பூமியின்
புன்னகைப் புல்லரிப்புகளாய்
எங்கும்
பச்சைகளின் மாநாடு,
பொறுங்கள்,
இதெல்லாம்
சங்க உரையில் இருப்பதல்ல
எங்கள் ஊரில் இருப்பது தான்.
0
நாற்பது கிலோ மீட்டர்
வேகத்தில் தடுக்கினால்
குமரி கடலில்,
இரண்டு கிலோமீட்டர் வேகத்தில்
வழுக்கினால்
கேரளா எல்லைக்குள்,
இங்கே தான்
பரந்த குன்றுகள் அடங்கியதால்
பரக்குன்று
என்று பெயர்சூட்டப்பட்ட
என்
கிராமக் குழந்தை இருக்கிறது.
0
குறைந்த பட்ச வசதிகள் கூட
இங்கே
குறையோடு தான்
கிடைக்கிறது.
போடப்படும் சாலைகள்
குறைப்பிரசவமாய்,
தரப்படும் மின்சாரம்
மின்மினி வெளிச்சமாய்,
வருகின்ற பேருந்துகள்
தூரத்து விருந்தாளியாய்,
எங்கள் ஊரில்
குறைந்த பட்ச வசதிகளுக்கே
குறை!
ஆனாலும்
இயற்கை அன்னை
கொடுத்திருக்கிறாள்
அதிகபட்ச அங்கீகாரம்.
pku1.JPG
மேலாடை இல்லாத
உழைப்பாளர்
மேனிகள்,
தொப்பை
என்றால் என்னவெனக் கேட்கும்.
தாவணி வழுக்காத
மங்கையர்
தோள்கள்,
வெட்கச் சேலைகளை
கண்களால் போர்த்தும்.
முட்டிக்கு மேல் என்பதே
கலாச்சாரத்தில் மேல்
என்னும் கலகப் புயல்
இன்னும் தாக்காத
கல்லூரிக் கன்னியர்கள்,
குளத்துக்குள்
தலைகீழ்ப் பாய்ச்சலில்
கலியுகத் தவளைகளாய்
டவுசர் வயதுகள்.
முக்கியமாக,
இரண்டு பர்லாங் நடப்பதற்குள்
நூறு வாய்கள் கேட்கும்
‘நல்லா இருக்கியா பிள்ளே…’
இதுதான் எங்கள் மனிதரைப்பற்றி
தரமுடிந்த
தரப்பட்டியல்.
church.jpg
அறியாமையின் வரைபடத்தில்
இருளாய் இருந்த
இந்தப் பிரதேசத்தை
ஜேம்ஸ் தொம்மர் எனும்
ஜெர்மன் வெளிச்சம் வந்து
தூர்வாரி தூய்மைப்படுத்தியது.
கல்விக்கூடங்கள்,
ஆலயங்கள்,
ஆலைகள்,
என
வாழ்வுக்கான வரைகோலை
அறிமுகப் படுத்தியது.
செங்கல் சூளைகளிலும்
முந்திரி ஆலைகளிலும்
ஆழக் குழி தோண்டி நடப்பட்ட
ஆட்கள்
கல்வி என்றதும் முதலில்
தள்ளியே ஓட,
அவர்களை இழுத்து வர
கோதுமை மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.
நான் இன்று
கவிதை எழுதுவதற்கும்
அந்த
வெள்ளை மனிதன்
என் பெற்றோருக்கு
பேனா உதறக் கற்றுக் கொடுத்தது தான்
காரணம் !
கடந்த ஆண்டு
அந்த தலை சாய்ந்த போது
எங்கள்
ஊருக்குள்
முதன் முதலாய்
கண்ணீர் அருவி பாய்ந்தது.
0
img_3066-small.jpg
கவிதையாய்க் கிடக்கும்
என் கிராமத்தில்
பிறந்தோருக்கு
இலவச இணைப்பாய்க் கிடைக்கிறது
மலையாள மொழி.
வெள்ளைப் பாதிரியாரும்
காவிச் சாமியாரும்
ஒரே மேடையில்
அமர்ந்து பேசும்
தேவாலயங்கள்
என்னையும் பேச்சாளனாக்கிப் பார்த்தது.
கர்ணனா கும்பகர்ணனா ?
செய்நன்றியில் சிறந்தவன் யார்
என
சாஸ்தான் கோயிலிலும்,
சிலுவை காட்டும் வழி என
கிறிஸ்தவ ஆலயத்திலும்
அடுத்தடுத்த நாட்களிலேயே
பேசமுடியும்
அடிவாங்காமல்.
மத நல்லிணக்கத்தின்
இதமான காற்று
எங்கள் வீதிகள் தோறும்
வீசிக் கொண்டே இருக்கிறது
இன்றும்.
0
சங்கிலிப் பேய்
நள்ளிரவு தாண்டிய
ஏதேனும் ஓர் ஜாமத்தில்
சங்கிலி இழுத்து ஓடுவான் என்றும்,
ஊரோர ஆலமர
அடிவாரத்தில்
அமாவாசை இரவுகளில்
பேய்களின்
பொதுக்கூட்டம் நடக்கும் என்றும்,
கொல்லைப் பக்கத்தில்
ராத்திரி வேளைகளில்
எட்டிப்பார்த்தால்
எச்சில் பேய்கள்
கட்டிக் கொள்ளும் என்றும்,
பாட்டிகள் சொல்லும்
கதைகளெல்லாம்
மின்சாரம் வந்தபின்
கதைகளாகவே போயின.
100_1493-small.JPG
கிராமத்தின் அழகையும்
கிராமத்தானின் மனதையும்
எனக்குள்
ஆழமாக அடித்திறக்கியவர்
என் அப்பா.
சமீபகாலமாக
என்னால்
என் கிராம அழகுகளை
அள்ளிப் பருக முடிவதில்லை.
கண்களுக்குள்ளே
படுத்துக் கிடக்கிறார்
அப்பா.
என் பாதப் பதிவுகளுக்குக்
கீழே
அவரது
உறைந்து போன சுவடுகள்
உறங்கிக் கொண்டிருக்கின்றன.
0
எங்கள் ஊர்
இன்னும் இருக்கிறது
அதன்
அழுத்தமான அடையாளங்களை
அவிழ்த்தெறியாமல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக