செவ்வாய், 16 நவம்பர், 2010

பீச்சாங்கை

tamil workers001
எது சோத்தாங்கை
எது பீச்சாங்கை
மலம் அள்ளும்
தோட்டித் தாய்க்கு..?
‘ஆசிட் ‘ ஊற்ற
தெரிந்தவள்தான்
ஆனாலும்
அரசியலில் அவளில்லை..!
கழிப்பறைகளில்தான்
வேலை என்றாலும்
கழிக்கும் வேலை மட்டும்
அவளுக்கு கழிப்பறைகளில்
கிடையாது..!
மூக்குப் பிடிக்கத்
தின்று கழித்ததை
மூக்கை பிடிக்காமல்
வெளியேற்றுபவள்..!
சோற்றில்
கை வைப்பதற்காக
தன்
சோத்தான்கையை
இழந்தவள்..!
அத்தனை
ஷாஜகான்களும்
அவளுக்காய் கட்டியது
‘பீங்கான் ‘ தாஜ்மஹால்தான்..!
எந்த ஒரு மிருகத்தின்
கழிவைக் கூட
மற்றொரு மிருகம்
அகற்றும் அவலமில்லை
மனித மிருகத்தை தவிர..!
அவளுக்காய்
திறக்கும் ஒரே கதவு
கழிப்பறையில்
மட்டும்தான்
இருக்கிறது..!
அவள்
தேடிக்கொண்டேயிருக்கிறாள்
நம் கழிவுகளில்
தொலைந்துபோன
அவள் வாழ்வை
மட்டுமல்ல,
மனிதர்களையும்தான்..!

1 கருத்து:

  1. அன்பு நண்பருக்கு நான் எழுதிய பீச்சாங்கை கவிதையை வெளியிட்டுள்ளமைக்கு நன்றிகள். கவிதையின் கருத்து பரவுவதில் மகிழ்ச்சி http://yoh-kavithaigal.blogspot.com/ என்பது என் வலைப்பதிவு வெளியிடும் நண்பர்கள் இதற்கு லின்க்கும் கொடுத்தால் உதவியாக இருக்கும். விடியல் தளத்தின் தள முகவரி என்ன? அதற்கும் லிங்க் கொடுக்கலாமே!

    பதிலளிநீக்கு