செவ்வாய், 16 நவம்பர், 2010


அடிமை வாழ்வும்.. ஆண்டவன் மகிமையும்..!

brahmin_270
தன் பேரழகினால்..
நம்மை கொள்ளையடிக்கும்
கோயில் சிற்பங்களின்..
எல்லையற்ற இரசிகன் நான்..!
ஒன்று பரம்பொருள்
என்று உணர்ந்தால்..
எதற்கு இத்தனை தெய்வங்கள்..?
சில சில்லறைகள் -
சில்லறை சேர்க்கத் தானா..?
தீபத் தட்டை ஏந்தி நிற்கும்
அய்யர்-
வயிற்றைக் காட்டி நிற்கிறார்
வெளிச்சப்பிச்சை…1
உன் ஆகம விதிகளால்
ஆவது ஒன்றுமில்லை..!
உழைக்கும் மக்களை
உருக்குலைத்த..
தீண்டாமையைத் தவிர..!
ஆறு காலப் பூசை..
எட்டுக்காலப் பூசை
என்பதெல்லாம்..
நீயென்னை-
எத்தனை முறை ஏமாற்றுகிறாய்..?
என்பதன் எண்ணிக்கை மட்டுமே..!
தீட்டுப்பட்டவளை மறுக்கும்
சிலைகளுக்குத் தெரியாது..!
மானிடர் பிறப்பின்
மகத்துவம்
மாத விலக்கால் நிகழ்கிறது
என்று..!
லிங்கத்தைக் கும்பிடுவாய்..!
யோனிக்கு இல்லை
லிங்கத்தின் மதிப்பு..!
படைப்பின் -
பேராற்றலை மறுக்கும்
ஆணாதிக்கத்தின் பெருங்கூறு..!
உழைக்கும் மக்களின்
எல்லா சக்தியையும்
உறிஞ்சிக்கொண்டு..
“சக்தி வழிபாடு” நடத்துகிறாய்..!
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒற்றைக்குறியீடாய்
நிற்கிறது
சங்கிலியால் கட்டப்பட்ட
யானை..!
வழிபாட்டை வழிமறிக்கும்
நந்தியான பசுவை..
வெட்டித் தின்றான் பறையன்
பார்ப்பனனுக்கு
பாலும் நெய்யும்
கிடைக்காத படி..!
காதலர்களின்-
சந்திப்பு நிலையங்களாக இருக்கும்
கோயில்கள்
சாதிகளின் உற்பத்தி நிலையமும்
ஆதலால்
காதல் நிறைவேறாததன்
காரணங்களாகவும் உள்ளன..!
கோயிலுக்குள்
காவல் நிலையம்..!
உலகைக் காப்பவனுக்கு
உள்ளூர்க் காவலர்கள்
எந்திரத் துப்பாக்கியுடன்
பாதுகாப்பு..!
அச்சம் என்பது
ஆண்டவன் ஆனால்..
வீரம் என்பது
பகுத்தறிவின் வெளிப்பாடு..!
- அமீர் அப்பாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக