வெள்ளி, 22 அக்டோபர், 2010

இடர் நிலம்


- தீபச்செல்வன் ----------------------------------------

01
டெனிஷா என்னைப் பார்த்துக் கையசைக்காதே!
நிலத்திற்காய் தவிக்கிற உனது முகத்துயர்
கைவிடப்பட்ட சனங்களின் தோல்வியாய் வழிகிறது
நான் வெகு தூரத்திற்குச் செல்ல முடியாது
இன்றும் வழி மறிக்காததால் உன்னைப் பார்க்க முடிந்தது
மீண்டும் மீண்டும் இடர் நிலத்தில் ஒலிக்கும்
உன் குரலை என்னால் கேட்க முடியாதிருக்கிறது.

அந்த தீர்வு நாள் வருகிறது
முட்கம்பிகளை உடைத்துக் கொண்டு
உன் காணிக்குள் செல்லப் போகிறாய்.
வா! நிலத்தை அள்ளிச் செல்பவர்களின்
கைகளை தட்டிப் பறித்தெடுப்போம்!

பாம்புகளும் பூச்சி பூரான்களும்
உனது கூடாரத்தை சுற்றி வளைக்கின்றன
டெனிஷா எனக்கும் புன்னகைப்பதற்கு கற்றுத்தருவாயா?

நான் ஒரு பயங்கரவாதி என்பதை
டெனிஷா நீ அறிவாயா?
இந்தப் பயங்கரவாதியால் பாதுகப்பிற்கு அச்சுறுத்தல்
என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்
ஆனாலும் நான் இந்தத் தெருக்களால் செல்லுவேன்
இடர் படிந்த நிலத்தில் துயருடனிருக்கிற
உன் போலான குழந்தைகளை பார்க்க வேண்டும்.

சனங்களை மீண்டும் பெயர்ந்து செல்லச் சொல்லும்படி
அறிவிக்கப்பட்ட பொழுது
டெனிஷா மறுத்தபடி அழுதாள்
இந்த நிலம் அரசனால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது
காடுகளையும் மண்ணையும்
தின்று கொண்டிருக்கும் அரசன்
இந்த நிலத்தின் மேலால் பறந்தபடியிருக்கிறான்
குழந்தைகள் நிலமின்றி என்ன செய்யப் போகின்றனர்?
இன்னும் பறவைகள் திரும்பவில்லை
காவலின்றி கிடக்கும் நிலம் யாரின் கையில் இருக்கிறது
டெனிஷா முதலான குழந்தைகள் கேட்கத் தொடங்குகின்றனர்.


02
முன்பொரு காலத்தில் இந்த நிலம் எங்களிடமிருந்தது
குழந்தைகள் மகிழ்ந்திருந்தனர்
இந்த நிலத்தை போராளிகள் காவல் செய்தனர்.

நவீன படைகளின் தளபதியான புத்தர் படையெடுத்து
அரசமரங்களில் ஏறி
நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பொழுது
சனங்களின் நிலத்தில் அரசனின் நிழல் விழுந்து கொண்டிருக்கிறது
அரசன் கோயில்களை தின்கிறான்
அரசன் குளத்தை குடிக்கிறான்
அரசன் காடுகளை மேய்கிறான்
சாம்பல் கால்களை அணிந்து
நமது நகரங்களுக்கு வாளுடன் வந்து செல்கிறான்.

கொலை செய்து படைத்து வைத்திருக்கும்
என் முகத்தை அவர்கள் பல கோணங்களில் கமராக்களில்
பிடித்து வைத்திருக்கிறார்கள்
எல்லா வார்த்தைகளும் ஒரே தீர்ப்பைத்தான் பரிசளிக்கின்றன
நான் என்னை அழித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பயங்கரவாதி
இரவு நகரத்தில் இறங்கியிருந்த பொழுது
காதுகளில் உனது குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது
உனது காணியை நோக்கி மிதிவெடிகளுக்குள்ளால்
ஊடறுத்துச் செல்ல உன்னுடன் நானும் வருகிறேன்.
டெனிஷா உனக்கும் எனக்கும் ஒரு கூடாரத்தைகூட தராதிருக்கிறார்கள்
அழகான வீடு என்பது எப்படியிருக்குமென
நீயோ நானோ அறிந்திருக்கவில்லை
கூடாரங்களும் மரங்களும் பற்றைகளும் மண்ணுமாய்
காலத்தை கழிக்கிறோம்.
இடர் நிலத்தில் இன்னும் ஏன் இப்படி துயரம் நிகழ்கிறது?
______________________
புகைப்படம் பொன்னகர் குழந்தை டெனிஷா

போர்நிலம்

o தீபச்செல்வன் ----------------------------------------

வெறும் நிலத்திற்கு பொம்மைகள் திரும்புகின்றன
பிரயாணிப்பவர்கள் எலோரது கைகளிலும்
பெருத்த வண்டிகளிலும்
அவர்களிடமுள்ள அகலமான குறுக்குப் பைகளிலும்
நிலத்தை அள்ளிச் செல்லுவதாக
வயது முதிர்ந்தவர்கள் பிதற்றுகிறார்கள்.

போர் நிலத்தில் குழந்தையின் பொம்மை
இறந்து சிதைவுகளுடன் கிடக்கிறது
சொல்லப்பட்டிருக்கிற தாயைக் குறித்தோ
தன் தந்தையைக் குறித்தோ
எதுவும் கேட்காமல் மறந்துபோன குழந்தை
தன் பொம்மை தேடி பாதியாய் மீட்டிருக்கிறது.

தரப்பால் துண்டுகளுடன்
சில பூவரசம் தடிகளையும் எடுத்துக்கொண்டு
பொம்மை வீடுகளை
குழந்தைகள் மூட்டிக்கொண்டு அதனுள் இருக்கின்றனர்
சுவர்களோ தடுப்புக்களோ இல்லாத
பொம்மை வீட்டுக்குள்
காற்றும் புழுதியும் வெம்மையும்
நுழைந்து காலச் சித்திரமாய் படிந்திருக்கிறது.

பெருமழையின் ஈரம் ஊறி முட்டிய
நிலத்தில் கைகளால் மண் அணைத்தபடி
சேற்றில் குளிக்கும்
குழந்தைகளின் கைகளிலிருக்கிற பொம்மைகளின்
வீடுகளுக்காக போர் தொடங்குகிறது.

யுத்தம் பிடித்து அழிவுகள் நிறைந்துபோய்க் கிடக்கிற
நிலத்தின் வசனையை குழந்தைகள் முகர்கின்றனர்
வெடிபொருட்களின் புகை
இருதயத்தை ஊடறுத்துச் செல்கிறது
நஞ்சூறி நீலமாகிய தண்ணீரை குடித்து
குழந்தைகள் பசியாறுகின்றனர்.

தங்களைத் தாங்களே கொலை செய்யும் குழந்தைகளின்
கையில் உடைந்த பொம்மைகளை தவிர ஒன்றுமில்லை
போர் தின்று
நஞ்சுண்ட நிலத்தில் குந்தி இருப்பதற்காய் இன்னும் போர் நடக்கிறது.
_________________________

புகைப்படம் : விசுவமடுவில் பாதியாய் ஒரு பொம்மை இறந்துகிடக்கிறது

அம்மா திரும்பியிருக்கிற ஆற்றங்கரை காணி நிலம்


o தீபச்செல்வன் ----------------------------------------

புற்களும் பற்றைகளுமாய் கிடக்கும் நிலத்தில்
வீடு கரியிருக்கும் உருக்குலைந்த காணியில்
அம்மாவின் களைப்பு தணலூட்டப்பட்டிருக்கிறது
கடவுள்கள் எங்களை கைவிட்டதாய்
ஒரு நாள் உணர்ந்தபொழுது காணி நிலம் தரும்
பராசக்தியிடம் அம்மா உணவிழந்து பசியிருந்தாள்
ஆற்றங்கரையில் கிடக்கும் இந்தக் காணிநிலத்தை
பராசக்தி ஏன் கைவிட்டாள்?
யுத்தக் குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனைக்காலத்தின்
எந்தச் சித்திரவதைகளையும்
பகிரப்போவதில்லை என்று அம்மா ஒப்புதலளித்திருக்கிறாள்.

வீடு திரும்பியிருக்கிறோம் என்பதை
இந்த ஆற்றங்கரைப் பறவைகள் கொண்டாடுகின்றன
ஒரு நாள் ஆறு பெருக்கெடுக்கையில்
என்னை கைகளில் அம்மா நிரப்பி வைத்திருந்தாள்
என்னை இழுத்துச் சென்றுவிட்டு வேர்களால் கரமளித்து
கரையேற வைத்தது ஆறு.
மூடியிருக்கும் ஆற்றங்கரையில் சிதைவடைந்த
கரைகளைக் காண முடியவில்லை.
கனவுக்காக சிந்திய அம்மாவின் உதிரம்
ஆற்றங்கரையில் படிந்திருக்கிறது.

கிளைகளை இழந்த நாவல் மரத்தில்
ஊஞ்சல்களை கட்டி தங்கை எப்படி ஆடப்போகிறாள்?
பட்டுப்போகாத அதன் வேர்களை தடவும் அம்மாவின் புன்னகையில்
அது ஆதி நிழலை பெய்கிறது
நாவல் மரத்தின் கீழாய்
நாவற்பழங்களை பொறுக்கும் குழந்தைகளை காணவில்லை.
சுவர்களை தேடும் அம்மா
உக்கிய கடவுகளின் புகைப்படங்களை எடுக்கிறாள்
அண்ணாவின் புகைப்படம் அழிந்து போயிருந்தது.

இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதானி மரம்
மற்றும் சில பூவரச மரங்கள்.
பாதி நிழலை வைத்திருக்கிறது மருதமரம்.
சாம்பல் சுவடுகளின் மேலாய் நாட்டப்பட்டிருக்கிறது புதிய கூடாரம்.
வானத்தின் காயம் ஆறிவிடும் என அம்மா நம்புவதைப்போல
மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள்.
தாழ்நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன.

கனவுகளின் பாத்திகளும் வரம்புகளும் உருக்குலைந்துபோக
எறியப்பட்ட பனை விதைகள் வடலியாய் வெடித்திருக்கின்றன
எங்கள் புன்னகை ஆற்றங்கரையை விட்டு
பெயர்ந்துபோன எல்லாப் பறவைகளையும் அழைத்துக்கொண்டிருக்கிறது.
__________________________
09.05.2010, இரத்தினபுரம், கிளிநொச்சி.
“எனது அம்மா மற்றும் தங்கை கடந்த வருடம் மே 16ஆம் நாள் இறுதி யுத்தத்தின் முடிவில் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்ட யுத்தத்திற்கான தண்டனைகளை முடித்துக் கொண்டு 09.05.2010 அன்று நாங்கள் வாழ்ந்த காணி நிலத்திற்கு திரும்பியிருக்கிறார்கள்”
புகைப்படம் : இரத்தினபுரத் தாழ் நிலப்பகுதியில் இருக்கிற எனது கூடாரம். (செப்டம்பர்) இம்மாதம் பெருமழைக்கு பாதுகாப்புத் தேடிக் கட்டப்பட்டது.

கனவு சிதைக்கும் இரகசியக் கொலையாளிகளால் வெட்டி சாய்க்கப்பட்ட தூபியும் கல்லறைகளும்

o தீபச்செல்வன் ----------------------------------------


பசியுடன் அலைபவனின் கனவுகள் நிரப்பட்ட அந்த தூபியை
கனவைச் சிதைக்கும் இரகசியக் கொலையாளிகள் சிதைத்து
அகழ்ந்து கொண்டுபோயிருக்கிறார்கள்.
அவன் அன்று முதல் தன்னை பசியுடன் எரித்தபடி
இந்தத் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறான்.

கல்லறைகளுக்கு அஞ்சி அவற்றை
அகழ்ந்து சிதைக்கும் அந்தக் கொலையாளிகள்
இந்த நகரத்தில் உலவுகின்றனர்.
நான் இன்று கனவு சிதறி அள்ளிக் கொண்டு செல்லப்பட்ட
அந்த பசி நிலத்திற்குச் சென்றேன்.
அவர்கள் எங்கள் கனவுகளை கொலை செய்வதற்காக
இரவுகளில் அலைவதாக
குழந்தைகள் அஞ்சுகின்றனர்.

அங்கு குருதி கொட்டியிருக்கிறது
கற் கோபுரத்தை அகற்றினோம் என்று
அந்தக் கொலையாளிகள் மாற்று உடைகளை அணிந்திருந்தபடி பேசுகின்றனர்.
அவன் பசியினால் தன்னை வருத்திய நாட்களில்
கோரியவைகளை
இந்த இனக் கொலையாளிகள்
சிதைக்க முற்படுகின்றனர்.
பசியினால் எரிந்து கொண்டிருந்த
விளக்கை சிதைத்து அகற்றி ஓரமாய்ப் போட்டிருக்கிறார்கள்.

அடங்காத ஆன்மாக்கள் தங்கியிருக்கும்
கல்லறைகளும் வெட்டி சிதைக்கப்பட்டுள்ள அதே நாட்களில்
ஒரு வெளிச்சத்தை
கொலை செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.
வெட்டி சாய்க்கப்பட்ட தூபியும் கல்லறைகளும்
தாய்மார்களுக்கு
பிள்ளைகள் உறங்கும் தொட்டில்களாகத் தெரிகின்றன.
அவர்களின் தூக்கம் கலைத்து தவிக்க வைத்து
அவர்களை கொலை செய்து
தாய்மார்களை மீளவும் துக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

பசியுடன் இருப்பவனின் பசி நிரம்பிய தூபியில்
அன்று சில பறவைகள் வந்து அமர்ந்திருந்தன.
யாரும் வெளிச்சம் ஏற்ற அனுமதிக்கப்படாதபடி
அஞ்சும் காலத்தால் அவன் கைவிடப்பட்டிருந்தான்.

பணத்தை அள்ளும் வணிகமும்
அடையாளத்தை அழிக்கும் வெறியும் நிரம்பிய உங்களிடம்
எங்கள் கனவுகள் குறித்து நிலவும் அச்சங்களை அவன் அறிவான்.

எங்கள் தெருக்களின் ஊரின் வெளிச்சங்ளை அணைக்க முற்பாடதீர்கள்.
கொலையாளிகளே !
பசியுடன் உடம்மை எரித்துக்கொண்டு அலைபவனை
இதே தெருவில் நீங்கள் சந்திக்கக்கூடும்.
அவன் அன்று முதல் தன்னை பசியுடன் எரித்தபடி
இந்தத் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறான்.
___________________
நன்றி : ஆதவன்

நிலக்கனவு

o தீபச்செல்வன் ----------------------------------------

01
கைநழுவிக் கொண்டிருக்கிற நிலத்தில்
இறப்பர் கூடாரங்கள் நெருங்கி எரிய
நாள் முழுதும் தீயில் நனைந்துகொண்டிருக்கிறோம்
மலத்திலும் சோற்றிலும் வந்தமரும்
இலையான்களை துரத்த இயலாதிருக்கையில்
எங்கள் காணிகளுக்குச் செல்லும் வீதிகளை
திருப்பி விடுகின்றனர்
நாங்கள் வெட்டிய வீதிகள் மூடுண்டு கிடக்க
புதிய புதிய வீதிகள் புதிய புதிய முகாங்களுக்குச் செல்கின்றன.

நாங்கள் மெலிந்து விட்டோம்
நிலத்திற்காய் குரல்கள் அழுகின்றன.

பார்க்கக்கூடிய தூரத்தில் குழந்தைகளின் காணிநிலம் தெரிகிறது
மிதிக்கப்பட்ட தென்னைகளின் பூக்களையும்
இளம் குருத்துக்களையும் ஓலைகளையும்
நாம் பார்த்திருக்க களவாடிச் செல்கிறார்கள்.

கற்களையும் மணலையும் அள்ளிச் செல்லும் வண்டிகள்
நமக்கு முன்னால் ஆறுகின்றன
நாங்கள் மிகவும் வடிப் போயிருக்கிறோம்.02
மீண்டும் மீண்டும் நிலத்தில் மிதிவெடிகள் முளைக்கின்றன
நிலா வராதிருக்கிற இரவில்
எங்கள் காணிகளில் எண்ணிக்கையற்ற
மிதிவெடிகள் முளை விட்டிருக்கின்றன
மிதிவெடி மரமாகி மிதிவெடிகள் காய்த்துக் கொட்டுமா என
குழந்தைகள் கேள்விகளை இரவில் கேட்கின்றனர்.

விமானங்கள் பறப்பதற்காவும் அவை வந்திறங்குவதற்காகவும்
பணம் அரைக்கும் ஆலைகள் திறப்பதற்காகவும்
நாங்கள் மீண்டும் மீண்டும் அகதிகளாக்கப்படுகிறோம்
இந்த நிலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
நிலத்தில் உறங்குவதற்காய் குழந்தைகள் அழுகின்றனர்.

இந்தக் கிராமங்களில் பிறந்ததிற்காய்
வெயில் இறங்கியிருக்கும் வெளியில்
குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்
இந்த முகாம் தனது வாசலை அகலமாய் திறந்தேயிருக்கிறது.03
துப்பாக்கிளோடான இராணுவங்களற்ற
முகாமின் வாசலின் ஊடாக நாங்கள் வெளியேறி எங்கே செல்வது?
இந்த முகாங்களிலும் அந்த முகாங்களிலும்
திறக்கப்பட்டும் மூடப்பட்டும்
நிலத்திற்கான வழிகள் தடுதடுக்கப்பட்டிருக்கின்றன.
பிறந்த நிலத்தில் சிறைவைக்கபபட்டவர்களாயிருக்க
எங்கள் காணிகள் மிக சமீபமாயிருக்கின்றன
மிதிவெடிகளை தூக்கி எறியும்
குழந்தைகள் தயாராக முன்னால் நிற்கின்றனர்.
வீட்டுக்குச் செல்லத் துடிக்கும் இந்தக் குழந்தைகள்
குண்டுகளுக்கோ துப்பாக்கிச் சூடுகளுக்கோ அஞ்சாதிருக்கின்றனர்
எந்த வாகனங்களிலும் ஏறிச் செல்ல மறுக்கின்றனர்.

கனவு நிலத்தில் பேய்களின் நிழல் படர்ந்து ஆக்கிரமிக்க முயல்கிறது
குழந்தைகளின் நிலக்கனவு தகிக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருக்க
பூர்வீக நிலத்தை அள்ளிச் செல்லும் பொழுது
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொள்வதா?
______________
07.08.2010

யாருடைய எலும்புக்கூடுகள்?


o தீபச்செல்வன் ----------------------------------------

மலக்குழிகளிலிருந்து தீர்க்கப்பட்ட எலும்புக்கூடுகள்
மூடிகளின் மேலால் வெளித்தள்ளுவதை
முதலில் குழந்தைகளே பார்த்தனர்
இவை உயிர் பிரிந்தலையும் யாருடைய எலும்புக்கூடுகள்?
சடலங்களுடன் கட்டிப் அடக்கம் செய்யப்பட்ட
பலகைத்துண்டுகளிலும் படிக்க முடியாத குறிப்புக்கள் இருக்கின்றன
சடலங்களுடன் மீட்கப்பட்ட
பனை மட்டைகளில் ஒலி பிரிந்த வார்த்தைகள் ஒட்டியிருக்கின்றன
அடக்கி மலக்குழிகளில் தள்ளப்பட்ட பொலித்தீன் பைகளின்
மூலைகளில் அடங்கியிருக்கும்
உயிரை தேடும் தாய்மார்கள் வந்திருக்கின்றனர்.

கழுத்தில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பிகளில்
இறுதி வார்த்தைகளை அவர் நிரப்பி விட்டுப் போயிருக்கிறார்கள்
கையில் இலக்கத்தகடுகள் கட்டிய கறுப்பு கயிறுகளில்
இருந்த முடிச்சுக்களினிடையில் துயர்க் காலம் படிந்திருக்கிறது
வரிச்சீருடையின் காற்சட்டை மட்டும்
அணிந்திருக்கும் இரண்டு எலும்புக்கூடுகளில்
அழிக்கப்பட்ட தாய்நிலத்தின் வரைபடம் கீறப்பட்டிருக்கிறது
கிணற்று வாளியில் தன் பிள்ளையின்
கண்களை ஒரு தாய் எடுத்து வைத்திருக்கிறாள்
ஏன் சடலங்கள் மலக்குழிக்குள் ஒளிக்கப்பட்டன?

உக்கிப்போகாத சதைத் துண்டுகள்
பெருங்கனவின் எச்சங்களாய் உருந்து கொட்டுகின்றன
கால்சட்டை மட்டும் அணிந்த ஒரு எலும்புக்கூட்டில்
ஒரு பெண் தன் கணவனின் மடியாத புன்னகையை தேடுகிறாள்.
பிடவை சுற்றப்பட்டிருக்கும் எலும்புக்கூட்டில்
ஆழமாக விழுந்திருக்கும் கீறல்களை எல்லோரும் எண்ணுகிறார்கள்
நிர்வாணமாயிருக்கும் எலும்புக்கூட்டில்
குழந்தைகள் தங்கள் தந்தை தாய்களை உணருகின்றனர்
அடையாளங்களாக பொலித்தீனில் உக்காது படிந்திருக்கும்
காயங்களையும் வீக்கங்களையும்
ஆற்றத் துடிக்கின்றனர் தாங்காதிருக்கிற தாய்மார்கள்
மலக்குழியில் சடலங்கள் நிறைத்து மகிழ்பவர்கள் யார்?

ஆக்கிரமிப்பாளர்களால் மூடப்பட்ட கிணற்றுக்குள்
உயிர் வதைபட்ட மணம் கிளம்புகிறதை நான் பார்க்கிறேன்
அவர்கள் இறங்கி கைகளை கழுவி மூழ்கிய கிணற்றுக்குள்
தண்ணீரில் இரத்தக்கறைகள் மிதக்கின்றன என தாய் சொல்லுகிறாள்
இடிபாடடைந்த சுவர்க்கரைகளில்
சித்திரவதையின் கோடுகள் நிறைந்த
எலும்புக்கூடுகளின் தலைகள் இறுக்கமாக மூடுண்டு கிடப்பதையும்
குழந்தைகள்தான் பார்த்தனர்
ஏன் ஏலும்புக்கூடுகள் வெளியில் வருகின்றன?

எலும்புக்கூடாகும் நகரத்தில்
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொண்டு வாருங்கள்
இவை தேடியலைந்து கொண்டிருக்கும் யாருடைய எலும்புக்கூடுகள்?
___________________________

04.06.2010

ஒளிப்படம் : கஜானி

பெருநிலம் : ஆதிக்கத்தின் அபாயம் படிந்திருக்கிறது


o தீபச்செல்வன் ----------------------------------------

அடர்த்தியாய் வளர்ந்துபோயிருக்கிற
பற்றைகளுக்குள் ஆதிக்கத்தின் அபாயம் படிந்திருக்கிறது .
குழந்தைகள் தூரத்திற்கு சென்று விளையாட வேண்டாம்
என்று அறிவுறுத்தும்
தாய்மார்கள் வேலிகளை அடைக்கவும்
கூடாரங்களுக்கு கதவுகளை பூட்டவும் முயல்கின்றனர்.

விட்டுச் சென்ற பொருட்கள் எங்கும் சிதைந்து கிடக்கின்றன.
மெலிந்து ஒடிந்து
வந்து சேரும் பொழுது முதலில் நிலத்தில்
விழுந்து ஆற அழவேண்டும் போலிருக்கிறது.
கைவிடப்பட்ட சனங்களின்
நிலத்தில் எங்கும் ஆதிக்கமும் ஆக்கிரமிப்புமே
நடப்படுகின்றன.
முன்பொரு காலத்தில் அழகாயிருந்த நமது நகரம்
புதிய வடிவத்தில்
சூறையாடப்படும் புத்திகளால் வார்க்கப்படுகிறது.
குழந்தைகள் பற்றைகளுக்குள் படிந்திருக்கும்
அபாயங்களை கிளற முற்படுகின்றனர்.

இது எனது நகரம் இல்லைப் போலிருக்கிறது.
இங்கு வந்திருப்பவர்கள் எனது மனிதர்கள் இல்லைப்போலிருக்கிறது.

காலம் எங்களை இழுத்தடித்து ஏமாற்றியிருக்கிறது.
ஒன்றுமில்லாத நிலத்தில்
சூறையாடப்பட்ட நமது பொருட்களை இழந்து
நிவாரணத் தகரங்களில் வேகிக்கொண்டிருக்கிறது
மீளத் தொடங்குகிற வாழ்வு.
முகாங்களில் கட்டி வைத்திருந்த மூட்டைகளுடன்
இன்னும் இன்னும் சனங்கள் வந்திறங்குகின்றனர்.
பதிவுகளும் புகைப்படங்களும்
பேரூந்துகளும் என்று
எல்லாவற்றிலும் அலைச்சலும்
துயரமும் வழங்கப்படுகிறது.
கடும் சித்திரவதைகளுக்குப் பின்னால்
அவர்கள் தங்களை தகரங்களால் மூடிக்கொள்கிறார்கள்.

கண்ணிவெடிகளை பணியாளர்கள் பிடுங்கிக்கொண்டிருக்கும்
பகுதியை தாண்டி மாடுகள் செல்கின்றன.
சிதைந்த சைக்கிள்களின் பாகங்கள் முதல்
எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
வாழ்வுக்காக மிகத் தவிக்கிறோம்.
விட்டுச்சென்ற சமையல் பாத்திரங்கள் முதல் புகைப்படங்கள் வரை
எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த நிலத்திற்கு பொருத்தமற்ற
வேறுபடட் பொருட்களை கொண்டு வருகிறார்கள்.
அழிக்கப்பட்ட பெருநிலமெங்கும்
சிதைவுகளிலிருந்து செடிகள் முளைக்கின்றன.
அழிவு உறைந்துபோயிருக்கிற
அபாயச் சூழலில் இந்தக் குழந்தைகள் புன்னகைக்கத் தொடங்குகிறார்கள்.
__________________
13.10.2010

நன்றி : தீராநதி ஏப்பிரல் 2010

அகதித் துயர்வெளி

01.
மழைநாளில் இடம்பெயரும் தெருவொன்றில்
வெட்டப்பட்ட குழியைப்போலிருக்கும் கூடாரங்களுக்குள்
பாலஸ்தீனக் குழந்தைகள் வந்து ஏன் ஒளிந்திருக்கின்றனர்?

அகதிகளாக சனங்கள் வெற்றிக்கொள்ளப்பட்ட நாளில்
உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன
சிறுவர்கள் துப்பாக்கிகள் பிடிக்கும் நாளில்
தாய்மார்கள் பொதிகளை சுமந்தலையும் காடுகளின் வெளியில்
எல்லோருமே ஏதோ ஒரு நடவடிக்கையில் துரத்தப்பட்டனர்
வீடு அழித்துத் துடைக்கப்பட்டதையும்
நகரம் சிதைத்து உரு மாற்றப்பட்டதையும்
நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதையும்
இந்த அகதிச் சனங்கள் தாங்க முற்படுவர்
அகதிகளின் காலங்கள் அலைச்சலால் நிரம்பியிருக்கின்றன

மீண்டும் மீண்டும் பொருட்களைக் தூக்கிக்கொண்டு
சில மீற்றர்களுக்கோ சில கிலோ மீற்றர்களுக்கோ நடந்து செல்ல முடியாமல்
இந்தக் குழந்தைகள் கீழே அமர்ந்து விடுகின்றனர்
காடுகளுக்கோ சனங்கள் நுழைந்திராத கடல் வெளிகளுக்கோ
இந்தப் பாதங்கள் செல்ல விரும்புவதில்லை.
குழந்தைகளுக்கான உணவிற்காய்
அடுப்பு எரிந்து கொண்டிருந்த வீட்டை யுத்தத்தீ எரித்து விட்டது
கோகட் நகரத்தில் நீண்டுசென்ற அகதி வரிசைகள் மலைகளை இடித்தன.02.
ஆப்கானிஸ்தானில் இடிபாடடைந்த கட்டிடங்களுக்குள்ளால்
ஈழக் குழந்தைகள் ஏன் செல்லுகின்றனர்?
கொங்கோ குடியரசின் சனங்கள் எங்கள் கூடாரத்திற்குள்
இரவில் வந்து தங்குகின்றனர்
ஒரு துண்டு ரொட்டிக்காகவும் ஒரு கிண்ணம் கஞ்சிக்காகவும்
ஒரு கோப்பை தண்ணீருக்காகவும்
உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன.

கனவுகள் நிராகரிக்கப்பட்டு பிரித்து சிதைக்கப்பட்ட
இணைந்த மாநிலத்தில் காலம் படியவிட்டிருக்கும்
ஈழ அகதித்துயரை
ஆக்கிரமிப்பாளர்கள் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு பெருமழையையோ சிறிய தூறலையோ
இந்தக் கூடாரங்கள் தாங்க முடியாதிருக்கின்றன
நிலத்தின்மீதாக அரும்பும் எல்லாக் கனவுகளையும் சீவியெறிந்து
நிலத்தை கொலைசெய்யும் ஆக்கிரமிப்பாளர்கள்
எல்லா திசைகளுக்கும்
மிகவேகமாக சென்றுகொண்டிருக்கின்றனர்
இனங்களின் நிறங்களை சூறையாடும் தந்திரங்களை
ஆக்கிரமிப்பாளர்களின் தலைவனோ சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை
சோமாலியாவின் பசிக்கிண்ணங்கள் மாத்தளனில் புதைக்கப்பட்டன.

காடுகளை சூறையாட முற்படுபவர்களும்
கிணறுகளை கொள்ளையடிக்க முற்படுபவர்களும்
நிலத்தை அள்ளிச் செல்ல முற்படுபவர்களும்
உரிமையை அழித்து முடிக்க புறப்பட்டவர்களும்
முதலில் குழந்தைகளைத்தான் கொலை செயதனர்
குழந்தைகளின் இரத்தில் அகதிச் சனங்களின் கனவு நனைந்துபோனது03
சனங்கள் தங்கள் பூர்வீக நிலங்களிலிருந்து துரத்தப்பட்டதை
பெருகும் அகதித்துயிரினிடையில்
வெற்றிகொள்ளப்பட்ட அதிகாரம் நிறைந்திருக்கும்
தங்கள் கொண்டாட்டத்திற்குரிய நாளில் படைகள்
ஒரு கையில் துப்பாக்கியையும்
மறு கையில் மனித உரிமைப் பிரதிகளையும்
எடுத்துச் சென்றதாக
ஆக்கிரமிப்பாளர்களின் தலைவன் சொல்லுகிறான்.
படைகள் கொண்டு சென்ற மனித உரிமைப் பிரதிகளே
சனங்களை நெடுந்தூரத்திற்கு துரத்தின
எல்லாச் சனங்களும் வாழ்வு பிடுங்கப்பட்டு
பூர்வீக நிலத்திலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர்.

எல்லா குழந்தைகளும் புழுதியில் கிடந்தபடி
ஒரே மாதிரியான கிண்ணங்களை தூக்கி வைத்திருக்கின்றனர்
எப்பொழுதும் தூக்கிச் செல்லக்கூடிய
பொதிகளையும் எங்கோ ஒரு இடத்தில் விட்டுச்செல்லுகிறார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள் படையெடுக்கும்பொழுது
வீசும் குண்டுகளைவிடவும்
கொடுமையாக வார்த்தைகளை எறிகின்றனர்
உலகத்தில் கூடாரங்களும் அகதிகளும் நிறைக்கப்பட்டிருந்தாலும்
அகதிகள் சிரிக்கப் பழகியிருக்கிறார்கள்
டாபர் குழந்தைகள் தடிகளாலான கூடாரங்களுடன்
தேய்ந்த ஒற்றைச் செருப்புக்களையும்
கிழிந்த சட்டைகளையும் வைத்திருக்கின்றனர்
ஆணுறைகளை கொண்டு செல்லும் இராணுவம்
தங்கள் தலைவனுக்கு விடுமுறையில் பெண்குறிகளை கொண்டு வருகின்றனர்
04
யுத்தம் நீண்ட தூரத்திற்கு சனங்களைத் துரத்திவிடும்
மனிதாபிமானம் மிக்கது
ஈராக்கின் சிதைவுகளோடு தலமைத்தேசம் இன்னும் ஒளிர்ந்துகொண்டேயிருக்கிறது.

காஷ்மீரில் சனங்கள் துரத்தப்பட்டார்கள்
கோத்ராவில் சனங்கள் வெளியேற்றப்பட்டார்கள்
ஒரிசாவில் பெயர்த்தலைக்கப்பட்டார்கள்
பள்ளத்தாக்குகளுக்கும் மலைகளுக்கும் வனங்களுக்கும்
அனுப்பி வைக்கப்பட்டனர்
மணிப்பூரின் குழந்தைகளுடன்
டார்ஜிலிங் குழந்தைகளும் காடுகளை அழிக்கத் தொடங்கினர்
மதமும் கடலும் காடுமே சனங்களைத் துரத்துகின்றன
வெளியேற மறுக்கும் சனங்களை அவை கொல்லுகின்றன.

சனங்களிடமிருந்து நிலத்தை மீட்ட அரசின் வெற்றிக் கொடிகள்
அகதிகளின் கையிலிருந்து பறக்கின்றன.
எல்லாத் தேசங்களிலுமிருக்கும் அகதிகள்
எல்லா நாட்களிலும் அலைகின்றனர்.
சனங்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து
தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
__________________________________

ஜீன் 20 : உலக அகதிகள் நாளை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகிறது

எங்களுக்காய் யார் இருக்கிறார்கள்?

o தீபச்செல்வன் ----------------------------------------

குழந்தைகள் மீண்டும் மீண்டும் ஏன் பிறக்கின்றன
பதற்றங்களை கண்டு அதிரும்
இந்த குழந்தைகளை பார்க்கும் பொழுதெல்லாம்
முகம் கோணலாகி உடைகிறது
அவர்களின் புன்னகையை பார்ப்பவர்களில்லை
அவர்களின் வார்த்தைகளை கேட்பவர்களில்லை.

அந்தச் சிறுவன் பணத்திற்காக கழுத்து நெரித்து
கொல்லப்பட்ட நகரத்தில்
அவனின் குருதி படர்ந்த தெருவில்
நான் எப்படி அமைதியாக திரிவது?
அம்மா ! ஏன் என்னை இந்த மண்ணில் பெற்றிருக்கிறாய்?

யாரிடமும் கருணையில்லை
இரத்தமும் வன்மமும் படிந்த முகங்களுடன்
நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
என்னைச் சுற்றிலும்
மனிதர்களை தின்று களிக்கும் மிருகங்கள் அலைகின்றன
மிருகம் கவர்ந்து சென்ற நண்பனைப்போல
நான் ஏனம்மா இருக்கிறேன்?

கருணைக்காக தவிக்கும் குழந்தைகள்
எனக்கு முன்னால் செல்லுகின்றனர்
பிள்ளைகளுக்காக துடிக்கும் தாய்மார்கள்
என்னோடு பேசுகின்றனர்
அம்மா ஏன் என்னை இந்த மண்ணில் வளர்த்தாய்?

குழந்தைகளை இழுத்துச் செல்பவர்கள் என்னையும்
ஒரு இரவில் துப்பாக்கிகளால்
இழுத்துச் செல்ல முடியும்
உன்னையும் என்னையும் குறித்து யாரும் பேசுவதாயில்லை?
தங்கள் கோப்பைகளை குறித்தும்
தங்கள் வீடுகளைக் குறித்தும்
தங்கள் வண்டிகளைக் குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள்
அம்மா ஏன் வன்மம் நிறைந்த
மண்ணில் என்னை நடமாட வி;ட்டிருக்கிறாய்?

பூக்களை பார்க்க இன்னும் எதை நாம் இழக்க வேண்டும்?
துப்பாக்கிகளால் இருதயத்தை குத்திக்கொள்ளும் காலம்
ஏன் இன்னும் விரட்டுகிறது?
அமைதியான இரவில் இந்த நகரத் தெருவொன்றில்
நடந்து வர ஆசைப்படுகிறேன்
வெளிச்சங்களில் மகிழ்ச்சியுடன் உலவ விரும்புகிறேன்.
அம்மா அழகான வாழ்வு எப்படியிருக்கும்?

மகிழ்ச்சிக்கான ஏக்கங்கள் கனவாய்ப்போகின்றன
காலம் எல்லா வகையிலும் பிழைத்துப்போய்க்கிடக்கிறது
நீ இன்னும் வெயிலில் கிடந்து காய்கிறாய்
எங்களுக்காய் யாரம்மா இருக்கிறார்கள்?
____________________

நன்றி : ஆனந்தி

புகைப்படம் : அல்லாரை தடுப்பு முகாமில் 04.06.2010 அன்று எடுத்திருந்தேன்

கொலைக் காட்சிகளின் நிழல்

o தீபச்செல்வன் ----------------------------------------

01
கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின்
சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

முதலில் எல்லோரையும் கைது செய்தனர்
சிலரது கண்களை கட்டினர்
சிலரது கைகளை கட்டினர்
இறுதியில் எல்லோருக்கும் கைகளும் கண்களும் கட்டப்பட்டன
வரிசையாக இருத்தப்பட்டனர்
புற்களின் மேலாயும் பற்றைகளின் வழியாகவும்
வதை எழும்பும் ஒலியுடன் இழுத்துச் செல்லப்பட்டனர்

மாபெரும் கொலைக் காட்சிகள் நிகழ்த்தப்பட்ட நிலத்தில்
குருதியின் மேலாய் பூக்களை தூவ
தந்தையை இனங்கண்ட சிறுமி காத்திருக்கிறாள்
மறுபடியும் அதே நாட்களில் வானம் உறைந்து கிடக்கிறது
உருக்கிக் கொட்டுகிறது
சத்தமிட்டு அழுதுகொண்டிருக்கிறது
கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன
துப்பாக்கிகள் விசாரணை செய்கின்றன
பிரிபடாத நிலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.

சடலங்களால் நிரம்பிய நிலத்தில்
கனவு முறியடிக்கப்பட்ட இரத்தத்தில்
அநியாயம் வென்று களிக்கும் வெறியில்
இனம் துடிக்கும் பெருங்கொலைகளின் தொடர்ச்சி நிகழ்ந்தன
அந்த இரத்தம் வெளியில் தெரிய வேண்டி வந்தது
அந்த கூக்குரல்கள் வெளியில் கேட்க வேண்டி வந்தன
அந்தக் காட்சிகள் வெளித்தெரிய வேண்டி வந்தன
சித்திரவதைகளினால் அந்தப் பெருநிலம் அதிர்ந்து கொண்டிருந்தது.

இரத்தம் வடிந்து நனைந்து போன நிலத்தில் இருத்தப்பட்டனர்
மண் சித்திரவதை செய்யப்பட்ட நிலத்தில் இருத்தப்பட்டனர்
மழை வெருண்டபடி மேலும் அழுகின்றது.02
படைகளது உடைகள் இன்னும் பச்சை நிறமாகின்றன
அவர்கள் ஒரு நாட்டின் ஒரு தேசத்தின்
மனிதாபிமானத்திற்கான படைகளாக கௌரவிக்கப்படுகின்றனர்
துப்பாக்கிகளின் பிரியர்களாக
துருப்பிடித்த பல துப்பாக்கிகளை மீட்டு வைத்திருக்கின்றனர்
அவர்களது இராணுவப் புன்னகையிலிருந்து
வெளிப்பட்டுப் போகிறது பேய்களின் நடனத்தின் அதிர்வு.

அரசனின் பிரியத்தை அவர்கள் நிறைவேற்றுபவர்கள்
தளபதிகளின் உத்தரவை நடத்துபவர்கள்
இறுதியில் அரசனுக்கும் தளபதிகளுக்கும்
படைகள் இரத்தத்துடன் கூடிய சதைகளை படைக்கின்றனர்
தளபதி இன்னுமின்னும் வீங்குகிறான்
அரசன் இன்னும் இன்னும் வீங்குகிறான்
அரசனின் புன்னகை வீங்குகிறது
தளபதிகளின் நட்சத்திரங்கள் வீங்குகின்றன
படைகள் இன்னுமின்னும் வெறியூட்டி வளர்க்கப்படுகின்றனர்.

அவர்கள் யுத்தத்தின் தந்திரங்களை
வெற்றியின் குரூரங்களை பகிர மிக விரும்புகின்றனர்
இனஅழிப்பை அதற்கான படுகொலையை
மீள மீள விளக்கத் தயாராக இருக்கின்றனர்
வீரம் நிறைந்த அர்த்தத்தில்
சடலங்களின் முன்பாக கம்பீரமாக நிற்கவும்
சடலங்களை அள்ளி பெருங்கிடங்குகளில் நிறைக்கவும் விரும்புகின்றனர்.03
வெள்ளைக் கொடிகள் கொலை பதுங்கியிருந்த
ஒற்றர்களாக மாறியிருந்தன
எதிர்வரும் எவரையும் ஏதோ ஒரு அடிப்டையில்
சுட்டுத் தள்ளுவதற்கு
அவர்கள் தயாராகவும் ஆர்வமாகவும் செயற்பட்டனர்
சரணடைந்தவர்கள் கொலைக்கு பரிசளிக்கப்பட்டனர்
கைது செய்யப்பட்டவர்கள்
சித்திரவதைகளுக்கு தெரிவுசெய்யப்பட்டார்கள்
கொன்ற பின்னர்
குழந்தைகளை வெள்ளை கொடிகளால் போர்த்தியிருந்தனர்
புணர்ந்து முடித்த பின்னர்
பெண்களையும் வெள்ளைக் கொடிகளால் மூடியிருந்தனர்.

மேல்சட்டைகளையும் கீழ் சட்டைகளையும்
கைகளில் விலங்காக்கியிருந்தனர்
கொலையின் தந்திரம் மிகுந்த கயிறுகளால்
கைகளை பிணைத்திருந்தனர்
ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே
தங்கள் குருதி வெளியேறிக் கொண்டிருந்ததை கண்டனர்
அவர்களது குருதி பிரட்டப்பட்ட மண்ணில் ஆழத்திற்கு
செல்லுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்
அவர்களுக்கு பலவிதமான சடலங்கள் காண்பிக்கப்பட்டன.

கொல்லவும் சித்திரவதை செய்யவும்
வேருடன் அழிக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்ட படைகள்
இறுதியில் சடலங்களின் முன்பாக நின்று
வெற்றியைப் பகிருவதுடன் தங்கள் கடமையை முடிப்பதில்லை
அழிவுக்கான புதிய புதிய கட்டளைகளை நிறைவேற்ற
அவர்கள் எப்பொழுதும் காத்திருக்கின்றனர்
குருதியின் கனவுகளை அவர்கள்
வளர்த்துக் கொண்டிருக்கவே விரும்புகின்றனர்

நிலத்தை கைபற்றவே படைகள் நடவடிக்கை செய்தன
மக்களைக்கொல்லவே படைகள் இறந்தனர்
அதனால் படைகள் மக்களைக் கொன்றனர்
அதனால் படைகள் போராளிகளை கொன்றனர்

அதனால் அரசன் நிலத்தை கொன்றான்.
குருதியாலும் சதையாலும்
அரசன் தன் மாளிகையை கட்டி வைத்திருக்கிறான்.04
கொலையின் பயம் உறைந்த கண்களை
என்ன செய்தீர்கள்?
எல்லா முகங்களையும் பார்த்துக் தவித்துக் கொண்டிருக்கும்
ஏக்கம் உறைந்த முகங்களை என்ன செய்தீர்கள்?
தனித்து மாட்டுண்ட சிறுவனை என்ன செய்தீர்கள்?
கைதவறி விட்டுச் சென்ற குழந்தையை என்ன செய்தீர்கள்?


ஏன் சப்பாத்துக்கள் நெருங்கின?
ஏன் பயங்கரமான சீருடைகள் நெருங்கின?
ஏன் ஆழமாய் அழித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கிகள் நெருங்கின?
ஏன் அழித்து முடிக்கச் சொல்லிய கட்டளைகள் நெருங்கின?

சித்திரவதைகளால் உயிர் இழந்து கொண்டிருந்த
சிறுவனின் முகம்
கொலைக்காட்சிகளில் இன்னும் நெளிந்து கொண்டிருக்கிறது.
நிலத்திற்கிடையில் குழந்தைகள் அலைகின்றனர்.
______________________
19.05.2010

பின்குறிப்பு :

தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் அதிர்ச்சியுட்டும் மேலும் சில புகைப்படங்களுடன் அவர்கள் எப்படி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்ற விடயங்கள் உட்பட இறுதிக் களத்தில் இராணுவம் எப்படி செயற்பட்டது என்பதை விளக்கும் இராணுவ அதிகாரி ஒருவரது நேர்காணலுடன் கூடிய போர்க்குற்றம் பற்றிய விபரணப்படத்தை ‘சனல் 4’ தொலைக்காட்சியில் ஜொனாதன் மில்லர் வெளியிட்டுள்ளார்.

இணைப்பு :

http://link.brightcove.com/services/player/bcpid62612474001?bctid=86382573001

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24585&cat=1

http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687
ஆங்கில மொழிபெயர்ப்பு
THE SILHOUETTE OF MURDEROUS SCENES

கிழக்கில் கிடந்த பச்சை சூரியன்

o தீபச்செல்வன் ----------------------------------------

குருதி படர்ந்த அந்த மணல் வெளியில் சனங்கள்
மிகத் தாமதமாகவே வெளியேறினர்
நள்ளிரவு வரையில் துப்பாக்கியை நீட்டியிருந்த போராளியும்
கடைசி நம்பிக்கையை இழக்கிறான்
சனங்கள் பிணங்களின் வீதிகளில் சென்று கொண்டிருந்தனர்
புன்னகை இன்னும் முள்ளி வாய்க்காலில்
இருக்கிறது என்ற சகோதரி துயர் வழியும் விரல்களின் ஊடே
போகத் தொடங்குகிறாள்.
வானம் பெரியளவில் இருளத் தொடங்கியது.

யாரும் நம்பாத முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தன
யாராலும் தாங்க முடியாத கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது
மபெரும் காயம் ஏற்பட்டு குருதி வழிந்து கொண்டிருந்தது.

கட்டளைகள் ஓய்ந்து கோரிக்கைள் சரிந்தன
வெள்ளைத்துணிகளில் வடியும் வெறித்தனமாக பகிரப்பட்ட குருதி
எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தது.
எப்பொழுதும் வெடித்து சாம்பலாகும் வெளியில்
நீங்கள் யாரையோ விட்டு வந்திருக்கிறீர்கள்.
ஆன்மாக்கள் அலையும் துயர் படிந்த கிடங்கில்
யாரோ சமராடிக் கொண்டிருந்தார்கள்.
மைதானத்தை பாதுகாக்க யாரோ இறுதிவரை முனைந்திருக்கிறார்கள்.

எல்லா துப்பாக்கிகளும் அடங்கிய பொழுது
மௌனமாய் வைக்கப்பட்ட பொழுது
என்ன மிஞ்சியிருந்தது?
சகோதரியே கைவிடப்பட்ட புன்னகை கொல்லப்பட்டதை நீ பார்த்தாயா?
உனது நம்பிக்கை என்னவாகிப் போனது?
விரல்கள் உடைந்து விழும் என்று நம்பினாயா?
எல்லா தாகங்களையும் கனவின் பசியையும் மணல் முடிக்கொண்டது.

சூரியனை சரித்து போட்டிருந்தார்கள்
உயிர் வயலில் எல்லாக் கன்றுகளும் இறந்து கிடந்தன
ஒரு தாய் தன் குழந்தைகளை அணைத்தபடி இறந்து கிடந்ததை
நீ பார்த்திருப்பாயா?
கடைசியில் அங்கு ஏன் நெருப்பெரிந்து இருள் பிறந்தது?
ஏன் வானம் இருண்டு மழை பொழிந்தது
அந்த மனிதனின் இறுதி வார்த்தைகள் என்ன?
வானம் என்ன சொல்லி அழுது கொண்டிருந்தது?
பெருநிலம் உறைந்து போயிருந்தது?
நமது நகரங்கள் உடைந்து போயிருந்தன?
கடைசி மனிதன் எங்கோ வெளியேறிச் சென்றிருக்கிறான்.

புதருக்கிடையில் குருதி பாய்ந்து கொண்டிருக்க
கபாளம் கொள்ளையடிக்கப்பட்டு கிழக்கில் கிடந்தது பச்சை சூரியன்.
எல்லோரது முகத்தையும் குருதி சிவப்பாய் நனைத்து அபாயத்தை பூசியது.
துடைத்தெறிய முடியாத மாபெரும் கனவு
பெருநிலத்தில் தங்கியிருக்க
இருதயங்களின் இறுதி நிமிடம் முள்ளுடைந்து நிற்கிறது
(மே 18)
_________________
தீபச்செல்வன்

நன்றி : பொங்குதமிழ்

கைது செய்யப்பட்ட தாயின் சரணடைந்த குழந்தை


o தீபச்செல்வன் ----------------------------------------

நந்திக்கடலில் விழுந்திருந்தன
நிறைய முகங்கள்
சயனட் குப்பிகளில் குழந்தைகள்
பால் குடித்தனர்.
தாய்மார்கள் துவக்குகளை வைத்திருந்தபடி
குழந்தைகளை சுமந்து சென்றனர்.

முள்ளி வாய்க்காலின் கிடங்குகள்
எல்லாம் மூடுண்டு விடுகிறது.
கிடங்குகளிலிருந்து எழும்பி வருகின்றனர்
பிணங்களும் அதன் குழந்தைகளும்.

கடல் வீழ்ந்துவிட மணல் பெயர்ந்து
கடலில் அள்ளுண்டு செல்லுகிறது.
முள்ளுக் கம்பிகள் வரவேற்கின்றன
ஒற்றை தேச முகங்களை அணிந்தபடி.

விடுவிக்கப்பட்ட பகுதி மரணத்தின்
குளிர் அறைகளாக மாறிவிட
சித்திரவதையின் பாடல்களில்
இரவு அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.
பெருநிலம் மயானமாக மாற
அகதிமுகாம்கள் நெருங்குகின்றன.

தாய் கைது செய்யப்பட்டிருந்தாள்.
குழந்தை சரணடைந்திருந்தது.
துப்பாக்கி இருவருக்கும் நடுவில்
நின்று கொண்டிருக்கிறது.
முட்கம்பி ஆடையாக படர்கிறது.
நந்திக்கடலின் பிணங்கள்
ஒதுங்கி முடிகின்றன.
ஈழத்தை இலங்கை விழுங்கி முடிக்கிறது.
__________________
17 மே 2009

(மே மாதம் கவிதைகள்)

நன்றி : அம்ருதா ஜீன் 2009

சொற்களற்றலைகிற நகரம்

o தீபச்செல்வன் ----------------------------------------
மரணம் கொடு முகத்துடன்
குழந்தைகளை விழுங்கி முடிக்கிறது.
ஒரு போராளியுடன்
சுற்றியிருந்த இருபது சனங்கள்
சுட்டு விழுத்தப்பட்டனர்.
இலக்கத்தில் முழ்கியிருக்கிறது வீடு.

எண்ணிக்கையின் மாறாட்டங்களில்
மரணங்களை கொண்டாடி திடுக்குறுகிறவர்கள்
சொற்களற்றலையும் நகரத்தின்
வாடிய பூக்களை கண்டு ஏங்கினர்.

பத்திரிகையின் முகப்பில்
சொற்களில் கண்ணீர் நிறைந்திருந்தது
துவக்குகள் வாசித்து
பின் தொடருகிற பத்திரிகை நிறுவனத்தின்
வாசலில்
குருதியின் பெரு எச்சரிக்கை குவிந்திருந்தது.

சவப்பெட்டிகள் தயாராக இருக்க
பிணங்களை தொலைத்தழுகிற மிஞ்சிய ஒருவன்
அதற்குள் படுத்திருக்கிறான்.
எதுவும் பேச முடியாதிருக்கிறது நகரம்.

கொடிகளால் முற்றுகையிட்டிருக்கிற நகரமெங்கும்
வரையப்பட்டிருக்கிறது
சனங்களின் தோல்வியின் கடைசிப் பிரதேசம்.
குழந்தைகள்
தடைசெய்யப்பட்ட சீருடைகளை அணிந்தபடி
உதிர்ந்து கொண்டிருக்கிற
பிணங்களின் கீழ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

சொற்களற்றலைந்த நகரம் கடைசியில்
சவப்பெட்டியினுள் ஒளிந்தலைய
குழந்தைகள் அவற்றை சுமந்தபடி
நகரமெங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.
__________________
20.05.2009

(மே மாதம் கவிதைகள்)

நன்றி வடக்குவாசல் 2009

எல்லாக கண்களையும் இழந்த சகோதரியின் கனவு

o தீபச்செல்வன் ----------------------------------------


யுத்தத்தை முடித்துத்திரும்பும்படி வழியனுப்பிய
தன் இரண்டாவது கணவனையும்
இழந்த சகோதரி
இன்னும் உயிருடன் இருப்பதாக சொல்லியனுப்பியிருக்கிறாள்
பதிலற்று கரைந்து கொண்டிருக்கின்றன
என் வார்த்தைகள்
நொந்துபோன குரல்களால்
தன் காட்சிகளை அவள் கோரிக்கொண்டிருக்கிறாள்.
எப்பொழுதும் அவளுக்கு
முன்னாள் விளையாடித் திரிந்துகொண்டிருந்த
தன் குழந்தைகளை தேடுகிறாள்.

அழிக்கப்பட்ட காட்சிகள்
ஆன்மைவை நிறைத்துக்கொண்டிருக்கின்றன
எல்லாக் கண்களையும் இழந்துபோயிருக்கிறேன்
என்பதை திரும்பத் திரும்ப சொல்கிறாள்
கண்களை பிடுங்கிச் சென்ற ஷெல்
அவளது இரண்டு பெண் குழந்தைகளையும் விழுத்திச் சென்றது.
கண்களற்று துடித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான்
அவள் மாபெரும் சனங்கள்
கண்களை இழந்த
மைதானத்தலிருந்து அகற்றப்பட்டாள்
கண்கள் தொலைந்து போனது
குழந்தைகளையும் கண்களையும் அவள் தேடிக்கொண்டிருந்தாள்
சிதறிய குழந்தைகளின் குருதி
காயமடைந்த அவளின் கண்கள் இருந்த இடத்தையும் நனைத்தன.

குழந்தைகளின் குருதியால் ஊறியிருந்தபடி
பெருநிலத்தை அவள் இறுதியில் பார்த்திருந்தாள்
என்றும் தன்னால் தன் நிலத்தை
பார்க்க முடியாதபடி திரும்பியிருக்கிறாள்.

கடலால் கொண்டு செல்லப்பட்ட நாளிலிருந்து
கனவிழந்து தன் உலகத்தை தேடிக்கொண்டிருக்கிறாள்
உடலெங்கும் ஷெல் துண்டுகள் ஓடியலைகின்றன
கண்களை இழந்த சகோதரி கனவுகளைப் பற்றியே பேசுகின்றாள்.
_________________________

நன்றி : மறுபாதி இதழ் 03

இறுதிநாள் வழியில் தொலைந்தவர்கள்

o தீபச்செல்வன் ----------------------------------------

வழியில் தொலைந்த ஆடுகளின் கதைகளால்
நிறைந்துபோயிருக்கிறது இந்த நாள்.
இந்த வானொலி* வழி தவறியவர்களை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிற இரவு நிகழ்ச்சியை
ஓலிபரப்பிக்கொண்டிருக்கிறது.
கைகளுக்குளிலிருந்து எப்படி நழுவி விழுந்திர்கள்
என்று ஒவ்வொரு தாய்மார்களும்
இரவு நிகழ்ச்சியில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதி நாளிலிருந்து இன்று வரை
உனதம்மா** உன்னை*** தேடிக்கொண்டிருக்கிறாள்.
உன் ஞாபகமாய் என்னிடமிருக்கிற ஒரு சேட்டை
எப்படி பத்திரிகையில் விளம்பரமாக பிரசுரிக்க முடியும்?
புகைப்படங்கள் தொலைந்த வழியில்
வழி தவறியவர்களின்
குருதியுறைந்த உடல்கள் பற்றிய கதைகளை
வேறொரு பத்திரிகையின்**** மற்றொரு
பக்கம் எழுதிக்கொண்டேயிருக்கிறது.

தொலைந்தவர்களை கடிதங்களால் விசாரித்துக்கொண்டேயிருக்கிறது
இன்னொரு பத்திரிகை. *****
தேடிக்கொண்டிருப்பவர்களின்
துயரம் மிகுந்த சொற்களை நிரப்பிய கடிதங்களை
கொண்டு வந்தபடி
ஒவ்வொரு வாரமும் வந்துகொண்டிருக்கிறது.

எல்லோரும் திரும்பிவிடுவார்கள் என்ற
நம்பிக்கையை மட்டுமே இந்தக் கடிதங்கள் வாசிக்கின்றன.
தவறி விழுந்த குழந்தையின்
அழுகை எப்படி அடங்கிப்போயிருக்கும்?
கை நழுவி மறைந்த சிறுமியின்
இரவு எப்படியிருக்கும்?
தனித்து தொலைந்த சிறுவனின் வழி எப்படியிருக்கும்?
குழந்தைகளை இழந்த தாயின் வலி எப்படியிருக்கும்?
மனைவியை பிரிந்த கணவனின் திசை எப்படியிருக்கும்?
சகோதரர்களை பிரிந்தவர்களது துயர் எப்படியிருக்கும்?
எல்லோரையும் பிரிந்தவர்களது துயரால் மிகுந்திருக்கிற
கடிதங்கள் அதிகரித்தபடி பிரிவை அளந்துகொண்டிருக்கின்றன.
பதில் வார்த்தைளற்றுக் கிடக்கிற கேள்விகளால்
இந்த இரவு குலைந்து கிடக்கிறது.

காத்திருப்பும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும்
வளர்ந்துகொண்டேயிருக்கிறது.
அவர்கள் தவறிய வழிகள் மூடுண்டபடி
பிரிவை உயர்த்துகிற கடிதங்கள் மிக ஆழமாக தாழ்க்கப்பட்டு
மண் கொட்டிப் பரவியிருக்கிறது.
யாரும் திரும்பியதாக இல்லை என்பதை
மிகச் சோகமாக சொல்ல முடியாமல்
கரைந்து போகிறது அந்த வானொலியின் இரவு நிகழ்ச்சி.
மகிழ்ச்சி தரும் சொற்களான
தவறிய யாரேனும் ஒருவர் எழுதிய கடிதம் ஒன்றுக்காக
உன் அம்மா காத்துக்கொண்டிருக்கிறாள்.
----------
09.12.2009
*சூரியன் எப்எம், **கஜானந்தினுடைய அம்மா, ***கஜானந், ****சுடரொளி வார இதழ், *****மித்திரன் வார இதழ்

வருடத்தை தொடருகிற போரின் பிரகடனம்

o தீபச்செல்வன் ----------------------------------------

எல்லா வருடங்களும்
வெறும் இரவுகளைத்தான் உதிர்கின்றன.
நான் உன்னை சந்திக்காத
எதையும் பகிராத
கடந்த வருடத்தைப்போல
இந்த வருடம்
நடு இரவில் வந்து
என்னை எழுப்பக் காத்திருக்கிறது.

போர் நமது கிராமத்தை அழித்து
கனவை முடிவுறுத்துவதாய்
முன் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிற நாளில்
இதுவரை கைப்பற்றப்பட்ட
எல்லாம் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

நீயும் நானும்
வெகு சுலபமாக புறக்கணிக்கப்பட்டு
போரால் அணுகிக்கொண்டிருக்கிற
வெளியில்
துடிதுடித்துக்கொண்டிருக்கிறது
கொண்டாட்டங்களுக்குரிய நமது வீடு.

உன்னையும் நமது சொற்களையும்
நாமிருந்து
பகிர்ந்துருக வேண்டிய வெளிகளையும்
ஒரு சாரைப்பாம்பு
மிக அமைதியாக தின்று முடிக்கிறது.
மேலும்
வருடத்தை தொடருகிறது
அலைச்சலுக்கான போரின் பிரகடனம்.
_____________________
14.04.2009

(கடந்த வருடத்தை நினைவு கூருவதற்காய் இந்தக் கவிதை பகிரப்படுகிறது)

நன்றி : இருக்கிறம் ஏப்பிரல் 2009

அப்பத்தின் கதை பற்றிய இரண்டாவது உரையாடல்

o தீபச்செல்வன் ----------------------------------------

எப்பொழுதும் அந்த முதல் உரையாடலை
நீ ஞாபகப்படுத்தியபடியிருப்பாய்.
சிகரட் குறைத்துண்டுகள் ஒதுங்கி குவிந்திருக்கும்
அந்தச் பாதிச்சுவரில்
அமர்ந்துகொண்டு மீளவும் மீளவும்
நாம் பேசியிருக்கிறோம்.
ஓவ்வொரு இரவும் கடைசியில் நம்மை
தனித்து பேச வைத்திருக்கிறது.
அப்பங்களை தூக்கிச் செல்லும்
உனது காலையும்
அதற்கான மாவை இடித்துக்கொண்டிருக்கும்
மாலை நேரத்தையும் நாம் இழந்துபோயிருக்கிறோம்.
போரினால் நாம் வாழ்வை இழந்து போயிருக்கிறோம்.

சிகரட் புகைக்கும் தேனீர்க்கடையின்
அருகிலிருக்கிற ஓடையில்
வரிசையாய் படிந்துபோயிருக்கிறது சாம்பல்.
அசாத்தியமாக வளர்ச்சி பெற்ற நமது நகரத்தில்
பியரை அருந்தியபடி நாம் அலைந்திருக்கிறோம்.
சாரயக் கடைகளில்
மதுக்கிண்ணங்களை தூக்கி வைத்திருத்தபடி
இருவரும் அப்பங்களை விற்கும் அனுபவங்களை
பகிர்ந்திருக்கும்பொழுது
நமது நகரம் வசீகரமான வெளிச்சத்தில்
ஒளிர்ந்தபடியிருந்தது.
நமது நகரத்திற்காக நாம் உழைத்திருக்கிறோம்.
அதை மிகவும் நேசித்திருக்கிறோம்.
கடைகளின் பின்புறமாக குந்தியிருந்து
உரையாடிக்கொண்டிருந்த பொழுது
விமானங்களுக்கு அஞ்சி பதுங்கியிருந்தபொழுது
நீ எனக்குப் பக்கத்திலிருந்தாய்.

நண்பனே சிகரட்டிற்காய் அடிபடுகிறவர்களாகத்தான்
எப்பொழுதுமே இருந்திருக்கிறோம்.
எல்லாவற்றையும் போலவே இப்பொழுது
நீ அப்பங்களை கூவி விற்பதற்கான
நமது நகரமும் இல்லை.
உனது அப்பங்களும் இல்லை.
சிகரட்டுக்களும் இல்லை.
மாவை இடித்துக்கொண்டிருக்கிற
மாலை நேரமும் இல்லை.
ஆனால் நீ நெருக்கத்தின் பெரிய உரையாடலாய்
முடியாத சிகரட்டாய்
எனக்குள் புகைந்து கொண்டிருக்கிறாய்.
அந்தப் பாதிச்சுவரின் சிதைவில்
சிகரட் துண்டுகள் என்னவாகியிருக்கின்றன?
போர் எல்லாவற்றையும் அழித்து விட்டது.
உன்னை இழந்திருக்க கூடாது.
உன்னுடன் நாம் எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம்.

கைவிடப்பட்ட உனது சடலத்தை
யாரோ கண்டு வந்ததாக சொல்லுகிறபோது
உனது அப்பம் பற்றிய
இரண்டாவது உரையாடல் தனித்துத் தொடங்கி
முடிவற்று நீளுகிறது.
எங்கு தவறிப் போயிருக்கிறாய்?

தகர்ந்து போயிருக்கிற நகரத்திற்கு நான் திரும்பப்போவதில்லை.
யாரேனும் அங்கு அப்பங்களை கூவிக்கொண்டிருப்பார்களா?
அப்பங்களை வாங்க யார்தான் காத்துக்கொண்டிருப்பார்கள்?
மூட்டத் தொடங்கும் ஒவ்வொரு சிகரட்டும்
உனக்காக புகைந்துகொண்டிருக்கிறது.
உனக்காக மது நிறைக்கப்பட்ட கிண்ணம்
எப்பொழுதும் எனக்கு முன்னாலிருக்கிறது.
___________________
08.09.2009 .கிளிநொச்சி நகரத்தின் நண்பர்களில் மிகவும் பிரியமான எனது நண்பன் ஸ்ரீகஜானாந். இறுதிப் போரில் சிக்குண்டு இறந்து போயிருப்பதாகவும் அவனின் சடலத்தை கண்டு வந்தாகவும் கூறுகிறார்கள். தடுப்பு முகாங்கள் எங்கும் தேடிய பொழுது கிடைக்கப்பெறவில்லை.

நன்றி : எதுவரை பெப்ருவரி - மார்ச் 2010

கனவு அரும்பியிருந்த நினைவிடம்

o தீபச்செல்வன் ----------------------------------------


நெருங்க முடியாதபடி அந்த நினைவிடத்தை
பயங்கரத்தால் அவர்கள் காவலிட்டிருந்தனர்.
நினைவிடங்களில்
கனவுகள் வெளித் தள்ளுவதாய்
குழந்தைகளை புதைத்த தாய்மார்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

எல்லாத் தாய்மார்களும் ஆன்மாக்கள்
உள்ளடங்கியிருக்கும் நினைவுக் கோபுரத்தை
வணக்கிச் செல்கின்றனர்.

கனவுகள் அரும்பியிருந்த
மாபெரும் பசியின் நினைவிடத்தை
ஒரு இரவு பேரதிர்ச்சி கொள்ளும் விதமாக
சிதைத்துச் சென்றனர்.
யார் சிதைத்தார்கள்?
ஏன் சிதைத்தார்கள்?
பகிரங்கப்படுத்தப்படாத அந்த இரவில்
கனவின் துயர் வழிகிறது.

மர்மமாக வரும் நபர்கள் குழந்தைகளை
இழுச்துச் சென்ற அதே இரவில்
இந்த நினைவிடம் தகர்க்கப்பட்டிருக்கிறது.
அந்தக் குழந்தை தன் பெற்றோரை
தேடி துடித்தழுகையில்
அவனின் கனவு படிந்த மடி சிதைக்கப்பட்டது.

கனவின் பெரும் பசி ஓங்கியிருந்த
முகத்தை யாரால் மறக்க முடியும்?
எங்கள் பசி நிறைந்த கோப்பைகளில்
குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் சதைகளும்
உடைகளும்தான் விழுகின்றன.

நாங்கள் மீள மீள கொல்லப்படுகிறோம்
என்பதை சொல்லுவதற்கு வேறு வார்த்தைகளில்லை !
குழந்தைகளே தெருவுக்கு வர அஞ்சியிருக்கும்
நகரத்தில் தகர்க்கப்பட்டு
எறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில்
குழந்தைகளின் அச்சம் நிறைந்த குருதி படர்ந்திருக்கிறது.

ஒரு கனவைச் சிதைப்பதும்
ஒரு குழந்தையின் கழுத்தை நெறிப்பதும் ஒரே துயரை தருகிறது.
திலீபனின் பசி இருதயத்திற்குள் புகைந்து கொண்டிருக்கிறதை
தாய்மார்கள் பார்த்துச் செல்லுகிறார்கள்.
_____________________
நன்றி : பொங்கு தமிழ்

முட்கம்பிகளில் படிகிற அடையாள இலக்கம்

o தீபச்செல்வன் ----------------------------------------

ஒரு தனித்தீவில் உன்னைச்
சிறையிட்டிருக்கிறார்கள்.
முதுகில் குத்தப்பட்ட அடையாள இலக்கம்
முட்கம்பியில் படிந்து கிடக்கிறது.
மரங்களில் பொருத்தப்பட்டிருக்கும்
காவலரண்கள் என்னைக் கடந்து கொண்டிருக்கிறது.
காற்று அலையும்
வெளிகளில் முடிவற்ற வெறுமை நிரம்புகிறது.

முட்கம்பிகளால் கட்டப்பட்ட வீட்டில்
கோழி செட்டையடித்து துடிதுடித்துக்கொண்டிருக்கிறது.
வானம் கரைந்து சோற்றுப் பானைக்குள் நிறைந்துவிட
பிள்ளைகளுக்காக வாழும்
நம்பிக்கையை கட்டியெழுப்புகிறாய்.
நீ அறிந்திராத தெருக்களைப் பற்றி
நான் எதுவும் பேசிக்கொண்டிருக்கப்போவதில்லை.
நேரம் வேகமாக கடந்து கொண்டிருக்கிறது.

பிள்ளைமீது முட்கம்பி ஆடையென
உடுக்கப்பட்டிருக்கிறது.
நான் வரும்போது பச்சை வயல்களில்
சித்திரவதையின்
பழைய கூக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.
ஆண்குறிகளும் யோனிகளும்
கடல் நீரேரியில் மிதந்து கொண்டிருக்கிறது.
பெரிய பாலத்தை
தின்று மொய்க்கிறது காவலரண்கள்.

இரவுக்கும் பகலுக்கும் இடையில்
கிடந்து நீ நசிபடுகிறாய்.
அடையாள அட்டை
எனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
நெடு நேரத்தின் பின்னர் வந்திருக்கிற
நிவாரண உணவில்
நவீன பொருளாதாரத்தை கணக்கிடுகிறாய்.
சுவர்களற்று புழுதி
நுழைகிற வீட்டில் காலனிய நகரங்கள்
வந்து படிந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் சொற்கள் இருக்கின்றன.
நீ எதையோ சொல்லாமல் போகிறாய்
நம்மை கொண்டு வந்து
குவித்து விட்டிருக்கிற குண்டுகள்
தீர்ந்த பெட்டிகளில் நிரப்பிவிடப்பட்டிருக்கிறது
உனது சொற்கள்.
நீ எழுத முடியாதிருக்கிற கவிதையை
என்னிடம் வாசித்துவி;ட்டுப்போ.
பின்னால் சொற்கள் கொட்டிக் கொண்டிருக்கின்றன.

எனக்கான நேரம் முடிவடைகிறபோது
கோழிகள் செட்டையடிக்கிற சத்தம்
கேட்கத் தொடங்குகிறது.
இப்பொழுது உனது அடையாள
இலக்கத்தை நான் மீளவும் ஞாபகப்படுத்துகிறேன்.
____________________-
14.5.2009

சொற்கள் சிதைகிற மணல்

o தீபச்செல்வன் ----------------------------------------

நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
நீ பேசு.
சொற்களற்ற காட்டில்
துயர் பொழிந்து கொண்டிருப்பதை
பகிர முடியாதபடியால்
பாதியாய் சிதைந்து உடைகிற சொற்களை
நான் விழுங்குகிறேன்.
என்னை விடுத்து
உன்னை பற்றி சொல்லிக்கொண்டிரு.
காதுகளில் மணல் நிரம்புகிறது.

ஷெல்கள் வந்து விழுவதையும்
விமானங்கள் பறந்தலைவதையும்
துவக்குகளின் சத்தங்கள்
எங்கும் புகுந்து செல்வதையும்
தவிர
எந்த சத்தங்களுமற்றிருக்கிறது
உனது தொலைபேசி.
மணல் அணை எழும்புகிறது.

உயிரோடிருப்பதை தவிர
அங்கு எதுவுமில்லை.
உயிரும் பாதியாய் குறைந்துபோயிருக்க
சிதைகிற சொற்கள் ஒவ்வொன்றாய் வருகின்றன.
குண்டுகளால் சிதறியபடியிருக்கிற
உனது ஒரு இரு சொற்களைத் தவிர
நான் அடைந்தது ஒன்றுமில்லை.
மணல்தரை சூடாகிறது.

பாதியில் அறுந்துபோகிற உரையாடலில்
மீளவும் உன்னை குறித்தான
அச்சம் தொடங்குகிறது?
நீ தொலைபேசியை வைத்ததிலிருந்து
நான் காத்திருக்கிறேன்
பெரும் சமரிற்குப்பிறகான
உனது சொற்களுக்கு.
மணல் கிடங்கு வாய் பிளக்கிறது.

எதுவரை எனது சொற்கள் சிதைய
விழுங்கிக்கொண்டிருப்பேன்
உன்னிடமிருந்து என்னை மறைத்தபடி?
தொலைபேசி கனத்துப் போய்க்கிடக்கிறது.
மணல் எழுந்து வீசுகிறது.
_____________
மே 2009

துயர் மிகுந்த காலத்தை கடந்த அருளம்மாவின் கனவு

o தீபச்செல்வன் ----------------------------------------


அழிவினால் தன் காலங்கள் முழுவதையும்
இழந்த மூதாட்டியின் நேர்காணலில்
உறைந்து போயிருக்கின்றன சொற்கள்.
அருளம்மாவின் குரல்களில் அடங்கியிருந்த வாழ்வின் கனவை
தீராதிருக்கும் தன் பசியை
அவர் மீளமீள சொல்லிக்கொண்டிருக்கிறார்.

பயங்கரமான நிமிடங்களிலிருந்து தப்பித் திரும்பிய
அருளம்மா தன் கண்களில்
கடவுளை நிறைத்து வைத்திருக்கிறார்.
பேரழிவுகளின் நிலத்தில் கதிரையில் அவளின் காலங்களை
ஏற்றி கொண்டு வந்திருக்கிறார்கள்.
கடவுளின் அளவை மீறிக்கொண்டிருக்கின்றன
அருளம்மாவின் அடங்காத பிரார்த்தனைகள்.
ஏமாற்றங்களால் முடிந்துபோன வாழ்வின்
சொற்களில் உறைந்து போயிருக்கிறது வாழ்வுக்கான கனவு.

யுத்தத்தின் கொடிய அனுபவங்களால்
அவள் வைத்திருக்கும் கதைகளும்
சிதற மறுத்த அவளின் உடலும்
அடங்க மறுத்த நீளமான நிரம்பிய உயிரும்
தீராத கனவுகளை வளர்த்துக்கொண்டிருக்கின்றன.
அவலத்தின் பெருங்கதையை
குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்
யுத்தத்தை வென்ற மூதாட்டி.
அருளம்மா நிறைவேறாத
கனவுகளைப் பற்றியே குழந்தைகளுடன் பேசுகிறாள்.
__________________
நன்றி : பொங்குதமிழ்

பெருநிலம்: காயங்களை அணிந்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறது


o தீபச்செல்வன் ----------------------------------------

(இன்னுமின்னும் அறியாச் சேதிகள்
அந்தப் பெரு நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன)

யாரும் அறிந்து முடிக்காத மரணங்கள்
நந்திக்கடற்கரையில் கசிந்து கொண்டிருக்கிறது.
எல்லா விதமான சித்திரவதைகளையும் நீளமாக கொலுவிய
ஓளிநாடாவை
தங்கள் இரவுத் தொலைக்காட்சிகளில்
படைகள்
பார்த்து பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
குற்றவாளிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட
பெருநிலத்தில் விரும்பிய எல்லாமே நிகழ்த்தப்படுகிறது.

எல்லாற்றையும் ஞாபகப்படுத்துகிற
பெரிய துப்பாக்கியை வைத்திருக்கிற
அந்தப் பெரிய இராணுவ வீரனை
ஆட்கள் தங்கள் கனவுகளை இறுகப்பிடித்தபடி
புதைக்கப்பட்ட வெளியிலே நட்டு வைத்திருக்கிறார்கள்.
மூர்க்கமும் வெறியும் கொண்ட
அந்த இராணுவ வீரன் அச்சம் தரும்படியான முகத்தை
பெரு நிலத்தின் முழுத் திசைகளுக்கும் காட்டிக்கொண்டிருக்கிறன்.

சனங்களை வென்று விழுத்திய
தன் வீரக் கதைகளை அவன் அளந்துகொண்டிருக்கிறான்.
தன் வீரப்பாடலை
வானத்தில் பாய்ச்சி முழு நிலத்தையும் நனைக்கிறான்.
குழந்தைகள் செல்ல
மறுக்கப்பட்ட பகுதியில் மரணம் கசிந்து பரவ
எலும்புக்கூடுகளை கால்களில்
கட்டிய பேய் மகளிர் தங்கள் நடனங்களை ஆடுகிறார்கள்.

வீரப்பாடலின் அரசன் கால் வைக்கிற இடமெல்லாம்
மரணமும் குருதியும் நசிபடுகின்றன.
குரல்கள் சல சலத்து அடங்க மண்ணால் மூடப்பட்டிருக்கிறது.
வீழ்ந்தவர்களின் கதைகளையும்
வீழ்த்தப்பட்ட முறைகளையும் புகைப்படங்களாக
வெளியிட்டுக்கொண்டிருக்கிறான்
அரசனால் அங்கு நிறுத்தி
வெற்றி வாகை சூடப்பட்டிருக்கிற இராணுவீரன்.

பெருநிலம் காயங்களை அணிந்து புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.
_____________________________
09.12.2009
நன்றி: பொங்குதமிழ்

குழந்தைகள் ஆசைப்படுவது என்ன?

o தீபச்செல்வன் ----------------------------------------


குழந்தைகள் அரசனின் கேள்வியிலிருந்து
தங்களின் விரிந்த விடைகளைப் பெற்றிருக்கிறார்கள்.
குழப்பமாக நீட்டப்பட்டிருக்கிற தெருவில்
அனைத்துக் குழந்தைகளும் கைகோர்த்தபடி கேட்கிறார்கள்
குழந்தைகள் ஆசைப்படுவது என்ன என்று?
தான் கேட்டுக்கொண்டு
அரசன் குழந்தைகள் ஆசைப்படுவது
தான் தரும் காலம் என்கிறான்.
அது வளமானது என்றும் சுதந்திரம் சமத்துவம் கொண்டது
என்றும் சொல்ல குழந்தைகள்
அரசனின் சொற்களிலிருந்து கேள்விகளை தொடங்குகின்றனர்.

அரசன் தன் எல்லாச் சொற்களிலும் அதிகாரம் பெருகுகிற
தன் புன்னகையை பூசி விட்டிருக்கிறான்.
குழந்தைகள் அஞ்சும் பயங்கரமான முகத்தை
அவன் குழந்தைகளை நோக்கி திருப்புகிறான்.
குழந்தைகளின் உலகத்தை
சுருட்டும் தன் புத்திகளால் வடிவமைத்த புத்தகத்தில்
அவன் குழந்தைகளைப் பற்றியே பேசுகிறான்.

குழந்தைகளிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கி எடுத்தவன்
அவர்கள் துயரடைந்து போயிருக்கிற
அச்சமான காலத்தை வனைந்தவன்
குரூரங்களின் வளமான காலத்தை குழந்தைகளுக்கு
பரிசளிக்கப்போவதாக சொல்கிறான்.
குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்.

எல்லாவற்றையும் நிர்மூலமாக மூடியிருந்து
புன்னகையை சிதறடிக்கும் அதிகாரத்தை
இயல்பை தின்று தந்திரங்களால்
சிறைப்பிடித்திருக்கிற நோக்கங்களை
சாபங்களை பரிசளித்து சரித்திரங்களை அழித்து
விரிந்திருக்கிற எண்ணங்களை
குழந்தைகள் ஆசைப்படவில்லை.
அரசன் தன் விடைகளால் குழந்தைகளின் மனதையும்
தன் புன்னகையால்
அவர்களின் கண்களையும் காயப்படுத்திக்கொண்டேயிருக்கிறான்.
_________________
நன்றி : சிக்கிமுக்கி இதழ் 03

அந்தச் சிறுவன் திரும்பி வருவான்

o தீபச்செல்வன் ----------------------------------------

அந்தத் தாய் நம்புவதைப்போல
அவனின் தந்தையும்
சகோதரர்களும் நம்புவதைப்போல
அவன் திரும்புவான் என்பதையே நாமும் நம்புவோம்.
அந்த வழிகள் இன்று எங்கிருக்கின்றன?
அவன் பல குழந்தைகளுடன்தான்,
பல சிறுவர்களுடன்தான் காணமல் போயிருக்கிறான்.

தோழனே!
பெரு நிலம் முழுக்க முழுக்க குழந்தைகளின்
இரத்தம் படர்ந்த நிலையிலேதான் தோற்றிருக்கிறது.
எதிர்பாராத விதமாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்
அஞ்சலிக்குறிப்புகளில்
அவனுக்கும் ஒன்று எழுத நேர்ந்திருக்கிறது.
குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும்
அஞ்சலிக்குறிப்புக்களை
எழுதுவது மிகப்பெரும் சாபமாய் வலிக்கிறது.
உனது சொற்கள் அவனுக்காக காத்திருந்ததை நானறிவேன்.

ஏதோ ஒரு தடுப்பு முகாமையும்
ஏதோ ஒரு சிறைச்சாலையும்
மாறிமாறி தேடிக்கொண்டிருந்தாய்.
யாரே பார்த்திருக்கிறார்கள்
அவனின் கிழிந்த கால்சட்டையை.
ஷெல் குழந்தைகளை தின்னும் என்பதையும்
சிறுவர்களை கொன்றுபோடும் என்பதையும்
அந்தச் சிறுவன் அறிந்திருந்தான்.
தனக்கு முன்னால் நிகழ்நத எல்லா மரணங்களையும்
கண்டு அஞ்சியிருந்தான்.

எங்கள் சிறுவர்கள் இனி புன்னகைப்பார்களா?
அவன் கரைக்கப்பட்ட நிலத்தில்
இனி என்ன நிறத்தில் பூக்கள் மலருமா?
தன் முகத்தையும் புன்னகையையும்
அவன் எங்கு கொண்டுபோய் வைத்திருப்பான்.

தோழனே!
நீங்கள் அவனுக்காக புத்தகங்களை எடுத்து வையுங்கள்.
அவன் தன் இரவுப்பாடப்பயிற்சிகள்
நிறைவு செய்துகொண்டு
வகுப்பறைக்கு திரும்புவான்.
ஒளித்து வைத்த எல்லாவற்றையும் அவன் மீட்டுக்கொண்டு
திரும்புவான் என்பதை நாமும் நம்புவோம்.
_______________________
( யுத்தத்தில் கொல்லப்பட்ட தர்மேகனுக்காய் )

நன்றி : உலக தமிழ்ச் செய்திகள்

இரத்தம் வடிகிற உரையாடலுக்காய் மூடப்பட்டிருந்த பக்கம்

o தீபச்செல்வன் ------------------------------------------------------------------

01
எல்லாக் கதவுகளையும் இழுத்து சாத்தும்
மிக ரகசியமான அழைப்பை
ஏதேனும் ஒரு குறிப்பில் எழுதி வைத்திருக்க நினைத்தபோதும்
தாமதமாக செல்கிற ஒரு குறுந்தகவலில்தான்
சுருக்கமாக எழுதி அனுப்பியிருந்தேன்.
மிக ரகசியமாகவே முகத்தில் வழிந்துகொண்டிருந்த குருதியை
துடைத்துக்கொண்டேன்.

மிகவும் தடித்த படங்குகளால் எல்லாவற்றையும்
மூடிக்கொண்டபடி
எனக்கு எதிராக நிகழும் எந்த நடவடிக்கைகளையும்
வெளியில் காட்டாதிருக்கிறேன்.
மூன்று மணிநேரமாக வலைப்பதிவு மூடப்பட்டிருந்தது.
மீளவும் இறுக்கமான சொற்களை தேடினேன்.

நமது ஆதி வீட்டில் வரையப்பட்டிருந்த சித்திரங்களும்
பொறிக்கப்பட்டிருந்த பெரு எழுத்துக்களும்
மிகவும் சாந்தமானவை என்றே
அவர்களிடம் கூறியிருக்கிறேன்.
வந்த எல்லா தொலைபேசி அழைப்புக்களையும்
திருப்பி விட்டுக்கொண்டிருந்தேன்.

இந்தக் கவிதைகள் வாயிலாக இனி ஒன்றையும்
உங்களுக்கு சொல்லப்போவதில்லை.
அந்த இரத்தம் படர்ந்த கம்பளத்தில் நடத்திய
உரையாடலையும்
சொற்களில் வடிந்து காய்ந்துபோன இரத்தத்தையும்
எதையும் பகிரவும் எண்ணமில்லை.
விளக்கமளிக்கப்படவேண்டிய இந்தப் பக்கம் வெளித்துக்கிடக்கிறது.

02
நானும் எனது தோழனும் சிரித்துக்கொண்டேயிருந்தோம்.
எல்லா விதமான பயங்கரமான
சொற்களின் பொழுதும்
கண்களையும் முகத்தில் படர்ந்த தோல்வியையும்
வேலிகளுக்கு கீழாக முட்கம்பிகளின் ஊடாக
அடுத்த காணிக்குள் எறிந்துகொண்டிருந்தோம்.
அவர்கள் எங்களை
மிக வேகமாக விழுங்கிக்கொண்டிருந்தார்கள்.

துவக்கு முகத்தை குத்தி கிழிப்பதையும்
கீறிக்கொண்டு உரையாடுவதையும் இரத்தம் உறிஞ்சி செல்வதையும்
நாங்கள் யாரிடமும் பகிரப்போவதில்லை.
யாரும் எங்களை மிரட்டவில்லை
என்பதையும் நாங்களாகவே வெளியிட்டிருக்கிறோம்.

முழு அச்சங்களும் நிறைந்த சொற்கள்
உரையாடலின் பிறகு
இந்த மோட்டார் சைக்கிளின் பின்னால்
எதுவரை வடிந்துகொண்டிருக்கப்போகிறது.

எனக்கெதிரான நடவடிக்கைகள் மிகுந்த இனிமையானவை
என்பதை அன்றை பின்மாலைப்பொழுதில்
இந்த பக்கத்தில் விரிவாக எழுதியிருந்தேன்.
நானும் எனது நண்பனும்
மூடப்பட்டிருந்த வலைப்பக்கம் குறித்து ஒன்றையும் சொல்லப்போவதில்லை.
எல்லாவற்றிற்காகவும் காலம் மிக அழகாக தரப்பட்டிருக்கிறதாக
நாம் சொல்லியிருக்கிறோம் என்று
அன்றைய இரத்தம் வடிகிற உரையாடல் குறித்து அவர்கள் பேசுகிறார்கள்.
-----------------------------------------------------
25.11.2009

நன்றி : எதுவரை பெப்ருவரி - மார்ச் 2010

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்


உன்னதத்திற்கு வழங்கிய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக