சனி, 17 டிசம்பர், 2011




தமிழன் துணிந்தால்...!
அகரம் அமுதா

தனக்கென்று நாடொன் றில்லாத்
தமிழனே! இன்னல் என்ப(து)
உனக்குற்றால் அன்றி நெஞ்ச
உணர்வுறா உயிர்ப்பி ணம்மே!
கணக்கற்றோர் ஈழ நாட்டிற்
களங்கண்டுச் சாகும் போதும்
'எனக்கென்ன?' என்று நீயும்
இருப்பதே மாட்சி யாமோ?

நம்மினம் உரிமை யற்று
நளிவெய்தித் தாழக் கண்டும்
நம்மினம் இடமொன் றின்றி
நானிலம் அலையக் கண்டும்
நம்மினம் வாழ்க்கை யற்று
நமனிடஞ் சேரக் கண்டும்
கம்மென இருப்ப தாநீ?
கண்ணில்தீ கனலச் செய்வாய்!

தமிழரென் றினமொன் றுண்டேல்
தனியவர்க் கோர்நா டெங்கே?
தமிழரென் றினமொன் றுண்டேல்
தனித்தமிழ் ஆட்சி எங்கே?
தமிழரென் றொன்று பட்டுத்
தனியீழம் பேணு கின்றார்
தமிழரென் றுணர்வுண் டென்றால்
தகைந்*தவர்க் குதவ வேண்டும்!

குமிழினம்* ஒன்று பட்டால்
குடிகொளும் வங்கம் என்றால்
துமியினம்* ஒன்று பட்டால்
தோன்றும்பா கிசுத்தான் என்றால்
உமியினம் ஒன்று பட்டால்
உயிர்பெரும் இசுரேல் என்றால்
தமிழினம் ஒன்று பட்டால்
தரணியே கைவ ராதா?

துயில்சேயுங் கிள்ளி விட்டுத்
தொட்டிலும் ஆட்டும் வஞ்சம்
பயில்நெஞ்சத் திந்தி யாதன்
படைவலி இலங்கைக் கீந்தும்
இயம்பிடும் 'பேசித் தீர்ப்பீர்!'
எந்தமிழ் இனத்தைக் கொல்ல
முயன்றெம்மின் வரிப்ப ணத்தில்
முடிக்கிறார் தடுத்தோ மாநாம்?

இழுதை*போல் இன்னல் செய்தே
இன்புறும் கீழ்ம னத்தர்
கழுதைபோல் உதைத்த போதும்
கலங்கிடா உரனும் பெற்றோம்!
பழுதை*போல் கடித்த போதும்
பதுங்கிடோம்! தடைகள் இட்டுப்
பொழுதையார் நிறுத்தக் கூடும்?
புலிக்குமுன் பூசை ஒப்பா?

பொடாச்சட்டம் பொருதும் போதும்
புத்தீழம் புலரக் காண்போம்!
தடாச்சட்டம் தாக்கும்போதும்
தனியீழம் தழைக்கச் செய்வோம்!
இடாச்சட்டம் எதிர்த்த போதும்
இனிதீழம் எழுக என்போம்!
எடா!*சட்டம் என்ன செய்யும்?
இன்றமிழன் துணிந்தா னென்றால்!

அருஞ்சொற்பொருள்:- தகைந்து -துணிந்து; குமிழ் -நீர்க்குமிழ்; துமி -நீரின் நுண்துளி; இழுதை -பேய்; பழுதை -பாம்பு; எடா -ஏடா என்ற விளியின் குறுகல்

அகரம் அமுதா (agramamutha08@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்




இனியும் பொறுத்தல் இழுக்கு!
-----------------------------------------


எலிகள் எதிர்த்தா இமயம் சரியும்
புலியே விரைவாய்ப் பொருது!

வாழ்வெண்ணி அண்டி வதைபடாய்; போரிட்டு
வீழ்ந்திடினும் பேறாம் விரும்பு!

சிறப்பே வரினும் சிறுமையுறாய்; சிங்களரை
இறப்பே வரினும் எதிர்!

இறுதி வரினும் எதிர்கொள்வாய்; ஈழம்
உறுதி எனப்பொரு(து) ஊர்ந்து!

நூற்றுவரை ஐவர் நுதிவென்றார்* சிங்களராம்
கூற்றுவரைத் திண்மதியாற் கூறு!

கனியும் பொழுதென்று காவாய்; துணிவாய்
இனியும் பொறுத்தல் இழுக்கு!

நஞ்சும் படையாய் நடைசெயினும் மோதா(து)
அஞ்சும் படையா அவண்!

கடுப்பைக் கிளப்பிக் களிக்கின்றார் கீழோர்
இடுப்பை ஒடித்தல் இசை!

கவலை அளிக்கிறதே! கண்ணிரொடு செந்நீர்த்
திவளை தெரிக்கிறதே சேர்ந்து!

செந்தமிழ் நூற்களைத் தீக்கீந்த சிங்கள
மந்திகளின் மார்பிளத்தல் மாண்பு! 


-அகரம்.அமுதா
----------------------------------
அருஞ்சொற்பொருள்:-
நுதி -அறிவுக்கூர்மை(நுதிவென்றார் -அறிவுக்கூர்மையால் வென்றார் (மூன்றாம்
வேற்றுமை உருபாகிய ஆல் தொகைநிலை), அவண் -அவ்விடம், கண்ணிரொடு -கண்ணீரோடு
(காய்ச்சீர் நோக்கிக் குறுகிற்று)
----------------------------------------
தமிழே 
----------------

கதிரே உலகின் கருப்பைதமிழே
முதிர்மொழிக் கெல்லாம் முதல்!

முதலாந் தமிழை மொழிக உளதோ
அதனிற் சிறந்த அமிழ்து!

அமிழ்தினும் ஆன்ற அருமை உடைத்து
தமிழினும் உண்டோ தலை!

தலையே உடலின் தலைமை தமிழே
உலகின் மொழிகட்(கு) உயிர்! 

உயிராம் உயர்தமிழ் ஓம்புக அன்றேல்
உயிரை மயிர்போல் உதிர்!

உதிக்கும் அறிவும் உயர்தமிழை ஓம்ப
மதிக்கும் உலகும் மகிழ்ந்து!

மகிழப்பா மார்தட்டு மாண்தமிழ்கா இன்றேல்
இகழப்பா தீர்ப்பாய் இடர்!

இடர்வரின் வீழ்த்தும் இயபள் தமிழாம்
மடவரல் என்பேன் மளைத்து!

மளைப்பே மிகினும் மளையாதச் செய்யிற்
களைகள் களைதல் கடன்!

கடமை தமிழைக் கடைபிடி இன்றேல்
மடமை புதராம் மனம்!

மனமொன்றிப் போற்று மணித்தமிழை நாளை
இனமுன்னைப் போற்றும் இசைந்து!

இசைமகள் தேடி இணைவாய் வேண்டாம்
வசைமகள் நாடும் வழு!

வழுவமைதி இந்நாள் வரைவிலகி நின்ற(து)
எழுஅமைதி ஏனோ? இழுக்கு!

இழுக்குவரின் சாவர் இசைசான்றோர் நீயும்
பழக்குன்னைப் பைந்தமிழ்நூல் பார்த்து!

பார்த்தால் வருமோ பழிநற் குறள்கற்றுத்
தேர்ந்தால் எழுமோ திமிர்!

திமிர்வகற்றி நாலடியுந் தேர்ந்துசிலம் போதி
நிமிர்வெய்தல் வேண்டும் நிலைத்து!

நிலையா உலகில் நினையழிக்கும் நூற்கள்
மலையாக் குவியும் மலிந்து!

மலிந்த சுவடிகள் மாண்பென நாடாய்
பொலிந்தநன் னூலுட் புகு!

புகுவாய் கவிக்கம்பன் பூந்தோட்டத் தேனை
வெகுவாய்ப் பருக விரை!

விரைந்தோடி ஒளவை வியத்தகு சித்தர்
உரையறிந்து போற்றி உயர்!


-அகரம்.அமுதா
அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
----------------------------------------------------

முதுகில்புக்ஸ் மூட்டை சுமந்துநான் போக
பொதிகழுதை கண்டு புலம்பும் -அதற்கிருக்கும்
நல்ல குணம்கூட நாலுபேர்க் கில்லை:இக்
கல்வியென் மேலெறிந்த கல்!

எழுதிகை சோர்ந்து விரல்தேய்ந்தி ரேகை
அழிந்துக்கண் பார்வை குறைந்து -பழுதாகிக்
கண்ணாடி போட்டபின்னும் 'ஹோம்ஒர்க்செய்' என்கிறீங்க
என்னாங்க டீச்சர் இது!

விடிந்தால் டியூஷன்விட்டால்பள்ளிக் கூடம்
முடிந்து விளையாடப் போனால் -படிங்கற
வார்த்தையைத்தான் பாட்டிவரை வாய்நிறைய கற்றிருக்காள்
ஆர்கிட்ட சொல்லி அழ!

ஹோம்ஒர்க்கை செய்தகை யோடு படித்துவிட்டு
கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா -வீம்போட
சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி
போரடிக்கு தேவாழ்க்கை போ! 

செவ்வாய், 22 நவம்பர், 2011




மாவீரரே!
சுவாசம் தழுவும் உங்கள் முச்சு கலந்த காற்றாயும் கால்கள் நனைக்கும் கடலின்
 அலை கரங்களாயும் எங்கள் உயிர் நாடியில் கலந்தவரே !
மூடிவிழா நீள் நினைவுகளால் கனக்கும் இதயங்களுடன் உங்கள் முன் விளக்கேற்றி சிரம் தாழ்த்தி தலை வணங்குகின்றோம் .

உங்கள் கனவுகளை தோழ்களில் சுமந்து நெருப்பாற்றில் பயணிக்கும் கணங்களிலெல்லாம் எம் நெஞ்சங்களில் வலிமை சேருங்கள். பகல் தொலைந்த இருள் கூரையின் கீழ் துயில் கலைந்த மக்களின் துயரங்களால் எம் நிலம் தகிப்பது இனியும் தொடராதிருக்க புயல் கடந்த வாடையிரவின் விடி வெள்ளியாய் எம் கண்களில் வெளிச்சம் காட்டுங்கள் .

உம் முன் தாழ்ந்த தலைகள் நிமிரட்டும் துவண்ட கரங்களின் பிடிகள் இறுகட்டும் இருண்ட கண்கள் ஒளிரட்டும் சோர்ந்த கால்கள் வேகம் கொண்டு விரையட்டும் எம் முன் வாருங்கள் எம் மனங்களில் சுடர் ஏற்றுங்கள் எம் காவல் தெய்வங்களே...

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

அருள் மொழி இசைவழுதி

உணர்வலைகள் பின்னல்கள்

ஓவென்று இரையும் ஊதற்காற்றே வேகம் குறைத்து வீசு தேவகுமாரர்கள் இங்கே துயில்கின்றனர் தூக்கம் கலைத்துத் தொலைக்காதே<
<கல்லெறியும் பொல்லக் கனத்தமழையே மெல்லப் பூவெறிதல்போல பொழிக இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்</
<நிலமே மழைநீரை நிறையக்குடிக்காதே உள்ளே சில்லிட்டுப்போகும் மாவீரர் மேனிகள்</
<அதிர ஊண்டிநடப்பவரே எம் வீரர்களின்களின் கனந்த சயனம் கலையக்கூடும்</
<பூக்களையும் மெதுவாகப்போடுங்கள் காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள் கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகிறார்கல்...களைப்பாறுகிறார்கள் :( :( :(

ஓவென்று இரையும் ஊதற்காற்றே வேகம் குறைத்து வீசு தேவகுமாரர்கள் இங்கே துயில்கின்றனர் தூக்கம் கலைத்துத் தொலைக்காதே<
<கல்லெறியும் பொல்லக் கனத்தமழையே மெல்லப் பூவெறிதல்போல பொழிக இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்</<நிலமே மழைநீரை நிறையக்குடிக்காதே உள்ளே சில்லிட்டுப்போகும் மாவீரர் மேனிகள்</
<அதிர ஊண்டிநடப்பவரே எம் வீரர்களின்களின் கனந்த சயனம் கலையக்கூடும்</
<பூக்களையும் மெதுவாகப்போடுங்கள் காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள் கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகிறார்கல்...களைப்பாறுகிறார்கள் :( :( :(