செவ்வாய், 11 ஏப்ரல், 2023

 மண்வாசம்

🌿
செத்தாலும் ஒரு காலம்
திரும்பி வரப் போறதில்ல...
கெண்டை விரிச்சான் சேவல்
ரெண்டரைக்கே கூவும்...
கிழக்கால வெளிச்சம் வர
"கண்டு" ரெண்டு துள்ளும்...
செவ்வருத்திப் பூமேல
சிட்டுக் குருவி வரும்
சிலிர்த்தபடி ஆட்டுக்குட்டி
விறாந்தேக்க தேடி வரும்...
ஐஞ்சு மணி எண்டா
அம்மாளாச்சி ஓசை வரும்...
அடவிக்குள்ள இருந்து
கட்டுமரம் கரைக்கு வரும்...
கோர்வையில ஒட்டி வரும்...
கூடைக்குள்ள கணவாய் வரும்...
பாரை மீன் மிஞ்சி மிஞ்சி
படுத்துக் கருவாடாகும்...
வாடிக்கையாளருக்கும்
வாசல் தேடிப்போகும்...
வசதி இல்லாதவர்க்கும்
வாழ மீன் தேடிப்போகும்...
வாடி அடிச்சு
மயிலிட்டியார் வந்தார்...
மணலைக் கிளறி
சூடைய வத்தல் போட்டார்...
கொட்டில் அடிக்க
கிடுகு கொடுத்தவரும்...
கொழுத்தின லாம்புக்கு
மண்ணெண்ணை கொடுத்தவரும்...
பட்டிலுக்க ஆடு வெட்டி
பந்தி சமைச்சவரும்...
பகல் களிஞ்சு இரவில
சூள் பிடிக்கப் போனவரும்...
உடும்பு பிடிச்சு
முறுகிப் போனவரும்...
உள்ளுக்க உருகி
கவிதை வடிச்சவரும்...
இரும்பு அடிச்சவரும்...
வரம்பு பிடிச்சவரும்...
திரும்பி வராமலே
கதிரமல போனவரும்...
விரும்பி அணைச்சவரும்...
விதானையாரும் வாத்தியாரும்...
மருந்து கரைச்சவரும்...
மகப்பேறு பார்த்தவரும்...
நாளைக்கும் நாம் இருக்க
சீமெந்து குழைச்சவரும்...
நல்ல மரத்தில
கதவு அரிஞ்சவரும்...
வேலைக்குப் போனவரும்...
வேலி அடைச்சவரும்...
சீலைக்குள் மடிச்சு
சீதனம் குடுத்தவரும்...
பாடைக்குள் போகையிலே
பறை அடிச்சு அழுதவரும்...
படலைக்கு கண்ணூறு
படைச்சு நூத்தவரும்...
ஒத்தைப் பனங்கள்ளும்
ஊற வச்ச பழங்கஞ்சியும்
தெப்பத் திருவிழாவும்
தேரோடும் சாமியுமாய்
அப்பத்த நினைவில
அம்மாளச்சி வந்து போனா...
செத்தாலும் ஒரு காலம்
திரும்பி வரப் போறதில்ல...
நன்றி தயாகுணன் மருதப்பு🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக