வெள்ளி, 8 மார்ச், 2013


சுதந்திர தினமா? அடிமை இனமா?


தமிழ்க்குடிகள்,

இருட்டறையில் இருந்து

தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு

புனர்வாழ்வுப் பொய்யர்கள்

வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்

 

தோற்றுப் போனவர்கள் பாவம்

தொலைந்தும் போனார்கள்

வென்றவர்களும் ஏனோ வெற்றிக்குள்

தொலைந்து போனார்கள்

நாற்றமடிக்கிறது தேசம்

பிணங்கள் அகற்றப்பட்ட பின்பும்…

 

தமிழ் குடிமக்கள்,

இருட்டறையில் இருந்து

தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு

புனர்வாழ்வுப் பொய்யர்கள்

வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்

 

ஜனாதிபதி உரை,

கண்ணகி போற்றப்படுகிறாள்

கற்பிற்காக அல்ல

மதுரையை எரித்ததற்காக.

மாண்புமிகு ஜனாதிபதியாம்…

 

யாழ் அரச அதிபர்….

கூடைப் பந்தாடும் குமரிகள்

கூந்தலை குட்டையாய் வெட்ட வேண்டுமாம்

குமரிகளும் குதூகலிக்கிறார்கள்…..

வெட்டப்படுவது எதுவென்று அறியாமல்

 

பள்ளியில்கூட ஈரமில்லை

பாலியலுக்காய் கண் சிமிட்டுகிறான் ஆசிரியன்

பாவம் மாணவி

புள்ளிகளிற்காய் பல் இளிக்கிறாள்

 

கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாம்

கன்னிகளை தேடுகிறார்கள் இளசுகள்

சுதந்திர தேசம் மலர்ந்து விட்டதாய்….

பின்னால் பின்னப்படும் கண்ணிகளை அறியாமல்

 

மார்புச் சேலையை மறைத்து மறைத்து

நெல் குத்திய என்சகோதரி

சேலை விலக்குகிறாள்

பாவம் சோற்றுக்காய் போலும்

 

புனர்வாழ்வு எனும் குடிகாரன்

அரங்கேறுகிறான் ”சுதந்திரம்” நாடகத்தில்

நாய் வேஷம் போட்டு

நிமிர்த்தி காட்டுகிறான் நாய்வாலை

கரகோஷங்கள் நின்றபாடில்லை

 

அரசியல் வெள்ளாந்திகளே…

இராவணனுக்கு சீதை தேவையில்லை

சீதைக்கும் கற்பு பொருட்டில்லை-ஆனால்

இராமனுக்கு மனைவி தேவை

ஏன் என்றுமே புரிவதில்லை உங்களுக்கு

 

சுதந்திரம் வேண்டாம்

சிலர் கூச்சலிடுகிறார்கள்

காந்தி மீண்டும் சுடப்படுவாராம்

குரல் வெளியில் இருந்தும் உள்ளே ஒலிக்கலாம்

 

உங்கள் நேரத்திற்கு நன்றி.

அன்புடன், அ.பகீரதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக