புதன், 20 நவம்பர், 2013

மறந்து போகுமோ

தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட
Picture 004
எழுத்துக்கு வேந்தர் சுஜாதா
எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ்
இருவரையும் மனதார பணிந்து வணங்கி!
கூழுக்குள் நீந்தியது காணும்! 

கரையேருங்கள்!
எனக்கு புரையேறுகிறது!
கவிதைக்கு அவ்வப்போது
கரவோசையும் வேணும்!.
அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன்
வணக்கம்.

பரணிகள் பலவும் முழங்கிய தேசம்.
அதை பரணிலே போட்டுவிட்டு
படகேறியவர் நாம்.
நாம் தமிழர்!
பனி விழும் தேசத்தில்,
பட்டதெல்லாம் மறந்துவிட்டு
படகுக்காரும், பத்தினியும்
பளிங்கினால் ஒரு மாளிகையும்
கட்டியவனுக்கு
பட்டென்று சுட்டது எதுவோ?
அதுவே சுயத்தை என்றான் ஒருவன்.
சுரத்தை வந்த நேரம் சுற்றம் எல்லாம் சுடுகாட்டில்
பரத்தை அழகின்
செழிப்பில் விழைந்து
மறத்தை இழந்து
மர மிசை ஏகிய
பழிப்பு வந்திடுமோ?
இனத்தின் கோபம் எம்மை
துரத்தி வந்திடுமோ?
பயத்தில் தூக்கம் தொலைந்து போயிடுமோ?
தாயன்ன தமிழாம் அது விலத்தி சென்றிடுமோ?
படுத்தியதில்,
பாடாய் மனம்
படுத்தியதில்
சுருட்டியதை எடுத்துக்கொண்டு
பேசாமல்
வீட்ட போய் செட்டில் ஆவோமோ?
திடீரென்று உதித்த ஞானம்
சில்லாலையில் சென்டர்லிங்க்
இல்லையென்றதும்
ஸ்லிப்பாகி விட்டது!
இருந்தாலும்
வெளிப்பாக உணர்வை காட்டி
விறைப்பாக வீரம் பேசும் எண்ணத்தில்
துரைக்கு தொலைபேசி போட்டேன்
ஆடிக்கு கூழ் ஊற்றுகிறோம்
பாடிவிட்டு போவதற்கு
மேடை போட்டு அரங்கு அமைக்கிறோம்
கவிதை எழுதுவாயா தம்பி? என்றார்
கிலோ எவ்வளவு அண்ணே? என்றேன்.
கஷ்டப்பட்டு கட்டிய மன்று இது!
பார்த்து பத்திரம்.
கட்டிய வேட்டி பத்திரம்.
பாடும் மீன் ஓடினாலும்
உறு மீனாம் எங்கள் மணி அண்ணே!
அவரும் பாடுவார்!
பாட்டும் பத்திரம்!
பயம் பிடித்துவிட்டது!
வேட்டு நிச்சயம் என்றாலும் – ஒரு
காட்டு காட்டவேணும் எண்டு
கடங்கார ஆசை மோதி முட்டி விட்டது!
கடவுளின் மேல் பாரத்தை போடலாம் என்றால்
அவனே ஒரு கடங்காரன், அவன் பாட்டு தனிப்பாட்டு!
அது கிடக்கட்டும்
கவிக்கு வருகிறேன்!
மறந்துபோகுமோ?
மறதி
தமிழில் எனக்கு
மிகவும் பிடித்த வார்த்தை!
மறந்ததால் தான் மூன்று வேளையும் எனக்கு வயிறு செரிக்கிறது!
மற்றவன் மீட்டுத்தருவான் என்று மண்ணை மறந்து இருப்பவன்!
மனிதரை பக்கத்தில் இருந்தும் மதிக்காமல் தனித்து கிடப்பவன்!
தன்னுயிர் தந்து மண்ணுயிர் காத்தவரை
அரை வினாடி மௌன அஞ்சலிகளில் அடக்கியவன்!!
மறதி கொண்டதால் எமக்கு மறத்தமிழன் என்றும் ஒரு பெயர்! 
மறந்து போகுமோ?
நனவிடை தோய்தல் என்பது வெறுமையில் காணும் ஒரு இனிமை
கனிந்து உலர்ந்தபின் பூவின் வாசம் தேடும் பேதமை!
காய்ந்து உதிர்ந்த பின் வசந்தங்களை மீட்கும் சருகுகளின் ஏழமை!
மனைவியின் கண்களில் முதல் காதலியை தேடும் கணவனின் கள்ளமை
பழையன மீட்டல் பழுது என்றான்
புதுவையை புனைபெயரில் கொண்டவன்!
நினைக்கவேண்டாம் நெஞ்சம் கனக்கும் என்றான்.
ஆனாலும் சுவைக்காக இருக்கிறது ஒன்று!
மறந்தாலும் நினைக்க மறக்காத – உயர
பறந்தாலும் மறந்து போகாத
இரந்தாலும் இனியும் திரும்பிக்கிடைக்காத
ஒரு பருவம்!
உருவம் மாற்றிய பருவம்
செருப்பை கூட நல்லெண்ணெயில்
துடைத்து போட்டு,
செருக்காய் திரிந்த விதிர்த்த பருவம்
குனித்த பூவுக்கும் கொவ்வைச்செவ்வாய்க்கும்
பருக்கள் தோன்றிய வயதில்
தெருக்கள் முழுதும்
மேக கருக்கலாய் திரிந்த
பொறுக்கி பருவம்!
சுள்ளென்று கொள்ளிக்கட்டை சுடும்நாளில்
கணம் நினைத்தால்
சில்லென்று குளிர் வந்து தணிக்கும்
சிலிர்த்த பருவம்!
எங்களின் பத்தாண்டு பள்ளிப்பருவம்! 
Picture 006விடிய வெள்ளன
தட்டி எழுப்பி
கொப்பி புத்தகம்
எடுத்து படி
செல்ல குஞ்சல்லோ
என்று
அதிகாலையில்
அம்மா தருவாள்!
அது கோப்பி!
அண்ணா கோப்பி!
குடிச்சதும் பல் துலக்க
பயன்படும் அண்ணா பற்பொடி!
கரண்டு கம்பத்தில் பிடுங்கின பீங்கான் கப்பி
மருண்ட ராணுவம் விட்டுச்சென்ற ஓட்டை வாளி
தேடா வளையத்தில் கட்டி இறக்கினால்
தின்னவேலி கிணற்றில் தண்ணி இறைப்பதற்குள்
திண்டதெல்லாம் செமிச்சுப்போயிடும்!
அவசரமாய் அக்காவுக்கு தெரியாமல் அவள்
அழிரப்பர் திருடி,
அட்டவணை பார்த்து
அத்தனை கொப்பிகளையும் அள்ளிப்போட்டுக்கொண்டு
லுமாலா சைக்கிளை எடுக்கும் போது
அப்பன் கொஞ்சம் நில்லு! - என்று
அம்மா, சங்கிலி பணிசோடு
படலைக்கு ஓடிவரும்!
போறவனை புறத்தால கூப்பிடாத என்ற
அப்பா குரல் அம்மாவை வையும்!
சைக்கிள் சவாரி நல்லூரை எட்டுகிறது!
கிழக்கு வாசலில் தோழியர் சூழ
கோகிலவாணி!
என் முதற்காதல்!
நித்தமும் பாடங்களை படித்த ஞானிக்கு
பதின்மங்களை உணரவைத்த
ரஞ்சிதா!
கல் நெஞ்சுக்காரி,
கிஞ்சித்தும் ஒரு சிரிப்பு தானும்? ம்ஹூம்!.
வஞ்சிக்கு எழுதிய கடிதங்கள்
என் பெஞ்சுக்குள் கிடந்தது கண்டு
பஞ்சர் வாத்தியிடம்!
நான் வாங்கியது!
ஆறு கால பூசை!
பத்னஞ்சு வருடம் கழிந்து நேற்று
குஞ்சியழகின் குடும்ப படத்தை முகநூலில் கண்டேன்.
சற்று பருத்திருந்தாள்!
பக்கத்தில் விறைத்த மண்டையன் ஒருத்தன்!
கக்கத்துக்கு இரண்டாய் நான்கு குழந்தைகள்
வெறுத்துப்போய் பெயர் கேட்டேன்.
நாலாவதுக்கு கூட என் பெயர் இல்லை!
நாய்க்குட்டி பெயரை கேட்டால்!
அது கூட அதோ நாதாறி பெயர் தான்!
நான் பாவம்!
ஆண் பாவம்!
எங்கள் ஊரில் இரண்டு கொட்டில்கள்!
கள்ளுக்கு ஒன்று
கல்விக்கு ஒன்று
சில வாத்திமார்
கள்ளுக்கு சைன் வைத்துவிட்டே
கற்பிக்க வருவினம்.
கரும்பலகை அறியாது
வெறும் பலகையில் எழுதுவினம்.
வாயில் சொல்லுக்கும் பஞ்சமிராது!
பனை சிலாகையில் செய்த வாங்கின்
சிராய் தேய்த்து பாண்டு எல்லாம் பீத்தலாகும்!
குடை வெட்டுப்பாவடைகள் காற்றில் பறந்து
வேறு எதை எதையோ கந்தலாக்கும்!
வாத்தி வேறு
வரிசைமாற்றம் சேர்மானம்
வரையறுக்க சொல்லி
வீட்டில் மனிசி அறுத்ததை
நமக்கு வந்து அறுக்கும்!
நம்ம பெடியளும் சளைத்தவர் இல்லை.
படிப்பில் பக்திமான்கள்.
நவீன எறிபத்த நாயன்மார்கள்
வில்லுக்கு விஜயன்
விட்டு எறிந்த ரொக்கட்
முன்னுக்கு வாங்கில் இருக்கும்
சிவானியின் சிலுப்பி
முடி மீது குத்தி நிற்கும்.
கொல்லென்று கூட்டம் கை கொட்டி சிரிக்கும்.
புல்லுருவி புண்ணியவான்
ஒருவன் போட்டு கொடுக்க இருப்பான்.
விஜயனுக்கு வந்தது வில்லங்கம்!
வில்வ காம்பால் வாங்கும் அடியில்
பிரேமாதாசா தந்த
சீருடை படங்கு
புழுதி பறக்க
படக்கு படக்கு என்று
சத்தம் போடும்!
நான் வயதுக்கு வந்த பருவம்!
குண்டுகள் சத்தத்தில் அவசர அவசரமாக
வெடித்த பருத்தி செடி!
அந்தரங்கங்களை அங்கீகரிக்கும் அறிவை ஊட்டாத நம் கலாச்சாரம்!
ஒன்றுமே புரியாது!
மின்சாரம் இல்லாமல்
ஒளிரும் டியூப்லைட்!
அகதியாக் காய்ந்துகிடந்தவனுக்கு
அட்டைப்பக்கத்து விகடனின் குஷ்பு படம் தான்
காமசூத்திரம் ஆனது!
அதில் கூட முகம் தவிர எல்லாமே
கறுப்பு மையாலே மறைந்திருக்கும்
படத்தை சுரண்டி சுரண்டி
கைகள் தமக்கு தாமே கரியை பூசும்!
அறியாமலேயே இருபதுகளுக்குள் நுழைந்த
அதிசய இளைஞன் நான்!
நான்
பாடசாலையில் ஒதுங்கியத்தை விட
பங்கருக்குள் பதுங்கிய நாட்களே அதிகம்!
வெடிப்புகள் காணாத வீடுகளே இல்லை!
அரிக்கன் லாம்பு சிமினி கூட
தன் பங்குக்கு லேசாய் வெடித்து கிடக்கும்!
தண்ணிக்கு மேலே எண்ணை நிற்கும் விஞ்ஞானம்
தமிழன் படிப்புக்கு விளக்கெரிக்க பயன்பட்டது!
இடரிலும் தளரிலும்
இடுக்கண்கள் தொடரினும்
இடைவிடாது இடம் பெயரினும்
பாடபுத்தகத்தை முதலில்
மூட்டை கட்டும் பரம்பரை அது.
பள்ளி விட்டு வீடு
வரும் வழியில் அண்ணை மார்!
அவசரமா மறிப்பினம்!
மற்றவன் மரிப்பில்
மனிசனுக்கு ஏன் படிப்பு
போதாது ஆள் என்று
போருக்கு அழைப்பினம்.
பாம்புகள் சூழ்ந்து படமெடுத்து ஆடுது
கட்டுப்பாட்டை மீறி
பட்டங்கள் எல்லாம் மேற்படிப்புக்கு பறந்துபோட்டுது
மற்றவன் எல்லாம் படகேறிவிட்டான்.
மிச்சம் நீயும் நானும் தான் என்பார்!
சொல்ல சொல்ல யோசித்தேன்!
நான் ஒரு பயந்தாங்கொள்ளி.
என் நீளக் காற்சட்டையில்
ஈரம் கொஞ்சம் எட்டிப்பார்த்தது.
படிச்சு நானும் வெளிய போய்
பாங்காய் உழைச்சு ஊருக்கு அனுப்பவா? என்று
பம்மாத்தாய் ரெண்டு வார்த்தை உளற
செவிட்ட பொத்தி ஒரு அறை!
கிண் என்று வலித்தது.
இன்று
நிமிர்ந்து பார்க்கிறேன்!
அட!
சாம்பல் பூசணிக்காய் சாயம்
உங்கள் கன்னங்களிலும் ஒட்டிக்கிடக்குது
அடி பலமோ?

பள்ளிப்பருவம்
மறந்துபோகுமோ?
மறந்து தான் போகலாமோ?
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும்
கண்ணாடியில் கூட பிறர் முகம் தேடும்
தன் குளியலறை நிர்வாணத்தை தானே எதிர்கொள்ள அஞ்சும்
குழப்பங்களின் நாயகன் நம் தமிழன்.
காதற்ற ஊசியை தேடி கடைத்தெருவுக்கு
வந்தவன்
வந்த இடத்தை சொந்தமாக்கினான்.
சொந்த இடத்தை இப்போது சென்ற இடம் ஆக்குகிறான்!
ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ளுகிறேன்.
மறந்துபோகுமோ
மறப்பது நன்றன்று.
மன்னிக்க முடியாத குற்றமும் கூட!
நம் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது.
மறதிக்கு மருந்து மாஸ்டரின்ட பிரம்பு! ...............
நன்றி வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக