திங்கள், 29 ஏப்ரல், 2013

திண் மறம் தா !

சித்திரைத் தென்றல் பூக்கள் தேகம் தழுவ 
இல்லங்கள் கமகமவாசமாகணும் 
முத்து மணிக் கற்கள் பாக்கள் யாவும் ஒளிர 
உள்ளங்கள் யுகம் யுகம் நேசமாகணும் !


மகளாய் வந்தாய் நீ
ஆண்டுத் தாய் கற்கண்டாய் இனிக்க இனிக்க
புகழால் நின்றாய் நீ
மீண்டும் மீண்டும் மலர்ச் செண்டாய் மணக்க மணக்க !

விழிகள் தேனைச் சுரந்திட
பூமி மூடணும் புன்னகையாலே
மொழிகள் வானை விருந்திட
பூ பாடணும் தன்னழகாலே !

வாசல் வந்தது புத்தாண்டு
காலச் சாவி கொண்டு திறந்து
நேசம் தந்தது முத்தொன்று
ஆழக்காதல் அன்பு பிறந்து !

பகலில் முழு மதிகாண
வெள்ளை நாள் வந்ததே
இரவில் புதுப்பரிதி தோண
கொள்ளைப் பேரொளி தந்ததே !

கோடிப் பூக்கள் நறுமணங்கலந்து
பாடுவேன் புத்தாண்டு வாழ்த்து
வாடிப் போன ஒரு மனமும் மகிழ
சூடுவேன் சொற்கொண்டு போற்றி !

வறுமை பிணி மரணிக்க
வரம் கொண்டு வா
கொடுமை கொடுங்கோல் இறக்க
உரம் இன்று தா !

தூய தமிழ் வான்வரை ஒலிக்க
திட மனம் சக்தி தா
தேன் தமிழன் தானென்று உரத்துரைக்க
கடுங்குணம் புத்தி தா !

பொன் பொருள் ஈழ முற்றத்தில் விளைய
உன் அருள் தா இறைவா
என் மண் இருள் சத்தமின்றிக் களைய
திண் மறம் தா தலைவா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக