பூத்துக் குலுங்குதையா
(வெண்பா அந்தாதி)
வெப்பப் பெருமூச்சில் வெந்திருக்கேன் - அப்பப்பா
காத்தைப்போல் வந்தீக! கன்னி மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதையா பூ.
பூக்கூடை தூக்கி புறப்பட்டால், நான்கோர்த்த
பூகூட வாடிப் புலம்புதையா - பூகூட
சேர்ந்திருக்கும் நாராகச் சேர்ந்து மணம்வீச
தேர்ந்தெடுத்து நாளொன்று சொல்.
சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய் மனம்திருடி!
எல்லாம் இருந்தெனக்கு ஏதுமில்லை - பொல்லாத
காதல் புகுந்து கரைக்குதையா தேகத்தை !
வாதைக்கு வைத்தியமாய் வா!
வாசற் படியெங்கும் வந்திருந்து நீபோன
வாசம் கலந்து வழியுதய்யா - வாசற்
படியாய்த் தவமிருந்து பார்த்திருக்கேன் உன்னை
விடியாப் பொழுதில் விழித்து.
விழித்தால் கனவு விலகுமென எண்ணி
விழி-தாழ் திறக்கவில்லை வீணாய்! - விழித்து
உனைத்தேடி வாசலில் உட்கார்ந்தேன், ஆனால்
எனைத்தேடி யார்தருவார் இங்கு?