விடியலுக்காய்ப் பயணிப்போம்....
கவிதை - இளங்கவி
முச்சந்திவரை கொண்டுவந்து
மூலை திரும்ப முன்
முடிவைத் தவறவிட்ட
துரதிஸ்ரசாலிகள் நாம்.....
ஆம் நான் கூறுவது
நம் சுதந்திரத்தைத் தான்......
.......
முடியாததொன்றை
முடித்துக்காட்டி....
பணியாத சிங்களத்தை
பணிவித்துக்காட்டி....
உலகுக்கே தமிழரை
யாரென்று காட்டி.....
தமிழனென்றால் மூக்கில்
விரலை வைக்கக் காட்டியவர்கள்....
இன்று வீடுகளில்
முடங்களாய்....
வீதிகளில்
பிணங்களாய்....
.
சிறைகளிலே
ஜடங்களாய்.....
மொத்தத்தில்
செத்துக் கொண்டிருக்கும்
பிணங்களாய்.....
.......
வீழ்ந்து கிடக்கும் வீரம்
மீண்டு எழ
ஆண்டுகள் பல...ஏன்!
பல நூற்றாண்டுகள் ஆகலாம்.....
ஆனால் வீறுகொண்ட
சுதந்திர தாகத்தை
தொடருமென்று முன்னெடுக்க
முடியுமென்று சொல்லிப் பார்
அது உன்னால்
நிச்சயம் முடியும்.....
முடியாதென்றால் அது
என்றுமே முடியாது தான்.....
...........
முடியாதென்று நம்மிடம்
அடிவாங்கி ஓடியவன்
முழு உலகையும் திரட்டி
எம்மையே
மூர்ச்சையடைய வைத்துவிட்டானே.....!
அவனாலேயே
அது முடிந்ததென்றால்....
உன் சுதந்திரதாகத்தை
முன்னெடுக்க
உன்னால் ஏன் முடியாது.....!
..............
நீர்மூழ்கியும் செய்தவன்.....
நிஜமாக வானிலும் பறந்தவன்.....
பொங்கும் கணைகளால்
எதிரியை....
ஆயிரமாயிரமாய் கொன்றவன்....
அனைத்தையும் செய்த
நம் தலைவன்
மூட்டிய நெருப்பை
நெஞ்சில் வைத்திருக்கும் உன்னால்
நிச்சயம் எதுவும் முடியும்......
உன் சுதந்திரத்தை முன்னெடுக்க
உன்னால் மட்டுமே முடியும்......
...........
சளிவந்து மூக்கடைத்தால்
கிலிகொண்டு ஓடாமல்
வாயால் சுவாசித்து
வாழப் பழகும் உனக்கு
ஆயுதம் மெளனித்தால்
அகிம்சை இல்லையா.......
உலகின் ஆதரவு தேடத்தெரியாதா.....
அடிக்கிறான் என்றுசொல்லி
உலகின் முன் அழத்தெரியாதா....!
அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகருமென்று
படிக்க மாத்திரம் உனக்கு
பழமொழி சொல்லவில்லை......
வாழ்க்கையில் பாவிக்கவும் தான்.......
இருண்டவுடன்
படுக்கையில் சுறுளும் நாம்....
விடியல் கண்டதும்
வேலைக்குப் போவது போலத்தான்.....
எங்கள் விடியல் போரில்
இருண்ட பாதைப் பயணம் இது....
விசையாய் செல்
விடியல் வெகு தூரமில்லை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக