வெள்ளி, 1 அக்டோபர், 2010

சந்தர்ப்பவாதிகளிடம் எப்படித் தோற்றோம்?

சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து ஒரு எதிர்ப்பியக்கத்தை கட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக்கம் ஒரு உதாரணம். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே, தனது மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக வைத்துக் கொண்டே ஈழப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக போராடுவதாக நாடகமாடினார் டாக்டர் இராமதாஸ். அதனால்தான் ”யாரும் யாரையும் திட்டக் கூடாது, துண்டறிக்கை வெளியிடக் கூடாது, கொடும்பாவி கொளுத்தக் கூடாது, வன்முறையில் இறங்கக் கூடாது, பந்த் நடந்தால் அமைதியாக வீட்டில் இருக்க வேண்டும்” என்றெல்லாம் பேசி ஈழப் போராட்டங்களுக்கு ஆப்பு வைத்தார் ராமதாஸ்.

இப்படி ஈழத் தமிழினத்திற்காக போராட வந்த தைலாபுரத்து நாயகன் கடைசியில் போயஸ் கார்டனில் போய் கூட்டு வைத்தார். அந்தக் கூட்டு காங்கிரஸ், திமுகவின் கூட்டணிக்கு முன்னால் தோல்வியுற்ற பின்பு இப்போது மீண்டும் காங்கிரஸ், திமுக கூட்டணியில் சேர தூது விடுகிறார் இந்த தமிழினப் போராளி.

சாதாரதண போராட்ட வடிவங்களையே தவிர்க்கச் சொல்லும் தமிழினப் போராளிகளின் காலத்தில்தான் முத்துக்குமார் ” உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! ” என்று ஒடுக்கபப்டும் மக்கள் குறித்து சரியாகவே உணர்த்தி விட்டுச் செல்கிறான்.

திருமா அப்போது திமுகவோடும் கருணாநிதியோடும் அனுசரணையோடு இருந்தார். ராமதாஸ் காங்கிரஸ் கூட்டணியில் பதவியை பங்கிட்டிருந்தார். வைகோ ஜெயலலிதா கூட்டணியில் இருந்தார். தா.பாண்டியன் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரும் முடிவில் இருந்தார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்த நெடுமாறனோ ஜெயலலிதா கூட்டணியின் ஆதரவாளராக இருந்தார். திருமா, வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், இவர்களுடன் இல.கணேசன் உள்ளிட இந்துத்துவ சக்திகள். இந்த இந்துத்துவ சக்திகளையும் தமிழார்வலர்களையும் இணைக்கும் புள்ளியாய் நெடுமாறன். இதுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை.

இவர்கள்தான் ஈழப் போருக்கு எதிராக தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தும் பொறுப்பை ஏற்று களம் கண்டவர்கள். புலிகளும் தங்களின் தமிழக ஆதரவாளர்களாக நம்பியது இவர்களைத்தான். ஆனால் முத்துக்குமாரின் மரணசாசனமோ கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட எல்லா ஒட்டுண்ணி துரோகிகளையும் சம தூரத்தில் விலக்கி வைத்து எழுச்சிக்கான புதிய பாதையைக் கோரி நின்றது. ஆனால் உணர்வு கொண்டு எழும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் முத்துக்குமாரை கொண்டு போய் வெகு வேகமாக புதைத்ததன் மூலம் இவர்கள் துரோகம் செய்தது முத்துக்குமாருக்கு மட்டுமல்ல ஈழத்தை ஒரு கருவியாகக் கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டிருக்க வேண்டிய அரசியல் எழுச்சியையும் பாழ் படுத்து தமிழ் மக்களுக்கும் சேர்த்தே இவர்கள் துரோகம் செய்தார்கள். அந்த மரணசானத்தை வைகோவோ, திருமாவளனோ, ராமதாஸோ மேடையில் கடைசி வரை வாசிக்கவே இல்லை.

ஏனென்றால் அதை வாசித்தால் கருணாநிதி மனம் புண்படும் என்று திருமாவளவன் நினைத்தார், சோனியாவின் மனம் புண்படும் கூட்டணிக்கு குடைச்சல் வரும் என்று இராமதாஸ் நினைத்தார், ஜெயலலிதாவின் மனம் புண்படும் என்று வைகோ நினைத்தார், உண்மையிலேயே தமிழகத்தில் கிளர்ச்சி எதுவும் ஏற்பட்டு விடுமோ என நெடுமாறன் நினைத்தார். அத்தனை பேரும் சேர்ந்து முத்துக்குமாரை ஊத்தி மூடினார்கள்.

”உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.” என்று முத்துக்குமார் எச்சரித்தது கருணாநிதியை…. ஆமாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பலனை திருடி அதை வைத்து பதவிக்கு வந்த சந்தர்ப்பவாதியான கருணா குறித்த எச்சரிக்கைதான் அது. ஆனால் ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் துரோகத்தை மட்டுமே பேசிய இவர்கள் முத்துக்குமாருக்குச் செய்த துரோகத்தை நாம் என்ன பெயரிட்டு அழைப்பது? முத்துக்குமார் சொன்ன சுயநலமிகள் என்ற வார்த்தை இவர்களுக்கு எவ்வளவு கச்சிதமாக கடைசியில் பொருந்திப் போயிற்று….

முப்பதாம் தேதி மாலை தூத்துக்குடியில் இருந்து அவரது பாட்டி உள்ளிட்ட சில உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களிடம் போய் நாங்கள் பேசினோம். ஆனால் அவர்களிடம் பேச விடாமல் எங்களை தடுத்தார்கள் சிலர், அவர்கள் நிலத் தரகர்கள் சங்க நிர்வாகிகள். அவர்கள் நாடார் என்கிற சாதியின் அடிப்படையில் முத்துக்குமாரின் உறவினர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். கடைசியில் முத்துக்குமாரின் உடலை துருப்புச் சீட்டாக பயன்படுத்த முடியாமல் ஊர்வலமாக கொண்டு சென்று புதைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஒரு பக்கம் கருணாநிதி போலீசின் கொடூரமான அடக்குமுறை, இன்னொரு பக்கம் சந்தர்ப்பவாத ஓட்டுண்ணி அரசியல் தலைவர்கள் என மாணவர்களும் இளைஞர்களும் அவர்களால் தாக்கப்படும் சூழலும் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் நடந்தது.

ஜனவரி 31&ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு மேல் முத்துக்குமாரின் ஊர்வலம் கொளத்தூரில் இருந்து புறப்பட்ட போது பெரும் உணர்ச்சி நெருப்பும் மக்கள் வெள்ளமும் அந்த இடத்தை நிறைவித்திருந்தது. சாலையெங்கும் மக்கள் வெள்ளம். அவனது உடலை எடுத்துச் செல்ல ஊர்வலம் புறப்பட்ட போது தன்னெழுச்சியாக ஐம்பதாயிரம் பேர் வரை திரண்டிருந்தார்கள். வீதியெங்கும் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். வட இந்திய மார்வாடிப் பெண்கள் தண்ணீரும் மோரும் கொடுத்தார்கள். பலரும் தங்களின் வீடுகளுக்கு முன்னே வாசலில் நின்றபடி மெழுகுவர்த்தி ஏந்தி முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இவர்கள் எல்லாம் யார் திருமாவின் தொண்டர்களா? அல்லது வைகோவின் ரத்தத்தின் ரத்தங்களா? அல்லது இராமதாஸின் கைப்பிள்ளைகளா? இல்லையே? பொது மக்கள்………… எங்கோ நடக்கும் ஒரு பிரச்சினையைப் பார்த்து பொறுக்க முடியாமல் தன்னை எரித்துக் கொண்ட ஒரு தியாகிக்கு வணக்கமாவது செலுத்துவோம் என்று வீதிக்கு வந்தவர்கள்.

உண்மையில் இவர்கள் உட்பட, நாங்கள் உட்பட அனைவருமே தமிழகத்தில் நாம் எதிர்பாத்த எழுச்சி ஏற்பட்டு விட்டது என்றே நம்பினோம். அது உண்மையும் கூட. எழுச்சிக்கான கருவியைத்தான் நாம் சுமந்து சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் அது சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சடலமல்ல. மாறாக தமிழக மக்களை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டிய ஆயுதம் அது. ஒரு எழுச்சியை ஏற்படுத்த வல்ல எல்லா சாத்தியங்களோடும்தான் முத்துக்குமார் மரணித்திருக்கிறான். ஆனால் எழுச்சிக்கான மிகச் சிறந்த கருவியாக இருந்த………….. இனி எப்போதும் வரலாற்றில் கிடைக்க வாய்ப்பில்லாத முத்துக்குமாரை இவர்கள் வீணடித்து விட்டார்கள் என்கிற கோபம் எல்லோருக்குமே அந்த இடத்தில் இருந்தது.

கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் நீளமான ஊர்வலப்பாதை எங்கிலும் மக்கள் வெள்ளம். இறுதிவரை நாங்கள் சோர்ந்து போகவில்லை. மக்களும் சோர்ந்து போகவில்லை. சுடுகாட்டை ஊர்வலம் நெருங்கிய போது தமிழகத்தின் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் காலவரையற்று இழுத்து மூடியது கருணாநிதி அரசு. இந்தச் செய்தி மாணவர்களுக்கு எட்டியதும் சினமடைந்த அவர்கள் முத்துக்குமாரின் உடலோடு சாலையிலேயே அமர்ந்தனர். உடலை திருப்பி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டுக்குக் கொண்டு செல்வோம் என்று ஆக்ரோஷமாக கிளம்பினார்கள். ஆனால் அப்போது மாணவர்களைத் தாக்கி முத்துக்குமாரின் உடலை வேக வேகமாக சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று புதைத்தவர்கள் யார் தெரியுமா?

“நான் ராஜபட்சேவை நேரில் பார்த்தால் கொல்வேன்” என்று சொல்லி விட்டு பின்னர் கொழும்புவிற்குச் சென்று நேரில் பார்த்து கைகுலுக்கி பொன்னாடை போர்த்தி பரிசும் வாங்கி சிரித்துப்பேசி வந்துவிட்டு… இப்போது மீண்டும் இனப்படுகொலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா, அந்த திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள்தான் மாணவர்களைக் கடுமையாக அங்கே தாக்கினார்கள். அவர்கள்தான் முத்துக்குமாரின் உடலை தரதரவென இழுத்துச் சென்று புதைத்தார்கள். ஆனால் முத்துக்குமாரின் உடல் எரிந்த சுடுகாட்டில் போடப்பட்டிருந்த மேடையில் எல்லா சந்தர்ப்பவாதிகளுக்கு முன்னால் முதல் ஆளாக மேடையில் ஏறி நின்றார் உலகத் தமிழர்களின் உள்ளூர்க் காவலன் திருமாவளவன்.

இப்படித்தான் முத்துக்குமார் மூட்டிய தீயை ராமாதாசும், வைகோவும், திருமாவும், நெடுமாறனும் சேர்ந்தே நீரூற்றி அணைத்தனர். கருணாநிதியோ அதை மணல் மூடி புதைத்தார். முத்துக்குமார் இன்று ஒரு நினைவாக மட்டுமே வேதனை கலந்த நினைவாக மட்டுமே நம்மிடம் இருக்கிறான். இவ்விதமாய் அந்த நாடகம் நள்ளிரவு ஒரு மணிவரை நீண்டது. சுடுகாட்டில் எரிந்த நெருப்பை விட கனதியான தீயொன்று எங்கள் உள்ளங்களின் எரியத் துவங்கியது அன்றுதான்.

முத்துக்குமாரின் மரண சாசனம் ஒரு அப்பாவியான புலி ஆதரவாளரின் கோணத்தில் முக்கியமாக ஈழமக்களின் துயரங்களை நினைத்து எழுதப்பட்டதுதான். அந்தக்கடிதம் அரசியல் தொலைநோக்கில் எழுதப்பட்டத்தல்ல. ஆனால் தமிழகத்தின் இயலாமை குறித்து உணர்ச்சிப் பிழம்பாய் எழுதப்பட்டது. அதில் கருணாநிதி, ஜெயாவைத் தாண்டி மற்ற தலைவர்களின் சந்தர்ப்பவாதங்கள் குறித்து இல்லை. எல்லோரையும் போல முத்துக்குமாரும் அவர்களை நம்பியிருக்கக்கூடும். முத்துக்குமாரை விடுங்கள், புலிகளும் கூட தேர்தல் முடிவு வரை இவர்களைத்தானே நம்பினார்கள். இன்று முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் துரோகிகளின் பட்டியலை முழுமையாக உணர்ந்திருப்பார். ஈழத்திற்கான வீழ்ச்சியை அறிவுப்பூர்வமாக பரிசீலிக்க முனைந்திருப்பார். ஆயினும் இன்று அவர் இல்லை. ஆனால் தமிழார்வலர்களும், புலி ஆதரவாளர்களும் இருக்கிறார்கள். அவர்களாவது முத்துக்குமாருக்குப் பதில் அந்த சுயபரிசீலனையை செய்வார்களா?

மறுநாள் பிப்ரவரி ஒன்றாம் தேதி அதிகாலை அங்கிருந்து கலைந்து சென்றோம். முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்து ஒரு வருடம் ஓடிக்கழிந்து விட்டது. இப்போது மறுபடியும் இவர்கள் முத்துக்குமாரின் நினைவைப் போற்றுவதாக அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். ஊர்வலங்கள், மலர்க் கோபுரம், என முத்துக்குமாரை நினைவு படுத்துகிறார்கள்.

ஆனால் அந்த நினைவுகளில் மனம் இன்னொறு முறை ஏமாற மறுக்கிறது. காரணம் தான் சந்தர்ப்பவாதிகளிடம் தோற்றுப் போனதைக் காண முத்துக்குமார் இல்லை. அவரது மரண சாசனத்தை வாசித்த நாம் மட்டுமே இருக்கிறோம். மீண்டும் மீண்டும் அந்த அறையை நான் கடந்து செல்லும் போதெல்லாம் பாதி எரிந்த அந்தக் கடிதம் என்னை தொல்லையுறுத்துகிறது. மரணத்தை ஆயுதமாகத் தந்து போராடு என்றவனுக்கு உயிரோடு இருப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் என்னைச் சித்திரவதை செய்கிறது. தோற்கடிக்கப்பட்டவனின், ஏமாற்றப்பட்டவனின் மனச்சாட்சியாய் உள்ளுக்குள் இப்போதும் குமைந்து கொண்டிருக்கிறேன்.

முத்துக்குமார் எங்களை மன்னித்துவிடு……….

………………………………………………………………………………………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக