மரபுக் கணவர்
உனக்கு ஆணுறை கூட
சுமையாக இருக்கிறது
எனக்கு மட்டும்
கருக்கலைப்பா?
அம்மாவை அடித்தப்போது
துடித்தவன், கை ஓங்குகிறான்
தன் மனைவிக்கு
ஆண் என்பதனாலோ?
திருமணத்தில் குனிந்தது
தவறாகிப் போனது
வாழ்க்கை பூராகவும்
எதிர்பார்க்கிறாய்
உனக்கு ஆணுறை கூட
சுமையாக இருக்கிறது
எனக்கு மட்டும்
கருக்கலைப்பா?
எல்லோருக்கும் அழகாயிருக்கிறது
” ப”கழுத்துச் சட்டையும்
ரைற்று ஸ்கேட்டும்,
என்னைத் தவிர!
சமையலறையில் எனக்காக
நீ ஒன்றும் செய்வதில்லை.
படுக்கை அறையிலுமா?
இரவில் விஸ்கி, காலையில் பெட்கோஃப்பி
எனக்கு தண்ணீரைக் கூட-நீ
எடுத்து வருவதில்லை
சீ, நீ என்ன மனுஷன்?
என் சிரிப்புக்குக்கூட
எல்லை போடுகிறாய்
பூங்காவனத்தையா உன்னிடம்
எதிர்பார்த்தேன்
வெறும் மலரைத்தானே?
மளிகைக் கடை தெரியாது
மகளின் மார்க்குகள் தெரியாது
மணநாள் தெரியாது-தெரிந்துகொள்கிறாய்
மாதவிடாய் நாட்களை மட்டும்
எத்தனை ஆண்டுகள்
வாழ்ந்து விட்டாய்
என் கால்நிகத்தின்
கலர்கூடவா தெரியாது?
மாலைக்கண் நோயா?
இரவில் மட்டும்- ஏன்
தோற்றுப் போகிறாய்?
அடிக்கடி மறக்கிறாய்-உன்
மனைவி என்பதை
அடிக்கடி நிரூபிக்கிறாய்-நீ
ஆண் என்பதை
இதுவா என்சுதந்திரம்,
”எனக்காக காத்திராமல்
நீ சாப்பிடலாம்”
சீ, கையை எடு
நான் தூங்குகிறேன்
நான் என்ன இயந்திரமா?
பால் கொடுத்தவள் நான்
பெயர் வைத்தவன் நீ.......
விட்டுக்கொடுத்தவை ஏராளம்
விடாமல்கெட்டவையும் தாராளம்
இரவிலாவது உன்
சுயநலத்தை கழட்டிவிடு
பெண்பாவம் பொல்லாததாம்
என் பேச்சுச் சுதந்திரத்திற்கு
”வாய்காரி”. என்ற பட்டாபிஷேகம்
என் அழகுணர்ச்சிக்கு
”ஆடம்பரமானவள்”. என்ற பொன்னாடை
போதும் நீ புரிந்து கொண்டது.
என்கரம்கோர்த்து நடந்து
எத்தனை நாள்
ஏன் விலகிப்போகிறாய்
நான் புதிய பெண்....
மரபைமீறி வெளியே வா...
நேசி, நேரத்தையாவது செலவழி
ரொம்ப வலிக்கிறது,
குனிந்தபடியே இருக்க முடியாது.
அசிங்கம், நான் நிமிர்ந்துவிட்டால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக