வியாழன், 9 டிசம்பர், 2010

நீ வந்த நாளும் நெஞ்சார்ந்த எதிர்பார்ப்பும்...
                  
              -  தி.திருக்குமரன் 














லைப் பயணியே எங்கள்
தாற்பரிய வேர் முடியே
அலைக் கரத்தில் அவதரித்த
உலைக் கரமே யாராலும்
விலைக்கென்றும் வாங்கேலா
வித்தகமே எம் மண்ணில்
போர்க்குணத்தைத் தோற்றுவித்த
பொருள் முதலே!  கனவிலும் நாம்
கட்டுவதை எண்ணிப் பார்க்கேலாக்
கட்டமைப்பை உன்னுடைய
சுட்டு விரல் அசைவாலே
சூழந்து நிற்க வைத்தவனே..!

உலக வரை படத்தின்
எங்கோ ஓர் மூலையிலே
பெயரின்றிக் கிடந்த ஓர்
பேரினத்தின் பேண் தகவை
அகில உலகத்தின்
அன்றாடப் பார்வைகளில்
பெரும் பிம்பமாக்கி வைத்த
பெரும..! 

மண்ணின்று
நீ வந்த நாளின் நினைவில்
நின் இருப்பை
சோகங் கலந்திருந்தும்
சுமை நிறைந்து நெஞ்செரிந்தும்
தாகம் தீர்ப்பதற்கு வந்திடுவாய்
என ஏங்கி
பாலைவன ஒட்டகமாய்ப்
பார்த்துளது, காலத் தீ
உலகே சேர்ந்தொன்றாய்
ஊதி விட்ட காற்றினிலே
எம் காட்டை
எரித்து விட்டுப் போனாலும்
அதனுள்ளால்
நினை ஏந்திப் போயிருப்பார்
நிச்சயமாய் என்கின்ற
வானேந்தும் வார்கடலின்
வற்றாத உறுதியைப் போல்
நாமேந்திக் கொண்டிருக்கோம்.

நம் நெஞ்சில்..  ஆகவனே
எம்முடைய வாழ்வும்
எதிர்கால வழித் தெளிவும்
உன் பயணச் சுவடெங்கும்
உயிர் நிறைந்து கிடக்கிறது
எம் பயணம் எதுவென்றும்
எது அதற்கு வழி என்றும்
உன் பயணச் சாராம்சம்
உரத்திங்கே சொல்கிறது
கண்ணின் கதிராடி போன்றவனே!

உன் வரவை
எண்ணி இமைக் கரங்கள்
எட்டுகின்ற திசைகளெல்லாம்
அண்ணா எனத்தேடி அழைக்கிறது
விழிச் செவியும்
பார்வைச் செவிப் பறையில்
படும் உந்தன் குரல் என்று
ஆர்வங் குலையாமல்
அலைகிறது, போதுமினி
ஓர்மம்
தான் பெற்ற ஒரு மகனே
தோன்றிடுக..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக