சனி, 26 ஜூன், 2021

கரிகாலனே!

    கரிகாலனே!


பொங்கி யெழுந்தன கால்கள் -மனம்
புத்துணர்வோ டயல் காணும்
தங்கமுடி தலை கொள்ள -கை
தவித்தே வாளினைத் தேட
சங்கொலி வானிடை மேவ - அதில்
சடசடத்தொலி முரசோங்க
எங்கென் பகை எனத்தேடும் - என்
இருவிழி துரு துருத் தசைய

தொம் தொம் என நடை யதிரும்  - சிறு
தொலைவினில் காலடி யோசை
பூம் பூம் எனப் போர் முழவும் - பல
புதுப்படை யணி வகை சூழ
நாம் நாம் நம்முடை நிலமென் - றோர்
நடைதனில் அதிர்வெழச் சோழர்
வீம்புடை  கொடிதனும் விரிய - அது
விசைபட காற்றினில் ஒலிக்க

வாள்வாள் எனச் சில குரலும் - இலை
வாழ் வாழ் வென மறு ஒலியும்
வீழ் வீழ் எனப் பகை அணியும் - இடை
வீல்வீல் என ரதம் உருளும்
ஆள் ஆள் படைகள் முன்னேற -இனி
ஆள்வோம் என நிலம் மீள
தோள் தோள் தினவெடுத்தாட -இனித்
தோல்வியே எனப்பகை ஓட

மாள் மாள் எனத்துயர் மாளும் - அந்த
மங்கள வெற்றியின் ஓசை
ஆள்பவனாய் எனைப்போற்ற - யான்
அதிசயத் தரண்மனை ஏக
தோள்களில் வாகையைச் சூடும் சில
தோழியர் கூடியும் வாழ்த்த
ஆழ் கனவொன்றிடை ஆழ்ந்தேன்  ஆ...
அழைப்பினில் ஆனந்தமாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக