சனி, 26 ஜூன், 2021

 


       ஆற்றாமை (தலைவி)

உள்ளம் கலங்குதடி தோழி - மன
ஓசை அழிந்த திந்த நாழி
கள்ளம் ஏதறியேன் மோதல் - தனைக்
காலம் வளர்த்தடி கேள்நீ
வெள்ளம் வரும்பொழுதுமேனோ - அதன்
வேகம் புரியவில்லைத் தோழி
அள்ளும் போதுமதை யறியேன் -விதி
ஆழிகலந்திடவே தெளிந்தேன்


துள்ளும் இளமையடி குற்றம் - என்னை
தேடு துணை எனவே பற்றும்
எள்ளிநகைப்பதென்ன இன்று - அதன்
எண்ணம் அறிவளில்லை என்றும்
கிள்ளிச் சிவக்கும் இருகன்னம் - அதில்
கொட்டும் துளிகள் இதழ்கொள்ளும்
மெல்லச் சுவைக்குதடி உவர்ப்பு - இனி
மேலோ எனதுநிலை தவிப்பு

தள்ளும் நினைவுகளும் சென்றே - எனைத்
தனிமை நிலையில் விடவேண்டும்
வெள்ளி முளைக்கு வரைவிடடி - கதிர்
வேகமெடுத்து வரும் உதயம்
புள்ளின்இனங்க ளெழுமோசை - இளம்
பூக்கள் மலரும் அதிலோடி
கள்ளைச் சுவைக்கும் கருவண்டு - இவை
காணச் சகிக்கவில்லை தோழி

எள்ளி நகைப் பதுண்டோ தோழி - என
தெண்ணம் விளைத்த செயல் மீறி
கொள்ளியெனச் சுடுதே தோழி - இந்தக்
குற்றம் எதுவிலகுக்கும் சொல்நீ
பள்ளிச் சிறுமியென ஆனேன் - வெறும்
பாதி மெலிந்து உடல்நொந்தேன்
அள்ளிகொடுப்பரென வந்தால் - அவர்
அன்பைத் தெரியவில்லைத் தோழி

கள்ளிச் செடியிருக்கு தோழி - அதை
காலம் அளித்த கொடை போநீ
நள்ளி ராவில் வரும் தென்றல் - ஒரு
நஞ்சாய் மனதிழைந்து ஓடி
உள்ளம் அழித்ததடி தோழி - இந்த
உலகில் இருப்பின் இவள்பாவி
வள்ளம் திசை திரும்பி ஓடின் - அதன்
வாழ்வும் நிலைப்பதுண்டோ பார்நீ

**********

இராஜ.தியாகராஜன்

unread,
6 Jan 2013, 18:37:11
to santhav...@googlegroups.com
அன்புள்ள கிரிகாசரே,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
முகநூலின் முன்பொருமுறை உங்களைப் பற்றி நான் சொன்ன கருத்தினை மீண்டும் இற்றைப்படுத்துகிறேன் இச்சந்தவசந்தத்தில்:
 
உளமள்ளும் சொல்லாட்சியும், ஆற்றொழுக்கான நடையும் பொருந்திய கவிதைகளை இடுகின்றீர்.  அரசுப் பணி நெருக்கத்தால், இலந்தையார், நீங்கள், ஹரியண்ணா, சிவசூரி, சிவசிவா, தங்கமணி போன்றவரின் படைப்புகளைப் பற்றி பின்னூட்டம் இடுவதற்கு இயலவில்லை.  ஏன்,  இச்சந்தவசந்தத்தின் அன்பர்கள் அனைவரின் படைப்புகளும் இதில் உள்ளடங்கும்.  தொடரட்டும் உங்கள் பணி.
உங்களை விட வயதில் மூத்திருக்கிறேன் என்றெண்ணியே சொல்கிறேன் (இல்லாவிடில் மன்னிக்கவும்) வாழ்க, வளர்க, தமிழால், தமிழொடு, தமிழுக்காய், பல்வளங்களும் பெற்றிப் புவியில் பல்லாண்டு கவிஞரே!
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்

kirikasan

unread,
7 Jan 2013, 09:36:40
to santhav...@googlegroups.com
அன்போடு தங்கள் வாழ்த்தினைஏற்றுக் கொள்கிறேன்!
அதிக புகழ்ச்சி அகங்காரத்தை ஏற்படுத்தும். அது கவிஞனுக்கு எதிரி என்பதை அனுபவரீதியாகப் பார்த்தவன் யான். அதேநேரம் பாராட்டுகள் ஊக்கத்தை தரும். கவிதை மழையாக ஊற்றெடுக்கும் எனவும் தெரிந்துகொண்டேன். எனவே  அதிக பாராட்டுக்களின்றித் தேவைப்படும்போது சிறிய உந்துதலைக் கொடுக்கும் சந்தசவசந்தம் மிக நிறைவாக எனக்குத் தோன்றுகிறது. எந்தக்கவலையும் வேண்டாம்! நன்றிகள்:தங்களுக்கு இந்த தாகத்துக்கு வார்க்கும் தண்ணீருக்காய்!!
அன்போடு கிரிகாசன்
*******************************************


On Sunday, January 6, 2013 5:37:11 PM UTC, இராஜ.தியாகராஜன் wrote:


kirikasan

unread,
7 Jan 2013, 09:45:27
to santhav...@googlegroups.com


        சக்தியின் வேண்டுதல்

வேண்டும் வேண்டும் வரம்வேண்டும் - உயிர்
வீணையில் நாதம் எழவேண்டும்
ஆண்டும் ஆண்டும் பலவேண்டும் தமிழ்
ஆண்டே பலமுறும் நிலைவேண்டும்

மீண்டும் மீண்டும் பெருவாழ்வாய் - இம்
மேதினி வாழ்வில் பலங்கொண்டே
தாண்டும் தாண்டும் உரம் வேண்டும் என்
தலைவி நீயதைத் தரவேண்டும்

நீண்டும் நீண்டும் மகிழ்வோடு - நான்
நெஞ்சம் கனிவாய் தமிழ்பாடி
தூண்டும் தூண்டும் உணர்வோடு - கவி
தூவும் மலர்கள் தொகை வேண்டும்

பூண்டும் பூண்டும் பலவேடம் - இப்
பொழுதில் புவியில் கூத்தாடி
தோண்டும் தோண்டும் இன்பங்கள் - பெருந்
தொகையாம் எனவே பெறவேண்டும்

தீண்டும் தீண்டும் பொருள் யாவும் - அடை
தேனாய் வழியச் சுவைகொண்டு
நாண்டும் நாண்டும் தொகை வேண்டும் - என
நாளும் கேட்டும் குரல்வேண்டும்

மாண்டும் மாண்டும் புவிமீதில் - உயிர்
மீண்டும் பிறக்கும் செயலாகக்
கூண்டும் கூண்டிற் கிளியாகும் - இக்
கோலம் மாறும் வரம்வேண்டும்

மூண்டும் மூண்டும் பெருந்தீயாய் - பகை
மோசம் செய்தும் ஒருதீவில்
யாண்டும் யாண்டும் செய் தீமை - தனை
யாவும் நீக்கும் வரம்வேண்டும்

சீண்டும் சீண்டும் சினம் மேவி- என்
சிந்தை கெட்டுச் சிதறாமல்
வேண்டும் வேண்டும் நின்பாதம் - தலை
வைத்தே தூங்கும் மகிழ்வோடும்

டாண்டும் டாண்டும் எனவோடிப் - பெரும்
அண்டம் பாய்ந்து சுழல்கோள் கொள்
நீண்டும் பெருத்த உயர்வானின் - பொருள்
நீயே என்னுள் வரவேண்டும்

**********************

kirikasan

unread,
8 Jan 2013, 10:16:46
to santhav...@googlegroups.com

 இலங்கையில் பல பாகங்களில் பலநிறங்களில் மழை பொழிவதை கேள்வியுற்றிருப்பீர்கள்  .முதலில் மஞ்சள் மழை பொழிந்தது .பின்னர் சிவப்பில் மழை பொழிந்தது. சிலநாட்களுக்கு முன்னர் பச்சை நிறத்தில் மழை ஊற்றியது . நேற்று நீல நிறத்தில் மழை பெய்தது. இதை ஆராய்ந்த குழுவொன்றின் அறிக்கை
இராயனகுண்டு வீச்சின் பாதிப்பு இந்த மழைகளின் நிறங்களுக்கு காரணம் என்றபோதும் (ஆனாலும் இடம் மாறி கொட்டும் மழை என்பதால்)

ஈழத்தில் ஒரு சிறுவனின் குரலாக இந்தக் கவிதை’’

          வண்ண மழை

ஒற்றைத் தாளில் கப்பல்செய்து ஓடும்நீரில் விட்டவன்
உற்றதா முள்ளாசை கண்டு ஓங்கியோர் புறத்தினில்
பெற்றவள் விடுத்தகிள்ளு பாவியெந்தன்மேனியில்
உற்றதோர் கடுத்தநோவு எண்ணியோ நீ ஆண்டவா

சொற்றுணை எனத்தொடங்கி சோதியாம் நல்வானவன்
உற்றதாம் சிறப்பையெண்ணி ஓதியுன்னைப் போற்றிட
கற்றுனைத் துதித்தல்கண்டு காகிதம் மறுப்பினும்
உற்ற அன்பினாலே வண்ணம் ஊற்றும் மேக மாக்கினாய்

முற்றமும் பொழிந்தநீரில் மேகம் வண்ணம் பற்பல
அற்புதம் நிறத்திலூற்றும் ஆனவிந்தை காண்கிறேன்
நெற்பயிர் விளைச்சலோடு நீண்டபுல் முளைத்திடும்
புற்தரை விரிப்பிலெங்கும் பெய்யும் வண்ண மானதே

நெஞ்சிலே கடுங்குரோத நீசரெங்கள் நாட்டினில்
கொஞ்சியே குலாவும் அன்னை கொண்ட மஞ்சள் குங்குமம்
வெஞ்சினத் தினாலே மேனி வெட்டிமண் புதைத்திட
கெஞ்சியும் அழித்தபாவம் மஞ்சள் நீரைக்கொட்டுதோ

அஞ்சியே துடித்தபோது ஆணவத்தி லோடவர்
வஞ்சியர் வளர்ந்த பிள்ளை வாலிபத்து மேனிகள்
நஞ்சிலே இழைத்த குண்டு நீலமாக்கி கொன்றதை
பஞ்சுமேகம் கண்டு நீலம் பெய்மழைக்கு தந்ததோ

கண்கள்தோண்டி கைமுறித்துக் காலுடைத்துக் கொன்றிட
மண்ணிலே சொரிந்த ரத்தம் மேலெழுந்து கொண்டதால்
விண்ணிடை கருத்தமேகம் வையகத்தில் கொட்டவும்
தண்மை கொள்மழை சிவந்த தானவண்ணம் கொண்டதோ

அச்சமின்றி உச்சிமீது வானின் ஊர்தி கொட்டினும்
துச்சமாய் மதித்துவாழ்சு தந்திரத்தை வேண்டியோர்
பச்சைமேனி கள்கிழித்துப் பாவம் செய்த காதகர்
இச்சகத்தில் வாழ்அநீதி எண்ணிப் பச்சை கொட்டுதோ

என்னவெண்ணி வான்மழைக்கு இந்தவண்ணம் வந்ததோ
அன்னைபூமி விட்டுச்சற்று அந்தப்பக்கம் கொட்டுதே
இன்னலைத் தரும்நிலைக்கு இட்டஎச் சரிக்கையோ
மின்னல் வானம் மெச்சியின்பம் மஞ்சள் நீலமானதோ

*************

Lalitha and Suryanarayanan

unread,
8 Jan 2013, 10:57:22
to santhav...@googlegroups.com
வண்ண வண்ண மழையைப் போல வடித்து வைத்த கவிதையால்
எண்ண வண்ணம் கண்டு கொள்ள இன்பம் நெஞ்சில் பொங்குதே
எண்ணி லாத சந்த மெல்லாம் என்றும் உங்கள் சொந்தமே
மண்ணில் உங்கள் கவிதை யெல்லாம் மனத்தி லென்றும் தங்குமே.

வாழ்க கிரிகாசன்!

சிவசூரி.

2013/1/8 kirikasan <kana...@gmail.com>

kirikasan

unread,
9 Jan 2013, 13:41:24
to santhav...@googlegroups.com
நன்றிகள் ஐயா! நீடூழி வாழ்க!!

அன்புடன் கிரிகாசன்



kirikasan

unread,
9 Jan 2013, 13:50:22
to santhav...@googlegroups.com

          எங்கே சுதந்திரம்

காலை புலர்ந்திடக் காட்சி  விரியுது
காணும் புவியொளி ஞானப்பெண்ணே
ஞால முழுதிலும் நன்மை பரந்தின்ப
நாளும் விடியுமோ சொல்லுபெண்ணே
கோலஞ் சிவந்திடக் கீழ்த்திசை வானிடை
கூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்
கால காலமெனக் கொள்ளும் சுதந்திரம்
கையில் கிடைக்குமோ சின்னப்பெண்ணே

ஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்
அல்லிசெந் தாமரை நீர்க்குளத்தின்
சீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்
சேரடிவானத்து வெண்முகில்கள்
நீலவானவெளி நீந்திடும் போததில்
நித்திய இன்ப சுதந்திரத்தை
சாலச் சிறந்துடன் கொள்வது போற்றமிழ்
சற்றும் கொள்ளாதேனோ ஞானப்பெண்ணே

கோலமும் தீயவர் கொள்கை பரந்தது
கூறடி ஏனிது செல்லபெண்ணே
தூலமென்றே துயர் தூரப் பறந்திடத்
தோன்றும் விடிவெங்கே கூறுபெண்ணே
ஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ
அச்சமின்றி உயிர் சின்னபெண்ணே
மூலவிதி கெட்டு வாழும்நிலையற்று
முன்னே சுதந்திரம் கொள்வதெப்போ

வாசலில் வஞ்சகம்வந்து இருப்பதோ
வாழ்வின் கனவுகள் நீரெழுத்தோ
மோசமென்றே நிலை முற்றும் எழுந்தது
மூடு கதவினைச் செல்லபெண்ணே
தேசம் இருளுறத் தெய்வம் மறந்தது                                                                           
தேவையென் னாவது  கூறுபெண்ணே
வாச மெழுமன அன்பினை காவவும்
வீசுந்தென்றல் வரவேண்டும் பெண்ணே

காகங் கரையுது சேதி வருகுது
காணத் திடமெடு சின்னப் பெண்ணே
மேகம் குவிந்திட மின்னலிடியெழும்
மேனி நடுங்கிட ஆக்கும்பெண்ணே
பூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்
தீமழை காணவும் நெஞ்சு நொந்தே
தேசம் நினைந்துள்ளம் தீயின் விரலிட்ட
தாகப் படும்பாடு சொல்லுபெண்ணே

பூவிதழ் காணவும் பொன்னெனும் காலையில்
‘புத்துணர் வாகிடும் நாள்மலர்ந்தே
நாவில் சுதந்திர கீதமிசைத்திட
நாட்டில் குழுமிய மாந்த ரூடே
கோவில் தெய்வமெழக் கொண்டகுடிமனை
கூடித் திரண்டவர் அச்சம்விட்டே
தாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்
தாய்நில பூமடி கொள்வதெப்போ?

***********

kirikasan

unread,
10 Jan 2013, 07:29:30
to santhav...@googlegroups.com

      புகழ்

உளமலர் விரிந்தொளி பெறுகுது பெறுகுது
உவமையும் எதுவில்லையே
தளம்பிடுங் குளஅலை தவித்திடு மழகுடன்
திகழ்வது மனவுணர்வே
மளமள வெனவரு மழையெனும் புகழ்மொழி
மகிழ்வினைத் தரசுகமே
விழவிழ மலர்களில்  வழிநெடு நடையிடும்
விதமெனச் சிலிர்த்திடுமே

குளஅலை களில்முகம் தெரிந்திடும் வகைமனம்
குதித்திடும் புகழ்ச்சியிலே
நிழலது முகில்வர நிலமிடை அழிந்திடும்
நிலை யெனப் புகழ் கெடுமே
இளமன திடை வரும் நினவுகள் பலஎழும்
இவையெது கனவுகளோ
அழவென வருவது தொகைதொகை மகிழ்வென
அடைவது சிறிதல்லவோ

புகழ் தரும்  உணர்வுகள்  பெரிதுவ கையுமெழ
புரிவது புதுச் சுகமே    
நிகழ்வது சரியெனில் நெறியெழும் புகழ்பெரு
நெருப்பென எழும் மகிழ்வே
பகலவன் ஒளியென பரவிடும் இருள்மறை
பனிவிடும் புல்லெனவே
அகமிடை -இருளற அதியுயர் தகவுற
அடைவது பெருமகிழ்வே

மழைதரு முகிலென மனமதில் கனமெழ
மதுவென இனித்திடிலும்
உளதினி மையில்பொலி வுறமதி யுதவிட
உருவெடு திறன் பெரிதே
துளையிடு குழலிடை  நுழைவளி இசைஇடும்
நிகரெனும்  இன்னிசையோ
வளர்ம்தி முகமதில் வரும்மகிழ் வுறப்புகழ்
தனையெடு மருந்தெனவே

****************

kirikasan

unread,
14 Jan 2013, 13:00:30
to santhav...@googlegroups.com


          பொங்கல் வராதோ?

பொங்கலும் உண்டேன் இனிக்கவில்லை - சில
பூவள்ளிப் போட்டேன் மணக்கவில்லை
தெங்கின் அருகிடை தோன்றும்கதிர் - இன்று
தேசு கொண்டுவீசக் காணவில்லை
செங்கரும்புண்ணச் சுவைக்கவில்லை - ஒளி
சோதி விளக்கேற்ற நிற்கவில்லை
மங்கும் பொழுதென்னும் தீரவில்லை - சில
மேகம் மறைக்குது வெய்யிலில்லை

வண்ண மலர் காலை பூக்கவில்லை = அதில்
வாசமெழக் காத்தேன் வீசவில்லை
கொண்டு வரும் தென்றல் கூடவில்லை  - இன்று
கூவும் சேவல் குரல் கேட்கவில்லை
மண்ணில் உதயத்தைக் காணவில்லை - கோவில்
மங்கல ஓசை மணிகளில்லை
பண்பாடு மீண்டும் தளைத்ததொரு - பொங்கல்
பாரில் விளைந்திட ஏதுசெய்வேன்

பாயும் சுருட்டியுள் வைக்கவில்லை - இந்தப்
பாழும் தூக்கம் விழி நீங்கவில்லை
தேயும் நிலாவென்ற தென்பு நிலை - எந்தத்
திக்கிலும் பாதை தெரியவில்லை
நேயம் நேர்மை எங்கள் பக்கமில்லை - எந்த
நீதியும் ஓசை மணிகளில்லை
காயும் வயலிடைநீருமில்லை - என்ன
காரணமோ பதர் நெல்லுமில்லை

கண்கள் விழித்து கடிதெழுந்து - உடல்
காணும் சோம்பல்தனும் மெய்முறித்தே
எண்ணத்தில் தீயிட்டுப் பானைவைத்தும் - அதில்
ஒற்றுமைச் சர்க்கரை ஊற்றிவைத்து
மண்ணையும் மாகதிர் வெய்யவனை - எண்ணி
மங்கலபாடல் முழங்கியொரு
வண்ணப் புதுபொங்கல் செய்வதெப்போ - அதை
வாயில் வைத்துசுவை கொள்வதெப்போ ?

kirikasan

unread,
15 Jan 2013, 17:38:50
to santhav...@googlegroups.com

          தென்றல் வரும் திசை

தேனினிக்கும் காய் உவர்க்கும்
. தென்றல்வரும் பூமணக்கும்
. தீந்தமிழின் சுவை இனிக்காதா
தானிமைக்கும் நேரமதில்
. தாவும மனங் காவல்கொள்ளும்
. தேடுவழி ஒளியெடுக்காதா
வானிடையில் வரும்மதியால்
. வையகத்தில் ஒளிபரவும்
. வண்ணமுண்டு விதியழித்தாலும்
தானிருந்து மீண்டும்வளர்
. தன்மையுண்டு நாள்வளரும்
. தங்மென வான் ஒளிராதா

கோயிலுக்குள் தெய்வமுண்டு
. கும்பிடுமோர் பக்தனுண்டு
. கூடவரும் நிழல்பெரிதானால்
பேயிருக்கும் போலிருக்கும்
. பார்த்துமனம் கிலிபிடித்து
. பாதைவிட்டு ஓடிடுவானா
தாயினது அன்பெடுத்து
. தட்டிலிட்டு கனமளக்க
. தான்முயன்றால் ஊர்சிரிக்காதா
போயிருக்கும் உறவுதனில்
. பூகம்பமா புயல்வருமா
. போதுமிவை நினைவுகள் வீணா

சேயிருக்கும் தவழ்ந்துசெல்லும்
. தீயிருக்கும் தொடநினைக்கும்
. தாயெடுத்து அணைத்திடுவாளா
பாயிருக்கும் பக்கமதில்
. பாலிருக்கும் கனியிருக்கும்
. பசிஎடுதால் கரம்தடுப்பாளோ
ஆயிரம்தான் ஆகிடினும்
. அன்பு மனம் ஒற்றுமையின்
. ஆழமதை கோலிடலாமா
போயிருக்கும் திசைதனிலே
. பூமணக்கும் காற்று மெல்ல
. போய்விடக் காற் றாடிவிழாதா

ஆறிருக்கும் ஓடித்தரை  
. அருவியெனக் கூத்தடித்தும்
. ஆழியினைக் கலப்பதுதானே
வேரிருக்கு மண்ணுடனே
. விளையுமன்பு நிலைத்திருக்கும்
. விதிபிரித்தால் பிரிவதும் உண்டோ
மாறிவரும் திசைநடந்தும்
. முடிவுலொன்று சேருமெனில்
. மேல் நடந்துக் கொள்வதிலேனோ
ஊறில்லையேல்  தெய்வசுகம்
. உள்மனதில் உண்டுஎனில்
. ஓடிநட உள்ளதுநன்றே

kirikasan

unread,
20 Jan 2013, 00:39:58
to santhav...@googlegroups.com



அரசசபை கூடியிருக்கிறது
மாண்புமிகு  மன்னவர் முன்னே அமர்ந்திருக்க அங்கே

              ராஜ சபை யில் கண்டது என்ன?

அமைச்சர்:
தேனூற்றும் மலர் கண்டேன் திங்கள் கண்டேன்
தினந்தோறும் வாசமிடும் தென்றல் மோந்தேன்
வானேறும் வெயில் கண்டேன் வானில்தூரம்
வளைந்தோடும் பறவைகளின் கூட்டம்கண்டேன்
தானூற்றி வீழ்ந்தருவி தெறிக்கக் கண்டேன்
தரை மீது விளையாடும் மானைக் கண்டேன்
பாவூற்றி வளம் சேர்க்கப் படைத்தோந்தன்னின்
பாசமதைக் காணேன் ஓர்பரிவும்காணேன்

சேனாதிபதி
பன்சிலிர்த்த உணர்வோங்கும் பாடல் காணேன்
பனிதூங்கும் குளிர்வண்ணப் பதிப்பும் காணேன்
தென்னைதொடு இளங்காற்றின் சுகத்தைக்காணேன்
தித்திக்கும் செங்கரும்பில் இனிப்பைக் காணேன்
என்னமது இதுவோஎன் றேங்கக் காணேன்
இசைக்கு மோர் இருள் வண்ணக் குயிலைக் காணேன்
அன்னவகை செந்தமிழின் அழைக்குமோசை
அதுவின்று சென்றதெங்கே அறியேன் அரசே

ஆஸ்தான் கவி
மின்னுகின்ற விண்மீன்கள் துடிப்பைக்கண்டேன்
மேகமெல்லம் ஒடாது இருக்கக் கண்டேன்
செந்தணலும் நீர்பட்டு தணியக் கண்டேன்
சேதிசொலும் முரசங்கள் உறங்கக் கண்டேன்
சந்தமின்றி சொல்தடக்கிப் புரளக்கண்டேன்
சந்தணமும் கொட்டியதோ  நிலத்தில் கண்டேன்
மன்னபரி வாரங்களும் மறையக்கண்டேன்
மாதொருத்தி புன்னகையில் மர்மம் கண்டேன்

குடிமகன் ஒருவன்:
சொன்னதெலாம் கற்பனைகள் கொள்வீர் மன்னா!
சோதி பலங்கொண்டு கிழக் கெழுதல்காண்பீர்
பொன்னிவயல் பொலிந்து கதிர் குலுங்கக்காண்பீர்
புதுவெள்ளம் பிரவகித்து புரளக் காண்பீர்
என்னபட்சி சோலை நிறைந் திருக்கக் காண்பீர்
சுற்றியொரு ஒளிவட்டம்  தோன்றக்காண்பீர்
தன்னை மறந்தாட இசை ஒலிக்கக்காண்பீர்
தமிழிலினிக்க சந்தமிடும் வசந்தம் காண்பீர்


விண்ணிறைந்து தாரகைகள் விழிக்கக் காண்பீர்
வெண்ணிலவு முழுவட்டம் விளங்கக் காண்பீர்
கண்ணெதிரில் பொன்மணிகள் குவிதல் காண்பீர்
கனவிலன்றி பகைபணிந்து கிடக்கக் காண்பீர்
பெண்கள் மலர் தூவி எழில்போற்றக் காண்பீர்
பேசுங்கிளி ஒன்று புகழ் பாடக் காண்பீர்
மன்னவனென் றாலிவரே மன்னவனென்றே
மகிழ்வுகொண்டு மாநிலமும் வாழ்த்தக் காண்பீர்

******************

kirikasan

unread,
25 Jan 2013, 03:19:49
to santhav...@googlegroups.com
           புகழ் எண்ணிப் பொல்லாப்பு (சோகப் பாடல்)

புகழ்போதை தனைவெல்லப் புவிமீதிலே
புதிதாக எது உண்டு சபைஏறியே
நிகழ்கின்ற எதுதானும் தனைமீறியே
நேரும் வினோதங்கள் கலைமேவியே
அகழ்கின்ற குழியாவும் அவர்மேனியே
அடங்குமென்றறியாமல் சில பேருமே
திகழ்கின்ற விதிவந்து மனம்கொள்ளவே
தெரிந்தாலும்குழி தோண்டும் வழியாகுமே

அலைகின்ற கடலிலொரு அவனானவன்
 அழகென்று திரைகண்டு அதில்நீந்தவும்
தலைமூழ்கும் அலை யோங்கிவரும் போதினில்
   தெரிகின்ற சிறுதூர கரைவேண்டியும்
நிலையான தடுமாறி அதில்நீந்தவே
    நேரமதில் உருண்டோடும் விதியானது
குலைகின்ற பொழுதீதைக் குறைவாக்குமோ
    கொடிதெண்ணித் தடை யிட்டு தலைமூழ்குமோ

கதிமோச மென் றாக்க புயல்வீசுமோ
  கைதந்துவிடுமோ  ஓர் கரைசேர்க்குமோ
நதிகொண்டபூவாக நலிந்தோடியும்
 நிலைகெட்டு விழும்போது நினைந்தேயவன்
புதிதெண்ணி வரும்போது பகைமிஞ்சுமோ
  பொழுதான் இருளோடு புகை மிஞ்சுமோ
அதிசீலஒளித் தீயே அருகோடுவா
   அகிலத்தில் அவன்கொள்ளும் அமைதியும்தா


(வேறு)

அண்டம்பொறி பறந்தோட அனல்சிதறி வெடியதிர
ஆக்குவாய் சக்திதேவி
முண்டம்தலை யென்றிணைய முகம்செய்து தமிழ்கொண்டு
மூச்சினையும் ஊதிவைத்தாய்
கண்டம் கடல்கடந்துவந்து கடுங்குளிரி லுழலகலை
யுணர்வுகொண் டெழெவும் வைத்தாய்
தண்டமெது தருவதெனில் தந்தமகு டம்விழவுன்
தகித்திடும் தீயில் முடிவோ

குண்டெனுருள் கோளங்களும் கூட்டமைத்துக் கோடியெனக்
குதித்தோடச் செய்ததாயே
வண்டென சொல்மது வார்த்து வாழ்வில்புகழ் போதைதனை
வழிகாட்டி விட்டதேனோ
செண்டினொடு மலராட செய்தவளே கருவண்டு
தீண்டிவிடத் தெருவில்பூவாய்
மண்ணோடு மண்ணாக மாறிவிடச் செய்ததுவும்
மகிழ்வானால் மறுப்புமுண்டோ

பிச்சையென உடலீந்து பிச்சையென உயிர்வைத்து
பிச்சையெனும் வாழ்வீந்த தாய்
இச்சைதனைக் கொண்டெழுந்தும் இயல்பில்கவி பாடிப்புவி
இரந்துதிரி என்றதெவரோ
பச்சையுடல் மீதுயிரைப் படைத்திட்ட தேவி யெனைப்
பாடி வலம்வாஎன்பதால்
அச்சமில்லை என்றவனை அணை என்று கூறியதேன்
அணையல்ல அணையென்பதோ?

kirikasan

unread,
27 Jan 2013, 09:17:35
to santhav...@googlegroups.com

            அன்பு மனம்        

ஆனா இன்பூவினில் வந்தேனா னதுகொண்டோமென
நானா இட்டோர் பூவுடனே
மீனாஅயல் அச்ச்சமெது விதியோ விடுவென்னும்கணம்
மீறும்வழி நீருள்மறையும்
தானந்தனும் தையாஎன சானாந்தமும் வீசும்வ
சந்தமதில் வீசும் காற்றே
ஏனோவென் எண்ணம்தனைச் சொல்லும் ஓர் உள்ளம்தனை
இன்னுமறிதல் கடிதாமோ

ஆனா இன்பூவினில் வந்தேனா னதுகொண்டோமென
வண்ணத்துப் பூச்சிபறக்கும்
மீனா அதுஅச்சமுடன் ஏனோவிட்டோடும் கணம்
நீரில் விழுந்தோடும் அலையும்
தானாந்தனி பூக்கும்சுனை  காணுஞ் செந்தாம ரையும்
தீயாய் அந்நீரினில் மிதக்கும்
ஏனோஅதன் எண்ணம்வெகு தூரம்கதிர் கண்டுமது
காணுமொரு அன்பில் மித க்கும்

வீணா ஒரு விதியும் வரும் தானாய் புயல்போலும் பலர்
வாழ்விற் பல இன்னல்விளையும்
நாணா மனம் தன்னில்பிழை நாளும் விதை கொள்ளும்வகை
நாடிமன துள்ளும் கெடுக்கும்
வீனா வதினோடு மிருபூவின் வடிவோடும் மனம்
வேண்டா துயரென்றே மலரும்
மானா குடம் போயும்தலை வாநீ யெனவண்ணத்தமிழ்
தாநீயெனத் தமிழும் பாடும்








kirikasan

unread,
6 Feb 2013, 15:30:38
to santhav...@googlegroups.com

           காலத்தை வென்றவன்

கலையென்ன மனம்மீது கலைந்தோடவோ
கவியின்பத் தமிழ்நாவிற் கசப்பாகுமோ
இலைஎன்ப தொருசொந்தம் எனவாகுமோ
இதைக் கண்டு விழிமூடி இருஎன்பதோ
மலையென்ற மனம்கொண்ட திடமானது
மண்னாகி உருமாறி மறைந்தோடுமோ
தலையெங்கும் தடுமாற்றம் தலைதூக்குமோ
தவிப்பான தெனைக்கூடித் தரைவீழ்த்துமோ

இடர்வந்து வழிமீது இருந்தாடுமோ
இடம்விட்டு இருள்காணும் திசை செல்லவோ
சுடர் கொண்ட மணிதீபம் புயல் கொள்ளவோ
சுடுமென்று ஒளிகாவா திருள் நிற்பதோ
படர்கின்ற துயர் கண்டு பணிந்தோடவோ
பழகும் நற்துணைகொண்டு விரைந்தேறவோ
அடர்வானில் விரிமேகம் ஒளிமூடுமோ
அடடா என் விதியென்று சுடர் தூங்குமோ

இறைதேவி எனயாளும் ஒளிதீபமே
எனதாசை தமிழோடு இன்னும்வாழவே
கறைபூச எனதன்பு மனம்மீதிலே
கருதாது பகையின்றி உயிர்மேவியே
உறைவாய்நீ உயரன்பில் எனையாளவா
உளம்மீது கொளுமின்பத் தமிழ்மீண்டும்தா
மறை வானில் பெரிதான ஒளி தீபமே
மனப்பூத்துத் தமிழ்பாடும் மறுவாழ்வுதா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக